Search This Blog

Sunday, July 31, 2011

எஸ்.ரா வின் சிறுகதை "மிருகத்தனம்"

எஸ்.ராவின் "அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது" சிறுகதைத் தொகுப்பிலிருந்து "மிருகத்தனம்". அன்பின்மையையும், கொடூரமான மனப்பான்மையையும் மிக எளிதாக மனிதன் மிருகத்தனம் என்ற பெயரில் அடக்கிவிடுகிறான் ஆனால் ஒரு விலங்கினுள் மனிதனின் பால் இருக்கும் அன்பையும், பரிவையும் மிகத் துள்ளியமாக எஸ்.ராவின் இந்தக் கதை பதிவு செய்திருக்கிறது. எஸ் ராவின் ஆகச்சிறந்த சிறுகதை இது என்று எப்போதுமே நான் நினைப்பதுண்டு..

காதல் மணம் புரிந்து கொண்ட தம்பதியர் சியாமளாவும் ராஜனும். சியாமளாவின் தங்கை அவளுக்கும் முன்பாகத் திருமணம் செய்து கொண்டது குறித்து எரிச்சலுற்றிருந்த சியாமளா ,பிடித்திருந்தது என்ற ஒரே காரணத்துக்காக ரொம்பவும் கூடப் பழகாமல் ராஜனை மணம் புரிந்து கொள்கிறாள்.


அதிகாரம், உணவு, பணம் ஆகியவை தவிர மற்ற விஷயங்களில் அதிக ஆர்வமற்றவன் ராஜன். ஆனாலும் கூட ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் ஒன்றை மிகப் பிரியமாக வளர்க்கிறான். மணமான புதிதில் நோவா என்ற அந்த நாயை வெகுவாக வெறுத்து வந்த சியாமளா, பின்னாட்களில் அதை விரும்பத் துவங்குகிறாள். தனக்கும் அந்த நாய்க்கும் ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பதாக அவள் உணர்ந்திருக்கலாம். வேட்டையில் மிகச்சிறந்து விளங்கி வந்த ஜெர்மன் ஷெபர்ட் வகை நாய்கள், கால மாற்றத்தோடு தங்கள் பூர்வீகம் மறந்து, சாதுவாக மாறி ,வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றார் போல, இயல்பு திரிந்து விளங்கியது காரணமாக இருக்கலாம்.

ஒரு காலத்தில், குடும்பத்துக்கு, குழுவுக்குத் தலைவியாக கோலோச்சி வந்த பெண், கால மாற்றத்தில் இயல்பு திரிந்து அடிமைப்படவில்லையா? எது நடந்தாலும் மௌனியாக , பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க அவள் பழகிக் கொள்ளவில்லையா? வீட்டைக் காக்கவும், எஜமானனுக்கு மகிழ்ச்சி அளிக்கவும் நன்றியாக இருக்கவும் பழகிகொண்டது நாய் மட்டும் தானா?

அதற்குத் தேவையானவற்றை கவனித்துக் கொண்ட ராஜனிடம் அதீத பிரியத்துடன் இருந்தது நோவா. அவன் மகிழ்ந்தால் மகிழவும், பிரிந்தால் துயரப்படவும் ,உணர்வு பூர்வமான நட்பு கொண்டிருந்தது நோவா. ஒரு விலங்கிடம் அத்தனை பரிவும் அன்பும் கொண்டிருந்த ராஜன், தன்னை விரும்பி மணந்து கொண்ட சியாமளாவிடம் ஒத்துப் போகவியலாமல் மணவிலக்குப் பெற்றுக் கொள்கிறான். மனித மனங்களின் விசித்திரப் போக்கையும், ஒரு கூரையின் கீழ் வாழ்ந்து விட்டால் மட்டும் இரு மனங்கள் ஒன்றிவிடுவதில்லை என்பதையும் மிக அழுத்தமாக, துயரார்ந்த வகையில் பதிகிறது இந்த சிறுகதை. அதோடு அன்பாய் வளர்த்துவந்த ஒரு விலங்கை ஒரு மணவிலக்கு இத்தனை பாதிக்கும் என்றால் , அத்தம்பதியருக்கு குழந்தை ஒன்று இருந்தால் அதன் நிலை என்ன என்ற முகத்திலறையும் கேள்வியையும் நம் மனதில் எழுப்பத்தவறுவதில்லை இச்சிறுகதை.


