Search This Blog

Wednesday, June 30, 2010

சரி...சரி..


அகழிகள் வெட்டச் சொன்னாய்...
செய்தேன்...
சுற்றிலும் கோட்டைகள் வேண்டுமென்றாய்..
ஆணைப்படியே....
உள்ளிருந்து ஒசியும் புரிதல் புன்னகையை,
எப்படியாம் மறைப்பது?

வேட்டை...


உள்ளார்ந்த உறை பசிக்கு...
உணவான நீயே,
இரையாக எனை அள்ளி உண்ண வருகையில்..
உணர்வுகள் மறத்து..
உயிர் உறைந்து...
என் நினைவுத்திரியும் சேர்ந்தணையும் அவலம்..
பசி தோன்றும் போதெல்லாம்..
நினைவில் தோன்றும்!

தேவை...


மறுதலிப்பின் அச்சுறுத்தலையும்..
தனிமையின் கொடூரத்தையும்..
உதைத்தெறிகிறது..
நேற்று பிறந்த சிசுவின்..
நிஷ்டூர அழுகை.

கணிப்பு..


தினம் வருதொரு பெயரறியாப் பறவை என் தோட்டத்துக்கு..
காத்திருப்பது உண்டு நானும் ..
கைகளில் தானியத்தோடு..
சிலவமயங்களில் உற்சாகமாய்,
சிற்சமயம் சோகமாய்..
பலவமயம் பாவமாய்த் தோன்றுதது எனக்கு!
அதே போல் என் பற்றியும் அது எண்ணியிருக்கலாம்..
சரியாய்!

ஆணைப்படி!!!


கிளியொன்று பாலிக்கின்றாய்...
பழக்கியுள்ளாய் அதனை நீ பேச..
கொஞ்சும் அதன் மொழியால்,
கோபம் மறப்பாய்!
அழகு செய்கின்றது அது, உன்னில்லம்!
பசிக்குமுன் பால்,பழம் தருவாய்,
பார்வையை அது திருப்பினாலும் ...
பொறுக்காதுனக்கு!
பக்குவங்கள் பல செய்வாய்...
பிடிக்குமே அதை!
ஆடுவதற்கோர் ஊஞ்சல்..
ஆசை வார்த்தைகளால் கொஞ்சல்...
சிறப்பானது அது என்பதால்..
சிறகுகள் வெட்டப்படவில்லை!
சுதந்திரமாய்த் திரியலாம் அது...
எத்தனை வேண்டுமானாலும் ...
தன் கூண்டுக்குள்ளேயே!

தொலைந்த பிள்ளைமை...


சின்னவளாயிருந்தேன்....
பின்னலில் கட்டியிருந்த ரிப்பன் ஒன்று தொலைந்தது..
பின்னலே தொலைந்தது போல் பதறினேன்..துடித்தழுதேன்!
வேறு ரிப்பன் வாங்கிய பின் ஆறிவிட்டதென் அழுகை.
கண்ணாடி அணிந்திருந்தேன் பல காலம்!
உறுப்புகளில் ஒன்றாய் இருந்தது அது எனக்கு!
தொலைந்து அது போனால்..
அதனோடே போகும் என்னுயிரின் ஒரு துளியும்!
வழமையே போல் புதியதில் மறப்பேன் பழயதை...
கைப்பை,
கடியாரம்,
குடை..
என்று.....
அந்தப் பட்டியல் நீளும் பலவாறு!
தொலைந்ததை மறக்கச் செய்யும்...
புதிய ஒன்று எப்போதும் கிடைத்தால்...
கவிதைகள் எழுதும் கிறுக்கு...
பிடித்திருக்குமா ...
இன்று..
எனக்கு?

தேடித்...தேடி...

அர்த்தமற்ற தேடல்களிலேயே..
தொலைகின்றதோ....
அதிகம் காணத ...
வாழ்வின் பொருள்?
பொருள் தேடலே..
வாழ்வின் பொருளென்றால்...
வளமான எல்லோரும் ..
வாழ்கின்றார் என்றா பொருள்?

