Search This Blog

Monday, August 29, 2011

இந்தக் கவிதையும்..

இந்தப் பேனா

நீ கொடுத்தது தான்..

.....................................

தீப்பெட்டியில் வைத்து

இரண்டு பொன்வண்டுகள் ,

வெகு காலம் வரை..

குட்டி போடும்

என,

நாம் நம்பிய மயிலிறகு,

பட்டாம்பூச்சி படமிட்ட

தபால்தலைகள்,

இதயப்படமிட்ட

வாழ்த்து அட்டைகள்,

என் கன்னமா விரல்களா

எது சிவக்குமெனப் பார்க்க

சுவரேறிக் குதித்து

நீ பறித்து வந்த

மருதாணிக் கொத்துகள்,

என் பாதம் ஏறியதால்

அழகு பெற்ற

ஒரு ஜோடிக் கொலுசுகள்..

விடைபெறும் அன்று

ஒரு பிரேதத்தினது போல்

குளிர்ந்து போன இதழ்களினால்..

அதே போல் சில்லிட்டிருந்த

உதடுகளில்

ஒரு முத்தம்.

.....................

அப்புறம்

இந்தப்

பேனா..

..ஷஹி..

Thursday, August 25, 2011

வெண்ணிற இரவுகள்- தஸ்தெயெவ்ஸ்க்கி

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்-

ஒரே முறையில் படித்து, ஒரு குறுநாவலுக்கான பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்தக் கதையை முழுமையாக உள்வாங்கி விட யாராலாவது முடியுமா? என்பது மிகுந்த சந்தேகமே. உளவியல் மேதை தஸ்தயேவ்ஸ்கியின் இந்தக் கதையை அதன் சாரமும், வாசிப்பனுபவமும் சிறிதும் குறைந்து விடாமல் எழுத என் போன்ற ஆரம்ப நிலை வாசகியால் நிச்சயம் முடியாது...முயன்றிருக்கிறேன்..


"நின் காதல் நிழல் தன்னில்

நின்று மகிழ்வோம் ,

மின்னி மறையும்

கண்ணிமைப் பொழுதெனினும்

போதுமது என்றெண்ணிப்

பிறந்தானோ ?"

எனும் இவான் துர்கேனெவின் வரிகளுடன் துவங்குகிறது, வாசகனை தனக்குள் இழுத்து கதாநாயகனின் மனநிலையை தன்னுடையதாக எண்ணி, தவித்து, மகிழ்ந்து, தன்னால் என்றோ ஒரு நாள் அனுபவிக்கப்பட்ட உணர்வுகள் தாம் இவை என்று அடையாளம் கொள்ளச் செய்யும் வாசிபானுபவம். தனிமையால் கிட்டத்தட்ட மனநோயாளியாக மாறவிருந்த கதாநாயகன், கதைசொல்லி. இறுதி வரை பெயர் குறிப்படப்படவில்லை அவனுக்கு...காரணமாக வேறெதைச்சொல்வது? படிக்கும் ஒவ்வொருவரும் அவனே தாம் நாம் என்ற நினைப்புக் கொள்வதற்குத் தான் என்பது அல்லாமல்?


ஒரு பித்தனைப் போல் கனவுகள் கண்டு அவற்றிலேயே வாழ்ந்து, அழுது, மகிழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு கதையின் முதல் நாளிரவில் அழகிய இளம் பெண் நாஸ்தென்காவின் அறிமுகம் கிடைக்கிறது..அதுவும் துயரார்ந்த தன் வாழ்வை எண்ணி அழுது கொண்டிருந்த அவளிடம் ஒரு மனிதர் வம்பு செய்ய முற்படுகிறார், நாயகன் அவளை மீட்கிறான். சிறிதே நேரப்பேச்சுக்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முற்படுகின்றனர். தன்னிடம் அவன் காதல் கொண்டு விட மாட்டான் என்று உறுதி அளித்தால் மட்டுமே அவனிடம் தொடர்ந்து நட்பு கொள்வதாக நிபந்தனை இடுகிறாள் நாஸ்தென்கா..நாயகன்..சம்மதிக்கிறான்.பின்னிரவு வேளையாகிவிட்டதால் நாஸ்தென்கா வீடு திரும்புகிறாள் ....மறு இரவில் சந்திக்கும் வாக்குறுதியோடு.


