Search This Blog

Monday, January 31, 2011

பெண்ணியம் பேசலாமா?...


பெண்ணியம் பேசலாமா?...பெண்ணியம் என்ற தலைப்பில் சமீப காலமாக ஏகப்பட்ட விவாதங்கள்,தர்க்கங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன..சரி வரப் புரிந்து கொள்ளப்படாத ஓர் தலைப்பாகவே இன்னமும் இது இருந்து வருகிறது...என் வரையில் பெண்ணியம் பற்றின ஓர் பார்வை இதோ...


மனித சமுதாயம், தோன்றின நாளிலிருந்து தாய்வழிச் சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. ராகுல சாங்கிருத்தியாயனின் "வால்காவிலிருந்து கங்கை வரை" மற்றும் பெடரிக்எஞ்செல்ஸ் எழுதிய "குடும்பத்தின் தோற்றம்" ஆகிய நூல்களில் இதற்கான ஆதாரம் உள்ளது. பெண் தன் மனதுக்குப் பிரியமான மற்றும் உடலுக்கு இசைவான துணையைத்தேர்ந்தெடுக்கவும், விரும்பாத போது பிரியவுமான உரிமையையும், குடும்பத்தின் தலைமைப் பதவியையும் தானே கொண்டிருந்தாள். சொத்துசேர்ப்பு, வாரிசுகளுக்கு சொத்துரிமை போன்ற பொருளாதாரக் காரணங்களுக்காக ஆண், பெண்ணை சொந்தம் கொண்டாட விழைந்தான்.
பெண்ணுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டால் தானே தன்னுடைய வாரிசுகள் எவை என்று நிச்சயித்துக் கொள்ளவியலும்? இப்படித் துவங்கினது தானே ஆணாதிக்கப் போக்கும், பெண் அடிமைப் பட்ட கதையும்!

பெண்ணியம் என்று வரும் போது என்னுடைய நிலைப்பாடு சமத்துவம் தான் ,என்றாலும் ,"தீவிரம்" என்ற நிலைக்குப் பெண்கள் செல்வதை,.. "எதனால்?" என்று ஆராய்ந்து பார்க்கச் சொல்லத்தான் செய்கிறது பெண் மனம். காலம் காலமாக அடிமைப்படுத்தப்பட்டு, நசுக்கப்பட்ட ஒரு சமூகம் வீறுகொண்டு விட்டது தானே இதற்கான அடிப்படை?
ஆணை எதிர்த்து,மனம் போனபடி திரிந்து ,கட்டுப்பாடுகளற்று வாழ்வது தான் பெண்ணியம் என்று பகுத்தறிவுள்ள எவரும் சொல்லவியலாது.
அதே சமயம், அழகுணர்ச்சியும், எதிர்பாலினரை ஈர்க்கும் ஆவலும் மனித சமூகத்துக்கே உள்ள ஒரு இயல்பு தானே? இதில் ஆண் பெண் என்ற பேதம் ஏது? ஒரு அளவுக்கு உட்பட்டு இருக்கும் வரை இது ஆரோக்கியமான ஒரு விஷயம் தானே? ஆணைக் கவர்வதற்காக அரைகுறையாக அலைகிறவர்கள் தாம் பெண்ணியம் பேசுபவர்கள் என்று... பெண்ணியம் என்ற "பெரும் பேச்சு" பேசுபவர்களை தரம் தாழ்த்துபவர்களை என்ன சொல்வது?
மேலும் பெண்ணின் உடலையே பாடு பொருளாக எடுத்துக்கொள்வது அத்தனை ஒன்றும் ஏற்புடையதாக இல்லையென்றாலும் ஆபாசம் தொனிக்காத வரையிலும்,சொல்ல விழையும் கருத்துக்கு தேவை என்றாகும் போதும் அதையும் கூட ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. என்னுடைய ஒரு கவிதையிலும் கூட நான் சொல்ல விழைந்த ஓர் விடயத்தை..

"மறுதலிக்கப்படும் அச்சத்தோடு
ஒவ்வொரு முறையும்,
என் இதழ் தாண்டாத
சொற்களின்,
சவக்கிடங்குகளாய்க் கனக்கும்,
என் மார்புகள்..
செய்தன ,
என் கோரிக்கைகளும்,
கண்ணீரும்
செய்யாதவற்றை."
என்று சொல்லியிருக்கிறேன்.
உடல் என்பது தாண்டி, உண்மை, நிதர்சனம் என்று தான் இதைப் பார்க்கவேண்டியுள்ளது.
பெண்ணை சமமானவளாக, சக உயிரினமாக, தோழியாக எண்ணி பால்களுக்குள் சமத்துவம் நிலவும் ஒரு சமூகமாக இச்சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஒரு உன்னதப்பணி பெண்ணியம் பேசுபவர்களுடையது அல்லவா?


ஏதோ பெண்கள் முன்னேற்றம் கண்டு விட்டார்கள், படிக்கிறார்கள், சாதிக்கிறார்கள் என்று பேசுபவர்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ஒரு முறை வந்து சென்றால் நல்லது. இரண்டாம் பாலாக... ஏன் இன்னமும் மோசமாக.. பெண்.. இன்றும் நடத்தப்படுகிறாள்.

ஏதோ பயந்து, பெண் சமூகத்துக்கு அஞ்சி நடக்கவில்லை.அவள் தாய், சுமப்பவள், போஷிப்பவள், காப்பவள். தன் சந்ததியினரின் நலன் கருதி பொறுமை காப்பவள். அதே சமயம் நாளைய உலகை தன் சந்ததிக்கு நலமான ஓர் உலகாக ஆக்கி விட்டுச் செல்ல வேண்டிய ஒரு மாபெரும் பொறுப்பும் அவளுக்கு உண்டு. ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற அந்த நிலையே பெண்ணுக்கும் ஆணுக்கும் உகந்த ஓர் அமைப்பு. அவ்வாறான ஓர் அமைப்பு ஏற்பட வேண்டுமெனில், பெண்ணியம்

பேசித்தானாக வேண்டும்.


குடும்பத்தில், உறவுகளில், பணியிடங்களில், சமூகத்தில் நிகழும் அவலங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்கும் பெண், பேசினால் தானே அவற்றை வெளிப்படுத்தி, தீர்வும் காண முடியும்? வெற்றுப் புலம்பல், அதீத எழுச்சி என்றெல்லாம் பெண்ணியம் பற்றி விமர்சிப்பவர்கள் சக உயிரினங்களின் உணர்வுகளை அறியாதவர்கள் என்பது தவிர வேறென்ன சொல்வது?

"சுற்றிலும் தளைகள்..
எவ்விடமும் பொறிகள்..
ஓட நான் எத்தனிக்கையில்,
எனை நடக்க விடாத கண்ணிகள்!
அப்பாவாய்,
சோதரனாய்,
துணைவனாய்,
மாமனாய் ,
பின் மகனாயும்!
வழிந்தோடும் குருதி குடிக்க..
கூர்பற்களோடு நீயும்"

என்று, சமூகத்தை நோக்கின என் நிலைப்பாட்டை... நானன்றி வேறு யார் சொல்லவியலும்?
சிறுவயது மணம், கல்வி மறுப்பு, சிறுமியருக்கு நிகழும் பாலியல் வன்முறைகள் எல்லாம் இன்றும் நிகழும் அவலங்கள் தானே? இதையெல்லாம் பேசுவது பெண்ணியம் தானே? காலம் காலமாய் ஆணாதிக்க அடக்குமுறையினால், தன் சக்தி உணராமல் இருந்த பெண்மை விழித்துக் கொண்டு, தன் நிலை,பலம் உணர்ந்து, தன் சந்ததியினருக்கு...ஆண் குழந்தைகளுக்கும் சரி பெண்பிள்ளைகளுக்கும் சமத்துவம் பற்றின சரியான போதனைகளைச் செய்ய வேண்டும்..அவ்வாறு நல்ல ஒரு உலகம் உருவாகி, உய்யவேண்டுமென்றால்...பெண்ணியம் பேசித்தானாக வேண்டும்.
...ஷஹி..
படங்கள் ..இணையத்திலிருந்து..
மீள் பதிவு---மூன்றாம் கோணத்திலிருந்து

Thursday, January 27, 2011

குல்மொஹர் கனவுகள்..





சீரான லயத்தோடு , அமைதியான மனநிலையுள்ளவர்கள் மனங்களில் ,சுக ராகங்களை எழுப்பும் விதமாக ரயில் ஓடிக்கொண்டிருந்தது.நடுப் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகளை உறுத்து நோக்கியபடியே எதிர் கீழ் படுக்கையில் விழித்துக்கிடந்தேன்.

