Search This Blog

Sunday, February 20, 2011

தமிழச்சியின் "தொலைந்து போன தூக்கம்" ஒரு அலசல்


28.1.11 தேதியிட்ட 'அவள் விகடனில்' தொலைந்து போன தூக்கம் என்ற தலைப்பில் தமிழச்சி தங்கபாண்டியனின் சிறுகதை படித்தேன். பிரமாதமான கதைக்கரு, அருமையான கதை சொல்லும் பாங்கு, ஆழமான உட் கருத்து என்று அமர்க்களப்படுத்தி விட்டார் தமிழச்சி.

ஜோதி என்ற பெண்ணை, காதல் மணம் புரிந்து கொண்டு ஆண்டு ஒன்றே ஆகியிருந்த கணேஷ் என்ற இளைஞன் இரு சக்கர வாகன விபத்தில் பலியான செய்தியோடு துவங்குகிறது கதை. கதை சொல்லியின் சகோதரன் முறையிலானவன் கணேஷ்...விபத்து பற்றி அறிந்து ,பதறி ,தான் அப்போது இருந்த கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில், ஹெல்மெட் அணியாத, முன் பின் அறியாத வாலிபன் ஒருவனை" ஹெல்மெட் போடலையா" என்று தன்னையறியாமல் கேட்கும் இடத்தில் அனாயாசமாக நம் மனதை அள்ளிவிடுகிறார் கதை சொல்லி.

கணேஷ், ஜோதி திருமணம் நடந்ததும், ஊருக்கு அடங்காவிட்டாலும் அக்காவுக்கு அடங்கும் நல்ல பிள்ளையாக அவன் இருந்ததை எல்லாம் நினைவுகூர்ந்து துக்கிக்கிறது அக்காளின் மனம். அகால மரணம் ...அதோடு அகோரமானதும் கூடவென்பதால்,சடலத்தை வீட்டில் வைத்து கூட அழவியலாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் கணேஷின் குடும்பத்தினர். கர்ப்பவதியான கணேஷின் மனைவி, தன் துயரம் சொல்லி அழுவதில் வெடிக்கிறது கதை சொல்லியின் மனமும்.

அவள் எத்தனை மாதம் கர்ப்பம் என்ற கேள்வியைக் கூட கேட்கவியலாமல் துக்கம் அவர்களிடையில் அழுந்த ஊடுருவி இருப்பதையும் , சடங்குகள் முடிந்த அடுத்த நாள் இரவின் போக்கை, மனித இருப்பின் துயரத்தை, பெண் படும் பாட்டை அழுத்தமாகச் சொல்லி முடிக்கிறார் தமிழச்சி.



திருமணம் முடிந்த நாள் முதலே கொண்டாட்டங்களில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த கணேஷ், இரவெல்லாம் வெளியில் சுற்றி, பொழுது புலரும் தறுவாயில் தான் வீடு சேர்வான் என்பதும் , அவனுக்காக விழித்தே இரவுகளைக் கழித்து வந்திருக்கின்றாள் ஜோதி என்பதும் தெரிய வருகிறது. கணவன் இரவில் நேரத்தோடு வீடு வருபவனாக இருந்திருந்தால் தானே அவளுக்கு அன்றைய பாழும் இரவில் அவனைக் காணவில்லையே என்ற பயம் ஏற்பட்டிருக்கும்? எப்போதும் போல அன்றிரவும் அவன் வீடு சேரவில்லை என்று நினைத்து விட்டிருக்கிறாள். அவன் இறந்த அடுத்த இரவே அயர்ந்து, தன்னை மறந்து உறங்கும் ஜோதியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் கதை சொல்லி..துக்க செய்தி அறிந்து தாமதமாக வந்திருக்கும் யாரோ உறவினரின் அழுகை ஜோதியை எழுப்பிவிடாதிருக்கக் கதவைச் சாத்துகிறார் என்பதோடு முற்றுகிறது கதை.

