Search This Blog

Thursday, July 29, 2010

ஒரு மௌனத்தின் அலறல்


மௌனம் என்பதென்ன மௌனம் மட்டும் தானா?
சில மௌனங்கள் கவிதைகள் படிக்கும்!
சில மௌனங்கள் கண்ணீர் வடிக்கும்!
சில மௌனங்கள் காவியம் படைக்கும்!
ஒரு சிலர் மௌனத்தால் குடும்பங்கள் பிழைக்கும்.
சிலரின் மௌனம் போர்க்கொடி உயர்த்தும்!
சிலரின் மௌனத்தால் புன்னகை பிறக்கும்.
ஒரு சில மௌனம் நடந்தவை நினைக்கும்!
சில பேர் மௌனம் நினைத்தது நிகழ்த்தும்.
பிடிவாத மௌனம் பெருந்துன்பம் கொடுக்கும்!
பேதைகள் மௌனம் பொறுமை உணர்த்தும்...
பிள்ளையின் மௌனம் பெற்றவள் துயரம்!
புரிதலின் மௌனம் நன்மை பயக்கும்,
சில வேளை அது மயிலிறகுத்தடவல் ...
பல வேளை அது குத்தீட்டியின் குதறல்!
மௌனம் என்பதொன்றும் மௌனம் மட்டும் அல்ல!!!

Sunday, July 18, 2010

வேறொரு பெயர்....


விடுதிகளில் உண்டு முடித்ததும்
பரிமாறியவருக்கும்...
மகிழுந்துகளில் பயணித்து இறங்குகையில்
ஓட்டுநருக்கும்....
நன்றி சொல்லவும்,
சமையற்காரம்மாளை மாமி என்றழைக்கவும்...
சொல்லிப்.. பழக்கியுள்ளாள் உன் தாய்!
வந்தனம் அவளுக்கு!
"ஏய் " என்பதல்லாமல் வேறெப்படியும்..
நான் அழைகப்படலாமாவென கேட்க மட்டும்
ஏனோ நீயும் தானில்லை ...
அவளும் தான் மறந்து போனாள்!

காலம்..


குழந்தையாய் இருந்த போது,
ஓயாமல் கேட்பேன் கேள்விகள்...
விபரமாய் பதில் வரும் ..அப்பாவிடமிருந்து.
இப்போது அவர் உறங்கும் நேரம் தவிர,
அருகில் செல்வதில்லை நான்!
நச்சரிப்புகளுக்கு ஆளாக நேரமில்லை எனக்கு!
நாளையைப் பற்றிய கவலையும் எனக்கில்லை.
வசதியான முதியோர் இல்லத்தில்...
எனக்கான , முன்பதிவுகள் ..
முடித்துவிட்டேன்!

Friday, July 16, 2010

ரோஜா என்பது அதன் பெயர்...


ரோஜாவை முள் என மாட்டேன் நான்...
மேகத்தை மேகமென்பேன்!
நிலா எப்படி நட்சத்திரமாகும்?
ஊஞ்சல் நாற்காலியாகாது!
ஒரு போதும் சூரியன் பூமியில்லை!
பூ என்றே தான் பூவை அழைப்பேன்....
கடல் எப்போதும் கடல் தான்!
அலையும் கூட அப்படியே...
உன்னை மட்டும் எப்படியாம்"........"என்று
அழைப்பது?

எல்லையாம்!!!..தாண்டலாம்!!!




கடலோரம் வசித்தவரை,
மீனுக்கில்லை கவலை...
நகருக்குள் வந்தவுடன்...
சோறே இறங்கவில்லை!
வஞ்சிரங் குழம்பென்றால்...
சொத்தெழுதித்தரலாம்..
வஞ்சிரம் கிடைக்காவிட்டால்,
விராலும் தேவலாம்!
விராலும் இல்லையென்றால்..இறால்!
கெண்டை இல்லாவிட்டால்,கெளுத்தி!
ஆனால்.......
எல்லை தாண்டி கொல்லப்பட்ட மீனவனின் பிள்ளை,
செல்லப்பன் இல்லையென்றால்..சண்முகத்தின் அப்பன்,
கன்னியப்பன் செத்துவிட்டால்..ஆறுமுகன் அப்பன்,
என்று... மீன் வகை மாற்றுவது போல்...
தேற்ற இயலுமா மனதை?
பெருந்தலைகளைச் சொல்லி ஆவதென்ன பிழை?
சட்டை கசங்காமல் வேலை,
தேதி ஒன்றானால்...காசோலை!
தட்டில் தடையில்லாமல் விழும் மீன் தலை!
இயற்கை எய்திவிட்டால் நடுரோட்டில் சிலை...
எவன் அப்பன் செத்தால்...யாருக்கென்ன கவலை!