ஒட்டு...


அவ்வப்போது உடைந்த இதயத்தில்..
இதென்ன? ஆங்காங்கே ஒட்டிய சுவடு?
ஆ.........
என் மக்கள் சிரிப்பில் இருந்து சிந்திய பசை!

துக்கம் மறக்க...


உறங்கப் பிடிக்கும் எனக்கு...
உணர்வில்லாமல் உயிரோடிருத்தல்..
வேறெப்போது வாய்க்கும் உலகில்?

ஆஹா...பரவசம்...


இது என்ன உணர்வு?
கவிதைகள் எழுதிடத் துடிக்கின்ற கரங்கள்...
கனவுகள் காணப் பறக்கின்ற மனது,
இயற்கையைக் கண்டு நெகிழ்கின்ற நெஞ்சம்..
இயலாமை கண்டு ஊறும் கண்ணீர்...
இது என்ன உணர்வு?
பாடல்கள் கேட்டால் சேர்ந்து பாடும் உதடுகள்,
பழைய ஞாபகத்தில் மலர்ந்து விரியும் புன்னகை..
எதிரியையும் எளிதாய் மன்னிக்கும் ஈரம்..
எதிலும் இறைவனைக் கண்டு விடும் எண்ணம்!
இது என்ன உணர்வு?
வயது மறக்கச் செய்திடும் மாயம்,
வீதியில் இறங்கி விளையாட விருப்பம்..
சிறகுகள் விரித்துப் பறந்திடும் தாகம்..
சில்லென்ற மழையில் நனைந்தாடத் தோன்றும்...
இது என்ன உணர்வு?

விவாதம்...


தவளைகளின் கூக்குரலா...
காயம்பட்ட மனதின் மரண ஓலமா..
எது பெரிதென விவாதித்துக் கொண்டிருந்தேன்..
மழை பெய்யவிருந்த...ஒரு பின்னிரவில்..
குருதி வழிந்து கொண்டிருந்த ...
என் இதயத்தோடு...

Tuesday, June 29, 2010

விரும்புகிறேன்..


சிறுமி நான்...
விருப்பங்கள் வெகு சிலவே எனக்கு..
பரிட்சை இல்லாத பள்ளி நாட்கள்,
அடிக்கடி வேண்டும் பிறந்த நாட்கள்..
பாடல்கள் பாடும் ஒலி நாடாக்கள்..
அவ்வப்போது கிடைக்கும் வண்ண பேனாக்கள்!
இளைஞி நான்....
விருப்பங்கள் வெகு சிலவே எனக்கு..
கனவில் ஒரு இல்லம்,
நண்பனாய் ஒரு துணைவன்,
லட்சியம் என்றும் ஒன்று!
உயிர்ப்புடன் வாழ மிக விரும்பியதுண்டு.
மங்கை நான்....
விருப்பம் ஒன்றே தான் எனக்கு...
மீண்டும் சிறுமியாக மாட்டேனா நான்?

கொஞ்சம் சொல்லேன்...


தொலை தூரத்துத் தொடர் வண்டிப் பயணங்களும்..
மென் சோகம் கவியச் செய்யும்..மிகு..அடர் இருளும்..
தனிமை அமிழ்த்தும் இரவுகளில்..
தென்றல் கொணரும் சுக ராகமும்..
கனம் கொள்ளச் செய்வது ஏன் மனதை?
கேட்க மறந்தே போனேன்....!
ஆமாம்..
உன் எடையென்ன?

என் சீனக் கண்ணழகி ஆஷி...


கூர் மூக்கு இல்லை தான் அவளுக்கு!
தன் சின்னஞ்சிறு சீனக்கண்களால்...
கதைகள் நூறு கூறுவாள்..
சாமுத்திரிகா லட்சணமா?பேசப்படாது!
பாசக்காரி அவள்! போதாதா?
சற்றே மறை கழண்டார் போல்...
சிற்சமயம் மிழற்றுவாள்..
அடுத்தவர் துன்பம் தாங்காள்..
அன்பொன்றே அறிவாள்.
தொல்லைகள் பல புரிவாள்...
தொந்தரவுத் திலகம் அவள்!
ஆனால்.....
துணையாய் அவள் இருந்தால்...
துயர் துரத்தாது.