தமிழ்க் குடும்பங்களில் பங்காளி முறையானவர்களின் பிள்ளைகளுக்குள் இருக்கும் அழுத்தமான அன்பு மற்றும் நட்புணர்வு,

இன்னமும் மாறாதிருக்கும் ,பிறப்பு மற்றும் இறப்பு சம்பந்தமான சம்பிரதாயங்கள்,

அவற்றோடு சமூகத்துக்கான ஓர் சேதி message...அதாவது இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை

இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் எப்பேர்பட்ட துக்கமாக இருந்தாலும் மனித உடலின் தீராப் பிணிகளான பசியும், தாகமும், தூக்கமும் எவ்வாறு மற்றெல்லாவற்றையும் பின் தள்ளுகின்றன என்ற முகத்திலறையும் உக்கிரமான உண்மையையும் தன் கதையின் வாயிலாகப் பதிவு செய்திருகின்றார் தமிழச்சி. உப்பும் உறைப்பும் உள்ளே போக, செத்த துக்கம் தன்னால தீரும் என்று சும்மா தானா சொன்னார்கள்? எத்தனைப் பெண்களுக்கு ஆழ்ந்த, அமைதியான தூக்கம் வாய்த்துவிடுகிறது?...பெண் குழந்தையொன்று வளர்வது உணவை மட்டுமல்ல தன் தூக்கத்தையும் தின்று தானே?

உறங்கிக் கொண்டிருந்த ஜோதியின் முகத்தில் " கொஞ்சம் சிரித்தாற்போல் உதடுகள் அசங்கியிருந்தன" என்கிறாரே கதை சொல்லி... உறக்கம் மட்டுமே இனி அவளுக்கு சுகம் தரும் என்கிறாரா? உடலையும் மனதையும் சேர்த்துக் கட்டிப் பிணைத்திருந்த ,தன் தூக்கதைத் தன்னிலிருந்து விலக்கி வைத்திருந்த விலங்கு அறுந்ததால்அவளும் அறியாமல் உண்டான ஆழ் மனதின் புன்னகை என்கின்றாரா?

...ஷஹி...

Thursday, February 10, 2011

தி.ஜா வின் மோக முள்..


மோக முள்..தி.ஜானகிராமனின் மிகப் பேசப்பட்ட ,பிரசித்திபெற்ற திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட நாவல். தமிழில் இதுகாறும் வெளியான நாவல்களில் மிகச் சிறந்த ஒன்று. கதையைப் பற்றி பேசு முன் தலைப்பைப் பற்றி சிலாகிக்காமல் இருக்க முடியாது. "மோகம்"..உயிரோடு, உடலையும் ஆன்மாவையும் ஒரு சேரக் குத்தும் முள் தானே?. பொருந்தாக் காதல் என்று ஒரு தலைப்பு பள்ளியில் படித்திருக்கிறோம். உண்மையில் பொருந்தாக் காதல் என்ற ஒன்றே பொருத்தமில்லா பதம் தானோ என்ற கேள்வி எழும்பும் மோக முள் படிக்கும் போது. ஏன், யாரிடம் ,எப்போது என்றெல்லாம் பார்த்தா காதல் வரும்? All is fair in love and war என்பார்களே...

பாபு..கதாநாயகன், சிறு வயது முதலே தான் பழகி வரும் யமுனாவிடம் எப்பொழுது எனத் தெரியாமலேயே மனதைப் பறிகொடுக்கிறான்.

சங்கீதத்தில் மிகுந்த ஈடுபாடும், அற்புதமான திறமையும் கைவரப் பெற்ற பாபுவுக்கு ஆசான் ரங்கன்னா. ராஜம் என்ற உயிர் சிநேகிதன் ஒருவனும் உண்டு பாபுவுக்கு.இவர்கள் தவிர பாபுவின் பெற்றோரும் முக்கிய கதாபாத்திரங்கள் நாவலில்.