பேசிப்பழக என்றும் சொந்தமென்றும் கூறிக்கொள்ள எவருமற்ற நாயகனும், சிறுபிராயத்திலேயே தாய் தந்தையை இழந்து , தன்னுடன் சேர்த்து ஊக்கினால் அவளைப் பிணத்தே வளர்க்கும் பாட்டியிடம் வளர்ந்து தனிமையே வாழ்வாகக் கொண்டிருக்கும் நாஸ்தென்காவும் நட்பு கொண்டு விடுகின்றனர்.

இரண்டாவது இரவில் மீண்டும் சந்திக்கும் போது... வேலைகள் முடிந்த பிறகு, தனக்கேயான மாலைபொழுதுகளில், கற்பனாதேவியின் உதவியுடன் ,பெரும் புலவர்களையும் புகழ்பெற்றவர்களையும் தான் சந்தித்து நட்பு கொள்வது போன்றும், தனக்கென்று இருக்கும் ஒரு கோடைக் காலக் குடிலில் தன் காதலியுடன் இன்பமாக இருப்பது போன்றெல்லாமும் தான் வளர்த்து வந்த கற்பனை உலகினைப் பற்றி நாஸ்தென்காவிடம் மனம் திறந்து பேசுகிறான் கதை சொல்லி.

இத்தனை ஏக்கமும், துக்கமும் நாம் வாழும் இந்த உலகில் மனிதர்களை பீடிக்கக் கூடுமா ?என்ற கேள்வி எழும் அதே நேரம் இம்மாதிரியான மனநிலையில் அமிழாத உயிர்களும் உண்டா என்ற பதிலும் நம் உள்ளங்களில் எழவே செய்கிறது. தன்னுடையது போன்றே மனநிலை கொண்டவன் இவன் என்ற நட்புணர்வுடன் அவனைப் புரிந்து கொள்கிறாள் நாஸ்தென்கா. தானும் கனவுகளில் வாழ்பவள் தான் என்று துவங்கி, தன்னைப் பராமரித்து வரும் பாட்டி எங்கும் சென்று விடாத படி ஊக்கினால் பிணைத்து வைக்கும் நிலையையும், சீனத்து இளவரசனை மணந்து கொள்வதாக தான் கண்டு வரும் கனவுகளையும் கூறுகிறாள். வீட்டு மாடியில் குடியிருக்க வரும் இளைஞனிடம் காதல் கொண்டு விடும் நாஸ்தென்கா, தானும் அவனும் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் படி அவன் தன்னை மணந்து அழைத்துச்செல்வதாக வாக்களித்திருந்த சமயம் வந்தும் இன்னமும் அவனிடமிருந்து எந்த செய்தியும் வராத துயரத்தைப் பகிர்கிறாள். அவளுடைய துயர் துடைக்கத் துடிக்கும் நாயகன் கடிதம் ஒன்று எழுதி அவளுடைய காதலனிடம் அதைச்சேர்ப்பித்து அவர்களை இணைத்து வைக்கும் பொறுப்பைத் தனதாக்கிக் கொள்கிறான்.

"என்னென்பது இதை! இன்பமும் மகிழ்ச்சியும் எப்படிப்பட்ட அழகை உண்டாக்கிவிடுகின்றன!" என்னும் ஆனந்தமான வரிகளுடன் துவங்குகிறது அவர்களின் மூன்றாம் இரவின் சந்திப்பு பற்றின விபரம். தன்னையும் அறியாமல் செய்துகொடுத்த சத்தியத்தையும் மீறி அவள் பால் தன் மனம் லயித்து விட்டதை உணருகிறான்..கதாநாயகன். அனுப்பிய கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லாதது கண்டு துடிக்கிறாள் நாயகி..அவளை சமாதானம் செய்து தேற்றுகிறான் கதை சொல்லி. அவளுடைய காதலன் வராமல் போனதற்கு நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும் என்று அவளை நம்பவைப்பதோடு மூன்றாமிரவு முடிகிறது.