பேராசை...


அபூர்வமாய் செல்வதுண்டு நாங்கள்...
உணவகங்களுக்கு...
அப்பா.. எப்போதும் கேட்பார்,புலவு.
அண்ணனின் விருப்பம் ஆப்பம்.
அக்காளுக்கும் எனக்கும் பூரி,
அம்மாவின் ஆசை தோசை!
வேறொருவர் சுட்டுப் போட அமர்ந்த்தருந்துவது..
எப்போதும் வாய்க்காதே அவளுக்கு!

நட்பு....


ஆத்மாவின் தேடலுக்கோர் ஆறுதல்...
இதயத்தின் பயணத்திலோர் இளைப்பாறல்..
கன்னத்தில் கோடிழுக்கும் கண்ணீர் துடைக்கும் கரம்,
வீடு விரட்டும் போது...அது ஓர் வரம்.
துயரம் துரத்தும் போது....
தாங்கிப் பிடிக்கும் தூண்..
நண்பரில்லா வாழ்வு வாழ்வது வீண்!
அது....
இன்றைய குறைகளை இட்டு நிரப்பும் அட்சயம்..
நாளைய விடியலை உரைக்கும் நட்சத்திரம்..
உன்மைகள் பல எடுத்தியம்பும் போதி மரம்,
நட்பில் வளரலாம் தேய்வதாகாது என்றும் தரம்.

சமர்ப்பணம்...
இந்துவுக்கும்..மாதங்கிக்கும்

அதுவா.....?


"அன்பென்று"...அறிவாளிகளால்! அறியப்படும்....
இது....ஆதிமனிதன் போட்டு வைத்த ஆசைத் தடம்!
வாழ்வுத்தேர் ஓட உதவும் வடம்....
நட்புகள் பல நேரம் இதில் முற்றும்...
"அசிங்கமென்று"..உதட்டளவில் அறிவிக்கப்படும்.
இதில்லாவிட்டால்................
கவிதை உலகம் அவஸ்த்தைப்படும்,
ஒப்பனையும்,ஒய்யாரமும்..நிறுத்தப்படும்..
கதைகளுக்கும்,காவியங்களுக்கும் பஞ்சமேற்படும்!
பிறப்பும்,அதனால் இறப்பும் கூட தவிர்க்கப்படும்.
பள்ளி நாள் நினைவுகள்..வெறுக்கப்பெறும்.
பூக்கள் கடவுளர்க்கே சாற்றப் படும்,
புன்னகைகள் பூத்தல் குறைந்து போகும்.
புகழுரை என்பதே மறக்கப்படும்..
விழி மொழி என்ற ஒன்றே அழிந்து போகும்..
சூரியன் சுற்றல்,பூமிக்குச் சிரம்மாய்ப் படும்!!!

Friday, June 25, 2010

நடுக்கம்.....


திகிலூட்டும் உன் ஒதுக்கம் தெறிக்கும் குரல்..

பெருவெளியெங்கும் வியாபிக்கும் நிராகரிப்பு குறித்தான அச்சம்.....

நரம்புகளில் நடுக்கம் கொடுக்கும் ஏக்கத்தின் தெறிப்பு..

திடுக்கங்கலோடான மூச்சின் வெடிப்பு....

விழிகளின் வழி..புறவுலகு காண ,வென்னீராய்ப் பெருகும் நினைவுகள்,

நகக்கணுக்களிலும் நீங்காதிருக்கும் உன் மென் நடையின் மீதான தாகம்,

நாசி நுனியின் துடிப்பில் மறைக்க எத்தனிக்கும் மோக நெடி,

உதடுகளில் விரவி எரிக்கும் தினவு..

அவலாசைகளின் மிகு உருவாய் நானே.......

Related Posts with Thumbnails