Search This Blog

Showing posts with label tamilpoem. Show all posts
Showing posts with label tamilpoem. Show all posts

Sunday, August 1, 2010

என் கட்டம் போட்ட தலையணை உறை..


அவனுடைய விளையாட்டு மட்டையை
நான் உடைத்த..மற்றும்...
என்னுடையை மதிப்பெண் சான்றிதழை ,
அம்மாவிடம் நான் அறியாமல் அவன் காட்டி கொடுத்த
போர்க்காலங்களில்...
என்னுடைய தலையணையில்,
அவன் மூச்சும் பட்டுவிடலாகாதென்றும்
அவனுடைய பங்கு தின்பண்டத்தில்,
எனக்கான சலுகைப் பங்கு நிராகரிப்பிலும்
கண்டிப்பாயிருப்போம் தம்பியும் நானும்!
பெற்றோரின் யுத்த காலங்களின் போது...
என்னுடைய கட்டம் போட்ட தலையணை உறை,
கறைபடும் எம்மிருவரின் கண்ணீரால்.
என்னுடைய ஆளுமை குறித்தான
விமர்சனங்களில் அவனும்,
அவன் வாழ்வியல் கொள்கைகள் குறித்த
அதிருப்தியில்நானும்
போருக்கான ஆயத்தங்கள் புரிந்து கொண்டிருக்கும்
தற்பொழுதுகளில்.....
'வெளியில் போ' என்று விட ,
அவனுக்கும்,
முகத்தை முறித்துக் கொள்ள
எனக்கும்..
எளிதாயிருக்கிறது!
அவனுடைய தலையணைஉறை,
பூப்போட்ட ரோஜா வண்ணம்..
என்னுடையதில் காணலாம் ,என் பிள்ளைகளின் எச்சில் தடம்.

Saturday, July 3, 2010

நடக்குமா?


ஒரு வேளை யுத்தம் நிஜமாக நின்று போனால்...
அதன் பின்னே தனி ஈழம் அரிதாக சாத்தியமானால்..
அவ்வேளை ஆவியோடு அயராமல் நானிருந்தால்,
கால் பதிப்பேன் நான்,
என் உயிர் பதிந்த பூமியிலே!
என் கரங்களால் நான் நட்ட மாஞ்செடியும் மாண்டிருக்கும்,
பிஞ்சுகளோடு நான் விட்டு வந்த கொய்யாவும் வீழ்ந்திருக்கும்...
அதில் கூடு கட்டிக் குடியிருந்த கிளி ஜோடியெங்கு போயிருக்கும்?
என் ஜோடியென நான் வரித்திருந்த கல்யாணிக்கென்ன நேர்ந்திருக்கும்?
பதுங்கு குழி தேடி உயிர் விட்ட தங்கையின்...
கல்லறையா பிழைத்திருக்கும்?
கால் ஒடிந்ததால் கைவிடப்பட்ட தாத்தா எங்கு அடங்கியிருப்பார்?
காணச் சலியாத எங்கள் பண்ணை வீட்டில் இன்று
யார் குடியிருப்பார்?
இறந்து போன நம்பிக்கையை எம்மக்கள் உள்ளங்களில்
யார் விதைத்திடுவார்?
அச்சம் என்பது மடமை என்று எம் பொடியர்களுக்கார்
கதைத்திடுவார்?
நடக்குமா?ஈழம் கிடைக்குமா?
Related Posts with Thumbnails