நான்காம் இரவில் கதைசொல்லியைக் கண்டவுடன் பரபரக்கிறாள் நாஸ்தென்கா..கடிதம் கொண்டு வந்திருப்பான் தன் காதலனிடம் இருந்து என்று..அவள் உள்ளத்திலிருந்த கடைசி நம்பிக்கையும் இல்லையெனும் அவன் சொல்லில் தகர்ந்து போகிறது. எத்தனையோ பேசியும் அவள் மனம் நம்பிக்கை கொள்ள மறுக்கிறது, மட்டுமல்லாமல், தன்னை நிற்கதியாய் விட்டுவிட்டு ,ஒரு வரி கூட எழுத மனம் இல்லதாவரைப் பற்றி தான் பேசக் கூட விரும்பவில்லை என்று கதறுகிறாள் நாஸ்தென்கா.

மேலும் "நீங்களாக இருந்தால் இப்படிச்செய்திருக்க மாட்டீர்கள் அல்லவா? உங்களை விரும்பியவளை பேணிப் பாதுகாத்திருப்பீர்கள் அல்லவா? "என்று காதலனையும் நண்பனையும் அவள் ஒப்பிட்டுப் பேசப் பேச, தன் நிலை மறந்து ,அவள் பால் தான் கொண்டு விட்ட காதலை ஒப்புக்கொண்டுவிடுகிறான் கதை சொல்லி.

ஆச்சர்யம் ஏதுமில்லாமல் அவள் அதை எதிர்பார்த்தவள் போல அவன் காதலை ஏற்றுகொள்கிறாள் நாஸ்தென்கா..இருவரும் எதிர்காலம் பற்றியெல்லாம் பேசிக்களிக்கிறார்கள்..வீடு திரும்பும் சமயத்தில் நாஸ்தென்காவின் காதலன் வருகை நிகழ்கிறது. கதைசொல்லியின் அணைப்பிலிருந்த நாஸ்தென்கா, தன்னை மறந்து கூவியவாறு காதலனின் அணைப்புக்குள் அடங்குகிறாள் .தன்னை முத்தமிட்டு ,விடைபெற்றுச் செல்லும் அவளின் கடிதம் கண்டு கண்ணீர் விடுகிறான் கதைசொல்லி. தான் ஒரு போதும் அவளை மறப்பதற்கில்லை என்றும் தன்னுடைய துன்பம் அவளை பாதிக்கக் கூடும் என்பதால் துயர் கொள்ளவும் மாட்டேன் என்றும் உறுதி கொள்கிறான் .


"தனிமையான , நன்றி நிறைந்த ஓர் இதயத்துக்குக் கணப்பொழுதுக்கு ஆனந்தமும் இன்பமும் அளித்தாய் அல்லவா, அதற்காக என்றென்றும் இறைவன் உனக்கு அருள் புரிவாராக. என் தெய்வமே ! முழுதாய் ஒரு கணப் பொழுதுக்கல்லவா ஆனந்த இன்பம் கிட்டிற்று! போதாதா அது , ஓர் ஆயுட்காலம் முழுமைக்கும் அது போதாதா? "

என்று மனம் நிறைய ,நாஸ்தென்காவின் நல் வாழ்வுக்காக கதை சொல்லி உருகுவதாக நிறைவுறுகிறது கதை.

தனிமையில் வாடி, கனவுகளில் மட்டுமே இன்பம் கண்டு வந்த ஒருவனுக்கு ஒரு பெண்ணின் நட்பும் காதலும் எத்தகைய ஆறுதலையும் இன்பத்தையும் அளிக்கும், அவளிடம் காதல் கொண்டு விட்ட பிறகு தன்னால் அவளுக்கு ஒரு சிறு துன்பமும் நேரக் கூடாது என்று நினைக்கும் மனோபாவம் ஏற்பட்டு விடும் ஆச்சர்யம் என்று காதல் கொண்டு விடும் ஒரு ஆணின் மிக நுட்பமான எண்ண ஓட்டங்களை அழகாகப் பதிந்திருக்கிறார் தஸ்தாவெஸ்கி. ஒரு மாய உலகில் கண்ட இன்பத்தை உண்மையில் தனக்கு அளித்தாள் , அது ஒரு கணப் பொழுதுக்கே என்றாலும் கூட என்று அக்கணத்தையும் போற்றும் அளவில் இனிமையானதும் , நன்றி மிக்கதும், தூய காதல் கொண்டு விட்டதுமானது ...கதை சொல்லியின் உள்ளம்.

