Search This Blog

Thursday, September 30, 2010

புத்தக விமர்சனம்..லியோ டால்ஸ்டாயின் "ஆன்னா கரேனினா"..



"லியோடால்ஸ்டாயிடம் எனக்குள்ள மனப்பாங்கு, வாழ்க்கையில் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டு, பக்தியுடன் வழிபடுகிறவனுடைய மனப்பாங்காகும்" என்கிறார் மஹாத்மா காந்தி.

ஆன்னா கரேனினா "இது வரையில் எழுதப்பட்ட நாவல்களிலேயே ஒப்பற்ற ஒன்று" என்று J.Pederzane இன் "The Top Ten" இல் பரிந்துரைக்கப்பட்ட நாவல். எட்டு பகுதிகளாக விரிகிறது ஆன்னாகரேனினா.


ஆன்னா -கதையின் நாயகி, ஒப்பற்ற அழகி, அவளை விட இருபது வயது மூத்தவரான அலெக்ஸேய் அலெக்ஸேன்ரோவிச் கரேனின் என்ற பிரபல அரசியல் தலைவரை மணந்து கொண்டவள். இனிய சுபாவமும், ரசனைகளும், உடையலங்காரமும், அறிவுக்கூர்மையும் கொண்ட உயர் குடிப்பெண். அவளுடைய மகன் ஸெர்யோஷாவிடம் மிகுந்த அன்பு கொண்டவள். ஸ்டீபன் அப்லான்ஸ்கி என்கிற ஸ்டீவா அவளுடைய சகோதரன்.

நாவலின் துவக்க வரிகள் பல லட்சம் முறை மேற்கோள் காட்டப்பட்ட வரிகள். "மகிழ்ச்சியான குடும்பங்கள் அனைத்தும் ஒன்றே போன்றவை, துன்பமிக்கவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையானவை". ஆன்னாவின் சகோதரன் ஸ்டீவா, அவனுடைய வீட்டைக் கவனித்துக்கொள்வதற்காக அமர்த்தப்பட்டிருக்கும் பெண்ணுடன் தொடர்பு கொண்டு விடுகிறான். அவன் மனைவி டாலிக்கும் அவனுக்கும் பெரும் பூசல் உருவாக, சமாதானம் செய்விக்க ஆன்னா, பீட்டர்ஸ்பர்கிலிருந்து ரயிலில் வருகிறாள். ஸ்டீவாவின் இளம் பிராய நண்பன் லெவின், ஸ்டீவாவின் கொழுந்தி, கிட்டி என்னும் கேத்தரீனாவிடம் தன்னை மணக்கக் கோருவதற்காக எண்ணமிடுகிறான். அதே எண்ணம் வ்ரான்ஸ்கி என்னும் படைத்தலைவனுக்கும் இருக்கிறது.

சகோதரியை வரவேற்க ரயில் நிலையம் செல்லும் ஸ்டீவா,தன் தாயை அழைக்க வந்திருக்கும், வ்ரான்ஸ்கியைக் காண்கிறான். அறிமுகம் செய்விக்கப்படும் ஆன்னாவைப் பார்த்த மாத்திரத்திலேயே தன் மனதை அவளிடம் இழக்கிறான் வ்ரான்ஸ்கி.
கதையின் இந்தப் பகுதியில் ஆன்னாவின் மனதை வெகுவாக பாதிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரயில் பாதையில் தொழிலாளி ஒருவன் தவறி விழுந்து, அடிபட்டு இறக்கிறான். இதனை ஒரு துர் சகுனமாகக் கருதுகிறாள் ஆன்னா.


ஸ்டீவாவின் மனைவி டாலியின் மனதைத் தன் சாதுர்யமான பேச்சினால் மாற்றும் ஆன்னா, அவளைத் தன் சகோதரனை மன்னிக்குமாறு வேண்டுகிறாள், பிரியவிருந்த குடும்பம் இணைகிறது. தன் அக்கா டாலியைச் சந்திக்க வருகிறாள் கிட்டி. மாலையில் நடக்கும் ஒரு நடன விருந்தில் ,வ்ரான்ஸ்கி தன்னுடன் ஆட வருவான் என்று எதிர்பார்த்து ஏமாறுகிறாள். வ்ரான்ஸ்கியின் கவனம் முழுதும் ஆன்னாவின் பால் திரும்புகிறது. அவனுடைய கவனத்தை ஈர்த்தது குறித்து உள்ளூர மகிழும் ஆன்னா, அது குறித்து கலக்கமும் அடைகிறாள்.