விவாகரத்து அளிப்பதற்கு ராஜன் இடும் நிபந்தனை தன்னுடைய பணம் எதையும் அவள் எதிர்பார்கக் கூடாது என்பதே. ஒப்புக்கொண்டு, திருமணம் ஆன இரு வருடங்களுக்கு உள்ளாகவே மணவிலக்கு பெற்றுக்கொள்கிறாள் சியாமளா. நோவாவை தானே வைத்துக் கொள்வதாகவும் கூறிவிடுகிறாள். அகத்தனிமை எத்தனை கொடுமையானது என்பதை மனதைப் பிழியும் வகையில் பின்வரும் பத்திகள் விவரிக்கின்றன.

வேலைக்குச்செல்வதும் உணவகங்களில் உண்பதும், இரவில் நோவாவைக் கட்டியபடி உறங்குவதுமாக இருக்கும் சியாமளா, சில நாட்களில் நோவாவின் போக்கில் மிக விசித்திரமான ஒரு மாறுதலைக் கவனிக்கிறாள். நாய் என்று ஒரு சின்னஞ்சிறு குழந்தையிடம் சொன்னால் கூட அது நாய் குரைக்கும் சப்தத்தை எழுப்பித்தான் அந்த விலங்கின் பெயரோடு தொடர்புகொள்ள முயலும். அப்படி குரைப்பதையே தொழிலாகக் கொண்ட நோவா குரைக்க மறந்து விடுகிறது. மிகத்துக்ககரமான சம்பவங்களின் காரணமாக பேச்சிழந்து போகும் மனிதர்களை நாம் திரைப்படங்களில் கண்டிருக்கிறோம். ஏன் நிஜவாழ்விலும் கூடத்தான். ஆனால் தன்னுடைய எஜமானன், எஜமானியின் வாழ்வில் நிகழ்ந்து விட்ட ஒரு துயர சம்பவத்துக்குத் துக்கித்து நாய் ஒன்று குரைக்க மறுப்பதை இத்தனை புதிர்மையோடும், படிப்பவர் உள்ளங்களில் குற்றஉணர்வு தோன்றும் விதமாகவும் வேறெவரும் எழுதிவிட முடியுமா?

மருத்துவரிடம் அழைத்துச்செல்கிறாள் சியாமளா நோவாவை. ஒரு வேளை ஒரு துணையைத் தேடி வருந்தி அது தன்னியல்பு மறந்திருக்கலாம் என்கிறார் மருத்துவர். அதற்கான பெண் துணை ஒன்றிடம் நட்பு கொள்ளச்செய்ய முயன்று தோற்கிறாள் சியாமளா. அந்தப் பெண் நாயை நோவா ஏற்க மறுத்துவிடுகிறது. ஒரு விலங்கு கூட ஏதோ தன் பால்கிளர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளஒரு இணை கிடைத்தால் போதும் என்று எண்ணிவிடவில்லை. மனிதன் ஏன் எல்லா நேரமும் அப்படி நினைப்பதில்லை? உக்கிரமான அதன் மௌனத்தைத் தாங்கிக் கொள்ள இயலாத சியாமளா, ராஜனைப் பிரிந்த துயரத்தைத்தான் நோவா அப்படி வெளிப்படுத்துகிறதோ என்ற எண்ணத்தில் அவனிடம் சில நாட்கள் அதை விட்டு வைக்க, அந்த முயற்சியிலும் தோல்வி. நோவாவின் மௌனத்தின் புதிர்த்தன்மையைத் தாங்கிக்கொள்ளவோ புரிந்துகோள்ளவோ இயலாத ராஜன், அதை விற்றுவிடும் படியாக அவளுக்கு அறிவுறுத்துகிறான்.

