ஜெயமோகனின் காடு அவரது ஐந்தாவது நாவல். கனவையும் வாழ்வின் யதார்த்தத்தையும் ஊடும் பாவுமாக நெய்து படைக்கப்பட்ட நாவல் காடு."ஏய் வாசகா உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்" என்கிறது நகுலனின் கவிதை வரியொன்று. நான் பார்த்த காடு தான் எனது. அதைத்தான் எனது விமர்சனமாகவும், விவாதமாகவும் முன் வைக்கவியலும்..ஆரோக்கியமான விவாதங்கள் இலக்கிய உலகில் வரவேற்கப் படும் என்ற நம்பிக்கையுடன்..
காட்டில் சாலையிடும் கல்வெர்ட் கான்டிராக்ட் எடுத்துள்ள மாமனின் ஆணைக்கு இணங்கி ,தன் தாயின் விருப்பம் என்பதாலும்...கான்டிராக்ட் கணக்கு வழக்கு பார்க்கவென காட்டில் நுழைகிறான் நாயகன் கிரிதரன்.
பணியாள் குட்டப்பன்... கதை நெடுகிலும் நம்மைக் கவரும் பாத்திரம், சமையல் , காடு பற்றின சகல அறிவும், வேலையாட்களிடம் வேலை வாங்கும் திறன், சக மனிதர்களிடத்தான அன்பு, மாறாத மன மற்றும் உடற்திறன் என்று ஒரு ஹீரோவுக்கான அத்துணை அம்சங்களும் பொருந்தின ஒரு கதாபாத்திரம்.
ரெசாலம், குரிசு, சினேகம்மை, ரெஜினாள் ,ராபி ,ஆபேல்-இரட்டையர்கள் என்று வேலையாட்கள்.
காட்டின் மீது அதீதமான ஆர்வம் இழுக்க ,உலவச் சென்ற நேரம், ஒரு மரத்தினடியில் கண்ணயர்ந்து விடும் கிரிதரன், கனவா நினைவா என்றே உணரவியலாத அச்சுறுத்தும் ஒரு மனப் பதட்டத்துக்கு ஆளாகிறான் . காடு பற்றி மட்டுமல்லாமல், தம்புரான் கதைகள் பலவும் அறிந்த குட்டப்பன் அடங்காக் காமப் பசி கொண்டலைந்த வன நீலியொருத்தி காஞ்சிர மரமொன்றில் ஆணி அறையப்பட்டு கட்டுண்டு இருக்கும் கதையைச் சொல்ல, கிரியின் மனதிலும் நீலியை இருத்தி கூர் ஆணி கொண்டு அறையப்படுகிறது. எத்தனை தான் பயமும் பதட்டமும் இருந்தாலும் காட்டின் ஓயாத அழைப்புக்கிணங்கி மீண்டும் மீண்டும் காட்டினுள் புகுகிறான் கிரி.
நீரோடை ஒன்று சிற்றருவியாகவிழும் இடத்தில் ,குளிக்கவென அமர்ந்திருந்த பேரழகு , மலையத்தி ஒருத்தியைப் பார்த்த மாத்திரத்தில் காதலும் கொண்டு விடுகிறான். அவள் யார் என்னவென்ற விபரம் ஏதும் அறியாத போதிலும், மீண்டும் சந்திக்க வாய்ப்பு அமையுமா என்றெல்லாமும் தெரியாத நிலையிலும் கூட ,மனதையும் உடலையும் சேர்த்துப் பிணைத்து ...வேறொன்றையும் பெரிதென நினைக்க இடங்கொடாமல், நினைவில் கனவாகவும்..கனவில் நினைவே போலும் மயக்கும், வாழ்வில் ஒரே முறை வாய்க்கும் முதற் காதலின் உன்மத்தப் பிடியில் சிக்கி விடுகிறான்.
நீலி என்பது தான் கிரிதரன் காதல் கொண்டு விடும் மலை சாதிப் பெண்ணின் பெயர்.குட்டப்பன் கிரிக்குச் சொல்லும் வனநீலிக் கதை, மிகையான சொல்லாடல்களுடனானது என்றாலும், கதையில் அதன் பங்கு பிரதானமானது. ஐய்யர் பாத்திரமும் , குட்டப்பனும் மட்டும் அவளைப் பற்றி பேசும் இடங்கள் இல்லையென்றால்...மனம் பிழன்ற நிலையில் கதாநாயகன் தானாகவே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனைக் காதலி தான் நீலி என்ற அளவிலேயே வாசகனின் புரிதல் இருந்திருக்கும். மட்டுமல்லாமல் அவள் இறந்து பட்டாள் என்ற செய்தியை குட்டப்பன் சொல்லுமிடம் நமக்குப் பெரிதான அதிர்ச்சியொன்றும் ஏற்பட்டு விடாமல் அவளுடைய பாத்திரத்தோடே பிணைந்திருக்கும் ஒரு வன தேவதை தானோ அவள் என்ற மாயத்தோற்றம் காக்கிறது.