தன்னை மண்ந்து கொள்ளவிருந்த வ்ரான்ஸ்கி, ஆன்னாவின் பால் நாட்டம் கொண்டது அறிந்து மனம் உடைகிறாள் கிட்டி. இதற்கு முன்பே லெவின் தன்னை மணக்கக் கோரி கிட்டியை வேண்ட, வ்ரான்ஸ்கியின் நினைவில் மறுத்து விடுகிறாள் கிட்டி. காதல் மறுக்கப்பட்ட துன்பமிக்க நிலையில் ஊர் திரும்புகிறான் லெவின்.
ஆன்னாவும் வ்ரான்ஸ்கியும் ஒரே ரயிலில் பயணிக்க நேர்கிறது, தான் ஆன்னாவை விரும்புவதை அவளிடம் தெரிவிக்கிறான் வ்ரான்ஸ்கி. தன் மனமும் அவனை விரும்புவதை திகிலுடன் உணர்கிறாள் ஆன்னா.லெவினை மறுத்து, வ்ரான்ஸ்கியால் மறுக்கப்பட்ட நிலையில் உடல் நலம் கெட்டு, படுக்கையில் விழுகிறாள் கிட்டி.ஸ்டீவா சில காலம் நண்பன் லெவினுடன் அவன் பண்ணையில் தங்குகிறான்.




பீட்டர்ஸ்பர்கில் ஆன்னா, இளவரசி பெட்ஸியுடன் நட்பு பாராட்டி,வ்ரான்ஸ்கியைச் சந்திக்கும் வாய்ப்புகளுக்காக கேளிக்கைகளில் ஈடுபடுகிறாள். மேலும் அவனுடைய காதலை ஏற்கிறாள்.ஒரு குதிரைப் பந்தையத்தில் வ்ரான்ஸ்கி விபத்துக்குள்ளாகிறான், அது பொது இடம் என்பதை மறந்து, தன் வேதனையை வெளிப்படுத்துகிறாள் ஆன்னா. அவளுடைய கணவர் கரேனின் விசாரிக்க, தான் வ்ரான்ஸ்கியின் குழந்தையைச் சுமந்து கொண்டிருப்பதைச் சொல்கிறாள் ஆன்னா. எதன் பொருட்டும் சமூகத்தில்,தன் நற்பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்பாத கரேனின், அவளை எச்சரித்து, தகாத உறவைக் கைவிடுமாறு பணிக்கிறார்.


கிராமத்தில் சில காலம் கழிக்க வருகிறாள் டாலி. அவளைச் சந்திக்கிறான் லெவின்.கிட்டியை பற்றி பேசி அவன் மனதைப் புரிந்து கொள்ள முயல்கிறாள் டாலி. பொய்மையையும் சுயநலத்தையும் அடியோடு வெறுக்கும் லெவின், இந்தப் பேச்சினால் மேலும் எரிச்சல் அடைந்து, கிட்டியை மறந்து விடுவதாக முடிவெடுகிறான்.

ஆன்னாவுக்கும் கரேனினுக்கும் இடையே மிகுந்த மனக்கசப்பு உண்டாகிறது. தன்னைப் பணியாவிட்டால் மகன் ஸெர்யோஷாவை அவளை விட்டுப் பிரித்து விடுவதாக மிரட்டுகிறார் கரேனின். வ்ரான்ஸ்கியை மறப்பதாக இல்லை என்பதைத் தெளிவு செய்கிறாள் ஆன்னா.ஸ்டீவா தம்பதியர் ஆன்னாவை மன்னிக்குமாறு கரேனினை வேண்ட, மறுக்கிறார் கரேனின்.

குழந்தைப்பேற்றின் போது ஜன்னி கண்டு மரணத்தறுவாய்க்கே போகிறாள் ஆன்னா. இதில் மனம் கசியும் கரேனின், அவளையும் வ்ரான்ஸ்கியையும் மன்னிக்கிறார். ஒருவாறு பிழைத்தெழுகிறாள் ஆன்னா. குற்ற உணர்வு உந்த, தற்கொலைக்கு முயன்று, பிழைக்கிறான் வ்ரான்ஸ்கி. பிறந்த குழந்தை ஆன்னியிடம் தன் மனதை இழக்கிறாள் ஆன்னா. வ்ரான்ஸ்கியைப் பிரிய இயலாமல், அவன் தாஷ்கண்ட் செல்லவிருப்பதை அறிந்து, அவனிடம் செல்கிறாள், மகன் ஸெர்யோஷாவை கணவரிடம் விட்டு விட்டு.

