Search This Blog

Thursday, February 10, 2011

தி.ஜா வின் மோக முள்..


மோக முள்..தி.ஜானகிராமனின் மிகப் பேசப்பட்ட ,பிரசித்திபெற்ற திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட நாவல். தமிழில் இதுகாறும் வெளியான நாவல்களில் மிகச் சிறந்த ஒன்று. கதையைப் பற்றி பேசு முன் தலைப்பைப் பற்றி சிலாகிக்காமல் இருக்க முடியாது. "மோகம்"..உயிரோடு, உடலையும் ஆன்மாவையும் ஒரு சேரக் குத்தும் முள் தானே?. பொருந்தாக் காதல் என்று ஒரு தலைப்பு பள்ளியில் படித்திருக்கிறோம். உண்மையில் பொருந்தாக் காதல் என்ற ஒன்றே பொருத்தமில்லா பதம் தானோ என்ற கேள்வி எழும்பும் மோக முள் படிக்கும் போது. ஏன், யாரிடம் ,எப்போது என்றெல்லாம் பார்த்தா காதல் வரும்? All is fair in love and war என்பார்களே...

பாபு..கதாநாயகன், சிறு வயது முதலே தான் பழகி வரும் யமுனாவிடம் எப்பொழுது எனத் தெரியாமலேயே மனதைப் பறிகொடுக்கிறான்.

சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடும், அற்புதமான திறமையும் கைவரப் பெற்ற பாபுவுக்கு ஆசான் ரங்கன்னா. ராஜம் என்ற உயிர் சிநேகிதன் ஒருவனும் உண்டு பாபுவுக்கு.இவர்கள் தவிர பாபுவின் பெற்றோரும் முக்கிய கதாபாத்திரங்கள் நாவலில்.

யமுனா, கோவில் சிலையே எழுந்து வந்தார் போன்ற தெய்வீகமான அழகுடைய பெண்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சமீந்தாருக்கு ஆசை நாயகியாக இருந்த மராத்தியப் பெண்ணுக்குப் பிறந்த பேரழகி. பாபுவை விடப் பத்து வருடங்கள் மூத்தவளாக இருந்த படியால் அவனை நண்பனாகக் கூட கருத இடமில்லாமல் தம்பியாக பாவித்துக் கொண்டிருந்தவள். தந்தையான சமீந்தார் இறந்து போக, அவள் நிலை எல்லா ஆசைநாயகியரின் பெண்மக்களுக்கும் நிகழ்வதைப் போல மிகவும் மோசமாகிறது. எவ்வளவுக்கென்றால், இரண்டாம் தாரமாக பெண் கேட்டு வரும் ஒருவன் கூட இவள் ஒரு ஆசைக்கிழத்தியின் மகள் என்று அறிந்து நிராகரிக்கும் அளவில். வாழ்வாதாரம் என்று சொல்லிக் கொள்ளும் படி ஏதும் இல்லாமல் போக, மீதமிருந்த நகைகளை விற்று காலம் கடத்துகிறார்கள் அம்மாவும் ,மகளும்.

சங்கீதம் சொல்லிக் கொள்ள ரங்கன்னாவிடம் சிஷ்யனாகிறான் பாபு. இடையில், பாபு தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு இளம் பெண், வயதான ஒருவருக்கு வாழ்கைப் பட்டவள், பாபுவின் மேல் காதலாகிறாள். ஒரு இரவில் மனதின் இச்சையை அடக்கவியலாமல் அவளுடன் உறவு கொண்டு விடும் பாபு, அன்றே தன் மனதில் யமுனாவைத்தவிர யாருக்கும் இடம் இல்லை என்று உணர்கிறான். யமுனாவிடம் பாபு தன் காதலைச் சொல்ல, நிராகரிக்கிறாள் யமுனா.

வருடங்கள் உருள்கின்றன. சென்னையில் பாபு வசிக்கிறான். யமுனாவும் தனியே சென்னையில்தங்க நேர்கிறது.சிரமத்தில் இருக்கும் அவளுக்கு உதவி , தங்க இடமும் மற்ற வசதிகளுக்கும் பொறுப்பேற்கிறான் பாபு.சந்தர்ப்பவசத்தால் பாபுவுடன் இரவைக் கழிக்க நேரும் சமயத்தில், பாபு அவளை நெருங்க,

இணங்குகிறாள் யமுனா.

நாவலின் இறுதியில் மங்கள்வாடி சென்று ஒரு குருவிடம் சங்கீதம் பழக செல்லும் பாபுவை அவன் திரும்பி வரும் போது மணந்து கொள்வதாக வாக்களிக்கிறாள் யமுனா.

கதையின் போக்கென்னவோ மிகத் தெளிந்ததோர் நீரோடையினதைப் போல இருக்கிறது என்றாலும் பலப் பலக் கேள்விகளையும் நம் மனங்களில் எழுப்பாமல் இல்லை.

1.பாபுவுக்கு யமுனாவிடம் ஏற்பட்ட உணர்வு காதலா, வயதுக்கே உரிய உடல்கவர்ச்சியா?

2.அல்லது யாருமற்ற அனாதைகளான ஒரு தாயிடமும் மகளிடமும் கொண்ட பரிதாபமா?

3.பாபு முதன் முறையாக காதலைச் சொல்லும் போது மறுக்கும் யமுனா, அவனுடைய விருப்பத்துக்கு பல வருடங்கள் கழித்து இணங்குவதற்குக் காரணம் தனக்கு பலவாறாக உதவியவன் என்ற நன்றி உணர்ச்சியா?