மகன் பிறந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு அவளை கருவுற்றதும்,வயிற்றில் உள்ளது பெண் சிசு என அறிய வந்து அனைவருக்கும் இனிப்பு பகிர்ந்ததும் ,ஆறு மாதக் குழந்தையான அவளுக்கு பாவாடை சட்டை அணிவித்து புகைப்படம் எடுத்ததும், எப்போது வேண்டுமானாலும் சமையலாம் என்ற எதிர்பார்ப்புடன் வீட்டு பீரோவில வாங்கி வைத்துள்ள மயில் கழுத்து வண்ண பட்டுப்பாவாடையின் நினைவிழைகளும் மனதைச் சுற்றி, நெஞ்சை இறுக்க...ஒசைப்படாமல் கண்ணீர் உகுத்துக் கிடந்தேன்.

''குடியரசு தின விழா பரேடுக்கு டான்ஸ் மாஸ்டர் காஷ்மீர் காஸ்ட்யூம் ல வர சொல்லி இருக்காரு மா " என்ற படியே இரு வாரம் முன்பு பள்ளியிலிருந்து திரும்பினாள் ஷிஃபா .உற்சாகம் தொற்றிக்கொண்டது என்னுள்ளும். பொருத்தமான துணிகளுக்கான தேர்வு, வெள்ளி நிற நகைகளுக்கான வேட்டை என்று பொழுது பறந்தது.
முழு கஷ்மீர காஸ்ட்யூமில் மகள் நின்ற போது காணக் கண்கள் போதாமல் மனம் நிறைந்தது.
பரேட் முடிந்து சோர்ந்து போய் வந்த ஷிஃபாவின் வலது காதுக்குக் கீழ் திடீரெனக் கிளம்பிய வீக்கம் இவ்வளவிற்குக் கொண்டு விடும் என்று யார் தான் நினைத்தார்கள்?
பரிசோதனைகள், மேலும் பரிசோதனைகள்..மருத்துவர்களின் புருவ உயர்த்தல்கள்,குடும்ப மருத்துவரின் கவலை தோய்ந்த முக பாவம் என்று அடி மேல் அடியாய் விழுந்து ,பத்து நாட்களுக்குள் பல வருட மூப்பு என் முகத்தில் படிவதை உணர்ந்தேன்.

"உடனே கிளம்பி சென்னை வந்து விடு " என்று விட்டான் தம்பி. அவனுமே மருத்துவன் என்பதால் துரிதமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு , அறுவை சிகிச்சைக்கான நாளும் குறிக்கப் பட்டு விட ,வயதான பெற்றோரும் , மாமியாரும் ,செல்ல மகள் கழுத்தில் இருந்த கட்டி புற்று கட்டியோ என்ற பீதியில் இருந்த கணவரும் , தன் ஒரே தங்கை முன்பு போல தன்னுடன் சண்டைக்கு வரவே மாட்டாளோ என்றஅச்சத்தைக் கண்களில் தேக்கியபடி , மௌனியாகி விட்டிருந்த மகனும் , யாருமே என்னுடைய பாரத்தைத் தாங்க போதுமான சக்தி கொண்டவர்களாக எனக்குத் தோன்றவில்லை.

கடிகாரத்தின் நிமிட முள் நிரந்தரமாய்க் குத்த ..மருத்துவமனையின் எனக்கான படுக்கையில் கிடந்த படி ..

"தவளைகளின் கூக்குரலா ,
காயம் பட்ட மனதின் மரண ஓலமா ...
எது பெரித விவாதித்துக் கொண்டிருந்தேன் .
மழை பெய்யவிருந்த அந்தப் பின்னிரவில் ,
குருதி வழிந்து கொண்டிருந்த என் இதயத்தோடு."

விடிந்தும் விட்டது ...வந்து விட்டனர் செவிலியர், ஷிஃபாவுக்கு உடம்பு துடைத்து விட்டு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் செய்யலாயினர்.ஒரு இயந்திரத்தின் கதியோடு நானும் ஒத்துழைக்கலானேன். அவரை இன்னமும் காணவில்லை. வந்ததும் , ஷிஃபா அறியாமல் அவர் மீதுசாய்ந்து அழ வேண்டும்.

"அக்கா ,தைரியமா இருங்க..... உங்க முகத்துல தான ஷிஃபா தைரியம் தேடுறா?நீங்களே ஒடஞ்சு போனா சின்ன கொழந்த அவ என்ன ஆகுறது?"..என்று தம்பியின் மனைவி பாடமாய் படிக்க...என் மனமும் ,முகமும் கல்லாய்ச் சமைந்து விட்டது பத்து நாட்களாய்.

என்ன தான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும், அவரும் வந்து சேர்ந்து என் கைகளைப் பற்றிக்கொண்டானதும் கூட....இல்லை ...முடியவில்லை ...இதென்ன என் இதயம் இப்படி நொறுங்குகிறது?பிள்ளையைக் கிடத்தி விட்டார்கள் ஸ்ட்ரெச்சரில்"தியேட்டர் வரையிலும் நீங்களும் கூட வாங்கம்மா" என்று ஆறுதலாய்க் கூறினார் மயக்க இயல் நிபுணர்.எப்படி வெளியில் வந்தேன்? பிள்ளையைச் சுற்றி ,நீல உடை தரித்தபடி இருந்த மருத்துவர்களில் தம்பியும் இருந்தானா?....எதுவுமே நினைவில்லை....

தியேட்டருக்கு வெளியில் காத்துக்கொண்டிருந்தாள் மதி."வா" என்றுஅழைத்த அவளின் முக பாவம் தவிர வேறெதுவும் தெரியவில்லை எனக்கு.வேகமாய்ச் சென்று அவள் தோளில் சாய்ந்து கொண்டதும் உடைத்துக் கொண்டது கண்ணீர் காட்டாறு..என் பயமும் ,துயரமும் ... விம்மலும் , விக்கலுமாய் கரைய ...ஏதும் பேசாமல் என்னுடலின் பாரத்தோடு ,மனதின் சுமையையும் தன் மேல் ஏற்றுக் கொண்டவள் போல் அசையாது அமர்ந்த்திருந்தாள் மதி.

வெறுமை, ஏதும் இல்லாத வெற்று அமைதி....சிகிச்சை முடிந்து பிள்ளையை ரெக்கவரி அறைக்கு அழைத்து வரும் வரையில் அப்படியேதான் இருந்தேன்..சுற்றிலும் ஏகப்பட்ட இயந்திரங்கள், ப்ராணவாயுக் குழாய், முகம் வீங்கியிருக்க ,மயக்க மருந்தின் விளைவால் உடல் அதிர்ந்தபடியே அறுந்த பூங்கொடி போல் கிடந்தாள் ஷிஃபா.


விண்டு போன மனம் கால்களைத் துவட்ட, அருகில் இருந்த சேரில் அமர்ந்த படி ஓதலானேன்.

ஆயிற்று ...பிள்ளையை வார்டுக்கு அழைத்து வந்து விட்டோம்.அம்மா, அப்பாவும், அவரும் ஊர் திரும்பி விட்டார்கள். முறையான, அன்பான கவனிப்பில் தேறி வந்தாள் ஷிஃபா. கண்டிப்பாக விசிடிங் அவர்ஸ் பின்பற்றும் மருத்துவமனை என்பதால் காண வரும் நண்பர்களுக்காக நாளெல்லாம் காத்துக்கிடக்கும் நான்.

மருந்துகளின் மயக்கத்தில் மகள் உறங்கி விட...ஜன்னல் திரையை விலக்கித் தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....கார் பார்க்கிங்கின் அருகே குல்மொஹர் ஒன்று பம்மிப் படர்ந்து ,சில்லென்று சிவப்பாய்ப் பூத்திருந்தது...

என் வீட்டு வாசலில் நானும் ஷிஃபாவும் நட்டு பராமரித்து வந்த , பூக்கும் தருவாயில் இருந்த குல்மொஹாரே பூத்துச் செழித்து அழைக்கும் பிரமையில் சிலிர்த்தது மனம்.

மறு நாள் வரவிருந்த பயாப்சி முடிவு சாதகமாய் வரும் என்ற நம்பிக்கை நெஞ்சில் ஆழமாய் வேரூன்ற...ஏதோ கனவில் புன்னகைத்தபடி தூங்கிக் கொண்டிருந்த மகளை அணைத்த படி உறங்கிப் போனேன்.
......ஷஹி.....

Wednesday, January 26, 2011

மறக்காமல் வா..


ஓர் சுயநலத்தருணத்தில்,

சிதறிப் போனது..

தேவதைகள் ஆசிர்வதித்துத் தந்த

நம் காதல் மாலை..

நடவையில் இருக்கும்

சபிக்கப்பட்ட பொழுதுகளில்,

"உனக்கு முன் மரணம் வந்தால்

நீ வந்து சேரும் வரை..