Thursday, July 15, 2010

குட்டி மனுஷி...


கால் முளைத்த புஷ்பம்....
புன் சிரிக்கும் தென்றல்....
அணைத்து முகரும் போது,
உயிரின் வாசம் வீசும்!
நெஞ்சை உதைக்கும் கால்கள்...
நின்ற துடிப்பைத் தூண்டும்!
கன்னம் தடவக் கைகள்...
தவங்கள் செய்ய வேண்டும்!
சின்னச் சிரிப்பைப் பார்த்தால்..
மனக் காயம் ஆறிப் போகும்!
பட்டுக் கேசம் தடவி..
மயிலிறகு தோற்கும்!
இறுகப் பற்றும் விரல்கள்...
முத்த மழை வெல்லும்!
நீராட்டிய தண்ணீர்...அது..
ஆசி வழங்கும் பன்னீர்!
இதழ்கள் சிந்தும் முத்தம்...
ஆயுள் வளர்க்கும் தீர்த்தம்!
உன்னை அணைத்த கரங்கள்...
வாளேந்த மறுக்கும்!
மழலைப் பேச்சு கேட்டால்..
தோட்டாக்களும் நமுக்கும்...!
dedicated to jenithaa's baby..Arshaa

Tuesday, July 13, 2010

சாமி சத்தியம்!




பலிபீடத்தில்..இன்னொரு ரத்தம் சிந்தும் வரையிலும்,
நடை பெருக்கும் கிழவிக்கு நேரத்தில் பிரசாதம்..கிட்டும் வரையிலும்,
அன்னதானங்களில் சமபந்தி நடக்கும் வரையிலும்,
தூணில் சாய்ந்தழும் துயரங்களுக்காகவும்...
நேர்ச்சைத் தொட்டில்களில் பிள்ளைகள்,ஆடவும்..
முகமறியாப் ப்ரார்த்தனைகள் நிகழும் வரையும்..
முதிர் கன்னிகள் மனம் கோணாமல் கோவிலில்..
பெண் பார்த்து முடியும் வரையும்,
குறுந்தகடுப் பூசாரிகள் கர்பக்கிரகம் நுழையும் நிமிடம் வரையிலும்...
அங்கேயே....இருப்பதாக சாமி சத்தியம் செய்ததாம்!
நேற்றிரவு...பொம்மியின் கனவில்..வந்து!!!

ம்ம்ம்ம்.......





வாசம் என்பதென்ன சுவாசம் நமக்களித்த,
சின்ன உபாயம் மட்டும் தானா?
ஊருக்குப் போயிருக்கும் அப்பாவின் ...
அழுக்குச் சட்டையில் வீசுமே அது பாதுகாப்பு!
கனவில் பயந்தலறி அணைப்பேன் அம்மாவை,
சந்தனச் சோப்பில் வீசும்... அது அன்பு வாசம்!
சடங்கான சமயம் அத்தை தேய்த்துவிட்ட சின்த்தால்...
வயிற்றைப் பிசையும் கலவர வாசம்!
புதுப் புத்தகங்கள்,முகர்வேன் பிரித்ததும்...
சுவாசப் பை நிறைக்கும்...பரவச வாசம்.
புலவு சமைக்குந்தோறும் நினைவில் மணக்கும்...
உறவுகள் கூடும் பண்டிகை வாசம்...
பாட்டியின் மீது வீசும் எண்ணைச் சிக்கு,
அது வயோதிகம் நினைவுறுத்தும்..மூப்பு வாசம்!
எப்போதோ சென்ற துக்க வீட்டில் புகைந்த ,
ஊதுபத்திப் புகை..அது மரணம் பற்றிய பய வாசம்.
பள்ளிச் சுற்றுலா நினைவில் கொணரும்..கோடைத் தைலம்..
அது நெஞ்சை விட்டு நீங்காத இளமை வாசம்!
குழந்தைச் சோப்பு முகர மாட்டேன் நான்...
அது பிரசவ அறையின் அலறல் வாசம்!
காற்றில் கலந்தடிக்கும் மருதாணிப் பூ வாசம்..
அது காதல் நினைவு தரும் வசந்த வாசம்!
சவரச் சோப்பு மிகப் பிடிக்கும் எனக்கு!!!
அது.......ம்ம்ம்ம்ம்......!!!