யமுனா, கோவில் சிலையே எழுந்து வந்தார் போன்ற தெய்வீகமான அழகுடைய பெண்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு சமீந்தாருக்கு ஆசை நாயகியாக இருந்த மராத்தியப் பெண்ணுக்குப் பிறந்த பேரழகி. பாபுவை விடப் பத்து வருடங்கள் மூத்தவளாக இருந்த படியால் அவனை நண்பனாகக் கூட கருத இடமில்லாமல் தம்பியாக பாவித்துக் கொண்டிருந்தவள். தந்தையான சமீந்தார் இறந்து போக, அவள் நிலை எல்லா ஆசைநாயகியரின் பெண்மக்களுக்கும் நிகழ்வதைப் போல மிகவும் மோசமாகிறது. எவ்வளவுக்கென்றால், இரண்டாம் தாரமாக பெண் கேட்டு வரும் ஒருவன் கூட இவள் ஒரு ஆசைக்கிழத்தியின் மகள் என்று அறிந்து நிராகரிக்கும் அளவில். வாழ்வாதாரம் என்று சொல்லிக் கொள்ளும் படி ஏதும் இல்லாமல் போக, மீதமிருந்த நகைகளை விற்று காலம் கடத்துகிறார்கள் அம்மாவும் ,மகளும்.

சங்கீதம் சொல்லிக் கொள்ள ரங்கன்னாவிடம் சிஷ்யனாகிறான் பாபு. இடையில், பாபு தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு இளம் பெண், வயதான ஒருவருக்கு வாழ்கைப் பட்டவள், பாபுவின் மேல் காதலாகிறாள். ஒரு இரவில் மனதின் இச்சையை அடக்கவியலாமல் அவளுடன் உறவு கொண்டு விடும் பாபு, அன்றே தன் மனதில் யமுனாவைத்தவிர யாருக்கும் இடம் இல்லை என்று உணர்கிறான். யமுனாவிடம் பாபு தன் காதலைச் சொல்ல, நிராகரிக்கிறாள் யமுனா.

வருடங்கள் உருள்கின்றன. சென்னையில் பாபு வசிக்கிறான். யமுனாவும் தனியே சென்னையில்தங்க நேர்கிறது.சிரமத்தில் இருக்கும் அவளுக்கு உதவி , தங்க இடமும் மற்ற வசதிகளுக்கும் பொறுப்பேற்கிறான் பாபு.சந்தர்ப்பவசத்தால் பாபுவுடன் இரவைக் கழிக்க நேரும் சமயத்தில், பாபு அவளை நெருங்க,

இணங்குகிறாள் யமுனா.

நாவலின் இறுதியில் மங்கள்வாடி சென்று ஒரு குருவிடம் சங்கீதம் பழக செல்லும் பாபுவை அவன் திரும்பி வரும் போது மணந்து கொள்வதாக வாக்களிக்கிறாள் யமுனா.

கதையின் போக்கென்னவோ மிகத் தெளிந்ததோர் நீரோடையினதைப் போல இருக்கிறது என்றாலும் பலப் பலக் கேள்விகளையும் நம் மனங்களில் எழுப்பாமல் இல்லை.

1.பாபுவுக்கு யமுனாவிடம் ஏற்பட்ட உணர்வு காதலா, வயதுக்கே உரிய உடல்கவர்ச்சியா?

2.அல்லது யாருமற்ற அனாதைகளான ஒரு தாயிடமும் மகளிடமும் கொண்ட பரிதாபமா?

3.பாபு முதன் முறையாக காதலைச் சொல்லும் போது மறுக்கும் யமுனா, அவனுடைய விருப்பத்துக்கு பல வருடங்கள் கழித்து இணங்குவதற்குக் காரணம் தனக்கு பலவாறாக உதவியவன் என்ற நன்றி உணர்ச்சியா?

