Search This Blog

Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Sunday, September 29, 2013

வானேறிப் பறக்கும் முத்தத்தின் அலகும் பச்சை நிறத்தொரு காமத்திப்பூவும்

 ( pic crtsy : www.artfire.com )

மனஉளைச்சலும் அழுத்தமும் மிகும் நேரங்களில் இனிப்பு உண்ண வேண்டும் என்று இந்த மனம் ஏன் பறக்கின்றது என்று என்னை நானே கேட்டுக்கொள்வது போலவே , அது போன்ற சமயங்களில் கவிதைப் புத்தகங்கள் மீது ஆவல் மிகுவதும் ஏனென்று அடிக்கடி யோசிப்பதுண்டு. முத்தத்தின் அலகு - குட்டி ரேவதி , காமத்திப்பூ - சுகிர்தராணி , உடல் பச்சை வானம் - அனார் என்று கவிதைத் தொகுப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன் .

சமயங்களில் ஒரு கவிதையில் பாதியை மட்டும் படித்துவிட்டு , மீண்டும் வேறு கவிதை , இன்னொரு தொகுப்பு என்று தாவினபடிக்கு . கவிதைத் தொகுப்புகள் அதிகம் படிப்பவர்களுக்கு மற்ற கவிஞர்களின் பாதிப்பில்லாமல் எழுத முடியாது என்று அறுதியிட்டுச் சொல்லும் நண்பரின் நினைவுக்கு ஒரு புன்னகையை பதிலாய் அளித்தபடி தொடர்ந்து வாசிக்கிறேன் ! இசை கேட்டபடி படிக்கவே இயலாது என்றிருந்தது மாறி ஹெட்போனுடன் எழுதும் அளவுக்கு என்ன தான் ஆயிற்று எனக்கு .. 

தினப்படி வாழ்வின் அழுத்தத்திலிருந்து நழுவி கனவுலகுகளில் சஞ்சரிக்கும் , வாசிப்பவரையும் அழைத்துச்செல்லும் தன்மை தான் இந்தக் கவிதைகளை மிகவும் வசீகரமானவையாக்கித் தருகின்றன .கவிஞர்கள் மூவரும் தத்தம் பாதையில் செல்கிறார்கள் என்றாலும் இவர்கள் அனைவரும் சேருவதும் லயித்திருக்க விரும்புவதும் காதல் பனிப்பொழிவில் சில்லிட்டு காமத்திப்பூ பூத்திருக்கும் கனவுலகில் தான் .

சுகிர்தராணி மிகக் கம்பீரமான மொழியில் ஆணைகள் இடும் தோரணையுடன் ( பொருத்தமாய்த்தான் பெயர் வைத்துக்கொண்டிருக்கிறார் ) எழுதுகிறார் .
தான் விரும்பும் ஆணின் மீது ஆதிக்கம் செலுத்தும் வேட்கையில்

//.....
காதலின் புறத்தோல்
கழன்று விழ
புயலின் விசையோடு
உனக்குள் பாய்கிறேன்
...... //

//......
உள்வாங்கும் கடலைப் போல
அவன் உலகிற்குள் பிரவேசிக்கிறேன்
ஏவாளாய் உருமாறுகிறது என்னுடல்
..... //

//அவனைப்
புணர்ந்துவிட்டு எழுகிறேன்
முற்றிலும் மறைந்த
நிலவாகி இருந்தது
என் தொப்புள்//
என்று .

தீவிரப்பெண்ணிய மொழியில் பேசும் அதே சமயம்

//எனக்கெதிராக
நீ வியூகங்களை
வகுக்கும்போதும்
ஆயுதங்களைக்
கூர் தீட்டும்போதும்
ரௌத்ரம் பொங்கக்
களமாடுகிறேன்
ஆயுதங்கள்
ஏதுமற்ற
உன் கண்களில்
அன்பின்
கடைசித் துளி
சொட்டும்போது
வீழ்ந்து போகிறேன்
எதுவுமில்லாமல்//

என்று அவன் அன்பில் கசியும் போது தானும் கசிய முடிகிறது ..