சில நாட்கள் மட்டுமே கிரியும் நீலியும் பேசிப் பழக சந்தர்ப்பம் அமைகிறது. கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால்..... பார்த்த மாத்திரத்தில், அவள் மேலாடை ஏதும் அணியாத நிலையில் தான், கிரி அவளிடம் காதல் கொண்டு விடுகிறான் என்ற போதும், பழகும் வாய்ப்பு கிட்டும் எந்த நேரத்திலும் அவர்களுக்கிடையே உடல் ரீதியிலான நெருக்கம் நேரவேயில்லை என்பது தான். உண்மையான காதலுக்கு உடல்களைப் பிணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தானா ஜெயமோகன் சொல்ல விழைவது?
கிரிதரனின் தாய்----தினசரி வாழ்க்கையில் நாம் அனைவரும் எங்கேனும் சந்தித்திருக்கக் கூடிய ஒரு பெண் தான் இவள். தான் எடுத்து விட்ட முடிவில் திடமாய் இருப்பதும், எதற்கும் அஞ்சிவிடாத அவளுடைய துணிவும், கணவனை, மகனை தான் நினைக்கும் விதமாக ஆட்டி வைப்பதிலும் ...யதார்த்தமான ஒரு பாத்திரப் படைப்பு.
ஐய்யர்----பெண்கள் பற்றின இவரது ரசனையும், இலக்கியத்தின் பால் கொண்டிருக்கும் நாட்டமும், கதாநாயகனிடம் இவர் கொண்டு விடும் நட்பும் கதையின் போக்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
"இன்னும் சொல்லப்போனா எல்லா மோகினி, பேய்க் கதையிலயும் உள்ள இருக்கிறது பெண்ணோட காமத்தைப் பயப்படற ஆணோட கோழைத்தனம் தான். எல்லாப் பெண்ணிலயும் யட்சி உண்டு. மந்திரம் தெரிஞ்சவன் பயப்படமாட்டான்." என்று ஐய்யர் கிரிக்கு அறிவுரை கூறுகிறார் ஓரிடத்தில். ஆசிரியர் பேசும் யட்சிப் பெண்கள் வெறும் புனைக்கதைகளில் பாத்திரமாக வரும் கனவா? இல்லை அவர் அறிந்து, பார்த்து, பயந்த நிஜப் பெண்களா? ஆண் , பெண் உறவுச் சிக்கல்களை அலசும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், இப்படிப் பட்ட அழுத்தம் திருத்தமான, எதிர்மறையான நிலைப்பாடுகள் அல்லது கருத்துத் திணிப்புகள் எதற்காக?
பெண்கள் பற்றின அழகு வர்ணனைகளிலும் சரி, அவர்களுடைய மன ஓட்டங்களை விவரிக்கும் இடங்களிலும் சரி , கடுமையான ஆணாதிக்க சிந்தனை விரவிக் கிடப்பதை ஆசிரியர் அறிகிறாரா? நாயகன் காதலியின் அழகை எண்ணி மயங்கும் போதே, நாட்டில் வாழும் மங்கையரின் குறைகளாகக் கருதும் பொன்னிறத்தையும், தளர்ந்த உடற்கட்டையும் விவரித்து ,அவன் மீதே பெரும் எரிச்சலை வாசகனுக்கு உண்டாக்குகிறான். அழகின் மீது இத்தனை காதல் கொள்ளும் கிரியின் மனைவி, அவன் மாமன் மகள் வேணி அவலட்சணத்தின் மொத்த உரு என்பதும் முக்கியமான செய்தி.