மூடாது என் விழிகள் "

என்று,

நாம் கதைத்த காதல் நொடிகள்

கைகொட்டிப் பரிகசிக்கின்றன.

இதோ....

இமை மூடா,

உயிர்ச் சவமாய் ,

உலவிக்கொண்டிருக்கின்றேன்.

காதல் வளையம் தகித்து,

கருகிப்போன என் தேகத்துக்கு,

மலர்வளையம் சமர்ப்பிக்கவாவது...

மறக்காமல் வா. ..

...ஷஹி...

Wednesday, January 19, 2011

ஷோபனா ரவியிலிருந்து சுதா சந்திரன் வரை..ஒரு ஃபாஷன் பயணம்

ஷோபனா ரவி, எண்பதுகளில் தூர்தர்ஷன் ரசிகர்களை தொலைக்காட்சிப்பெட்டியோடு சேர்த்துக் கட்டிய பெயர். வில் போல வளைந்த அழகான புருவம், நீண்ட கூந்தல், பாந்தமான ட்ரெஸ் சென்ஸ் என்று வெகு அழகான பெண்மணி. அவர் செய்தி வாசித்த காலத்திலேயே பேராசிரியர் நன்னன்,கவிஞர் தமிழன்பன், நிஜந்தன், ராமகிருஷ்ணன் போன்ற மிகச் சிறப்பான உச்சரிப்புக்கும் ,மாடுலேஷனுக்கும் பெயர் போன பலர் இருந்தார்கள் என்றாலும் ஷோபனாவுக்கு இணை அவரே தான். புடவைத்தலைப்பைத் தோளோடு சேர்த்துப் போர்த்திய வண்ணம் செய்தி வாசிப்பது தான் அவருடைய ஸ்பெஷாலிடியே. குமுதம், ஆனந்த விகடன் போன்ற வாராந்திரிகளில் ஷோபனா ரவியின் புடவை போன்றது வேண்டும் என்று அடம்பிடித்து கடைக்காரர்களைப் படுத்தும் பெண்களைப் பற்றின ஜோக்குகள் பிரபலம்.

அவர் செய்தி வாசிக்கும் அழகும், அழகாக உடுத்தும் பாங்கிலும் மயங்கி புடவைகள் மேல் எனக்கும் கூட கிறுக்கு பிடிக்க ஆரம்பித்திருந்த சமயம். பள்ளிச் சிறுமி புடவை உடுத்தி எங்கே செல்வது? அதிலும் எங்கள் பள்ளியில் + 2 வரையிலும் அரைப்பாவாடை தான் சீருடையே. இவ்வாறாக புடவை உடுத்த ஆசை கொண்டிருந்த சமயத்தில் சரியான வாய்ப்பாக வந்தது தோழி சித்ராவின் பிறந்த நாள் பார்ட்டி. அடிச்சிதுடா சான்ஸ் என்று அம்மாவைப் படுத்தி அவர் அலுவலகம் உடுத்த கஞ்சியிட்டு அயர்ன் செய்து வைத்திருந்த அழகான காட்டன் புடவை ஒன்றை உடுத்திக் கொண்டு கிளம்பினேன். சித்ரா வீடு வரை நடக்க முடியாமல் கால் பின்னிக்கொண்டு அவதிப்பட்டது தனிக்கதை. கொஞ்சமே கொஞ்சம் வெட்கம் கூட வந்து விட்டது என்றால் பாருங்கள் புடவையின் மகிமையை.

தலைப்பால் தோளைப் போர்த்திக் கொண்டு ,நண்பர்கள் எல்லாரும் என்ன சொல்வார்களோ என்று படபடக்கும் இதயத்தோடு உள்ளே நுழைகிறேன்...எல்லாம் ஏதோ ஜந்துவைப்பார்த்தார் போல முழித்து வைத்ததுகள். அபி மட்டும் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு" டே அப்துல்லா, இந்தப் பொண்ணுங்களே இப்புடி தான்டா, சின்ன பொண்ணுங்களா இருக்கும் போது நான் பெரியவ பெரியவ ன்னுங்க...வயசானப்பறம் வயசக்கொறக்க படாத பாடு படுங்க "என்று (விளையும் பயிர்?) காமெண்ட் அடித்து ஏகத்துக்கும் என் கடுப்பைக் கிளப்பினார். பார்ட்டி எப்போதடா முடியும் என்று பார்த்திருந்து வீடு வந்து சேர்ந்தேன். அதிலிருந்து திருமணம் வரை புடவையைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. இப்படியாக ஷோபனா ரவியை பார்த்து நானும் சூடு போட்டுக் கொண்ட கதை முடிந்தது. அவரைத் தொடர்ந்து சந்தியா வந்தார், செய்தி வாசிக்க.


இவரும் நல் அழகி, வடக்கில் வளர்ந்தவர் என்பதால் ஸ்டைல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் , தோளைப் போர்த்தி அடக்க எஃபெக்ட் எல்லாம் கொடுக்க மாட்டார்..பளிச்சென்ற கலர் சாய்ஸ், வித விதமான தலையலங்காரம் என்று தூள் கிளப்பினார். அழகு நிலா சந்தியா என்று இளைஞர் கூட்டம் பாடியது. பின்னர் வந்தார் இளைய நிலா, வேறு யார் ஃபாத்திமா பாபுவே தான். க்யூட் என்ற வார்த்தைக்கே அவரைப் பார்த்து தான் அர்த்தம் சொன்னார்கள். செய்தி வாசிப்பில் ரொம்ப சுகம் இல்லாவிட்டாலும் அவர் ஸ்வீட்டாகப் பேசுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இப்படியாக புடவைக் கலாச்சாரத்தை தொலைக்காட்சி தூபம் இட்டு வளர்த்தது.

பின்னர் மெட்ரோ பிரியா வந்தார் புயல் போல, சுரிதாரும் பாண்ட் டாப்பும் சென்னையச் சுற்றி அடித்தது.

பெப்சி உமா..பளீர் நிற உடைகளும், பட பட பேச்சுமாக எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை அடித்தார்.

கூந்தலை விரித்துப் போட்டுக்கொள்ளும் ஃபேஷன் தான் இவர் இளம் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்த முக்கிய ஸ்டைல்..மட்டுமல்லாமல் வலையல்களில் ஜிமிக்கி எல்லாம் தொங்க விட்டு ஏக ரகளை. பெண்களை எல்லாம் காதுக்கு மட்டும் அல்லாமல் கைக்கும் ஜிமிக்கி வாங்க வைத்த ஸ்டைல் ஐகான். தொடர்ந்து வந்த பல காம்பயர்களில் சொல்லிக் கொள்ளும் படியாக யாரும் தேறாவிட்டாலும், இறுக்கமான ஆடைகள் ,தலைவிரிக் கோலம் என்று ஒரு ஃபாஷன் புரட்சி நடக்கத்தான் செய்தது.

இதுவெல்லாம் பரவாயில்லை..சுதா சந்திரன் செய்யும் ரகளைக்கு. தமிழ் ரசிகர்கள் பேரில் அப்படி என்ன காட்டம் அம்மணிக்கு என்று புரியவேயில்லை. காடியாக , கண்களை உறுத்தும் படியாக இருந்தால் கூட பரவாயில்லை..

கண்களைப் பிடுங்கும் படியாக கலர் சாய்ஸ், நெற்றியில் பொட்டு என்ற பெயரில் நீ--------ள நீளமாக வரையப்பட்டு பயமுறுத்தும் கோலங்கள், சந்திரமுகி தோற்றுப்போவாள் அப்படி ஒரு மை தீட்டின முழிகள் என்று ஏகத்துக்கும் மிரட்டுகிறார். சின்ன வீடு படத்தில் பாக்கியராஜ், கல்பனா திருமண சீனில் தான் மாப்பிள்ளை பெண்ணைப் பார்ப்பார்..ஏதோ யானையைப் பாத்த எஃபெக்ட்டில் ஒரு அரண்ட லுக். யானை பிளிருவது போல் பேக்கிரவுண்ட் இசை வேறு. சுதாவைப் பார்க்கும் போதெல்லாம் இப்படித்தான் புஸ் புஸ்ஸென்று பாம்பு சீறுவது போல் ஒரு சவுண்ட் எஃபெக்ட் தலைக்குள் வந்து ரொம்ப கலாட்டா. இவர் பரவாயில்லை என்று நினைக்கவைக்கிறார் ஃபாத்திமா பாபு.

சீரியல்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அம்மிணி அணிந்து வரும் அணிமணிகள் ஏக அமர்க்களம்.(எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க) ஒரு முறை மாலை ஒன்று அணிந்திருந்தார், ஒவ்வொரு மணியையும் உருவி வீசினால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பும், அப்படி ஒரு ரகளை ரசனை.