ஸ்டீவாவின் ஏற்ப்பாட்டில் சந்திக்கும் லெவினும் கிட்டியும் மனம் கனிகிறார்கள். காதல் கல்யாணத்தில் முடிகிறது. லெவினின் சகோதரன் நிக்கலாய் மரணப்படுக்கையில் கிடப்பது அறிந்து அவரைக் காணப் பயணிக்கிறார்கள் தம்பதி. கிட்டி நிக்கலாயை அருமையாகக் கவனித்துக்கொள்கிறாள். கிட்டியின் அன்பின் துணை கொண்டு சகோதரனின் மரண துக்கத்தைத் தாங்கிக்கொள்கிறான் லெவின். கிட்டி தாயாகவிருப்பதை அறிந்து மகிழ்கிறார்கள் இருவரும்.

யூரோப்பில் வசித்து வரும் வ்ரான்ஸ்கியும் ஆன்னாவும் சமூகம் தங்கள் தகாத உறவை ஒப்ப மறுப்பதை பல இடங்களில் கண்ணுற்று கலங்குகிறார்கள். தன்னை விட்டு வ்ரான்ஸ்கி விலகுவதாக நினைக்கிறாள் ஆன்னா. தன் மகன் ஸெர்யோஷாவைப் பார்க்க அவன் பிறந்த நாளன்று செல்லும் ஆன்னாவைப் பார்த்து கடும் அதிருப்த்தி அடைகிறார் கரேனின்.

மன அமைதியில்லாமல் அல்லல் கொள்ளும் வ்ரான்ஸ்கியும் ஆன்னாவும் அவனுடையை பண்ணைக்குச் செல்கிறார்கள். டாலி தன் தாய் இளவரசி ஸ்கெர்பட்ஸ்கயாவுடனும் தன் குழந்தைகளுடனும் பண்ணை வீட்டில் வசிக்க வருகிறாள். இடையில் வெஸ்லோவஸ்கி என்னும் பெண் பித்தன் கிட்டியிடம் காட்டும் கவனத்தைக் கண்டு வெறுக்கும் லெவின், அவனை வீட்டில் இருந்து வெளியேற்றுகிறான். அவன் உடனே வ்ரான்ஸ்கியிடம் செல்கிறான். அவனிடம் சிரித்துப் பேசி, அனைவரின் எரிச்சலுக்கும் ஆளாகிறாள் ஆன்னா.

ஆன்னாவைச் சந்திக்க வரும் டாலி, வ்ரான்ஸ்கியின் படாடோபமான மாளிகையையும் ,ஆன்னாவின் ஆடையலங்காரத்தையும் அவளுடைய புதிய பாவனைகளையும் கண்டு மிரள்கிறாள்.தங்களின் உறவு சிதிலமடைவதை உணரும் வ்ரான்ஸ்கி, டாலியிடம் ஆன்னா, கரேனின் விவாகரத்து குறித்து பேசுகிறான். விவாகரத்து பெற மறுக்கிறாள் ஆன்னா. சில நாட்களில், வ்ரான்ஸ்கியைத் தன் வசப்படுத்த விவாகரத்து பெற்றே ஆக வேண்டும் என முடிவு செய்யும் ஆன்னா , கணவரிடம் விவாகரத்து கோரி கடிதம் எழுதுகிறாள். பிறகு வ்ரான்ஸ்கியுடன் மாஸ்கோ செல்கிறாள்.


கிட்டியின் பிரசவத்துக்காக மாஸ்கோ செல்கிறார்கள் லெவின் தம்பதியர். அங்கு ஆன்னாவைப் பார்க்கும் லெவின் அவளால் கவரப் படுகிறான். இதை உணரும் கிட்டி, ஒரு சிறு பிணக்குக்குப் பிறகு கணவனுடன் இணைகிறாள். ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுகிறாள் கிட்டி, திமித்ரி என்று குழந்தைக்குப் பெயரிடுகிறார்கள்.