நாம் அறிந்தேயிராத காட்டை நம் கண்களின் முன் விரியச்செய்வதிலும், ஒரு மிளாவை, யானையை, பலா மரத்தை, ஆற்றை, தேவாங்கை, குரங்கை,கொன்றை மரத்தை, கதாபாத்திரமாக நினைக்க வைப்பதிலும், ரெசாலம் ஒரு தேவாங்கின் மீது கொண்டு விடும் அதீதமான பாசம் ஏன் என்று வாசகனுக்குப் புரிய வைக்கும் இடத்திலும் ஒரு தேர்ந்த கதைசொல்லியாக சரசரவென விஸ்வரூபம் எடுக்கிறார் ஜெயமோகன். கிருத்துவ மதம் பற்றி மிகுந்த கிண்டல் தொனிக்கும் வசனங்கள் பல உள்ளனவே என்று வாசகன் உயர்த்தும் புருவத்தை நீவி விடும் படியாக..அதே கிறித்துவ பாதிரியும், மருத்துவரும், செவிலிமாரும் மலைவாழ் மக்களுக்கு சேவை செய்பவர்களாகக் காட்டியும், அம்மதம் மலைவாழ் மக்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்களையும் ஊடாக எழுதிவிட்டிருக்கிறார்.
கதை நெடுகிலும் குமட்ட வைக்கும் ஏசும் வார்த்தைகள், பாத்திரமாக வரும் முக்கால்வாசிப் பெண்கள் அடங்காக் காமம் கொண்டலைபவர்களாகச் சித்தரிக்கப் பட்டிருப்பதும் என்று முகஞ்சுளிக்க வைக்குமிடங்கள் ஏராளம். ஜெயமோகனின் பல கதைகளிளும் போலவே இதிலும் பெண் என்பவள் ஏதோ மிஸ்டீரியஸான, அச்சம் தருபவளாக, எளிதில் திருப்தி அடைந்து விடாத ஒரு பிறவியாகவே புனையப்பட்டிருகிறாள். கதையின் போக்கெங்குமே கதாநாயகன் பெண்களால் பாலுறவுக்காகக் கட்டாயப்படுத்தப்படுபவனாகவே இருக்கிறான். இதென்ன ஆண் இனத்தின் ஆழ் மன ஆசையின் ஒரு நீட்சியா? இல்லை யதார்த்தம் என்பது தான் ஆசிரியர் சொல்லும் பதிலா? ஒப்புக்கொள்ளவே முடியவில்லையே! ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை வன்புணர்ந்துவிட இயலும்..ஆனால் ஆணுக்குத் தான் இயற்கையே பாரபட்சமான ஒரு வசதி வழங்கியிருக்கிறதே? எந்த ஒரு இடத்திலும் தானாக ஒரு முடிவு எடுக்காதவனாகவும், கோழையாகவுமே தோன்றும் கிரி அப்படியொன்றும் மனதைக் கவரும் விதமானவனாகவும் இல்லை..ஆனாலும் அவன் மாமியிலிருந்து, அடுத்த வீட்டுப் பெண், எஞ்சினீயர் மனைவி என்று அவனைக் காமுறும் பெண்களாகவே காட்டப் படுவதை சகிக்கவே இயலவில்லை.
எந்தப் பெண்ணைப் பற்றின குறிப்பென்றாலுமே நாவல் முழுவதும் அவளுக்கு இன்னாருடன் தொடர்பு என்று சர்வசாதாரணமாக சொல்லப்படுகிறது. ரெஜினாளுக்குப் பதிலாக வேலைக்கு வரும் எடத்துவா மேரி என்னும் பெண்ணைப் பற்றி "அவளுக்கு கற்பும் பணம் போல கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் தான்" என்னும் வரி கூட பாத்துக்கோ நானொன்னும் எல்லாப் பெண்களையும் பற்றி அப்படிச் சொல்லல என்பது போலத்தான் இருக்கிறது.
ரெசாலத்தின் மனைவிக்கு கிரியின் மாமனோடு தொடர்பு இருப்பதும் பிள்ளை போல் வளர்த்த தேவாங்கை சிறுத்தை கவ்விச் செல்வதில் மனம் தடுமாறி வீட்டில் கொண்டு விடப்படும் ரெசாலம், கிரியின் மாமனைக் கொல்வதுமாக இன்னொரு கள்ளத்தொடர்பும் அதன் விளைவும்.இம்மாதிரியான தொடர்புகளும், காம விகாரங்களும் நம் சமூகத்தில் இல்லை என்று சொல்வதற்கில்லை என்றாலும் இத்தனை அழுத்தமான , விகாரமான, காமம் பற்றின நிலைப்பாடு, யதார்த்தம் என்ற பெயரில் தேவைதானா? காடு என்பதே நம் ஆழ் மனம் பற்றினதான ஒரு குறியீடு தான் என்றும் அதன் நிலைப்பாடுகளில், விகாரங்களில், குரூரங்களில், தன்மைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விவாதிப்பது தான் நாவலின் நோக்கம் என்று விட்டாலும் கூட அதிகமான ,மிகைப்படுத்தல் தெரிகிறது காமம் பற்றின கண்ணோட்டத்தில்.