கதையின் துவக்கத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சுற்றிலும் உள்ள இயற்கையானது அந்நகரை வசந்தத்தில் எழிற்கோலம் பூணச்செய்து விடுவதை கதைசொல்லி காணும் விதத்திலேயே பின்னாள் வரவிருப்பதை சொல்லிவிடுகிறார் தஸ்தவெஸ்க்கி. அழகுக்கோலம் பூணும் நகரை, நாயகன் காசநோயால் பீடிக்கப்பட்டு, திடுமென ஒரு பொழுது அழகு கொண்டு துலங்கும் ஒரு இளநங்கைக்கு ஈடாக நினைக்கிறான். இத்தனை அழகு அவளுக்கு எப்படி திடீரென வந்தது என்று புரிந்து கொள்ளத் துவங்கும் கணத்திலேயே அவள் அழகு மறைந்து, வியாதிக்கோலம் கொண்டு விடுவதைப் போலத் தான் பீட்டர்ஸ்பர்க் நகரம் வசந்த கோலம் கொள்வது என்று பேசுகிறான் . தனிமையால் பீடிக்கப்பட்டு துன்பதில் உழன்று பரிதாபமாக இருக்கும் அவன் நிலையையே வாசகனுக்கு இவ்விதம் சொல்கிறாரோ தஸ்தவெஸ்கி? காதல் கொண்டு, அது ஏற்கப்பட்ட கணம் அவன் அனுபவித்த இன்பம் திடுமென மறையப்போவது தான் என்பதற்கான குறியீடு தானே அது?

இங்கு டால்ஸ்டாயின் அன்னா கரீனா வின் ஒரு காட்சி நினைவில் வருகிறது. நாயகி அன்னாவும் வ்ரான்ஸ்கியும் சந்திக்கும் முதல் காட்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவன் இறந்து போவதாக ஒரு காட்சி அமைத்து, அது ஒரு துர் சகுனம் என்பதாக எழுதியிருப்பார் டால்ஸ்டாய்..கதையின் முடிவில் அன்னா தற்கொலை செய்துகொள்ள ரயில் முன் பாய்ந்து விடுகிறாள். டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாவெஸ்கியின் சிந்தனையோட்டம் மற்றும் எழுத்து முறை ஏறக்குறைய ஒன்றே போல் உள்ளதைக் காணலாம்.

"தன்னந்தனியனாய் இருப்பது எவ்வளவு சோகம் மிக்கது -நினைத்து வருந்துவதற்குக்கூட ஒன்றும் இருக்காதே, ஒன்றுமே இருக்காதே...ஏனெனில் நான் இழப்பது எதுவாயினும் , அது உண்மையில் ஒன்றுமில்லாததாகத்தானே , வெறும் அசட்டுச் சின்னமாகத்தானே , வெறும் கனாக்களாகத்தானே இருக்கும்." இப்படி புலம்பும் நாயகனுக்கு, காலம் முழுவதும் துணையாய்ச் செல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நினைத்து வருந்துவதற்கும் ,அழவும் ,அசலான துயரம் ஒன்றை அளித்து பேருதவி தான் புரிந்து விட்டாள் நாஸ்தென்கா.