Monday, July 12, 2010

தேடினால் மட்டும்?


புத்தகக்கண்காட்சி...
பை நிறைய ஞானம்...
கை பிடித்து ஓயாமல் பேசும் பள்ளித்தோழி..
மழைச் சாரலின் போது...
பேருந்தின் சன்னலோர இருக்கை அருமை
என்று...
ரகளை ரசனையோடு சந்தோசக் கொண்டாட்டம்!
பரவசத்தில் உரக்கப் பேசினேன்..
'"உண்மை மனிதனின் கதை"..
ரஷ்ய மொழியாக்க நாவல்,
பத்தாண்டுகளாய்த் தேடுகிறேனடி...
இன்று கிடைத்தது பார்!
எல்லாம் கிடைக்கும்...
என்ன! தேட வேண்டும் அவ்வளவுதான்'...
என்றபடி வெற்றி வியாக்கியானம்!
முன்னிருக்கையில் அரைக்கண் மூடி,
அமர்ந்திருந்த பெரியவர்,
திரும்பி எனைப் பார்த்த பார்வையை...
'தூக்கம் கலைந்த துக்கம்' என நான் மொழிபெயர்க்க..
தோழியின் கூற்று வேறு!
அவர் தன் நான்கு பெண்களில்,
மூத்தவளுக்கு,கட்டுப்படியாகும் தட்சிணையில்,
பல ஆண்டுகளாய் வரன் தேடுகிரவராம்!

Wednesday, July 7, 2010

என் கண்ணாடியும் ஒரு பூனைக்குட்டியும்!


பூனைக்குட்டி வளர்த்திருக்கிறாயா?பூனைக்குட்டி?..
நான் வளர்த்தேன்...
நானே அப்போது குட்டி தான்!
மிகுந்த பிரியம் ..
என் மீது அவற்றுக்கும்..
அவை மீது எனக்கும்!
மனிதப் பாசம் என்றாலே மோசமும் தானே?
அன்பை மட்டுமல்லாது,
ஆத்திரத்தையும் காட்டுவேன் அவற்றின் மீதே!
எல்லாம் மறந்து என்னிடமே வரும் ,
அவற்றைப் பார்க்கையில் ...
மனம் மிக வலிக்கும்!
ஆச்சர்யம் பார்..
சில நாட்களாய்..
கண்ணாடியில் பார்க்கையில்,
என் முகமே தெரிவதில்லை!
நான் பார்ப்பதெல்லாம்..
ஒரு...
குட்டிப் பூனையைத் தான்!!!

Tuesday, July 6, 2010

இரவெனும் ஆழி....


கறுந்துயரலைகள் தோற்றும்..
இரவெனும் பேராழி,
பகலொளியெனும்,
மாயத்திரை மறைக்கும் வலியெல்லாம்,
வலித்துச் சேர்க்கும் வெளியெங்கும்!
திண்மைப் படகுகள்..
கதிரொளியில் மட்டுமே பயணிக்கும்!
ராவெனும் பேரலை ,
அமிழ்த்திடும் திடமெல்லாம் ஆழ!
துயரின் தொலைவுக்கு,
நீளும் இரவின் தூரம்.
மார்பின் கனமெல்லாம்..
பெருமூச்செறிவுகளில் தெரிக்க,
புலரும் பிரிதொரு பொழுது,
எறிந்ததெல்லாம்,
மீண்டும் ஒளிக்க!

விகாரம்...


அன்னையர் தினத்தன்று அம்மாவின் அறுவைக்கு..
நாள் குறித்தாகிவிட்டது,
தோட்டத்தில் அரவம் ஒன்றைப் பார்த்தலறி,
காயலில் கிடக்கிறாள் மகள்...
ரத்த அழுத்தம் மிக வென மருத்துவர் கணவன் பார்த்து
உதடு பிதுக்க..
வேலைக்காரியின் மகள் பிரசவித்து,
என் இல்லைத் தூசியில் கிடத்தினாள்!
விடுதியில் பயிலும் ஒற்றை மகன்..
உணவு ஒவ்வாமலும்,தனிமை கொள்ளாமலும்,
அழுதரற்ற....
ஆசுவாசம் தேடி அடைக்கலமான அறை...
குளிரூட்டப்பட்டிருந்திருக்கலாம்!