நோவாவின் மூலம் ஆசிரியர் சொல்ல விழையும் கருத்து, இணைந்திருந்த உள்ளங்கள் பிளவு படுவது இயற்கையாலும் தாங்கவியலாத துயரம் என்ற செய்தியைத் தானா? வீட்டுக்கு அதனை மீண்டும் அழைத்து வந்து விடும் சியாமளா, அதற்கு ,தான் ராஜனைக் காதலித்த கதையைக் கூறுகிறாள். கதையின் மிகுந்த இறுக்கம் மிகுந்த கணம் இது. யாரோ யாரையோ காதலித்த கதை என்று அவளுக்கே தோன்றி விடும் வகையில் மிகவும் அன்னியப்பட்டு உணர்கிறாள்.

இம்மாதிரியான ஒரு விலகல் தன்மை தோன்றிவிடுவது ஏன்? எல்லாக் காதல்களுமே இம்மாதிரியான ஒரு கணத்தைக் கடந்து தான் ஆக வேண்டுமா? அல்லது ஒரு ஈர்ப்பை, பால் கவர்ச்சியை காதல் என்று தவறாகப் புரிந்து கொண்டுவிடுவதால் ஏற்பட்ட துயரமா இது?

தங்களுடைய முதல் இரவின் அனுபவத்தை எண்ணிப் பார்க்கிறாள் சியாமளா. தன்னை ராஜன் ஒரே முறை தான் முத்தமிட்டான் என்பதை கவனத்தில் கொள்கிறாள். முத்தம் என்பது தான் எத்தனை ஆத்மார்த்தமான ஒரு அன்புப் பரிமாற்றம். பேரன்பும் காதலும் இல்லாமல் முத்தங்கள் இட்டுக்கொள்ள இயலுமா? என்பது பெண்களின் உள்ளத்தில் எப்போதுமே எழும் ஒரு கேள்வி. பெண் மனதின் அபோத மனத்தைக் கூட மிகக் கச்சிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார் எஸ்.ரா. மட்டுமல்லாமல் அதனை வார்த்தைகளிலும் வடித்து விடுவது மிகுந்த ஆச்சர்யம் தான்.

ஒரு தாம்பத்தியத்தில் உடற்கிளர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் அமைவது பெரிய விஷயம் அல்ல. ஆனால் முத்தங்கள் குறையத் துவங்குவது மிகுந்த அச்சமேற்படுத்தும் ஒன்று தான். காதல் இன்மையைத் தான் நின்று போன முத்த சப்தங்கள் தம்பதியருக்கு முரசறைந்து தெரிவிக்கின்றன.

நோவாவின் அமைதியை இனிமேலும் தாங்கிக் கொள்ளவியலாது என்று நினைக்கும் சியாமளா ஒரு வயது முதிர்ந்த மனிதருக்கு அதனை விற்றுவிட தீர்மானிக்கிறாள். அன்று இரவு மட்டும் அதைத் தன்னோடு வைத்துக் கொள்வது என்று முடிவு செய்பவள் தன்னைப் போலவே தனிமையைத் தாங்கவியலாமல் அது தவிப்பதை அறிந்து கண்ணீர் விடுவதாகக் கதை முடிகிறது. ராஜனைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்து போனது நோவா மட்டுமல்ல ...அவளுடைய மனதைப் போலவே தவிக்கும் நோவாவின் மனதையும் ராஜன் புரிந்து கொள்ளவில்லை.

தன்னை விரும்பி ஏற்றுக்கொண்டவர்களின் துயரத்தை, தன்னுடைய துயரமாக எண்ணும் நோவாவின் "மிருகத்தனம்" மனிதர்களிடம் இல்லாமல் போனது எத்தனை வேதனைக்குரியது?

..ஷஹி..

(மீள் பதிவு மூன்றாம்கோணத்திலிருந்து)

Tuesday, July 26, 2011



Related Posts with Thumbnails