நாயகனின் அணைப்பில் இருக்கும் போதே காதலன் குரல் கேட்டு அவனிடம் ஓடும் அவள் ...மறுநிமிடமே பாய்ந்து வந்து இவனை ஆசையோடு அணைத்து முத்தமிடுகிறாள், உங்கள் இருவரையும் காதலிக்க முடிந்தால் என்று ஏங்குகிறாள், நண்பனை காதலனோடு ஒப்பிடுகிறாள், காலம் முழுக்க தாங்கள் என்னைக் காதலிக்க வேண்டும் என்கிறாள்...மனித மனத்தின் உணர்வுகளையும் அவற்றில் ஏற்படும் சிக்கல்களையும் அப்படியே சித்தரித்துள்ளார் தஸ்தாவெஸ்க்கி. ஒருவனை மட்டுமே நினைக்க முடியும், அவனையே தான் காலம் முழுக்கக் காதலிப்பேன் என்றெல்லாம் கதாநாயகியர் பேசும் வசனங்கள் பெரும்பாலும் செயற்கையாக நம் காதுகளில் ஒலிப்பது ஏன் என்பது வெண்ணிற இரவுகள் படிக்கும் போது விளங்கும். நாயகனுக்கு மாறு செய்து விட்டாள் என்று நம்மாலும் நாஸ்தென்காவை வெறுக்க முடியாத அளவில் அவளுடைய பாத்திரத்தை அன்பும், பேதமையும் , கண்ணியமும் மிக்கதாகப் படைத்திருக்கிறார் தஸ்தாவெஸ்கி.


WHITE NIGHTS- ஃப்ரெஞ்சு,

TWO LOVERS- ஆங்கிலம்,

FOUR NIGHTS OF A DREAMER- ஃப்ரெஞ்சு

என்றெல்லாம் உலக அரங்கிலும்,

இயற்கை என்ற பெயரில் தமிழிலும்

கூட வெண்ணிற இரவுகளைத் தழுவியும், சாராம்சத்தை உள்வாங்கியும் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. ஆனாலும் பலப்பல படங்களுக்கான, பல முக்கோண காதல் கதைகளுக்கான கதைக்களனை வழங்கிய வண்ணமே இருக்கிறது வெண்ணிற இரவுகள்.

"இப்படிப்பட்ட ஒரு வானத்தின் கீழ் பல வகையான முசுடுகளும் மூர்க்கர்களும் எப்படி வாழ முடியும்" என்ற நாயகனின் கேள்வியோடு துவங்குகிற வெண்ணிற இரவுகள்..இருள்கவிந்து, கருவண்ணமாக எல்லோருக்கும் இருக்கும் இரவு அவனுக்கு மட்டும் வெண்ணிறமாக இருந்தது காதல் எனும் ஒளிக்கிரணம் அந்நான்கு இரவுகளில் மட்டுமே அவன் மீது பாய்ந்ததால் தான் ...என்று.. காதலின் மகோன்னதத்தையும், மனித மனங்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் அன்புக்கான தேடலையும் ஒரு தீவிரமான காதல் கதையாக அளித்திருக்கிறார் தஸ்தாயேவ்ஸ்கி.

....ஷஹி...

Tuesday, August 23, 2011

அழகழகாய் அழகு..

தவறும் நொடி!

புகைப்படமெடுக்கும் புதிய கைபேசி,
புன்சிரிக்கும் மழலை,
பதிந்து கொள்ளும் துடிப்பில்,

கோணங்களின்தேர்வு.

தவற விட்டது..

அழகின் சிரிப்பில்
நொடியின் லயிப்பு!

பாராட்டு!


திமிங்கலத்தின் படமொன்று பார்த்து..

"திமிங்கலம்"என்று விட்டதாம்...
வீடே "சபாஷ்" சொல்லி
குழந்தைக்குக்
கை தட்டியது..

சிந்தாமல் உணவருந்தி,
அழாமல் பள்ளி சென்று,
பொத்தான்கள் வரிசையாய்ப் பொறுத்தி,
காலுறை சரியாய் அணிந்து..
சபாஷ்களும் கைதட்டல்களும்
சேமித்து வந்தது குழந்தை .

அலுவலகக் காலையின்..
அவசர நொடியொன்றில்-
அப்பாவின் கண்ணாடி எடுத்து,
அழகாய்ப் பொறுத்திப் பார்த்தது...

பார்வையாளர்களுக்கெல்லாம்
பலப்பல வேலை இருக்க ...
தானே "சபாஷ்" சொல்லி,
தன் கைகள் தனக்காய் தட்டியது..

ரசித்துக் கொண்டே இருந்து,
தன் படைப்பில் தானே மகிழ்ந்து,
"சபாஷ்கள்" பலவும் சொல்லி,

கைகள் தட்டிக் கொண்டார் கடவுளும்!

..ஷஹி..