4.இல்லை அவள் மனதிலும் அவன் பால் காதல் இருந்து வந்து வயதில் இளையவனிடம் காதல் கொண்டு விடுதல் சமூகத்தில் இழிவான ஒரு செயலாகத் தோன்றும் என்ற பயத்தினால் மறைக்கப்பட்டதா?

5.இதுவேதும் இல்லாமல், அது தஞ்சாவூரோ கும்பகோணமாகவோ இல்லாமல் சென்னையாக, தெரிந்த யாரும் இல்லாத ஓர் பாதுகாப்பான இடம் என்பது ஒன்றே தானா?

முதிர் கன்னியாக வாழ்ந்த அவளுள்ளும் எத்தனை ஏக்கங்கள் இருந்து வந்ததோ ?

இப்படியான எத்தனையோ கேள்விகளை நம் உள்ளங்களில் எழுப்புவதில் தான் ஆசிரியரின் மாபெரும் வெற்றி அடங்கியுள்ளது.

ஆண் பெண் உறவுச் சிக்கல்களையும் , ஆழ் மனதின் எண்ணவோட்டங்களையும் அலசி, மிக நுணுக்கமான எண்ண அதிர்வுகளையும் கூட வார்த்தைகளில் வடித்து விடும் பேராற்றல் படைத்தவர் தி.ஜா.

கலைஞர்களுக்கே உரிய குணம் ஒன்று உண்டு .உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மிகப் பிரமாதமாக வெளிப்படுவான் எந்தக் கலைஞனும். கவிஞனும் காதலனும் பைத்தியமும் ஒன்றே போன்றவர்கள் என்பார்கள். மூவருமே உணர்வுமயமானவர்கள். Excited State Of Mind அதாவது உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில் தான் எந்தக் கலைஞனும் பரிமளிக்கிறான். பாபுவுக்கும் சங்கீதத்தில் உச்ச நிலை அடைய ஓர் கிரியாவூக்கி வேண்டும் என்ற ஆழ்மன ஆவல் தான் யமுனாவிடம் தோன்றும் பொருந்தாக் காதலோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது. அத்தனை எளிதில் கிடைக்காது என்று நன்கு தெரியும் ஒன்றின் மேல் வெறித்தனமாக ஆசை கொள்வதும் மனித இயல்புகளில் ஒன்று தானே? யமுனாவின் பேரழகும் வயதில் பெரியவள் என்ற தடைகளுமே அவள் மீது கட்டுக்கடங்காமல் பாபு கொண்டு விடும் மோகத்துக்குக் காரணமோ?


எப்பொழுதும் போல தி.ஜா வின் இந்தக் கதாநாயகியும் பேரழகியாகவும், தியாகத் திருஉருவாகவும், அசாதாரண அறிவும், மனத் திண்மையும் கோண்டவளாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

பாபுவின் மேல் மோகம் கொண்டு விடும் இளம் பெண்ணின் பாத்திரம் மிகுந்த பரிதாபத்துக்குரியது. அவள் காதலை ஏற்க பாபு மறுத்து விட தற்கொலை செய்து கொள்கிறாள் அவள். அவளைக் குத்திய மோக முள் விஷ முள்ளாக அவளையே பலி கொண்டு விடுகிறது. பாபுவைக் குத்திய மோக முள் , அவனை சங்கீத சாம்ராஜியத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட பயணப்படுத்துகிறது.

பல சமூக அவலங்களையும் கதையின் வாயிலாக நம் கண் முன் நிறுத்துகிறார் தி.ஜா.

1.யமுனாவின் தாய் ஒரு சமீன்தாரால் வைப்பாட்டியாக்கப்பட்டதால் அன்றோ அத்துனை இழிநிலைகள் அவளுக்கும் யமுனாவுக்கும்?