Sunday, July 4, 2010

என்ன அது?


தெருவோரமாய் நின்றிருந்தேன் ...
கைகள் பிசைந்த வண்ணம்,
கால்கள் நடுங்க...
முகம் கருத்து,
கண்கள் ஆறாய்ப் பெருக..
தொலைந்ததைத் தேடியவளாய்,
வருவோர், போவோரின் கேள்விப் பார்வைகள்,
கடைக்கார அண்ணாச்சியின்..
பரிதாப விழிவீச்சு!
பள்ளிச் சிறுமி ஒருத்தியின் கேள்வியில்..
கதறி அழுதேன்...தெரியலையேம்மா என்று!
கேட்டாளே ஒரு கேள்வி!
என்னக்கா தொலச்சீங்க என்று!!!

வெம்புகை...






மனதினோரத்து,
நெருப்புக்கங்காய்க்.. கனன்று..
நாளெல்லாம்..
வெம்மை பரப்பும்,
உன்னிலேயே..
உன்னினைவுத்தூள் பரப்பி
மூச்சடைத்துச் சாக,
பொழுதில்லை,
எனக்கு...
இப்பொழுது...

Saturday, July 3, 2010

araivaekkaadu..




கருக்கல் கொணர்ந்தது...
கருகிய காதலின் வாடையை,

இமைகளின் இடுங்கிய துடிப்பில் அறிந்தேன்..
பிரிவின் வெடிப்பை!

காந்திய ரொட்டியின் கருகல் உணர்த்தியது,
இடைவெளிகளின் அகழ்வை...

பழச்சாற்றின் பருகா மிச்சங்கள் பகர்ந்தன ,
எஞ்சியுள்ள பகைமையை...

கதவுகள் கதறின,
மனங்களின் அடைப்புகள் குறித்து...

படுக்கை விரிப்பின் அழகுரைத்தது,
உண்ணாமல் ஊசிய விருந்துகளின் கதையை...

முட்டை ஓட்டின் விரிசலில் தெரிந்தது,
அரைவேக்காட்டு அனைத்தும்...


செல்லுமுன் சொல்லிச் செல்...
நீ முடிக்காமல் விட்ட காதல் வாசகத்தை,
பிரசுரிக்கவா...
கிழித்தெறியவா ....என்று?
......ஷஹி...

நடக்குமா?


ஒரு வேளை யுத்தம் நிஜமாக நின்று போனால்...
அதன் பின்னே தனி ஈழம் அரிதாக சாத்தியமானால்..
அவ்வேளை ஆவியோடு அயராமல் நானிருந்தால்,
கால் பதிப்பேன் நான்,
என் உயிர் பதிந்த பூமியிலே!
என் கரங்களால் நான் நட்ட மாஞ்செடியும் மாண்டிருக்கும்,
பிஞ்சுகளோடு நான் விட்டு வந்த கொய்யாவும் வீழ்ந்திருக்கும்...
அதில் கூடு கட்டிக் குடியிருந்த கிளி ஜோடியெங்கு போயிருக்கும்?
என் ஜோடியென நான் வரித்திருந்த கல்யாணிக்கென்ன நேர்ந்திருக்கும்?
பதுங்கு குழி தேடி உயிர் விட்ட தங்கையின்...
கல்லறையா பிழைத்திருக்கும்?
கால் ஒடிந்ததால் கைவிடப்பட்ட தாத்தா எங்கு அடங்கியிருப்பார்?
காணச் சலியாத எங்கள் பண்ணை வீட்டில் இன்று
யார் குடியிருப்பார்?
இறந்து போன நம்பிக்கையை எம்மக்கள் உள்ளங்களில்
யார் விதைத்திடுவார்?
அச்சம் என்பது மடமை என்று எம் பொடியர்களுக்கார்
கதைத்திடுவார்?
நடக்குமா?ஈழம் கிடைக்குமா?

அப்பாடா....