Friday, August 5, 2011

அம்பையின்-" பயங்கள்"

அம்பை வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ் ,ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர் . இவரது இயற்பெயர் சீ.எஸ் லெட்சுமி என்பது. பிறந்தது கோயம்புத்தூரில் வருடம் 1944. The Economic and Political Weekly, The Times Of India ,Free Press Bulletin ,The Hindu - எழுதி வருகிறார். Sparrow என்ற அமைப்பின் இயக்குநர். 'தங்கராஜ் எங்கே 'சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் . 'முதல் அத்தியாயம்' என்ற சிறுகதையைத் திரைபடமாகத் தயாரித்துள்ளார். சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை, காட்டில் ஒரு மான் ,அந்தி மாலை ஆகியன இவருடைய புகழ் பெற்ற படைப்புகளில் சில.

அவருடைய சிறுகதைத் தொகுப்பில் உள்ள நாடகம் "பயங்கள்" என்ற தலைப்பிலானது, அது பற்றி...

மூன்றே கதாபாத்திரங்கள், அஞ்சலி, மனோகர் மற்றும் சேகர். மிக வித்தியாசமான கதைக்களன், கதாநாயகி அஞ்சலியின் கணவன் மனோ impotent அதாவது ஆண்மையற்றவன் , அஞ்சலி திருமணத்துக்கு முன்பே சேகர் என்ற மணமான நபருடன் தொடர்பு கொண்டிருந்த பெண், இவர்களை மட்டுமே சுற்றி நகர்கிறது நாடகம்.

துவக்கக் காட்சியே அன்றிரவும் தன்னுடைய இயலாமையை இயம்பும் ஒன்றாகிப் போனது பற்றின ஆதங்கத்தில் மனோவும், அவனைத் தேற்றும் விதமாக பேசும் அஞ்சலியுமாக விரிகிறது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் எத்தகைய தோல்வி மனப்பான்மையும், கோபமும் ஒரு ஆணின் மனதில் மேலோங்கியிருக்கும் என்று அழகாகச் சித்தரிக்கின்றார் அம்பை. அதே சமயத்தில் குரூரம் தெரிக்கும் வார்த்தைகளால் அஞ்சலியைக் காயப்படுத்தவும் அவன் தவறவில்லை. தன்னால் அவளுக்குத் தரவியலாத இன்பங்களை, காதலன் சேகரிடம் அவள் அனுபவித்திருப்பாளோ என்ற எரிச்சலும் குற்றணர்வும் கொண்டு பொங்குகின்றான் மனோ. அவன் சமாதானம் அடையும் விதமாக ,எப்போதும் விளையாடும் ,பாதிரியார்--- பாவ மன்னிப்புக் கோர வரும் பெண் ,என்ற பாத்திரங்களோடான கற்பனை விளையாட்டை இருவரும் விளையாடுகிறார்கள். விளையாட்டின் ஊடாகவே இருவரின் மனோபாவங்களை வாசகர்களுக்குத் தெரிவிக்கின்றார் அம்பை.

தற்கொலை செய்து கொள்ளக் கூடத்தெரியாத அப்பாவியான மனோவும், சாக வழிகளும் வாழ்வில் துயரங்களும் இருந்த போதிலும் வாழ விரும்பின அஞ்சலியுமாக அவர்கள் கடந்த காலம் நம் கண் முன் விரிகிறது. ஊடாகவே மனோவின் தாய் பற்றின குறிப்பும் வருகிறது...அவளுடைய அரூபமான இருப்பு மனோவை எத்துணை தூரம் ஆட்டிப் படைக்கின்றது என்று வாசகனுக்குச் சொல்லும் விதமாக. மனோ மன நல மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தகவலும் உள்ளது.