இப்படியாக ஷோபனா ரவியிலிருந்து படிப்படியாக தொலைக்காட்சி, ஒரு ஆடை அணிமணிப் புரட்சி நடத்திகொண்டிருக்கிறது..

அப் டேட் ஆவது என்பது ஒன்று, நமக்குப் பொருத்தமான , கலாச்சாரத்தைக் கூறு போடாத விதமாக உடுத்துவது இன்னொன்று என்று இல்லாமல்,கண்களுக்கு இனிமையாக, கருத்துக்கு ஒப்புவதாக உடுத்தும் ஃபாஷன் கலாச்சாரம் பரவட்டும்.

..ஷஹி..

(மூன்றாம்கோணம் மீள் பதிவு)

Wednesday, January 5, 2011

தஸ்தாயெவ்ஸ்க்கியின் எம்.ஏ.சுசீலா தமிழாக்கிய "குற்றமும் தண்டனையும்"






பியோதர் தஸ்தயேவ்ஸ்கி;
நவம்பர் 11, 1821 இல் ரஷ்யாவின் மாஸ்கோவில் பிறந்தவர், 1881 இல் தனது 59 ஆம் வயதில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இறந்தார். இவருடைய உலகப் புகழ் பெற்ற படைப்புகள், "நோட்ஸ் ஃப்ரம் அண்டர்கிரௌண்ட்"," கிரைம் அண்ட் பணிஷ்மென்ட்( குற்றமும் தண்டனையும்)", "தி இடியட்", "தி பிரதர்ஸ் கரமசோவ்(கரமசோவ் சகோதரர்கள்)", "தி பொஸெஸ்ட்(பீடிக்கப்பட்டவன்)" ஆகியன.
ருஷ்ய இலக்கிய வானில், லியோ டால்ஸ்டாய், புஷ்கின், துர்கனேவ் ஆகியோர்களுக்கு இணையாகச் சுடர் விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருப்பவர் தஸ்தயேவ்ஸ்கி. உலக இலக்கியத்திலும் ஷேக்ஸ்பியர், தாந்தே போன்றவர்களுக்கு இணையாகப் போற்றப்படுபவர் இவர்.


" குற்றங்களைக் குற்றமென்று உணர்வதோடு, அக்குற்றத்தில் இருக்கும் தன் பங்கையும் நம் பங்கையும் அவர் ஒப்புதல் செய்கிறார். இது தான் தஸ்தயேவ்ஸ்கியின் மகத்துவம்".-எட்மன்ட் ஃபுல்லர்.


குற்றமும் தண்டனையும் நாவலின் தமிழ் பெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா அவர்கள்

மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை இணைப்பேராசிரியராக 36 வருடங்கள் பணியாற்றியவர்.' ஸ்த்ரீ ரத்னா(2002)','சிறந்தபெண்மணி (2004)' முதலிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

'குற்றமும் தண்டனையும்' இவரது முதல் மொழியாக்க முயற்சி.

'பருவங்கள் மாறும்', 'புதிய பிரவேசங்கள்',' தடை ஓட்டங்கள்' முதலிய சிறுகதைத்தொகுப்புகளும் , 'விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்', 'பெண்- இலக்கியம்-வாசிப்பு', 'இலக்கிய இலக்குகள்' ,'தமிழிலக்கிய வெளியில் பெண் மொழியும் பெண்ணும்' ஆகிய கட்டுரைத்தொகுதிகளும் நூல் வடிவம் பெற்றுள்ள இவரது ஆக்கங்கள் . சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள இந்திய எழுத்தாளர்கள் குறித்த விவரப் பட்டியலிலும் இவருடைய பெயர் இடம்பெற்றுள்ளது.

நாவலின்முக்கிய கதாபாத்திரங்கள்:

1. ரஸ்கோல்னிகோவ்; கதையின் நாயகன், 2. பல்கேரியாஅலெக்சாண்ட்ரோவ்னா; ரஸ்கோல்னிகோவின் தாய்,

3. அவ்தோத்யா ரொமனோவ்னா ;ரஸ்கோல்னிகோவின் தங்கை, துனியா என்றும், தன்யா என்றும் கூட அழைக்கப்படுபவள்,
4. ரஸூமிகின்; ரஸ்கோல்னிகோவின் நண்பன்,
5. அர்க்காதி இவானோவிச் ஸ்விட்ரிகைலோவ்; துனியா பணிபுரிந்த வீட்டின் எஜமான்,
6.மார்ஃபா பெத்ரோவ்னா; ஸ்விட்ரிகைலோவின் மனைவி,
7. பீட்டர் பெத்ரோவிச் லூசின் ;துனியாவை மணக்க இருந்தவன்,
8. அல்யோனா இவானோவ்னா; ரஸ்கோல்னிகோவால் கொல்லப்பட்ட அடகுத் தொழில் செய்து வந்த முதியவள்,
9. லிஸாவெதா; அல்யோனா இவானோவ்னாவின் சகோதரி , இவளும் ரஸ்கோல்னிகோவால் கொலை செய்யப்பட்டவள்,
10. மர்மெலாதோவ்; குடிகார, முன்னாள் குமாஸ்தா, சோனியா என்ற நாயகியின் தந்தை,
11. காதரீனா இவானோவ்னா; மர்மெலாதோவின் இரண்டாவது மனைவி, இவளுக்கும் மர்மெலாதோவ் இரண்டாவது கணவன்,
12.சிறுமியர்;போலென்கா, லிடோகா இருவரும் காதரீனாவுக்கு அவளுடைய முதல் திருமணத்தில் பிறந்த மகள்கள்,
13.கோல்யா: காதரீனாவின் முதல் கணவரின் மகன்,

14. சோனியா செமீனோவ்னா; இவள் மர்மெலாதோவின் முதல் மனைவிக்குப் பிறந்த மகள், ரஸ்கோல்னிகோவின் காதலி, காதரீனாவின் வற்புறுத்தலின் பேரில் விபச்சாரத்தில் ஈடுபட்டவள்,

15. ஆண்ட்ரி செமீனோவிச் லெபஸியாட்னிகோவ்; மர்மெலாதோவின் குடும்பம் வசிக்கும் குடியிருப்பில் வசிப்பவன், சோனியாவின் மீது அன்பு கொண்டவன்,
16. அமாலியா இவானோவ்னா பியோதரவ்னா லிப்பேவெசல்ஸ்; மர்மலாதோவ் வசிக்கும் வீட்டின் சொந்தக்காரி,
17. தார்யா ; அதே குடியிருப்பில் வசிக்கும் தீய எண்ணம் கொண்ட ஒரு பெண்,
18. நடால்யா ஈகோரோவ்னா ; ரஸ்கோல்னிகோவ் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரியின் மகள், ரஸ்கோல்னிகோவின் முன்னாள் காதலி,
19. நஸ்டாஸியா; ரஸ்கோல்னிகோவ் குடியிருக்கும் வீட்டுச் சொந்தக்காரியின் பணிப்பெண்,
20. ஜோஸிமோவ் ;ரஸ்கோல்னிகோவுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்,
21. காபர் நவுமோவ்; தையற்காரர்,
22. போர்ஃபிரி பெத்ரோவிச்; மாஜிஸ்டிரேட், துப்பறியும் நிபுணர்,
23. சமெடோவ்; காவல் நிலைய தலைமை குமாஸ்தா,
24. நிகோடிம் போமீச்; காவல்துறைத்தலைவர்,
25. இலியா பெத்ரோவிச்; காவல் துறை அதிகாரி.

கதைச் சுருக்கம்;

நரம்புத்தளர்ச்சியால் பீடிக்கப்பட்டிருக்கும் ,முன்னாள் மாணவனான ரஸ்கோல்னிகோவ், செயின்ட் பீடர்ஸ்பர்கில் ஒரு சின்னஞ்சிறிய வாடகைக் குடியிருப்பில் வசிக்கிறான். தன்னுடைய நண்பனான ரஸூமிகினிடம் இருந்து கூட எந்த ஒரு உதவியையும் ஏற்றுக்கொள்ளாத ரஸ்கோல்னிகோவ், சுயநலமிக்க வெறுக்கத்தக்க ,அடகு பிடிக்கும் தொழில் புரிந்து வந்த ,அல்யோனா இவானோவ்னா என்ற கிழவியை கொலை செய்து விடும் திட்டத்தோடு இருக்கிறான்.