பல ஆண்களைக் கவரும் தன்னால், தன் காதலனின் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள இயலாமல் போனது குறித்து மறுகுகிறாள் ஆன்னா. சஞ்சலத்துக்கும், சந்தேகத்துக்கும் ஆளாகி, உறக்கமில்லாமல் தவிக்கும் ஆன்னா, மார்பைன் பயன்படுத்தத் துவங்குகிறாள். தன்னைப் புறக்கணித்து, வேறு பெண்ணை வ்ரான்ஸ்கி மணந்து கொள்வானோ என்ற அச்சத்திலேயே உழலும் ஆன்னா, ஒரு கட்டத்தில், மன உளைச்சல் அதிகமாகி, ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

சில தன்னார்வமிக்க இளைஞர்களுடன் ரஷ்யாவை விட்டு போருக்குப் புறப்படுகிறான் வ்ரான்ஸ்கி. ஆன்னாவிடமிருந்து விவாகரத்துப் பெறாததால், குழந்தை ஆன்னி, கரேனின் வசம் ஒப்படைக்கப் படுகிறாள்.
ஒழுக்கமான ,நேர்மையான வாழ்வே நிம்மதியளிக்கும் என்ற கருத்துடைய லெவின், தன் மனைவியையும் மகனையும் தான் உயிரெனக் கருதுவதை உணர்ந்து கொள்கிறான்.

மனிதனின் அடிப்படை உணர்வுகளையும், அவன் வாழ்க்கையின் நோக்கத்தையும் ,ஆன்மாவைப் பற்றிய சிந்தனைகளையும் எழுப்புகிறது ஆன்னாகரேனினா என்னும் இந்த நாவல்.



"நேர்மையாய் வாழவேண்டியதை விட்டு வதை படுதலும், குழம்பிக்கலங்குதலும், முட்டி மோதுதலும், பிழை புரிதலும், தொடங்குதலும் மறுபடியும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போராடுதலும், இழப்புக்கு உள்ளாதலும் இன்றியமையாதவை. மன நிம்மதி- அது ஆன்மாவின் இழிநிலை" இவ்வாறு எழுதினார் லியோ நிக்கலாயெவிச் டால்ஸ்டாய். அவரின் இச்சொற்கள் அவரது வாழ்க்கை குறித்தும், படைப்பு இலக்கியப்பணி குறித்தும் நமக்கு உணர்த்துகின்றன.

நேர்மையான, ஒழுக்கமான வாழ்வே நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் என்பதே, ஒழுக்கவாதியான டால்ஸ்டாய் சொல்ல விழைவது.

சின்னஞ்சிறுமியும்..செல்ல பலூனும்..


பத்து வயதினளாய் இருந்தேன்..
பள்ளிக்கூட வாசலில் பலூன் விற்றானொருவன்..
ஐந்தே பைசாவுக்கு....
வண்ண பலூனொன்று ,
விலைக்கு வாங்கியதென்னை!

நீலம் ,ஆரஞ்சென்று,
நாளைக்கொரு நிறம் மாறும்!
குளிக்கும் என்னுடன் கூடவே நனையும்,
நான் உறங்கும் போது...
அது மிக விழித்திருக்கும்!

எப்போதும் என் துணை அது..
என் பெற்றோரின் பிரிவெல்லாம்,
களையும் இணை அது!

கணக்கில்..பூஜ்ஜியம் வாங்கிய ஓர் நாளில்..
வானவில் காட்டி ஆற்றுப்படுத்தியதெனை,
ஓட்டப் பந்தையத்தில் தோற்ற நாள் ஒன்றில்,
அதன் வால் பிடிக்கச் சொல்லி,
விண்ணில் சேர்த்தது என்னை!

வகுப்பறையின் வாசலில்,
நாளெல்லாம் காத்திருக்கும்!
தோழியர் சண்டைகளில், எப்போதும் என்
கட்சி சேரும்!
பதின் பருவத்து மயக்கங்கள்
பகிர அதன் செவிகள்
எப்போதும் திறந்திருக்கும்!
அதிர்ச்சிகள்,அச்சங்களில்..அன்போடு
என் கண்ணீர் துடைத்தெறியும்!

பருக்கள் இல்லா சருமம்,
பால் போல் நிறம் என்று..
நான் விரும்பியவாரெல்லாம்
என் தோற்றம் தன்னில் காட்டும்!
பல நாள் பல பொழுது,
அதைப் பார்த்தே என் பசி தீரும்!

ஆனால்....

பள்ளி இறுதியிலே ...
பட்டென்று உடைந்தது என் பலூன்!!!

சிறுமியர் ஸ்ரீமதியர் ஆனால்....
செல்ல பலூன்கள் .....
சட்டென்று ....
உடையும் தானே!!!

Related Posts with Thumbnails