4.இல்லை அவள் மனதிலும் அவன் பால் காதல் இருந்து வந்து வயதில் இளையவனிடம் காதல் கொண்டு விடுதல் சமூகத்தில் இழிவான ஒரு செயலாகத் தோன்றும் என்ற பயத்தினால் மறைக்கப்பட்டதா?

5.இதுவேதும் இல்லாமல், அது தஞ்சாவூரோ கும்பகோணமாகவோ இல்லாமல் சென்னையாக, தெரிந்த யாரும் இல்லாத ஓர் பாதுகாப்பான இடம் என்பது ஒன்றே தானா?

முதிர் கன்னியாக வாழ்ந்த அவளுள்ளும் எத்தனை ஏக்கங்கள் இருந்து வந்ததோ ?

இப்படியான எத்தனையோ கேள்விகளை நம் உள்ளங்களில் எழுப்புவதில் தான் ஆசிரியரின் மாபெரும் வெற்றி அடங்கியுள்ளது.

ஆண் பெண் உறவுச் சிக்கல்களையும் , ஆழ் மனதின் எண்ணவோட்டங்களையும் அலசி, மிக நுணுக்கமான எண்ண அதிர்வுகளையும் கூட வார்த்தைகளில் வடித்து விடும் பேராற்றல் படைத்தவர் தி.ஜா.

கலைஞர்களுக்கே உரிய குணம் ஒன்று உண்டு .உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மிகப் பிரமாதமாக வெளிப்படுவான் எந்தக் கலைஞனும். கவிஞனும் காதலனும் பைத்தியமும் ஒன்றே போன்றவர்கள் என்பார்கள். மூவருமே உணர்வுமயமானவர்கள். Excited State Of Mind அதாவது உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் தான் எந்தக் கலைஞனும் பரிமளிக்கிறான். பாபுவுக்கும் சங்கீதத்தில் உச்ச நிலை அடைய ஓர் கிரியாவூக்கி வேண்டும் என்ற ஆழ்மன ஆவல் தான் யமுனாவிடம் தோன்றும் பொருந்தாக் காதலோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது. அத்தனை எளிதில் கிடைக்காது என்று நன்கு தெரியும் ஒன்றின் மேல் வெறித்தனமாக ஆசை கொள்வதும் மனித இயல்புகளில் ஒன்று தானே? யமுனாவின் பேரழகும் வயதில் பெரியவள் என்ற தடைகளுமே அவள் மீது கட்டுக்கடங்காமல் பாபு கொண்டு விடும் மோகத்துக்குக் காரணமோ?


எப்பொழுதும் போல தி.ஜா வின் இந்தக் கதாநாயகியும் பேரழகியாகவும், தியாகத் திருஉருவாகவும், அசாதாரண அறிவும், மனத் திண்மையும் கோண்டவளாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

பாபுவின் மேல் மோகம் கொண்டு விடும் இளம் பெண்ணின் பாத்திரம் மிகுந்த பரிதாபத்துக்குரியது. அவள் காதலை ஏற்க பாபு மறுத்து விட தற்கொலை செய்து கொள்கிறாள் அவள். அவளைக் குத்திய மோக முள் விஷ முள்ளாக அவளையே பலி கொண்டு விடுகிறது. பாபுவைக் குத்திய மோக முள் , அவனை சங்கீத சாம்ராஜியத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட பயணப்படுத்துகிறது.

பல சமூக அவலங்களையும் கதையின் வாயிலாக நம் கண் முன் நிறுத்துகிறார் தி.ஜா.

1.யமுனாவின் தாய் ஒரு சமீன்தாரால் வைப்பாட்டியாக்கப்பட்டதால் அன்றோ அத்துனை இழிநிலைகள் அவளுக்கும் யமுனாவுக்கும்?

2.தற்கொலை செய்து கொள்ளும் பெண் அவள் வயதுக்குச் சற்றும் பொருத்தமில்லாத கிழவனுக்கு வாழ்கைபட்டதால் தானே அவளுக்கு உலகில் வாழ விருப்பம் அழிந்தது?

மோக முள் திரைபடமாக்கப் பட்ட விதம் பற்றியும் சொல்லியாக வேண்டும். பொதுவாகத் திரையில் நாவல்கள் அத்தனை உயிரோட்டம் பெற்றுவிடுவதில்லை. மோகமுள் ஒரு விதி விலக்கு. மிகப் பிரமாதமாக படமாக்கப்பட்ட நாவல்களில் இதுவும் ஒன்று. அபிஷேக், அர்ச்சனா ஜாக்லேகர், நெடுமுடி வேணு என்று எல்லாப் பாத்திரங்களுமே தி.ஜா இவர்களை எண்ணித்தான் கதை எழுதியிருப்பார் என்று சொல்லும் அளவுக்கு தோற்றத்திலும், நடிப்பிலும் அசத்தினர். அசாதாரணமான அழகி அர்ச்சனா ஜாக்லேகர், மராத்திய பெண்ணுக்கும் தஞ்சாவூராருக்கும் பிறந்த யமுனாவுக்கு சரியான தேர்வு, பிள்ளைமை மாறாத முகமும் ஒரு பாடகனுக்கு வேண்டிய அமைப்புமாக அபிஷேக்கும் நல்ல பொருத்தம். படமும் என்றும் மறக்கவியலாத காவியம்.

தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான மோகமுள் இலக்கியவுலகுக்கு தி.ஜாவின் உன்னதமான பரிசு.

...ஷஹி..

படங்கள் மோகமுள் திரைபடத்திலிருந்து நன்றி இணையம்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails