தனிமையும் வாழ்வின் துயரமும் தோள்களில் நுகத்தடியாய்க் கனக்க, உயிர் இருந்ததால் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயமும், குடிமயக்கத்தின் ஆசையும் இரு பெரும் சவுக்குகளாய் அவன் இருத்தலை இயக்க, தொலைந்த எதையோ தேடுபவனாய் குனிந்தவாறே தான் நடப்பான் செபாஸ்டியன். காவலாளியாய் அவன் வேலை பார்த்து வந்த எங்கள் எதிர்வீட்டின் வாசலிலிருந்து ,உணவுக்காக அவன் நம்பியிருந்த தெருவோர கடைகள் வரை ,அவனைத் தொடர்ந்து நடக்க விடாது எங்கள் தெரு.
வாச்மேன், தாத்தா ,அங்கிள் என்று அவரவர் குணத்துக்கும் ,வசதிக்கும் படிப்புக்கும், ஏற்றவாறு அழைக்கப்பட்டான் செபாஸ்டியன். தோட்ட வேலையும், கழிவு நீர்க்கால்வாய்கள் அடைபட்டும், வீட்டின் எட்டாத உயரத்தில் பிடிவாதமாய்த் தொங்கும் ஒட்டடையும் அவனுக்காக எப்போதும் காத்திருந்தன. வீட்டுக்காரர்கள் பணத்தின் மீது வைத்திருந்த மதிப்பு, அல்லது அதன் இன்மை யைப் பொறுத்து வேலைகளுக்கான கூலி கிடைக்கும் அவனுக்கு. நாளை வரை தாங்காது -என்பது போன்ற உணவுப் பதார்த்தங்கள் கெட்டுப் போகாத நிலையிலும் , குளிர்பெட்டியில் ஓரிரு நாள் தாங்கும் போல- என்று படும் உணவுகள் இனி முடியாது என்ற நிலையிலும் அவனுக்குக் கிடைத்து வந்தன.
எதற்கும் , எவரிடத்தும் எதிர்ப்போ, கோபமோ அவன் தெரிவித்து யாரும் பார்த்ததில்லை. குடிபோதையின் உச்சத்தில் மட்டும் தன்னிலை மறந்து உளறிக்கிடப்பான். அப்போதும் கூட தாளாத தன் தனிமையை, வாழ்வின் அவலத்தை, துரோகத்தைத் தாளவியலாத தன் இதயத்தின் குமுறலை காற்றிடமும் , புளித்து நாறின நிலையிலும் பாதுகாத்து வைத்து அவற்றுக்கென அவன் வைக்கும் சோற்றுக்காக அவன் புறமே அலையும் நாய்களிடமுமே பேசித்தீர்ப்பான். ஒரு கயிற்றுக் கட்டிலும், ஓர் பயணப்பையில் அவன் வைத்திருந்தஓரிரு உடுப்புகளுமே அவனுடையன என்று பின்பொரு நாளில் அடையாளம் காட்டப்பட்டவை.
கடுமையான குடிபோதையில் கூட அவன் வாந்தி எடுத்ததோ, அருவருப்பான வார்த்தைகள் பேசியதோ இல்லை.ஒரு முறை எங்கள் குடிநீர்க் குழாயில் தாங்கவியலாத துர்வாடை வீச, அழைத்து வரப்பட்டான் செபாஸ்டியன். பெரிய அணில் ஒன்று இறந்து மிதந்தது தொட்டியில் ..கொஞ்சமும் யோசிக்காமல் தொட்டியில் இறங்கி நிமிடத்தில் அணிலை எடுத்து வெளியில் வீசினான், துப்புரவாகத் தொட்டியச் சுத்தம் செய்து அவன் போன பிறகும் இரண்டு நாட்களுக்கு தொட்டியின் குழாயைத் திறக்க மனம் வரவில்லை..அன்றிரவு செபாஸ்டியன் ஓங்காரித்து வாயில் எடுத்துக்கொண்டிருந்ததை பதைக்கும் குற்ற உணர்வோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.
புதிதாக வளர்ந்து கொண்டிருந்த குடியிருப்புப் பகுதி என்பதால் புதராக மண்டிக்கிடக்கும் பகுதிகளில் இருந்து கிளம்பும் பாம்புகளுக்குப் பஞ்சமில்லை. மிகப் பெரிய சாரைப்பாம்பு ஒன்றை அதன் வாடையில் இருந்தே கண்டு பிடித்து செபாஸ்டியன் அடித்துக் கொன்ற சில நாட்கள் வரை தெருக்குழந்தைகளுக்கு எல்லாம் அவன் தான் ஹீரோ. சலிக்காமல் பாம்பை அடித்த கதையை பல முறை குழந்தைகளுக்கு அவன் சொல்லிவந்தான்.
கையில் இருந்த காசையெல்லாம் குடிக்க செலவு செய்துவிட்ட நிலையில் சில இரவுகளில்,
"ஏதாவது மிச்சம் மீதாரி இருக்கா பாப்ப்ப்பா"...
என்று குரல் கொடுப்பான்... கொடுக்கும் எதையுமே மிகுந்த ஆர்வத்துடனும், மரியாதையுடன் பெற்றுக் கொள்வான்..
"ஐயோ இது தங்கம்ல..போதும் போதும்ம்ம்"
என்று அவன் பதறும் குரல் இதையே சமைத்த உடன் கொடுக்காமல் விட்டோமே என்ற வாதையை சில நிமிடங்களுக்கு உண்டு பண்ணும். பின்னிரவுகளில் மின் தடை ஏற்படும் சில வேளைகளில், காற்றுக்காக வெளிகேட்டைத் திறக்கும் சமயங்களில் தன் கயிற்றுக் கட்டிலில் பிதற்றியவாறு அவன் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன்...இவனையும் ஒருத்தி மணந்திருக்கிறாள் அவனோடு உறவு கொண்டு ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாகப் பிள்ளைகள் பெற்றுக்கொண்டிருகின்றாள் என்ற எண்ணத்தில் தலை தானாக உலுக்கிக் கொள்ளும்.
"அடுப்பில் வாணலியை ஏத்திட்டுக் கூட வாச்மேனை கடைக்கு அனுப்பி பலசரக்கு வாங்கி வரச்சொல்லலாம்..ஒரு நிமிசம் வாங்கிட்டு வந்துடுவாரு" என்று ஓயாமல் அவனை வேலை வாங்கி வந்த ரமா பிரஸ்தாபிப்பாள். துபாயில் வேலை பார்த்து வந்தான் அவள் கணவன். பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்லவும் கூட்டி வரவும், கடைக்குப் போகவுமாக செபாஸ்டியன் அவள் இட்ட வேலைகளை எல்லாம் தட்டாமல் செய்து வந்தான். ரமாவின் குடியிருப்பில் அரசல்புரசலாக செபாஸ்டியனையும் அவளையும் சம்பந்தப்படுத்தி பேச்சு கிளம்ப முழுவதுமாய்க் குடித்திருந்த நிலையில் பேசியவர்களைக் கிழித்துக் கூறு போட்டு விட்டான் செபாஸ்டியன். இரவெல்லாம்...
"யார..யார"
என்றவாறே கத்திக் கொண்டிருந்த அவன் அலறல் நாராசமாக இருந்தது. ரமாவின் குடியிருப்பில் வேலை பார்த்து வந்த கலா சொல்லித்தெரிய வந்தது, செபாஸ்டியனின் மனைவி அவனை நீங்கியிருந்தது அவனுடனான வெறுப்பினால் மட்டும் அல்ல, இன்னொருவன் பால் கொண்டுவிட்ட அன்பால் என்பது. குழந்தைகளை வெகுவாக நேசித்து வந்த செபாஸ்டியன் , வீட்டை விட்டு வெளியேறி தன் பிழைப்பை அடுத்த ஊரில் அமைத்துக் கொண்டான். ஒரு படிக்காத கிராமத்தான் தன் மனைவியின் போக்கைத் தடுக்க நினைக்காமல் நாசுக்காக அவளை நீங்கி வந்திருக்கிறானே என்று தெருவே அதிசயித்துப் போனது.
இரவின் தனிமையிலும் வெக்கையிலும் புழுங்கி அவன் பிதற்றுவது எந்த மொழியில் என்று யோசிக்கும் வண்ணம் தான் இருக்கும். என்ன தான் சொல்லி பிலாக்கணம் பாடுகிறான் என்று உறுத்துக் கேட்டாலும் ஒன்றும் புரிந்ததில்லை . தாளாத துயரத்தின் , மாளாத உயிர் வாதையின் வலி பேசும் மொழி அது .
மாமன் மகள் திருமணத்துக்காக ஊருக்குக் கிளம்பிய நிலையிலும் குளிர்பெட்டியில் மதியம் வைத்த சோற்றின் நினைவு எனக்கு,
"இதை மறந்துடாம செபாஸ்டியன் கிட்ட குடுத்துடுங்க"
என்று அவரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினேன். வழியில் செபாஸ்டியனின் மகன் சூசை வந்து கொண்டிருந்தான். லேசான மனப் பிறழ்வில் இருப்பவன் சூசை, பல முறை அப்பனைப் பார்க்க வந்து அவனிடம் இருக்கும் பணத்தையெல்லாம் சண்டையிட்டுப் பிடுங்கிக்கொள்வதுடன், அடித்துக் காயப்படுத்தி விட்டும் போவான். மகன் பிஏ படித்தவன் என்பதில் மிகுந்த கர்வம் செபாஸ்டியனுக்கு. சூசையைப் பார்த்ததுமே எரிச்சல் கிளம்பிவிட்டது என் மகள் ஆஃபியாவுக்கு,
" பாரும்மா வந்துட்டான் செபாஸ்டியன் அன்கிள அடிக்க"
என்று பொரிந்தாள். இப்படியே அடித்துப் போட்டுக் கொண்டிருந்தால் எத்தனை நாள் தான் அவனும் தாங்குவான் என்ற எண்ணத்தோடு தான் ரயில் ஏறினேன்.
திருமணம் முடிந்து வீடு வந்து சேர்ந்த அடுத்த நிமிடம், பிரின்ஸிபல் மனைவி மாலா அடித்துப் புரண்டு ஓடி வந்தாள் ..
"அக்கா தெரியுமா? நம்ம வாச்மேன் எறந்து போயிட்டாரே? "
அடிவயிற்றில் இருந்து என்னையறியாமல் புறப்பட்டது ஒரு கேவல்..
"ஐயோ நான் ஊருக்குப் போகும் போது நல்லாத்தானே இருந்தாரு? சூசை ஏதும் அடிச்சுப்போட்டானா?"
"இல்லக்கா..அந்த சூச பய இந்தா தெருக்கோடியில தான் அளுது அளுது மொகம் வீங்கிப்போயி கெடக்கான்...அப்பன் சாவுக்குக் கூடப் போகலையாம்! கூப்புட வந்தவங்க கிட்ட நான் வந்தா நானும் எங்கப்பனோட போவேன்னு அளுதிருக்கான்...மக கல்யாணம்னு ஊருக்குப் போன எடத்துல அந்த ஆளு கிணத்துல விளுந்துடாராம் கா"...
அதிர்ச்சியில் இருந்து மீளாமலே படுக்கையிலேயே கிடந்தேன்.
"போடி போ அந்தாளுக்கும் நமக்கும் என்னடி..ஒரேயடியாத்தான் கெடக்கே ..நம்ம வீட்டுலயா வேல பாத்தான்?"
என்ற இவரின் எரிச்சல் பேச்சு எழுப்பியது என்னை. நான் அறிந்த செபாஸ்டியனின் வாழ்நாளெல்லாம் அவனைச் சுற்றி இருந்த மர்மப் புகையே அவன் மரணத்திலும் சூழ்ந்து விட்டதே ...இப்படியும் சாவு வருமா? மனித வாழ்வு இத்தனை அற்பமா? இத்தனை வருடம் எல்லாருக்காகவும் உழைத்து வந்த ஓர் உயிர் போனதைப் பற்றி பெரிதாய் ஏன் யாரும் பதறவில்லை? கேள்விகள் ..
மாலையில் வீடு திரும்பியவர் ,
"கடைத்தெருவில் செபாஸ்டியன் சாவு தான் பேச்சே..கிராமத்துல பொறந்து அங்கயே வளந்த ஆளு..கெணத்துல தெரியாம விழ வாய்ப்பே இல்ல! குடிபோதையில விழுந்தாலும் தண்ணியில விழுந்ததும் தெளிஞ்சிருக்கும்..ஒண்ணு அந்த ஆளு வேணும்டு விளுந்திருக்கணும் இல்ல அந்த ஆளுக்கு ஏதோ சொத்து பத்து இருக்காம் அதுக்காக அவன் அங்காளி பங்காளி யாரும் கொன்னிருக்கணும். மக கல்யாணம் முடிஞ்ச ஒரு மணி நேரத்துல பொணமா மெதந்திருக்காரு" .
ஊருக்குப் போவதற்கு முதல் நாள் அடித்த மழையில் சாய்ந்து கிடந்த ரங்கூன் மல்லிக் கொடியைத் தூணோடு சேர்த்துக்கட்டிக் கொண்டிருந்த செபாஸ்டியன்,
"நம்ம பாப்பாளுக்குக் கல்யாணம் பாப்பா..நானும் ஊருக்குப் போறேன் ரெண்டு நாள்ல்ல வந்துவேன்"..
என்றது நினைவில் சுற்றியவாறே இருந்தது. அதில் பாப்பா என்பது நானா என் மகளா என்று ஏனோ நினைப்புத்தட்டியது..மகளையும் அவள் வயதினள் யாரையும் பாப்பா என்று வாஞ்சையுடன் அழைத்து வந்த உயிர். இப்படி எப்படி மரணம் வந்தது என்றே தெரியாமல் போய் விட்டது. பயமும் வேதனையுமாகவே அரைகுறைத் தூக்கம் சில நாட்களாக..ஒரு அதிகாலையில் கனவா இல்லை உறக்க மயக்கம் தானா என்றே புரியாத ஒரு நிலை. பெரும் பாரத்தை முதுகில் சுமந்தவாறு தள்ளாடி வந்த மாடு ஒன்று என் வீட்டின் வாசலில் கால் மடங்கி விழுகிறது..
"ஏய் செத்துப் போன மாட்டுக்கு ஏன்டி தண்ணி கொண்டு போற"
எனும் இவர் குரலை சட்டை செய்யாமல் தண்ணீரோடு விரைகிறேன். விழுந்து கிடந்த மாட்டின் வாயில் நுரை தள்ள, தண்ணீரைத் தெளித்ததும் திறந்தன அதன் கண்கள்...ஏனோ அதன் வாய் அசைந்தது "யார யார" என்னும் விதமாகத்தான் கேட்டது எனக்கு.....
..ஷஹி..
உயிர் வாதை ..உலுக்கும் கதை...
ReplyDelete