தரித்ததில் இருந்தே
பிரசவ வலி,
மை ரத்தம் சிந்தி
பிறந்தது,
கவிதை!

வா.......


வா.....
முகில்களில் மிதக்கலாம்..
அலைகளில் அலையலாம்,
கண்கள் மூடிக் கனவினில் கிடக்கலாம்,
கதைகள் பேசிக் காற்றினில் கரையலாம்
நீரில் அமிழ்ந்து நினைவகற்றி இருக்கலாம்...
வா.....
எந்த மலரில் வாசம் அதிகம்,
முகர்ந்து நுகர்ந்து மெச்சலாம்..
சின்னச் சின்ன சல்லாபச் சண்டைகள்..
செல்லமாய் நாம் போடலாம்,
பசித்து ருசித்து இன்றொரு நாளில்,
பழைய சோறு உண்ணலாம்,
வா....
வார விடுமுறை வந்து விட்டது,
வாழ்ந்து இன்றொரு நாளில் பார்க்கலாம் ...

நீயும்...நீயும்!!!


சுருண்டிருந்த இறக்கைகள்..
விசிறி விரிக்கத்தான்,
வேண்டினேன் ஓர் விண்வெளி...
வேலிகளோடான...
வானம் வழங்கத்தான்,
வசதிப்பட்டதுனக்கு!
வரைகள் விரும்பாதவை...
வானம்பாடிகள்!
விரித்தனன்...
சிறகுகள்,
சுருண்டது...
விண்வெளி!

காணோமா....?


அன்பு தொலைந்து போனால்....
அம்மாவிடம் இருக்கும் மிச்சம்!கவலையில்லை!
பாசம் காணோமா?...
பச்சிளம் பிள்ளை முகம் பார்..
மண் பிளக்கும் மழையென மனம் பிளந்து பீறிடும்!
நட்பா தொலைந்தது?
தேடத்தகுந்த இடம் பழைய பள்ளித்தோழியின் உள்ளம் தான்!
இளமை இல்லையா?..
இயலாமை விரட்டு..
செல்வமா தேடுவது?
சோம்பல் தொலை...
தூக்கமா தொலைத்தாய்?
ஆசை அழி...அழமாய்த் துயில..
ஞானமா? பெரியோர் நட்பில் பெருகும் பார்!
அறிவு?
நூல் பல வாசி!நூலகத்தில் வசி!!
காதல் காணவில்லையா?
உன் கூந்தல் நரையில் தான் சிக்கியிருக்கும்..தேடு!
மகிழ்ச்சி எங்கே?
மனதில் தான்...
பெருமை?
ஆ!!!..அது பிள்ளைகள் தேடித்தரணும்..
இன்பம் இல்லையா?
ஒப்பீடு நிறுத்து ..ஒரு வேளை கிட்டலாம்!
சுதந்திரமா தொலைந்தது?
உடன் பிறந்ததாயிற்றே?தொலைத்தால் தொலைந்தாய் போ!
சிங்காரம் போனதோ?
பிள்ளைகள் ஏராளமோ?..
ஆரோக்கியம் இல்லையா?
உள்ளம் சீர் செய்!
அழகு இல்லையா?
அவசியம் இல்லை...விடு!
மனிதம் தொலைத்தாயா?
மரணி உடனே....

சவ(சிலர்)நிலை...


சவத்தை அடிக்க சவுக்கெதற்கு?
சுவரோரமாய் உட்க்கார்த்தினால் உட்காரும் அது!
கூடத்தில் கிடத்தினாலும் கிடக்கும் தான்!
வேண்டிய போது உயிர் கொடுப்போம்...
வேலைகள் பல ஆக வேண்டுமே!!!
அப்போதும் துள்ளலும் துடிப்பும் ஆகாது!
திரியலாம் மீண்டும் கிடத்தும் வரை..
செத்தால் தெரியும் சுடுகாடு..
சவம் அறியும் சவத்தின் மன(ண)ம்!
எப்போதும் யாராவதாகவே இருந்து விட்டு,
சவமாய் இருப்பதும் சுகம் தான்..
சுயமாய் இருக்குமே சவம்!!!

Friday, July 2, 2010

பிரிவு....


