Search This Blog

Sunday, November 14, 2010

எஸ். ராவின் ஜெயந்தி ..பக்குவமற்றவளா?


ஆனந்த விகடனில் என் அபிமான எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பது இல்லை " என்ற சிறுகதை படித்தேன். பிரமாதம், வழக்கம் போல் பாத்திரங்களின் எண்ண அலைகள் நம் மனங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும் விதமாக எழுதியிருக்கிறார் எஸ்.ரா.

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருத்தி, தன் புகுந்த வீட்டினரின் அசைவ உணவுப் பழக்கத்தால் அடையும் அசூயையையும், தன் பிறந்த வீட்டில் தான் அனுபவித்து வந்த இன்பங்களையெல்லாம் எண்ணி ஏங்குவதையும், காதலனாய் இருந்த போது அவள் அழகை ரசித்து, கொஞ்சி மகிழ்ந்த கணவன் இப்போது சாப்பாட்டில் காட்டும் ஆர்வத்தைக் கூட தன்னிடத்தில் காட்டுவதில்லை என்ற ஆதங்கத்தையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா.

ஆனால் ஏனோ கதையைப் படித்ததிலிருந்தே கதாநாயகி ஜெயந்தியின் மீது எப்போதும் நாயகிகளின் துன்பம் பார்த்து எனக்கு ஏற்படும் பரிதாப உணர்வு தோன்றவேயில்லை.
" நல்ல வேலை,சொந்தவீடு,வங்கி சேமிப்பு, அன்பான கணவன், அக்கறையான மாமியார், மாமனார், காதல் திருமணம் என்று எல்லாமும் நன்றாகத்தானே இருக்கிறது. பின் ஏன் அழுகிறோம் என்றூ அவளாகத் தன்னைத் திட்டிக் கொள்வதும் உண்டு." என்ற கதையின் வரிகளால் ஏற்பட்ட எரிச்சல் என்று நினைக்கிறேன்.

அவளுக்கு 26 வயது..நல்ல பக்குவம் ஏற்பட்டிருக்க வேண்டிய வயது தான்! படித்து, வேலையில் இருப்பவள், நம்மிலும் கேடு நாட்டிலே கோடி என்பதெல்லாம் இவளுக்கு சொல்லக்கூடிய அறிவுறை அல்லவே! இவளை விட அதிர்ஷ்ட சாலி எவர் உண்டு என்று கேட்கும் விதமான வாழ்வில், "இன்னும் எவ்வளவோ வருடங்கள் மீதம் இருக்கின்றன. எப்படி வாழப்போகிறோம்" என்றெல்லாம் இவள் ஏன் கவலைப் பட வேண்டும்.? ஒரு வேளை கணவன் இல்லத்தாரின் உணவுப்பழக்கமல்ல இவளுடைய ஆதங்கம் , கணவனின் அன்பு குறைந்து விட்டதோ என்ற எண்ணம் தான்..என்றும் எண்ணத்தோன்றுகிறது. எதுவானாலும் இந்த அழுமூஞ்சி கதாநாயகிகள் இனி வேண்டாமே! எத்தனையோ இன்னல்களுக்கிடையே வாழ்க்கைப் போராட்டத்தில் தனியாக வென்று வரும் கதாநாயகிகளைப் பற்றி கதைகள் தாம் இன்றைக்கு அவசியம். அழுமூஞ்சிப் பெண்களைப் பற்றித்தான் ஏகப்பட்ட சீரியல்கள் வருகின்றனவே!

அதிலும் இதையெல்லாம் எழுத நாங்கள் போதுமே...எங்கள் பக்கமெல்லாம் மருமகள் அன்றிரவு எங்கு உறங்க வேண்டும் என்பதைக்கூட மாமியார் தான் முடிவு செய்யவேண்டும் என்ற நிலையில் வாழும் பெண்களெல்லாம் உண்டு. உணவு, உடுப்பு என்ற அத்தியாவசியத் தேவைகளைப் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டாம் . இப்படியெல்லாம் பெண்கள் சிரமங்களுக்கு ஆளாகும் போது இந்த ஜெயந்திக்கு என்ன குறை?


கணவனின் அன்பு தான் பிரச்சினை என்று எண்ணும் விதமாகவும் ரொம்பவும் வரிகள் இல்லை கதையில்..அவனுடைய ஆர்வம் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். இதுவும் கூட இயற்கை தானே! இதில் ஆண் , பெண் என்ற பேதம் இல்லையே! காதலிக்கும் போது பெண்ணுக்கு ஆண் மேல் இருந்த ஆர்வம் மட்டுமென்ன வளர்ந்து கொண்டேவா போகிறது திருமணத்துக்கு பிறகு? இல்லையே! பக்குவம் இல்லாத பெண் என்று தான் எண்ணத் தோன்றுகிறது இந்த ஜெயந்தியைப் பார்த்து!

ஒரு வேளை ஆசிரியர் சொல்ல விழைவது, ஆண் பெண் இருவரிடத்தும் திருமணத்துக்கு முன், அதற்குப் பின் என்ற மனோ நிலை மாற்றங்களைப் பற்றியது தானோ?
இது மூன்றாம் கோணத்தில் இருந்து என்னுடைய ஒரு மீள் பதிவு...
....ஷஹி...

4 comments:

  1. அன்பின் ஷஹி,
    வணக்கம்.... நானும் ஆனந்தவிகடனில் ஜெயந்தியைப் பார்த்தேன் வெரும் ஒரு கதையாக... ஆனால் உங்களின் இந்தப் பதிவின் மூலமாகத்தான் ஆராயத் தொடங்கியிருக்கிறேன்... என்ன செய்ய... இது போல் ஆராய உங்களைப் போல ஒருவர் தேவைப்படுகிறார் என்று எனக்கு இப்போதுதான் புரிகிறது... மிக நல்லப் பதிவு... தொடருங்கள்...

    ReplyDelete
  2. நன்றி ஜெயசீலன்... ...என்ன வச்சு காமெடி,கீமெடி ஒண்ணும் பண்ணலையே?

    ReplyDelete
  3. அண்மையில் படித்த (கற்ற) பிடித்தமான கதைகளுள் ஒன்று...கதையை விவரித்து சொல்வது,நீதியையோ போதனையையோ வாசகருக்கு விட்டு விடுவது எனபது ஒரு உத்தி..இதில் அதைத்தான் செய்திருக்கிறார்...கதையில் "அன்பான கணவன்,நல்ல வேலை,சொந்த வீடு,பாசமான மாமனார் மாமியார் எல்லாம் இருந்தும் என் அழுகை வருகிறது"என்ற வரயில் எல்லாம் இருக்கிறது என நான் நினைக்கிறேன்...தேவைகள் பூர்த்தியாகாமல் போகலாம் ..மனித மனம் அதை ஏற்றுக்கொள்ளும்...ஆனால் "உன் தேவைகள் இங்கே பூர்த்தி செய்யப்படாது"என்று அந்த மனதிடம் சொல்லப்பட்டால் அந்த மனம் சோகமான மணமாகிவிடுகிறது!!

    ReplyDelete

Related Posts with Thumbnails