அவனுடைய தாயிடம் இருந்து வரும் கடிதத்தில் இருக்கும்செய்தியான, அவர்களுடைய துயரார்ந்த வாழ்வும், அவன் தங்கை துனியா தன்னை விட வயதில் மிகவும் மூத்தவரான லூசின் என்பவரைத் திருமணம் செய்ய கொடுத்த ஒப்புதலும் அவனுடைய மனநிலையை மேலும் வெகுவாக குழப்புகின்றன. ஏதோ ஒரு சக்தி தன்னை ஆட்டிப்படைப்பதாக உணரும் ரஸ்கோல்நிகோவ், அந்தக் குழப்பமான மனநிலையிலேயே அல்யோனா இவானோவ்னாவின் வீட்டை அடைந்து, அவளை மட்டும் அல்லாமல் அவளுடைய தங்கை லிஸாவெதாவையும் கொன்று விடுகிறான்.

'கிழவியிடம் உள்ள சொத்தையெல்லாம் பங்கிட்டால் எத்தனை ஏழைகள் பிழைப்பார்கள் 'என்றெல்லாம் எண்ணி வந்த ரஸ்கோல்னிகோவ், கொலை செய்து விட்ட பதட்டத்தில், ஒரு சில நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்த வீட்டை விட்டு அதிசயத்தக்க வகையில் யாரும் கண்டுவிடும் முன் தப்பிக்கிறான்.

களவாடிவந்த சிறிய பணப்பையையும், நகைகளையும் யாருமே கண்டு பிடித்து விடா வண்ணம் மிகச் சாமர்த்தியமாக ஒளித்து வைப்பதுடன், தன் மீதும் தன் உடைகளின் மீதும் பட்டு விட்ட இரத்தக்கறைகளையும் முற்றிலுமாக கழுவிக்களைகிறான் ரஸ்கோல்னிகோவ். தன்னிலை மறந்த நிலையில் செய்து விட்ட கொலைகள் அவன் உள்ளத்தை மிகுந்த பதட்ட நிலைக்கு உள்ளாக்க, கடுமையான ஜுரத்தால் பீடிக்கப்பட்டு, ஜன்னி கண்டவனாக நகரம் முழுவதும் திரிந்து அலைகிறான்.

அதோடு கூட 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற கதையாக தேவையற்ற கவன ஈர்ப்புகளுக்கும் தன்னைத்தானே ஆளாக்கிக்கொள்கிறான்.


இவ்வாறான நகர் வலத்தின் போது, தனக்கு முன்னமே அறிமுகமான மர்மெலாதோவ் என்ற மொடாக்குடிகாரனை, வண்டியில் அடிபட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பவனாகக் காண்கிறான். அடிபட்டவனை அவன் இல்லத்தில் சேர்க்கப்போகும் ரஸ்கோல்னிகோவ் ,தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் கடுமையான துயர நிலையில் இருக்கும் மர்மெலாதோவின் குடும்பத்தாருக்குக் கொடுத்து உதவுகிறான், மேலும் மர்மெலாதோவின் மகள் சோனியாவிடம் தன் மனதை இழக்கிறான்.

சோனியா குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி, விபச்சாரம் செய்யும் பெண்.

நகரத்தில் பரபரப்பாக இந்த இரட்டைக்கொலை பற்றி பேசப்பட, இச் செய்தி காதில் விழும் போதெல்லாம், தன்னை மறந்து பதட்டப்பட்டு, தன் மனநிலையை வெளிப்படுத்தியும் விடுகிறான் ரஸ்கோல்னிகோவ். இந்நிலையில், ரஸ்கோல்னிகோவின் தாய் பல்கேரியாவும், தங்கை துனியாவும் அவனை சந்தித்து, திடீரென்று எடுக்கப்பட்ட துனியாவின் திருமணம் குறித்த முடிவு பற்றி விவாதிக்க பீட்டர்ஸ்பர்க் வருகிறார்கள்.

துனியா பணி புரிந்து வந்த வீட்டின் எசமானர் ஸ்விட்ரிகைலோவ் அவளிடம் தவறாக நடக்கத் துணிய, வேலையை விட்டு விலகும் அவள், தன்னுடைய குடும்ப சூழல் கருதி தன்னை விட பல வருடம் மூத்தவரான லூசினை மணக்கச்சம்மதிக்கிறாள். இது பற்றி பேச தாயும் மகளும் ரஸ்கோல்னிகோவை நாடி வர இதற்கு முன்பே லூசினை சந்தித்து அவரை அவமானப்படுத்தி விரட்டிவிடுகிறான் ரஸ்கோல்னிகோவ்.

கதையின் ஓட்டத்தத்தில் ரஸ்கோல்னிகோவும் சோனியாவும் காதலில் விழ, ரஸூமிகினுக்கும் துனியாவுக்கும் இடையே அன்பு மலர்கிறது.

இந்நிலையில், ஸ்விட்ரிகைலோவ் மனைவியை இழந்த நிலையில் துனியாவைத்தேடி பீட்டர்ஸ்பர்க் வருகிறார். போர்ஃபிரி எனும் துப்பறியும் நிபுணரின் சந்தேகத்திற்கு ஆளாகிறான் ரஸ்கோல்னிகோவ். லூசினை துனியாவின் வாழ்விலிருந்து அப்புறப்படுத்துவதில் ரஸூமிகினும் ரஸ்கோல்னிகோவும் முனைய, ஸ்விட்ரிகைலோவ் மீண்டும் துனியாவுக்கு வலை விரித்து அவளுடைய மாறா வெறுப்பை சம்பாதிக்கிறார்.

போர்ஃபிரிக்கு ரஸ்கோல்னிகோவ் தான் கொலையாளி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனினும் சாட்சி இல்லாத காரணத்தால் தடுமாறுகிறார். கதாநாயகனின் மனசாட்சி அவனைக் கொல்ல, காதலியிடம் நடந்த அனைதையும் கூறி ஆறுதல் அடைய முயல்கிறான்.

விதி வசத்தால் இந்த சம்பாஷணை அனைத்தையும் ஸ்விரிகைலோவ் கேட்டு விட்டு ரஸ்கோல்னிகோவை மிரட்டுகிறார். தானும் தன் மனைவியைக் கொன்று விட்டதை ஒப்புக்கொள்ளும் ஸ்விட்ரிகைலோவ், துனியாவை பலவந்தப் படுத்த முயற்சித்து தோற்கிறார், குழம்பிய நிலையில் தற்கொலையும் செய்து கொள்கிறார்.

தன்னைக் காட்டிக்கொடுக்க விருந்த ஒரே சாட்சியும் மரணித்து விட்ட நிலையில், குற்றத்தை காவல் துறையினரிடம் ஒப்புக்கொள்ள வேண்டியிராது என்று நினைக்கும் ரஸ்கோல்னிகோவின் மனதை மாற்றி, அவனை நல்வழிப்படுத்த நினைக்கும் சோனியாவின் வற்புறுத்தலின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சைபீரிய சிறை தண்டனை ஏற்று, ஆத்ம சுத்தி அடைகிறான் ரஸ்கோல்னிகோவ்.

ரஸூமிகினும் துனியாவும் மணவாழ்வு துவங்க , சோனியாவின் காதலினால் மன அமைதியும் ஆறுதலும் அடைகிறான் ரஸ்கோல்னிகோவ்.

திருமதி எம். ஏ. சுசீலா அவர்கள் கூறியிருப்பதைப் போல் "தஸ்தாயேவ்ஸ்க்கியின் கண்களுக்கு முழுமையான நல்லவர் என்றோ...முழுமையான தீயவர் என்றோ எவருமில்லை".

கதாபாத்திரங்களின் மன உணர்வுகளையும், கருணையையும், தோழமையையும், பெண்களின் ஆழ் மன எண்ணங்களையும் தஸ்தாயேவ்ஸ்கி நம் கண்களின் முன்னே படைக்கும் விதம் கண்டு நமக்கு அவர் மீது மிகுந்த பிரமிப்பு உண்டாகிறது.

எஸ். நாகராஜன் கூறும் விதமாக "தஸ்தாயேவ்ஸ்கியைப் படித்து, அவரது நூல்களைக் கற்றுணரும் விதம் நிச்சயமாக சமூகத்தின் தார்மீக அபிலாஷைகளை அளக்கும் விதமாக இருக்கிறது".

என்னை பொறுத்த வரையிலும் கூட தல்ஸ்தோயின் எழுத்துக்களைப் படிப்பதைப் போல தஸ்தாயேவ்ஸ்கியின் எழுத்தைப் படிப்பது மிகுந்த வெட்க உணர்வைத்தான் உள்ளத்தில் எழுப்புகிறது. நம் செயல்களையும், அவற்றில் இருக்கும் ஒழுக்கக் கேடுகளையும், சுயநலத்தையும், தீமைகளையும் இவர்களுடைய எழுத்து நமக்கு தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுவதால் உண்டாகும் வெட்க உணர்வு அது. நாவலைப் படித்து முடிப்பது மிகுந்த சிரமமான ஓர் காரியமாகவே எனக்குப் பட்டது, ஏதோ ஓர் சக்தி தன்னைப் பிடித்து ஆட்டுவதாக கதாநாயகன் உணர்வான் கதையில், இந்த நாவல் என்னைப் பிடித்து பல நாட்கள் ஆட்டி வைத்து விட்டது!