இரண்டாவது காட்சியில் அஞ்சலியின் முன்னாள் காதலன், தனக்கு வரவிருந்த உயர் பதவிக்கு அவளால் ஏதும் தடை வந்து விடுமோ என்ற பயத்தில் அஞ்சலியை உதறின சேகர்..அவளைத் தேடி வருகிறான்..இயல்பாக அவனை வரவேற்று உபசரிக்கிறாள் அஞ்சலி. அவள் கணவன் ஆண்மையற்றவன் என்பதை அறிந்து கொண்டதோடு ,அவளிடம் மீண்டும் ஓர் உறவை வேண்டி வந்திருக்கிறான் என்பதை அறிந்தும் அழகாக நிலைமையை எதிர்கொள்கிறாள் அஞ்சலி. ஓர் சின்னப் பெண்ணின் கதையைச்சொல்வதாக ஆரம்பித்து , வாசகனுக்குத் தன் இளம் பிராயம் பற்றி சொல்வதோடு... அன்பு, காதல் போன்றவை குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக, பதட்டமில்லா வார்த்தைகளில் சேகருக்குத் தெரிவிக்கின்றாள் . கடைசியாக தான் அவனுடன் சிநேகமாக இருப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதோடு அதற்கும் மேல் அவனுக்கு ஓர் உறவு தேவைப்பட்டால் அதற்கு அவன் விலைமகளிரை நாடுவது தான் சரியாக இருக்கும் என்றும் முடிக்கிறாள். தன் தோல்வியை ஒப்பி திரும்பிச் செல்கிறான் சேகர். தொடர்ந்து மனோ சேகரின் வருகையின் நோக்கம் குறித்து வினவ, உண்மையைச் சொல்கிறாள் அஞ்சலி.

எதன் பொருட்டு அவள் சேகர் வேண்டின உறவை மறுத்தாள் என்ற மனோவின் கேள்விக்கு...... மனோவின் துணை தனக்குத் தேவைப்படுவதால் என்று அஞ்சலி சொல்ல .... நிறைகிறது.

பெண்ணியப் பிரதிநிதியாக அஞ்சலி:

1. அசாதாரணமான புத்தி கூர்மையும், தெளிவான சிந்தனையும் கொண்டவளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றாள்.

2. பதட்டமில்லாத செயல்பாடுகள், ஆணித்தரமான கருத்துக்கள்

3. பெண்ணியவாதி என்றாலே.. பொறுமைக்கும், அமைதிக்கும் அவர்களிடம் இடமில்லை என்ற கருத்தை உடைத்து, மனோநிலையில் பல மாற்றங்களை வெளிப்படுத்தும் கணவனை பொறுமையாகக் கையாளும் தன்மை.

4. தான் பரிசுத்தமானவள் என்று நம்பும் திடம்

5. அழகுணர்ச்சியும், நகைச்சுவையும் கொண்டவள் ,அதோடு வாழ்வு பற்றின ஆசையும் கனவுகளும் கொண்டவள் தான் இன்றைய பெண் என்பதும் அவளுடைய அறையலங்காரத்தின் வர்ணனைகளில் இருந்தும், அவளுடைய பேச்சிலிருந்தும் தெரியப்படுத்தப்படுகிறது.

6. மேலும்...தன்னுடைய பயங்களை, பாதுக்காப்பற்ற உணர்வை ஒப்புக்கொள்ளும் தைரியம் உள்ளவளாகவும் சித்தரிக்கப்பட்டு பெண்ணியத்தின் சாரமாக படைக்கப்பட்டிருக்கின்றாள்.

மனோ :

இருட்டுக்கும், அலுவலகக் கூட்டத்தில் பேசவும் கூடப் பயப்படும் ஆண். தன் தாயின் அன்புக்கு முற்றிலும் கட்டுப்பட்டு, ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அவளை எதிர்பார்த்து வளர்க்கப்பட்டதாலேயே கோழையானானோ என்று நினைக்க வைக்கிறான். அதே சமயம் தன் மனநிலை மாறுபாடுகளைத் தாண்டி, அஞ்சலியை முழுமனதோடு ஏற்றுக் கொண்டவன் என்பது அவளோடான அவனுடைய உரையாடல்கள் மூலம் விளங்குகிறது. மனிதத்தன்மை உள்ளவன் தன் கணவன் என்று அஞ்சலி சேகரை மறுக்கும் போது கூறும் வசனம் இதைத் தெளிவு செய்கிறது.