2.தற்கொலை செய்து கொள்ளும் பெண் அவள் வயதுக்குச் சற்றும் பொருத்தமில்லாத கிழவனுக்கு வாழ்கைபட்டதால் தானே அவளுக்கு உலகில் வாழ விருப்பம் அழிந்தது?

மோக முள் திரைபடமாக்கப் பட்ட விதம் பற்றியும் சொல்லியாக வேண்டும். பொதுவாகத் திரையில் நாவல்கள் அத்தனை உயிரோட்டம் பெற்றுவிடுவதில்லை. மோகமுள் ஒரு விதி விலக்கு. மிகப் பிரமாதமாக படமாக்கப்பட்ட நாவல்களில் இதுவும் ஒன்று. அபிஷேக், அர்ச்சனா ஜாக்லேகர், நெடுமுடி வேணு என்று எல்லாப் பாத்திரங்களுமே தி.ஜா இவர்களை எண்ணித்தான் கதை எழுதியிருப்பார் என்று சொல்லும் அளவுக்கு தோற்றத்திலும், நடிப்பிலும் அசத்தினர். அசாதாரணமான அழகி அர்ச்சனா ஜாக்லேகர், மராத்திய பெண்ணுக்கும் தஞ்சாவூராருக்கும் பிறந்த யமுனாவுக்கு சரியான தேர்வு, பிள்ளைமை மாறாத முகமும் ஒரு பாடகனுக்கு வேண்டிய அமைப்புமாக அபிஷேக்கும் நல்ல பொருத்தம். படமும் என்றும் மறக்கவியலாத காவியம்.

தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான மோகமுள் இலக்கியவுலகுக்கு தி.ஜாவின் உன்னதமான பரிசு.

...ஷஹி..

படங்கள் மோகமுள் திரைபடத்திலிருந்து நன்றி இணையம்.

Saturday, February 5, 2011

பால்ய கால சகி- வைக்கம் முஹம்மது பஷீர்

வைக்கம் முகம்மது பஷீர்: ஜனவரி 19 ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலயோலப் பரம்பில் பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரர். உஜ்ஜீவனம் எனும் வாரப் பத்திரிக்கை துவங்கினார். இந்திய அரசின் பத்மஷ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட் , சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5 ஆம் தேதி காலமானார்.

தமிழாக்கிய குளச்சல் மு. யூசுப் : குமரி மாவட்டத்தின் குளச்சலில் பிறந்தவர். மீஸான் கற்கள், மஹ்ஷர் பெருவெளி, அழியாமுத்திரை, நளினி ஜமீலா, சப்தங்கள் ஆகிய பல நூல்களை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மனிதராய்ப் பிறந்து விட்ட எல்லோர் மனங்களிலும் ஏதோ ஓர் மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் பால்ய கால இனிமையான நினைவுகளைத் தட்டி, பெருத்த வாதையையும் ,அந்த வலியைக் கண்ணீரில் கரைத்துக் கொள்ள ஓர் சந்தர்ப்பத்தையும் அமைத்துத் தருகிறது பால்ய கால சகி. பெரும் பணக்காரரின் மகன் நாயகன் மஜீத். அவன் அண்டை வீட்டு ஏழைப் பெண் சுகறா. ஆண் குழந்தைகளுக்கு நம் சமூகமே உண்டாக்கிக் கொடுக்கும் ஆணாதிக்க மனப்பான்மையுடைய மஜீதின் உள்ளத்தில் தன் கள்ளங்கபடமற்ற அன்பாலும், சுய மரியாதை தொனிக்கும் பேச்சினாலும், நட்பெனும் விதை நடுகிறாள் சுகறா.

இருவரும் மாம்பழங்களுக்காக இடும் அழகான , பிள்ளைமை ததும்பும் சண்டையில் ஆரம்பிக்கிறது கதை. தன் கூரிய நகங்களால் மஜீதைப் பிறாண்டியே அவனை அரள வைத்து , ஆணாதிக்க மனோபாவத்தை மண்டியிட வைக்கிறாள் சுகறா.

