Search This Blog

Sunday, July 15, 2012

வர்ணங்கள் ஒளிரு முன் உடைந்த ஒரு குமிழ்


( picture courtesy heavensgain.com )

சாரா
ஒரு மலர் உதிர்வது போல
மறைந்து போனாள்
என் தம்பியின் குழந்தை
துஷ்டிப்பயண நெடுகிலும்
இறுதிச் சடங்கிலும் கூட
பேச நிறைய விசயம் இருந்தது
வந்த சனத்துக்கு

நேற்றிரவு கனவில் வந்தவளிடம் கேட்க
எனக்கும் இரண்டு கேள்விகள் இருந்தன
எப்படிப் பிரிந்தது உன் ரூஹு ?
அப்படித்தான் மாமி ...
நீ எழுதியிருக்கிறாயே,
ஒரு பூ உதிர்வது போலத்தான் !
இத்தனை பெரிய துனியாவில்
நீ இருக்க இடமில்லையா ?
அதை விடு மாமி ...
பால்யத்தில் நீயும் என் அப்பாவும்
மலர்த்தி , உடைத்து விளையாடுவீர்களாமே
சோப்புக்குமிழ்களை ?
அப்படியானது தான் வாழ்வும் மரணமும்
என்று நான் சொன்னதாக
நீ ஏன் வந்தவர்களுக்காக
ஒரு கவிதை எழுதக் கூடாது ?

கண்ணாடிச்சில்லுகளின் மீது போல தட்டச்சுகிறேன் ..
குமிழ்த்து முகிழ்க்கும் மலர்கள்
உதிர்கையில் கமழ்கின்றன
ஒரு குழந்தைச்சோப்பின் நறுமணம் கிளர்த்தி


குழந்தை சாராவுக்கு
..ஷஹி..

Monday, July 2, 2012

கடுங்கருப்பின் ஒரு புர்கா




அகன்ற கழுத்தின் புர்கா..
ஆரங்கள் அணிபவளது

டிசைனர் அணிய வாய்த்தால்..
ஸ்லிட்டுகள் வெட்டின புர்கா

வனப்பும் இளமையும் கூடினவளது..
மெல்லிய பொண்ணுத் துப்பட்டி

அழகு ,அதபு* குறித்த..
யூகங்கள் கிளர்த்தும்படிக்கு,
தலை முதல் பாதம் மறைக்கும்,
கடுங்கருப்பிலானது எனது ..

..ஷஹி..

அதபு - ஒழுங்கு , ஒழுக்கம்
Related Posts with Thumbnails