சேகர்:

ஆணாதிக்க சிந்தனையின் மொத்த உரு. தன் மனைவி வியாதியஸ்தி என்பதால் சுகத்துக்காக அஞ்சலி என்ற இளம் பெண்ணை , கன்னியைத் தெரிவு செய்து கொண்ட சுயநலவாதி. இயல்பான உடல் இச்சைகள் மனைவியின் மூலம் தீர வழியில்லை எனும் போது தான் திருமணம் ஆனவனாக இருந்தாலும் ஒரு கன்னி virgin தான் வேண்டும் என்று நினைத்த ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதி. தனக்கான உயர் பதவிக்கு பங்கம் வந்து விடுமோ என்ற பயத்தில் அஞ்சலியை நீங்கியவன், அவள் திருமணமானவள் என்ற அடையாளமே மீண்டும் தங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்ள நல்ல ஓர் license என்று நினைக்கும் கயவன். துணிந்து "மீண்டும் என்னிடம் வந்து விடு "என்று வேண்டுகோள் விடுக்கும் போது ஒட்டு மொத்த பெண் இனத்தின் ஆத்திரத்தையும் தேடிக்கொள்ளும் முட்டாள்.

ஆசிரியை:

அம்பையின் பெண்ணிய சிந்தனையின் ஒரு சோறு பதம் ரகம் இந்த நாடகம். ஆணை வெறுத்து, அவன் இருப்பை நிராகரித்து, அவனில்லாமல் வாழத் தலைப்படும் எண்ணம் அல்ல பெண்ணியவாதம் என்பதை ஆணித்தரமாகப் பதிவு செய்கிறார் அம்பை.

தமிழ் சினிமாக்களிலும், கதைகளிலும் சித்தரிக்கப்படும் சராசரி கதாநாயகிகள் பற்றின இவரது கிண்டல் இந்த நாடகத்திலும் வெகு இயல்பாக உள்ளது. சினிமாவில் அஞ்சலி நடிக்கலாம் என்று சாடிஸ்டிக்காக சேகர் கூறுமிடம்

" இன்னும் சின்னவாளா heroes வரட்டும். நான் கட்டாயமா apply பண்றேன்" என்னுமிடமாகட்டும்

"இந்த மாதிரியான ஹீரோயினுக்கு ஹீரோவோட கையைப் பிடிச்சுண்டாலே orgasm வந்துடுமாம். அப்படின்னா அவனை kiss பண்ணினா காக்காய் வலிப்பே வந்துடும் இல்லையா?" என்பதிலும்

"sorry. virgin ஹீரோயின்ஸ் உனக்குப் பிடிக்கும்கறது மறந்து போயிடுத்து" "எனைமறந்ததேன் நெஞ்சமே " அப்படின்னு பாடிண்டிருப்பேன்னு கற்பனை பண்ணினியா? எனும் இடங்களிலும் சபாஷ் என்று நமை மறந்து சிலாகிக்க வைக்கிறார் அம்பை. கதை எழுதப்பட்ட காலம் ஜூன் 1972 என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சம்.

கதையின் ஓட்டத்தில் அஞ்சலியும் மனோவும் மது அருந்துகிறார்கள் என்பதும் நாயகி திருமணத்துக்கு முன்பே ஒருவனோடு தொடர்பு கொண்டிருந்தவள் என்பதும் தனிப்பட்ட மனித சுதந்திரம் என்றெண்ணும் விதமாக எழுதப்பட்டு உள்ளது..அதோடு அன்றைய காலமாற்றத்தின் ஓர் பதிவாகவும் கொள்ளப்பட வேண்டியது. மட்டுமல்லாமல் ...பெண் மற்றும் மனித வாழ்வின் பயங்கள், பாதுகாப்பற்ற உணர்வு இவையெல்லாம் இருபாலருக்கும் ஒன்றே தான் என்பதையும் பெண் தன் துணையாக, தோழனாக, சக உயிரினமாகவே ஆணை விரும்புகிறாள் என்பதோடு அம்மாதிரியான பாதுகாப்பை அளிக்கும் மனிதனைத் தான் உடல் இச்சையத் தீர்ப்பவனை விடவும் மேலான ஆண் என்று ஒப்புக் கொள்கிறாள், என்ற செய்தியையும் பறைசாற்றுகின்றது அம்பையின் "பயங்கள்".

...ஷஹி..

Related Posts with Thumbnails