காடும் ,காட்டில் வாழும் எண்ணற்ற உயிரினங்களும் மனிதனின் பேராசைக்குப் பலியாவதை கதையின் ஓட்டத்தில் சொல்லி சூழலியல் எச்சரிக்கை ஒன்றை அறைகூவுகிறார் ஜெயமோகன்.
நிகழ்காலத்திலும் இறந்தகாலத்திலும் ஏக நேரத்தில் பயணிக்கும் கதையோட்டம், ஒரு தேர்ந்த இயக்குநரின் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் போல வெகு கச்சிதம். கிரியும் நீலியும் குறிஞ்சிப் பூவைப் பார்க்கப் போகும் இடம் கதையின் போக்கில் அடடா என்று வியக்க வைக்கும் இடங்களில் ஒன்று. என்னவோ ஏதோவென்று குறிஞ்சியைப் பற்றி ஏக எதிர்பார்ப்பில் இருக்கும் கிரி இந்த அபத்தமான பூவை ஏன் மலையும் மலை சார்ந்த இடத்திற்கான அடையாளமாகக் கற்பனை செய்தார்கள் என்று ஏங்குவது அற்புதமான ஒரு மனவியல் கூற்றை போகிற போக்கில் சாதாரணமாகச் சொல்லி விடும் ஒரு வரி.எத்தகைய ஓர் அபூர்வ நிகழ்வாக குறிஞ்சி மலர்வதைக் கொண்டாடுகிறான் மனிதன்...ஆனால் அப்படியொன்றும் பூலோகத்தில் இல்லாத ஓர் பொன்மலராக அது இல்லை என்பது ஏமாற்றம் தந்துவிடம் ஒரு விஷயம் தானே..யதார்த்தம் என்பதும் அப்படிப்பட்டது தானே? ஒரு வன தேவதையாக, பெண்ணல்லாத ஏதோ ஒரு மாயப் பொருளாக, காணக் கிடைக்காத ஒருத்தியாகவெல்லாம் நீலியைக் கற்பனை செய்து வந்த கிரி அவளும் சாதாரணப் பெண் தான் என்று உணர்ந்து கொள்ளும் ஒரு கணம் அது. மனதிற்குள் பெருங்கனவாக, உன்மத்தம் கொண்டுவிடச் செய்யும் ஒரு உணர்வு... கனவு நிலையை விட்டு வெளியே வந்து விட்டால்...நீர்த்துப் போய் விடுவதை வாழ்நாளில் ஒரு முறையேனும் அனுபவிக்காதவர்கள் யார்?
கதையின் ஓட்டத்தில் கிரியின் தொழிலில் பெரும் நட்டம் ஏற்படுவதும், மனப்பிழற்வின் விளிம்புக்கு அவன் சென்று மீள்வதுமாகவும், நீலியைப் பற்றின கனவுகள் அவன் வாழ்வு முழுவதும் தொடர்வதுமாக செல்கிறது.
ஜெயமோகன் எழுத்தில் எப்போதும் காணப்படும் குமரி மாவட்டத்து மலையாளம் கலந்த அழகுத் தமிழ் கதையின் மொழியாகி வசீகரிக்கிறது..அதே போல அவரது கதைகளில் எப்போதும் உலவி வரும் யட்சிகளும், நீலியரும் காட்டிலும் நடமாடி ஒரு கனவு நிலைக்கு வாசகனைக் கொண்டு செல்கின்றனர். கம்ப ராமாயணமும், குறுந்தொகையும் அடிக்கடி கையாளப்பட்டு ஆசிரியரின் மொழி அறிவையும், கதை மாந்தரின் இலக்கிய ஆர்வத்தையும் உணர்த்துகின்றன.
ஆசிரியர் ஒரு போத மயக்கத்தில், ஒரு கிளர்ச்சியுற்ற நிலையில் மட்டுமே இந்தக் கதையை,அதுவும் ஒரே மூச்சில் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்று வாசகனை நம்பவைக்கின்றது , ஒரு காட்டாறுக்கிணையாகப் புரண்டோடும் கதையின் நீட்சி. வாசகனும் அடித்துச்செல்லும் காட்டாற்றுக்கு ஈடு கொடுத்து ஒரு பெரிய மனப்பிழற்வை எதிர்கொள்ளும் விதமாகக் காட்டில் புரண்டு எழுகிறான்.
...ஷஹி...
No comments:
Post a Comment