தஸ்தாயேவ்ஸ்கியின் பலமே, படிக்கும் நம் கண்களின் முன் கதாபாத்திரங்களை சிறிது நேரத்திலேயே உயிருடன் உலவ விட்டு விடுவது தான்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாவலை ,உன்னதமான ஓர் லட்சியக் காவியத்தை தமிழில் மொழிபெயர்த்து மிகப் பெரிய ஓர் சாதனையை, சேவையை சுசீலா அம்மையார் செய்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது!


தவறு செய்து விட்டவர்களின் உளப் போராட்டத்தையும், காதலின் மகத்துவத்தையும், குடும்ப நன்மைக்காகப் பெண்கள் செய்யத் துணியும் மகத்தான ஆனால் உலகம் அறியாமலே போய் விடும் தியாகங்களையும் உலகறியச்செய்திருக்கும் தஸ்தாயேவ்ஸ்கியின் எழுத்துக்கு வந்தனம்.

.......ஷஹி....

நூல் பதிப்பு மற்றும் விற்பனை;
P.Duraipaandi,
Bharathi book house,
D-28,
Corporation shopping complex,
Periyaar bus stand,
Madurai-625001

மாஸ்கோவின் காவேரி..(சிறுகதை)




ஹஃபீ வந்துருக்கா,என் அழகான டாக்டர் தங்கச்சி ஹஃபீ,ரஷ்யாவில படிச்சவ.சித்தப்பா பொண்ணு தான்னாலும்,அவள என் தங்கச்சின்னு தான் சொல்லிப்பேன்.பின்ன? என்னோட சின்ன வயசுக் கனவுப்பிரதேசமான ரஷ்யாவுல படிச்சவன்னா சும்மாவா?

அப்பாவுக்கு கம்யூனிசத்தின் பேருல அப்போவெல்லாம் ரொம்ப ஈடுபாடு.மாஷா ன்னு ரஷ்ய மாத இதழெல்லாம் வீட்டுக்கு வரும்.அதுவும் இல்லாம ரஷ்ய மொழியாக்க நாவல்களுக்கும் பஞ்சமில்ல வீட்டுல.அதெல்லாம் படிச்சு படிச்சு ரஷ்யாவின் பேருலயும் ரஷ்யர்கள் பேருலயும் என்னமோ ஒரு பிரியம்.

ஆப்பிள் மரங்களும், திராட்ச்சைக் கொடிகளும் அழகுக்காக வளப்பாங்கலாம்!ஸ்ட்ராபெர்ரிப் பழங்களும் சீப்படும்ன்னு எல்லாம் ஹஃபீ சொன்னப்ப நான்' ஆ'ன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன். பக்கத்துல இருக்கிற காரக்குடியில தன்னோட படிச்ச சீனியர் ரஹ்மான் கிறவர் அரசாங்க ஆஸ்பத்திரியில வேல பாக்குரதாகவும், அவரு ஒரு ரஷ்ய பொண்ண கல்யாணம் கட்டி கூட்டி வந்திருக்கிறதாகவும் ஹஃபீ சொன்னா.எனக்கு ஒரே ஆச்சர்யம்!அதெப்புடி ஹஃபீ?இதெல்லாம் ஒத்து வருமான்னு கேட்டேன்.அதுக்கு அவ" இல்லக்கா,ரமீ அக்காவ பத்தி உங்களுக்கு தெரியாது.ரஹ்மான் அண்ணனும் அவங்களும் மேட் ஃபார் ஈச் அதர்,அப்புடி ஒரு லவ் நான் பாத்ததே இல்ல!அண்ணன் மாதிரி ஒருத்தரு கெடக்க அவங்களும், ரமீ கெடக்க அவரும் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்"னா.

ரமீ மாசமா இருக்கிறதாவும், மறுநா அவள பாக்கப் போலாம்னும் ஹஃபீ சொன்னப்ப எனக்கு ஒரே சந்தோஷமாப்போச்சு. காலையிலேயே கெளம்பிட்டோம். இவரும் ஒண்ணும் சொல்லல! அழகான கொளுந்தியா "மச்சான் என் கூட அக்காவ அனுப்புங்கன்னு" சொன்னா யாருக்கு தான் மறுக்க முடியும்?.
மாசமா இருக்கிற பொண்ணாச்சேன்னு "ஏதாவது வாங்கிட்டு போக வேண்டாமா"ன்னு கேட்டேன். அல்வா வாங்குனா ஹஃபீ. கொஞ்சம் பழம் வாங்கிக்கிட்டேன் நான். வழியெல்லாம் ஒரே ரஷ்யா கத தான். எனக்கு கேக்க கேக்க அலுக்கல. டிரைவர் அண்ணனும் கூட கூட சந்தேகம் கேக்க ஹஃபீ பதில் சொல்லிக் கிட்டே வந்தா. ஊரும் வந்துடிச்சி.

ரஹ்மான் வீடு நான் நெனச்ச மாதிரி இல்ல! ரொம்ப பழங்காலத்து செட்டியார் வீடுங்க இருக்குமே அப்பிடி இருந்திச்சு. கார் சத்தம் கேக்கவுமே உள்ளேர்ந்து ஓடி வந்தா ஒரு பொண்ணு! அப்புடியே ஹஃபீய கட்டி புடிச்சுக்கிட்டா. அவளோட தந்த நெறமும் தூக்குன மூக்கையும் தவிர வேற எதுவுமே ஒரு ரஷ்ய பொண்ணா அவள காட்டல! எனக்கு ரொம்ப சப்புனு போச்சு. "இவளா ரமீ"ன்னு நைசா ஹஃபீய கண்ணாலயே நான் கேக்க, ஹஃபீயும் "ஆமாக்கா"ன்னு கண்ணாலேயே பதில சொல்லிட்டா.

ரமீய மறுபடியும் ஹஃபீ அறிமுகம் செஞ்சு வச்சப்பதான் சரியா பாத்தேன். லேசா மேடிட்டிருந்த வயிரும், ஒல்லிபிச்சான் ஒடம்புமா இருந்தா. எனக்கு பாவமா இருந்திச்சு. பின்ன! நானெல்லாம் மாசமா இருந்தப்ப சும்மா குண்டு கணக்காத்தான இருப்பேன்.

உள்ள போனதுமே ரஹ்மானோட அம்மாவும் தங்கச்சியும் வந்தாங்க. ரொம்ப பிரியமா பேசுனாங்க. சாப்பாடு வச்சாங்க. சாப்புட்டு ஆனதும் கூட எங்க கூடவே உக்காந்து இருந்தாங்க. அப்பறம் வேறென்ன பண்ணுவாங்க? அதெல்லாம் எங்கள்ல பழக்கம் தான். புது மருமகள விட்டுட்டு நகந்துட்டா அவளுக்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மனச கலச்சிட மாட்டாங்களா வர்ரவங்க?

ஹஃபீயும் ரமீயும் ரஷ்யன்ல பேசுனத பாக்கணுமே! ஆமா! மருத்துவப் படிப்பு அங்க ஆறு வருசம். மொத வருசம் ரஷ்யன் படிக்கணும். நம்ம ஊருல மாதிரி அங்க எல்லாம் தாய் மொழில ஒழுங்கா ஒரு வாக்கியம் எழுதத் தெரியாமலேயே குப்ப கொட்டிட முடியாது. உத்து உத்து கேட்டாலும் எனக்கு ஒண்ணும் புரியல. ஹஃபீ இங்லீஷ்ல எனக்கு அவங்க பேசுறதயெல்லம் சொன்னா.


ரமீ ஓரளவுக்கு நல்லாவே தமிழ் பேசுனா. "என்ன பண்ணிக்கிட்டு இருந்தே"ன்னு நான் கேட்டதுக்கு "கொல்லையில துணி தோச்சுக்கிட்டு இருந்தேன்னு" சொன்னாளே பாக்கலாம். அசல் பட்டிக்காட்டு துளுக்கச்சி கெட்டா போங்க! கொஞ்ச நேரத்துல வேல முடிஞ்சு ரஹ்மான் வந்தாப்புல. நல்லா ஒயரமான ஓங்கு தாங்கான ஆளு! ரொம்ப பிரியமா, மரியாதையா பேசுனாரு. 'ஹஃபீ சொன்னது சரி தான்'னு நெனச்சுக்கிட்டேன்.உடல் உறுப்பு தானம் பத்தியும்,கூடப் படிச்ச நண்பர்கள் பத்தியெல்லாமும் ஹஃபீ அவரோட பேசிக்கிட்டே இருந்தா. கொஞ்ச நேரத்துல யாரோ அவரோட பெரியாப்பாவாம், ஊசி போடச்சொல்லி கூப்பிட்டு விட்டாங்கன்னு ரஹ்மான் கெளம்புனாரு.