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புகட்டிக்கொள்ளும் காதலை மிகுந்த வாஞ்சையுடன் கவனித்து , கவிதைகளாக்கி இருக்கிறார் குட்டி ரேவதி .. காதலில் இருவரும் சமம் என்றாலும் கூட , ஆணிலும் பெண்ணின் காதல் உணர்வும் , அன்பும் சீரியது , கருணை மிக்கது என்பதுமான நிறுவல்களோடான கவிதைகள் இந்தத் தொகுப்பில் அநேகம்..

// ...
அறை
கருவறையானது
இரு சிற்பங்கள் எழும்பி நின்றதைப் போல்
என்னிலிருந்தும் உன்னிலிருந்தும்
உயிர்த்தீ தன் வெப்பத்தைக்
கசியச் செய்தது
.... //

// மலர்க்காம்பென வளையும்
உன் கழுத்தின் வாசனை முகர
உனைத் தேடியலைந்த மனப்பாதை
மறந்தே போயிற்று
( கொஞ்சம் கூடப் பனியென
வியர்வை அதன் மீது )
எந்தச் சபையில் கூற முடியும்
வாசனையை ஒரு சாட்சியாக ?//

மிகுதியான கவிதைகள் இருபாலியல் பண்பில் எழுதப்பட்டவை , பால்பேதம் தொனிக்காதவை , பிரிவாற்றாமை பேசும் கவிதைகள் . பிரிவிலும் காதல் இன்பம் , கசப்பும் ருசி எனும் கருத்தோடு முரணும் என்னைப் போன்றவர்கள் படித்துப் பார்க்க வேண்டிய தொகுப்பு . குட்டி ரேவதியின் படிம மொழி மிகச் செறிவானது , அடுக்கடுக்காக அவற்றின் மீதே கவிதைகளை இயல்பாக நிர்மாணிக்கும் அவரது உத்தியும் .

//.....
கடைசியாய் அவரோடு ரயிலுக்காகக்
காத்திருந்தபோது தான்
கொடூரமான ஊளையுடன் ரயில் வந்து நின்றது
எல்லோரும் அறியவும் காணவும்
தனது மார்பின் திறந்த வெளியில்
என்னை அணைத்து முத்தமிட்டார்
பின் எப்பொழுதுமே
அவரை அங்கு சந்திக்கவில்லை //

பிரிவில் தான் இத்தனை காதல் ருசி சொட்ட எழுத வாய்க்குமென்றால் கவிஞருக்கெல்லாம் காதல்களும் தோல்விகளும் மீண்டும் மீளவும் உண்டாகட்டும் .

அனாரின் கவிதைமொழி பிரத்யேகமானது .. காதல் உலகில் சுழன்று வீசும் மழைக்காற்றாய் கட்டற்று பொழிகிறார் கவிதை வரிகளை .
//....
சாரலாய் .. தூவலாய் ..
சலசலக்கும் சிற்றாறுகளாய் .. புலன்கள்பிரிந்து
முன்வைக்கும் நீரின் கலைகள்
நீச்சலிடும் தண்ணீர்ப் பாதங்கள்
சூட்சுமமாய் நெருங்கியும்.... விலகியும் ..
குமுழிகள் கொப்பளித்து வெள்ளமாய் திளைக்கும்
கோடி வேட்கையின் இணைவு சூழ ..
.... //

//.......
எதுவுமே நிகழமுடியாத இருட்டில்
யுத்தம் தொடங்கி விட்டிருந்தது
நீ பாறைகளில் தெறித்தாய்
பாசியைத் தழுவினாய்
முழுவதுமான இழப்பிலும்
முழுவதுமான வெற்றியிலும் கடல்
கொந்தளிப்பதுபோல
ஓடிப்போய் கரையில் நின்று
வியர்த்து வழியும் காற்றை
மாயப் பொடியாக்கித் தூவினாய்
...//

//நான் வாசனையை சொற்களாக்கிக் கொண்டிருந்தேன்
எனது காதலும் அப்படித்தான்
என்னை பளுவற்று நறுமணமென மிதக்கச்செய்கிறது
உன்னை அழைக்கிறேன் எப்போதுமுள்ள கர்வத்துடன்
என்னுடைய மேன்மைகளுக்கு
எனது அப்பழுக்கற்ற முழுமைக்கு
...//

Age cannot wither her , nor custom stale her infinite variety - ஷேக்ஸ்பியர் 

உக்கிரமும் , முதிர்ச்சியான ஆளுமையும் கூடிய கவிதை மொழி சுகிர்தராணியுடையது என்றால் குட்டி ரேவதியினது அழகும் லயமும் மிக்கது .. அனாரின் கவிதை மொழியில் பழங்குடிப் பெண்ணொருத்தி மலைப்பாதையில் தாவிச் செல்வதில் போன்ற அனாயாசமான பாய்ச்சல் உண்டு . I love the way she goes wild with her words ..