பள்ளியில் கணக்குக் கைவராமல் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்னும் உலகளாவிய கருத்துக்கு "ஒன்றும் ஒன்றும் கொஞ்சம் பெரிய ஒன்று" என்ற தன் மாறுபட்ட சிந்தனையின் மூலம் மிகப் பெரிய சவாலை முன் வைக்கிறான் மஜீத். பரிசாக ஆசிரியரின் தணடனையையும் நண்பர்களின் கேலியையும் பெறுகிறான். ஒன்றும் ஒன்றும் கொஞ்சம் பெரிய ஒன்றாக ஏன் பார்க்கப்படக்கூடாது? என்னுடன் பயின்ற தோழனொருவன் ஆண்கள் என்ற வார்த்தையை அ அருகில் துணைக்காலெழுத்தை எழுதி ண்கள் என்று முடித்தானே பார்க்கலாம். இம்மாதிரியெல்லாம் வித்தியாசமாக, தவறு சொல்ல முடியாத, வகையில் குழந்தைகள் அல்லாமல் வேறு யார் யோசிக்க முடியும்? ஒரே மாதிரியான செக்கோட்ட சிந்தனையெல்லாம் வளர்ந்து விட்ட பின் வந்து சேரும் துயரம் அல்லவா?

குழந்தைகள் வளர்கிறார்கள், அன்பும் வளர்கிறது . இம்மாதிரி பிள்ளைமையின் வெள்ளத்தில் பிரவாகம் எடுத்து கரைபுரண்டு ஓடக் கிளம்பும் அன்பை காதல் என்று பொதுமைப்படுத்தி சொல்லி விடக் கூசுகிறதே. எம்மாதிரியான எதிர்பார்ப்பும் இல்லாத மிகப் பரிசுத்தமான அன்பல்லவா அது. பளிச்சென்ற உருவமும், வாழ்வாதாரமும் இல்லையென்றால் சராசரிக்காதல் ஓடி ஒளிந்து விடாதா?

அன்பே உருவான உ (அ)ம்மாவும், கோப ரூபியான வா (அ)ப்பாவுமாக அமைந்து விடுகிறார்கள் மஜீதுக்கு பெற்றோர். அன்பில் மட்டும் வறுமையில்லா குடும்பம் சுகறாவினுடையது. அவளுடைய அப்பா திடீரென இறக்க, அனாதையாகிறார்கள் சுகறா குடும்பத்தினர்.

கதையின் ஓட்டத்தில் மஜீத் நோய்வாய்ப்பட , எல்லோர் வாழ்விலும் நடக்கும் இளமைப்பருவத் திருவிழா தினம் நண்பர்கள் வாழ்விலும் வருகிறது.


ஆம் !!! முத்தமிட்டுக்கொள்கிறார்கள் மஜீதும் சுகறாவும். இன்னது தான் என்றே எழுதப்படாத ஓர் அன்பு ஒப்பந்தம் தீட்டி முடித்தாகிறது.

விதி வசத்தால் அப்பாவின் கோபத்தில் கலங்கி, வீட்டை வெறுத்து வெளியேறுகிறான் மஜீது. எந்தத் தகவலும் தராமல் பல ஆண்டுகளைக் கழித்து வீடு சேரும் போது அறிந்து கொள்கிறான் சுகறாவுக்கு திருமணமாகிவிட்டதை. மட்டுமல்லாமல் தன் குடும்பம் கடனில் மூழ்கிக் கிடப்பதையும், பெற்றோர் தளர்ந்து விட்டதையும் பார்த்துப் பரிதவிக்கிறான். வாழவும் ,குடும்பத்தை வாழ்விக்கவும் வழியேதும் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அவன் வீடு வந்து விட்டதை அறிந்து கணவன் ஊரிலிருந்து காண வருகிறாள், தன் அழகையும் ஆரோக்கியத்தையும் இழந்து பரிதாபமாகத் தோற்றமளிக்கும் சுகறா.