ஒரு வழியா "ஷோ மீ யுவர் மேரேஜ் விடியோ"ன்னு நைசா கேட்டு அவ ரூமுக்கு நானும் ஹஃபீயும் மட்டும் எஸ்கேப் ஆனோம்! ரமீயோட லாப் டாப்புல அவ அம்மா, அக்கா எல்லாரையும் பாத்து அசந்துட்டேன். அப்பாடா! ரொம்ப அழகு! அத விட "கல்யாணத்துக்கு முன் "வால்காவா இருந்த ரமீலா என்கிற ரமீயோட அழகையும், அவளோட தன்னம்பிக்கை மிளிர்ந்த தோற்றத்தையும் பாத்து என்னால நம்பவே முடியல. அவள மதம் மாத்தி நிக்காஹ் பண்ணுரதும், ரொம்ப சந்தோஷமாஅவங்க அம்மாவும் , அக்காவும் விடை குடுத்து அனுப்புறதையும் கூட ஷூட் பண்ணி வச்சிருந்தா.

"எத்தன காதலும், நம்பிக்கையும் இருந்தா, மதம் மாறி, கண்டம் விட்டு கண்டம் வந்து, புரியாத பாஷ பேசுரவங்க மத்தியில இவ வாழ சம்மதிச்சிருப்பா"ன்னு மலச்சுப்போயிட்டேன். இது "நீயா நீயா"ன்னு நான் கேட்டத பாத்து அவ அடையாளம் தெரியாம மாறிட்டத தான் கேக்குறேன்னு அவளும் புரிஞ்சுக்கிட்டா. ஹஃபீ "அக்கா"ன்னு லேசா அதட்ட, நான் அமைதியா ஆகிட்டேன்.

அப்பறம் அவளும் ஹஃபீயும் மாஸ்கோவுல அவங்க ஊர் சுத்துனது, ஹாஸ்டல் ரூம்ல லூட்டி பண்ணினதெல்லாம் பேசி சிரிச்சாங்க. என்னமோ திடீர்னு ஹஃபீ கேட்டா "ஹனிமூன் எங்க போனீங்க அக்கா"ன்னு. அவ்ளோதான்! அதுக்கு மேல ரமீயால மூடி மறைக்க முடியல. கொட்டி தீத்துட்டா." நான் எங்க ஹஃபீ ஹனிமூன் எல்லாம் போறது? இங்கதான் என்ன வெளியிலயே விடாம செற வச்சிருக்காப்பல வச்சிருக்காங்களே! ரஹ்மான் கூட எங்கம்மா பேச்சு கேக்குறதா இருந்தா இரு இல்லைன்னா ஊர் போய் சேருன்னு என்ன ரெண்டு மூணு தடவ அடிச்சிட்டாரு.



இந்த சாப்பாடும் எனக்கு ஒத்துக்கல. எல்லாத்துலயும் தேங்கா போடுறாங்க எனக்கு வாந்தியா வருது"ன்னு மழல கொரல்ல அவ பேசுனப்போ எனக்கு ரொம்ப வேதனையா போச்சு.

'என்னதான் டாக்டருக்கு படிச்சாலும் ஊர் குருவி ஊர்குருவி தான். இந்தப் பயலுக புத்தியெல்லாம் மாஸ்கோ போனாப்புல மாறிடுமா'ன்னு நெனச்சுக்கிட்டேன். அவ அம்மாதான் ரஷ்யாவில இருந்து அவளுக்கு பிடிச்சமான தின் பண்டங்களையெல்லாம் அனுப்பி வக்கிறதாகவும் காப்பி தூள் மொதக்கொண்டு அவங்க அனுப்புறாங்கன்னும் சொன்னா.

ரொம்ப எரிச்சலாகி" கெட் தலாக் ஃப்ரம் திஸ் இடியட் அண்ட் கோ ஹோம்"ன்னுட்டேன். அதுக்கு அவ சொன்னா பாருங்க பதிலு..."அயாம் பிரக்னன்ட் அன்ட் இட் இஸ் எ கேர்ள்"ன்னு. ஒண்ணும் பேச முடியல! சும்மா இருந்திட்டேன்! கொஞ்ச நேரத்துல ரஹ்மான் வந்தான். "அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்னு" எல்லாம் கேட்டுக்கிட்டு ரமீ கிட்டயும் "ஒடம்ப பாத்துக்கம்மா"ன்னு சொல்லிட்டு கெளம்பினோம்.

ரொம்ப நேரம் வரையில யாருமே பேசல. எப்பவும் லொட லொடன்னு பேசுர டிரைவர் அண்ணன் கூட எங்க இறுக்கத்த பாத்துட்டு வாயே தெறக்கல. ஹஃபீ ரொம்ப கேட்டுக்கிட்டாளேன்னு ரமீ மழலக் கொரல்ல பாடுன "கண்ணுக்குள்ளே உன்ன வப்பேன் கண்ணம்மா..நா கண்கள் மூட மாட்டேனடி சின்னம்மா"ங்கிற பாட்டு என் காதுல கேட்டுக்கிட்டே இருந்திச்சு. அது அவங்க லவ் பண்ணினப்ப ரஹ்மான் அவளுக்கு வழக்கமா பாடிக் காட்டுர பாட்டாம்!

"நீ மொகம் கழுவிட்டு வந்தப்பறம் நாம கொண்டு போன பழக் கூடைய பாத்து ஏதோ சொல்லி அழுதாளே? என்ன ஹஃபீ?"ன்னு கேட்டேன். அது என்னமோ " ஆப்பிள் சாப்புட்டு பல மாசம் ஆச்சு"ன்னு சொல்லி அழுதாளாம் அவ!.

..ஷஹி..

ஒரு வானவில்லாகவேனும் வந்து விட்டுப் போ..

குறள் இரண்டடிதான் குறைந்தென்ன விட்டது?

முழுவதுமாய்த் தரவில்லையா பொருளை?

மலரவில்லை என்பதால் மட்டும் மொட்டுக்கள் அழகில்லையா?

புள்ளிகள் வைத்துவிட்டு கோடிழுக்காமல் பார்..

கோலம் போல அதுவும் கூடப் பேரழகு தான்.

முழுவதுமாய்ப் பெய்து தீர்த்தால் தானா மழை?

தூறல் தருமே தனி சுகம்!

பயணித்த ஊர் போய் சேர்தல் தானா வெற்றி?

பயணமே தருமே பற்பல இன்பம்!

சிகரம் தொட்டு விடுதல் சிறப்பு தான்...

மணல் வெளிக்கும் கூட மாட்சிமை உண்டே!

என் வாழ்நாள் முழுமைக்கான வசந்தமாக இல்லாவிடினும்...

தோன்றி மறையும் ஒரு..............

வானவில்லாகவேனும் வந்து விட்டுப் போ.

..ஷஹி..

(மீள் பதிவு)

நின்றா கொல்லும்? (சிறுகதை)


மாடியிலிருந்து இறங்கும் போதெல்லாம் இரண்டிரெண்டு படிகளாகக் குதிக்கும்,மான்குட்டியாகத் திரிந்த செல்ல மகள் சுமையா, சோர்ந்து கிடப்பதைப் பார்த்துப் பரிதவித்தான் ஹுசைன்.

"ஏண்டீ பாத்திமா,என்னாடி ஆச்சு புள்ளக்கி?சின்ன பெருநாளைக்கு அவ ஐய்யா வீட்டுக்கு போய் வந்ததுலேர்ந்தே பாக்குறேன், சோந்தே கெடக்காளே?".அடுக்கலையில் இருந்தே குரல் கொடுத்தாள் ஃபாத்திமா.."தெரியலையேங்க!குப்பியும் மாமுவும் கூட இதையே தான் கேக்குறாக,நானும் எம்புட்டோ கேட்டுப் பாத்துட்டேன், பதிலே சொல்றா இல்ல"..."வாங்க சாப்புட, உங்க மகளுக்குப் புடிக்குமுண்டு, கத்திரிக்கா, முருங்கக்கா போட்டு கறியானம் காச்சியிருக்கேன்",என்றபடியே உணவு பரிமாற ஆயத்தங்கள் செய்யலானாள்.