தற்காலிக மரணம்!
தினந்தோறத் துயரம்!
நிமிட முள்ளின் நிரந்தரக் குத்தல்!
நாடும் நெஞ்சத்தின் நித்திய வேதனை!
இறப்பு எளிதாக்கும் ஒத்திகை!
இருப்போர் எண்ணிக்கை பாதியாக்கும் வியாதி!
உடல் அடங்கும் காடு கூட்டிச் செல்லும் வீதி!!!

ஏன்த்த???...


தாயோட பொறந்தவனெல்லாம் ஆம்பள அம்மான்னு,
சொன்னாரு அப்பா...
அப்பாவோட பொறந்த நீ...
பொம்பள அப்பா இல்லையாத்த?
சுல்த்தான் பெத்த சொக்கத்தங்கம்..
ரோசா நெறத்துல மின்னும் ஒன் அங்கம்..
படிச்சிருந்தா..நீ..பாராண்டிருப்ப!
என்ன..பிடிக்காமத்தான்..போராடுர இப்ப!
சின்ன மகன், செல்ல மகனுக்கு,
ஒன்..சின்ன ஊருல பொண்ணு தேடாம..
சீமக்கி வந்து ஏன்த்த சீரழிஞ்ச?
என்ன...ஒன் ஊருக்கு கட்டியாந்து,ஏன்த்த சீரழிச்ச?
சீருல கொற,வகிட்டு நேருல கொற,
வளராத மாருல கொறன்னு ..என் பேருல..ஆயிரம் கொற!
வாராத மாமணியா வந்த ஒன் புள்ள தேடி...
நானாத்த வந்தேன் ஒன் ஊருக்கு?
பின்ன வீணா ஏன் சொன்ன கொற என் பேருக்கு?
பள்ளிக் கூடம் படிச்சி வந்த
பாவி மக என் கழுத்துல..
தாலிக்கொடி ஏத்த, ஏன்த்த நெனச்ச?
என் அறிவு வெளக்க ஏன்த்த நீ அணச்ச?
அளகு ராசா ஒன் புள்ளன்னு..
தெரிஞ்சு தான புடிச்ச என்ன?
கட்டச்சின்னு ஏன்த்த பின்ன சொன்ன?
என் தன்னம்பிக்கைய ஏன்த்த நீ கொன்ன?
கொளுந்தன், கூட்டாளிக ,மருமக்க பெருமையெல்லாம்
என் காதுல நீ கேக்கும் படி பண்ண!
என் கொறைய மட்டும் அவுகளுக்குச் சொன்ன!
என்ன தான் சொல்லத்த...
ஏதும் தான் பண்ணத்த...
எங்கப்பனோட பொறந்துட்ட நீயும் பொண்ணா..
நான் ஆடாட்டியும்..என் சத ஆடுது தானா!!!

அறுந்த வேர்கள்..


கைகள் கொப்பளிக்க நட்டேன் ஒரு தென்னம்பிள்ளை..
பேசிக்கொண்டிருப்பேன் அதோடு தினம் அரை மணி...
வீட்டை இழுத்துக் கட்ட வேண்டி ...
வெட்டி விட்டார்.. அதனை ..அப்பா..
வீழ்ந்தது என் தென்னை.
வேர் இருக்கும்..அதன்..என் தோட்டத்தில்,
என்று தேற்றி வந்தேன் என் மனதை...
தாய் வீடு செல்லுந்தோரும் தவறியதில்லை,
அது இருந்த இடம் தடவ..
விற்க நேர்ந்தது எங்கள் வீட்டை!
வந்து விட்டார் அப்பா,ஊரை விட்டே!
தென்னையினதோடு ,சேர்ந்து அறுந்தது..
என் வேரும்!!!

Thursday, July 1, 2010

அப்படித்தான்..


பொன் மீன்கள் நீந்திய..
அந்த சிறு குளத்தை,
நாம் கடக்கையில்..
நான்...
சற்று நின்று..
நீருக்குள்...
பார்த்து..
ரசித்தது,
பொன் மீன்களை,
மட்டும்...
அல்ல!!!

வறண்ட மாலை...


விட்டெறியும் சிறு கல்லின் கனம் வாங்கி...
பரப்பில், வட்டங்கள், அரை வட்டங்கள்,...
தோற்றுவிக்கும் ...
இந்தப் பிரிவுக்கால...
மாலைப்பொழுதில்...
நான்...
உன்னைத் தவிர...
நீரையும்...
பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
Related Posts with Thumbnails