சினம் போலவே காதலும் காமமும் தீவிரமாகத் தெறிக்கும் செய்திகளாக சுகிர்தராணியின் கவிதைகள் , தான் தன்னோடே காதல் நினைவில் பேசிக்கொள்ளும் பாவனையுடன் குட்டி ரேவதியின் கவிதைகள் , உள்வயமான ஒரு காதல் பயணத்தில் புரண்டு விழும் வார்த்தைகளின் கோர்ப்பு அனாரினுடையவை . மூவரின் படைப்பூக்கமும் கிளம்பும் புள்ளியாகக் காதல். 

விமர்சனப் பார்வையில்லாமலும் அளவுகோல்கள் பற்றின புரிதல்களற்றும் , ரசனையின் பேரில் மட்டும் என்னுடைய இந்நேரத்தின் மனநிலையைப் பொறுத்து எழுதியிருக்கிறேன் .. your choices are biased என்று என்னை வசீகரிக்கும் கவிஆளுமைகளின் தேர்வு பற்றி பேசும் தோழமைக்கும் என் புன்னைகையையே பதிலாய்த் தருகிறேன் !

வெளுத்துப் போய் சோபையற்றிருக்கும் வானத்தில் திடீரெனத்தோன்றும் வானவில்லைப் போல அவ்வப்போது வெளிறிப் போகும் வாழ்வில் வர்ணங்களைத் தீட்டித் தரும் கவிஞர்களுக்கு நன்றி .

ஈரக் காற்றில் நடுங்கும் இறகுகளை உலர்த்தியபடி உடல் சிலிர்த்து புலன் குவித்து , புறக்காட்சிகளின் அழகில் மெய்மறந்து நிற்கும் புறாவைப் போல மழை பெய்யவிருக்கும் இந்த மாலைக் காற்றில் சிலிர்த்தபடி , கட்டுக்களை உடைத்து வீசி , கற்பிதங்களைக் கேலி செய்யும் இந்தக் பெண்களின் கவிமனதில் மனதைக் குவித்துக் கிறங்கிக் கிடக்கிறேன் . அற்புத உலகில் உலவித்திரியும் இந்த ஆலிஸுக்கு சமநிலை வாய்க்க ஒரு சிறிய கோப்பைத் தேனீர் பெரிதாய் உதவுமாய் இருக்கலாம் ..


.. ஷஹி ..

Sunday, November 14, 2010

எஸ். ராவின் ஜெயந்தி ..பக்குவமற்றவளா?


ஆனந்த விகடனில் என் அபிமான எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "ஜெயந்திக்கு ஞாயிற்றுக்கிழமை பிடிப்பது இல்லை " என்ற சிறுகதை படித்தேன். பிரமாதம், வழக்கம் போல் பாத்திரங்களின் எண்ண அலைகள் நம் மனங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தும் விதமாக எழுதியிருக்கிறார் எஸ்.ரா.

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருத்தி, தன் புகுந்த வீட்டினரின் அசைவ உணவுப் பழக்கத்தால் அடையும் அசூயையையும், தன் பிறந்த வீட்டில் தான் அனுபவித்து வந்த இன்பங்களையெல்லாம் எண்ணி ஏங்குவதையும், காதலனாய் இருந்த போது அவள் அழகை ரசித்து, கொஞ்சி மகிழ்ந்த கணவன் இப்போது சாப்பாட்டில் காட்டும் ஆர்வத்தைக் கூட தன்னிடத்தில் காட்டுவதில்லை என்ற ஆதங்கத்தையும் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா.