அறைக்குள் சென்ற ஹுசைன், சின்னப் பாயில்,சுருண்டு கிடந்த மகளை அங்கலாய்ப்புடன் அழைத்தான். "சுமையா செல்லம், ரெண்டு நாளா ஏண்டா என்னன்டோ கெடக்க? நீ எந்திரிச்சி வருவியாம், அத்தா சோறூட்டி விடுவனாம்?"...பனிரெண்டே வயதான சுமையா செல்லம், சலித்துக் கொண்டே எழுந்தாள்.
"போங்கத்தா!..சும்மா என்ன ஏன் தொல்ல பண்ணுறீங்க?, நான் சாப்ட்டுக்க மாட்டனா?".
அப்பனும், மகளும் குலவப் பொறுக்காத,ஹுசைனின் தாய் ஜைனப், கத்தக் கிளம்பினாள். "அதிசயப் புள்ள வளக்குறாக!ஒத்த பொட்டப் புள்ளய பெத்துட்டு பெருமையப் பாரு!கெடுத்து எடுத்து வச்சு மூடுதுக அவளையும். மதரசாவுக்கு
அனுப்பாம பள்ளிக் கூடம் அனுப்புறதும், பாவட தாவணி உடுத்தி விடாம சுரிதாரும் முர்தாரும் போட்டு விடுறதும்..என்ன லூட்டி கொளுத்துதுக? அல்லா, ஆட்டுக்கு வால அளந்து தான வச்சிருக்கான்? இதுகளுக்கு மட்டும் ஆம்பளப் புள்ள ஒண்ணு இருந்துச்சின்னா புடிக்க முடியாது பயலையும், சிறுக்கியையும்!...சாப்புட மாட்டேம்பாளாம் மககாரி, கெஞ்சிக் கெதருதுக அப்பனும் ஆத்தாளும்!..பெத்தவரு கெடக்காரு இருமலும் சளியுமா முடியாம,...கேக்க பாக்க நாதியில்ல அவர! அல்லா எங்கள ஏண்டா இந்தப் பொளப்பு பொளைக்க வச்ச?".
முகத்தைத் தூக்கியபடியே இருந்த மகளுக்கு,சோற்றை அள்ளி ஊட்டி விட்டு அவசரமாய்த் தானும் இரண்டு வாய் அள்ளி விழுங்கி விட்டு....ஓடினான் தான் நடத்தி வந்த செருப்புக் கடைக்கு.
"இஸ்மாயில் பாய் சாப்புடப் போவணும் பாத்திமா, கல்லாவுக்கு வேற ஆள் இல்ல. புள்ளய கவனிடீ!மெதுவா என்ன விசயம்னு கேளு,ஒங்க அத்தா வீட்டுல, ஒங்கண்ணன் மக எதுவும் புதுசா சைக்கிள், பாவாடண்னு காட்டி புள்ள மனச கஸ்ட்டப்படுத்துச்சோ என்னம்மோ?நமக்கு இருக்குறது ஒரே புள்ள...அது மொகம் வாடிக் கெடக்குறது சங்கடமா இருக்குடீ. ஒனக்கு என்ன வேணும்னாலும் அத்தா வாங்கிக் குடுப்பாகன்னு சொல்லி அது மனச தேத்து,நான் மகரிப்புக்கு அங்கிட்டு சீக்கிரம் கடைய கட்டிட்டு வாரேன்"..என்றுவிட்டு விரைந்தான், மிதிவண்டியில்.
மகள் மீது கணவனுக்கு இருந்த பாசம் கண்டு பூரித்துப் போனாள் ஃபாத்திமா. என்றாலும் மகள் முகம் சற்றும் விடியாதது கண்டு கலக்கமும் அடைந்தாள் வெகுவாகவே! எத்தனையோ தோண்டித் துருவியும் சுமையா அசைந்து கொடுக்காததால் ,மாமியாரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.
"குப்பி, சோறு, ஆனமெல்லாம் எசவா எடுத்து வச்சிருக்கேன், நீங்களும் மாமுவும் சாப்புடுங்க. நம்ம அனீசு மகளுக்கு மடி ரொப்புராக . போன வெள்ளிக் கெளம வந்து வீட்டோட விருந்துக்குச் சொல்லிட்டுப் போயிருக்காக. நான் மட்டுமாவது போகலேன்னா நல்லாத்தெரியாது. ஒங்க பேத்தி இன்னைக்கோ, நாளைகோன்னு சமயக் காத்திருக்கா. அப்பறம் நாம நம்ம புள்ளக்கி பூப்போட ஒரு சனம் வராது!செத்த பாத்துக்கிடுங்க நாஞ்சீக்கிரம் வந்துடுறேன்"...என்ற படியே துப்பட்டியை இழுத்துச் செருகிக்கொண்டு கிளம்பினாள் அடுத்த தெருவிலிருந்த அனீசின் வீட்டுக்கு.
மருமகளின் வியாக்கியானம் புரிந்து எரிச்சலோடே எழுந்தாள் கிழவி. "இந்தாங்க, எந்திரிச்சு கொஞ்சம் போல சாப்புட்டு ,இரும மருந்த குடிச்சிட்டு படுங்களேன்"..என்றபடியே கணவரைத் தாங்கி எழுப்பி அமரச் செய்தாள். வற்புறுத்தி அவரை உண்ண வைத்து விட்டு, தானும் உண்டு, கணவன் உறங்கியபின் சென்றாள், படுத்தே கிடந்த பேத்தியிடம்.
" ஏம்மா,சுமையா எந்திரிடா தாயி, ஏன் என்னம்மோ போல இருக்க? அத்தம்மாட்ட சொல்லுடா"...என்றவளின் குரலைக் கேட்டு பதறி எழுந்த பேத்தியைத் தன் மடியில் சாய்த்துக் கொண்டாள். பாட்டியின் மடியில் சாய்ந்து கதறித் தீர்த்தாள் பேத்தி. "அத்தம்மா ,அத்தம்மா" என்றது தவிர வேறேதும் பேச முடியாது தவித்தாள். ஏதோ தீர்மானித்துக் கொண்டவளாய் பேத்தியின் முதுகைத் தடவியவபடியே அமைதியாய் இருந்தாள் ஜைனப்.பேத்தி முழுவதுமாய் அழுது தீர்த்ததும் சிறிது தண்ணீர் அருந்தச் செய்து ஆசுவாசப் படுத்தினாள்.பிறகு மெதுவான குரலில் கேட்டாள் "சொல்லுடாம்மா,எதுவாயிருந்தாலும் அத்தம்மாட்ட சொல்லு. அத்தா,அம்மா ரெண்டு பேருமே இல்ல. நான் பாத்துக்குறேன்...சொல்லு!ஒங்க ஐய்யா வீட்டுல ஒன்ன யாரும் திட்டுனாகளா, வஞ்சாகளா?சொல்லுமா?"...
பாட்டியிடம் கொட்டினாலாவது தன் பாரம் குறையும் என்ற எண்ணத்தில் மெதுவாகப் பேசலானாள் சுமையா."இல்லத்தம்மா, பெருநாளக்கி மொத நா ராத்திரி நானும் ஜாகிரா மச்சியும் மருதாணி வச்சுக்கிட்டே மாடியில கத பேசிக்கிட்டு கெடந்தமா? அப்பிடியே தூங்கிட்டேன் போல ,நடுராத்தியில என்னமோ போல இருக்கேன்னு முழிச்சிப் பாத்தேன்...அப்ப "மாமு....மாமு ...."என்றவள் மேற்கொண்டு சொன்ன வார்த்தைகளைக் கேட்டு உயிர் துடித்துப் போனாள் கிழவி.

"அல்லல்லா!..இதுக்காடாஒன்வீட்டுக்கு எம்பேத்தியஅனுப்பி வச்சேன்?உன்னையெல்லாம் அல்லா கேக்க மாட்டானா?" என்று அழுது அரற்றத் துவங்கியவள்..,வாயிலில் பேயறைந்தவனாக வந்து நின்ற மகனின் முகம் பார்த்து வாயடைத்துப் போனாள்.
ல்லாச்சாவியை மறந்தவனாய்க் கடைக்குச் சென்று திரும்பிய ஹுசைன், மகள் பேசிய செய்தி கேட்டு ஆடிப் போனான். நிற்க முடியாமல், கால்கள் மடங்கி பொத்தென்று பாயில் அமர்ந்து, முகத்தை இறுக மூடியவனின் கண்களில்.... சில வருடங்களுக்கு முன் தன் வீட்டுக்குச் சீராடவென, மான் குட்டி போல் துள்ளியவாறு வந்து, துவண்டு போய் ஊர் திரும்பிய தன் அண்ணன் மகள் ஹாஜிராவின் உருவம் முள்ளாய்க் குத்தியது!!!!!

" அவள் விகடன்" நடத்திய கதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை....என்னுடைய முதல் சிறுகதையும் கூட....ஷஹி.....(மூன்றாம் கோணத்திலிருந்து என் மீள் பதிவு)
Related Posts with Thumbnails