Search This Blog

Showing posts with label philosophical poetry. Show all posts
Showing posts with label philosophical poetry. Show all posts

Sunday, August 1, 2010

என் கட்டம் போட்ட தலையணை உறை..


அவனுடைய விளையாட்டு மட்டையை
நான் உடைத்த..மற்றும்...
என்னுடையை மதிப்பெண் சான்றிதழை ,
அம்மாவிடம் நான் அறியாமல் அவன் காட்டி கொடுத்த
போர்க்காலங்களில்...
என்னுடைய தலையணையில்,
அவன் மூச்சும் பட்டுவிடலாகாதென்றும்
அவனுடைய பங்கு தின்பண்டத்தில்,
எனக்கான சலுகைப் பங்கு நிராகரிப்பிலும்
கண்டிப்பாயிருப்போம் தம்பியும் நானும்!
பெற்றோரின் யுத்த காலங்களின் போது...
என்னுடைய கட்டம் போட்ட தலையணை உறை,
கறைபடும் எம்மிருவரின் கண்ணீரால்.
என்னுடைய ஆளுமை குறித்தான
விமர்சனங்களில் அவனும்,
அவன் வாழ்வியல் கொள்கைகள் குறித்த
அதிருப்தியில்நானும்
போருக்கான ஆயத்தங்கள் புரிந்து கொண்டிருக்கும்
தற்பொழுதுகளில்.....
'வெளியில் போ' என்று விட ,
அவனுக்கும்,
முகத்தை முறித்துக் கொள்ள
எனக்கும்..
எளிதாயிருக்கிறது!
அவனுடைய தலையணைஉறை,
பூப்போட்ட ரோஜா வண்ணம்..
என்னுடையதில் காணலாம் ,என் பிள்ளைகளின் எச்சில் தடம்.

Wednesday, July 7, 2010

என் கண்ணாடியும் ஒரு பூனைக்குட்டியும்!


பூனைக்குட்டி வளர்த்திருக்கிறாயா?பூனைக்குட்டி?..
நான் வளர்த்தேன்...
நானே அப்போது குட்டி தான்!
மிகுந்த பிரியம் ..
என் மீது அவற்றுக்கும்..
அவை மீது எனக்கும்!
மனிதப் பாசம் என்றாலே மோசமும் தானே?
அன்பை மட்டுமல்லாது,
ஆத்திரத்தையும் காட்டுவேன் அவற்றின் மீதே!
எல்லாம் மறந்து என்னிடமே வரும் ,
அவற்றைப் பார்க்கையில் ...
மனம் மிக வலிக்கும்!
ஆச்சர்யம் பார்..
சில நாட்களாய்..
கண்ணாடியில் பார்க்கையில்,
என் முகமே தெரிவதில்லை!
நான் பார்ப்பதெல்லாம்..
ஒரு...
குட்டிப் பூனையைத் தான்!!!

Tuesday, July 6, 2010

இரவெனும் ஆழி....


கறுந்துயரலைகள் தோற்றும்..
இரவெனும் பேராழி,
பகலொளியெனும்,
மாயத்திரை மறைக்கும் வலியெல்லாம்,
வலித்துச் சேர்க்கும் வெளியெங்கும்!
திண்மைப் படகுகள்..
கதிரொளியில் மட்டுமே பயணிக்கும்!
ராவெனும் பேரலை ,
அமிழ்த்திடும் திடமெல்லாம் ஆழ!
துயரின் தொலைவுக்கு,
நீளும் இரவின் தூரம்.
மார்பின் கனமெல்லாம்..
பெருமூச்செறிவுகளில் தெரிக்க,
புலரும் பிரிதொரு பொழுது,
எறிந்ததெல்லாம்,
மீண்டும் ஒளிக்க!
Related Posts with Thumbnails