ஆனால் ஏனோ கதையைப் படித்ததிலிருந்தே கதாநாயகி ஜெயந்தியின் மீது எப்போதும் நாயகிகளின் துன்பம் பார்த்து எனக்கு ஏற்படும் பரிதாப உணர்வு தோன்றவேயில்லை.
" நல்ல வேலை,சொந்தவீடு,வங்கி சேமிப்பு, அன்பான கணவன், அக்கறையான மாமியார், மாமனார், காதல் திருமணம் என்று எல்லாமும் நன்றாகத்தானே இருக்கிறது. பின் ஏன் அழுகிறோம் என்றூ அவளாகத் தன்னைத் திட்டிக் கொள்வதும் உண்டு." என்ற கதையின் வரிகளால் ஏற்பட்ட எரிச்சல் என்று நினைக்கிறேன்.

அவளுக்கு 26 வயது..நல்ல பக்குவம் ஏற்பட்டிருக்க வேண்டிய வயது தான்! படித்து, வேலையில் இருப்பவள், நம்மிலும் கேடு நாட்டிலே கோடி என்பதெல்லாம் இவளுக்கு சொல்லக்கூடிய அறிவுறை அல்லவே! இவளை விட அதிர்ஷ்ட சாலி எவர் உண்டு என்று கேட்கும் விதமான வாழ்வில், "இன்னும் எவ்வளவோ வருடங்கள் மீதம் இருக்கின்றன. எப்படி வாழப்போகிறோம்" என்றெல்லாம் இவள் ஏன் கவலைப் பட வேண்டும்.? ஒரு வேளை கணவன் இல்லத்தாரின் உணவுப்பழக்கமல்ல இவளுடைய ஆதங்கம் , கணவனின் அன்பு குறைந்து விட்டதோ என்ற எண்ணம் தான்..என்றும் எண்ணத்தோன்றுகிறது. எதுவானாலும் இந்த அழுமூஞ்சி கதாநாயகிகள் இனி வேண்டாமே! எத்தனையோ இன்னல்களுக்கிடையே வாழ்க்கைப் போராட்டத்தில் தனியாக வென்று வரும் கதாநாயகிகளைப் பற்றி கதைகள் தாம் இன்றைக்கு அவசியம். அழுமூஞ்சிப் பெண்களைப் பற்றித்தான் ஏகப்பட்ட சீரியல்கள் வருகின்றனவே!

அதிலும் இதையெல்லாம் எழுத நாங்கள் போதுமே...எங்கள் பக்கமெல்லாம் மருமகள் அன்றிரவு எங்கு உறங்க வேண்டும் என்பதைக்கூட மாமியார் தான் முடிவு செய்யவேண்டும் என்ற நிலையில் வாழும் பெண்களெல்லாம் உண்டு. உணவு, உடுப்பு என்ற அத்தியாவசியத் தேவைகளைப் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டாம் . இப்படியெல்லாம் பெண்கள் சிரமங்களுக்கு ஆளாகும் போது இந்த ஜெயந்திக்கு என்ன குறை?


கணவனின் அன்பு தான் பிரச்சினை என்று எண்ணும் விதமாகவும் ரொம்பவும் வரிகள் இல்லை கதையில்..அவனுடைய ஆர்வம் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். இதுவும் கூட இயற்கை தானே! இதில் ஆண் , பெண் என்ற பேதம் இல்லையே! காதலிக்கும் போது பெண்ணுக்கு ஆண் மேல் இருந்த ஆர்வம் மட்டுமென்ன வளர்ந்து கொண்டேவா போகிறது திருமணத்துக்கு பிறகு? இல்லையே! பக்குவம் இல்லாத பெண் என்று தான் எண்ணத் தோன்றுகிறது இந்த ஜெயந்தியைப் பார்த்து!

ஒரு வேளை ஆசிரியர் சொல்ல விழைவது, ஆண் பெண் இருவரிடத்தும் திருமணத்துக்கு முன், அதற்குப் பின் என்ற மனோ நிலை மாற்றங்களைப் பற்றியது தானோ?
இது மூன்றாம் கோணத்தில் இருந்து என்னுடைய ஒரு மீள் பதிவு...
....ஷஹி...
Related Posts with Thumbnails