ஓவியப் பட்டறை ஒன்றில்
ரங்கோலியில் வல்லவள் எனவும்,
அவள் வைக்கும் கொலுவுக்கு
இணையேதும் இல்லையென்றும்
அறிமுகம் செய்விக்கப்பட்டபோது...
சுதா அணிந்திருந்தது
அந்த
கரும்பச்சையில் மஞ்சள் பூக்கள்
இட்ட புடவையைத்தான்..
அசத்தும் அழகிலும், ரசிக்கும் கவிதையிலும்,
நட்பான பிறகு,
உப்புமா செய்ய
ரவையில்லாத தரித்திரத்திலும்,
முதல் சம்பளத்தில்
தம்பி
வாங்கித் தந்த முதல் சேலை
அது என்ற
பச்சைப் புடவை-சரித்திரம்
சொல்லிச் சொல்லி முகம் சிவந்தாள்.
சோழி மூக்கன்- என்று
விஜி..எப்போதும் கேலி செய்யும்,
சுதாவின் கணவன் அருகில்
அன்றொரு நாள்
பால் மேனி பளபளக்க
அதே புடைவையில் அவள் ஜொலித்த போது-
சோழிமூக்கனின் முகத்தில் ஜொலித்தது-
நிச்சயமாய்
அசூயை தான் ..
மணமாகிப் பல வருடம்
கழித்து
பெற்றது ஒன்று
அதுவும் பெட்டை
என்று
மாமியார் ஏசுவதைச் சொல்லி அழுத போதும் ,
மீண்டும்
சூல் கொண்டு இருப்பதைப் பகிர்ந்து
இனிப்புக் கொடுத்த போதும்
கூட
அதே புடவையில் தான்
அவளைப் பார்த்ததாய் ஞாபகம்..
இன்னம்,
பிள்ளை பெறச்சென்ற போதும்
அதையே அணிந்து..
தீட்டுக்கறை நீங்கவென ,
ஆலா இட்டு அலசினாளாம்.
ஊர் மாற்றிச்சென்ற போதும்
மறக்காமல் அலைபேசினாள்...
நாத்தி பிரசவம்,
மாமனார் புறக்கணிப்பு,
கணவனின் கோபம்,
மாமியாரின் சிடுசிடுப்பு...
எல்லாம் மறக்க வைக்கும்
ஆசிரியை வேலை கூட.
ஏண்டி முதல் நாள் பள்ளிக்கும்
அதே பழம் புடவை தானே என்றதற்கு,
கிளுகிளுத்து அவள் சிரித்தது
இன்றும் கேட்கிறது
கனவுகளில்..
திடீரென ஓர் நாள்..
சோழி மூக்கன் ராமாவதாரம் எடுக்க,
ரோஷம் தாங்காமல்-
தூக்கிட்டுத் தொங்கிவிட்டாள்..
பாப்பாத்தி பிணத்துக்கு
துளுக்கச்சி மாலையா?
கேட்டாளும் கேட்பாளே மாமியார்காரி
என்று வெறுங்கையோடு தான்
அவள் வீடு ஏகினேன்..
பிணமென்று அஞ்சியிருக்கப்
பெரும் பயம் தேவையில்லை..
எப்போதும் போலத்தான்
இதழ்விரித்துப் படுத்திருந்தாள்...
இடையிலும் அதே
பச்சையைத் தான் உடுத்திருந்தாள்..
பூக்கள் இட்ட பச்சை
பிணத்துக்கு எதற்கென்று
சேலையில் பூப் பறித்து
அவள் புறமே உதிர்த்து விட்டேன்.
எல்லாப் பேய்களும்
வெள்ளை உடுத்தாதாம்!
இன்று..
என் கனவில் வந்தபோதும்
அதே..
வெற்றுப் பச்சையில் தான்
வந்து வெகு நேரம் பேசிச் சென்றாள்..
..ஷஹி..