அதிர்கிறான் மஜீத். அதோடு அவள் கணவன் செய்யும் கொடுஞ்செயல்களையும் சுகறாவின் நிலையையும் அறிந்து ,தானே அவளை மணந்து கொள்வதாக வாக்களிக்கிறான். சம்பாதிக்க எண்ணி மீண்டும் ஊர் நீங்குகிறான் மஜீத், சுகறா அவன் இல்லத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாள். சென்ற இடத்தில் விபத்தில் கால்களை இழக்கிறான் மஜீத். சுகறாவோ நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தழுவுகிறாள்.

அவன் தொழில் செய்ய எண்ணி கிளம்பும் சமயம் ஏதோ சொல்ல விழைவாள் சுகறா, ஆனால் அவள் நினைத்ததை சொல்லக் காலம் இடங்கொடுக்கவில்லை. அது என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடு முடிகிறது கதை.

மிகுந்த சோகத்தை, வாழ்வின் பக்கங்களில் ஒட்டியிருக்கும் காதல் வசனங்களைப் பிய்த்து, ரததம் ஒழுக எழுதப்பட்டிருக்கும் கதையென்றாலும், பிள்ளைப் பிராய காதலர்களின் வாழ்வை நம் உள்ளங்கள் குதூகலிக்கும் வண்ணம் எழுதியுள்ளார் ஆசிரியர். முதல் காதலும் முதல் முத்தமும் இன்னமும் எத்தனை எழுத்தாளர்கள் எழுதினாலும் தீராமல் பொழிந்து கொண்டேயிருக்கும் பெருமழையின் சிலிர்ப்புச் சாரல்.அருமையான அன்பும், நட்பும், இழையும் காதல் கைவரப்பெற்றும் விதி வசத்தால் வாழ்வில் சேர இயலாமல் பிரியும் சுகறா, மஜீதின் நிலை, இன்னம் எந்த ஒரு ஜோடிக்கும் நேராதிருக்கட்டும் என்று படிப்பவர் நெஞ்சங்களை உருவைக்கிறாரே பஷீர். வாசகர் அனைவரையும் தங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஏதோ ஒன்றுடன் கதையின் சம்பவங்களைத் தொடர்பு கொள்ளச் செய்வதில் தான் பெரு வெற்றி பெறுகிறார் பஷீர்.

கொஞ்சம் பெரிய ஒன்று என்று மஜீதைக் கிண்டல் செய்கிறாளே சுகறா..அதில் தொனிக்கும் சேதி.... இன்னும் எதை விடவும் அவனைத் தான் பெரிய ஒன்றாக அவள் கருதுவது தானே? தன் வானளாவிய கனவு மாளிகையின் ராஜகுமாரியாக சுகறாவைக் கற்பனை செய்கிறானே மஜீது, அதே இடம் தானே பெண்ணாய்ப் பிறந்து விட்ட ஒவ்வொருத்தியும் தன் காதலனின் நெஞ்சத்தில் அடைந்து விடத் துடிக்கும் இடம்?

பால்ய கால அன்பும் காதலும் வாய்க்கப்பெற்று ,இணையும் பாக்கியமும் பெற்றவர்கள் மட்டுமல்ல.... பிரிந்தவர்களும் பாக்கியசாலிகளே! ஆம் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுமைக்குமான ரணங்களைத், தடவிக் கொடுக்கும் மயிலிறகு நினைவுகளையல்லவா தம் உள்ளங்களுக்குள் பொதிந்து வைத்திருக்கிறார்கள்?

இஸ்லாமியச் சமுதாயத்தினரின் வாழ்வு, கலாச்சாரம், அவர்களை பீடித்திருக்கும் அவலங்கலான வரதட்சிணை, ஆணாதிக்க மனப்பான்மை, பெண்களை நடத்தும் விதத்தை.. யெல்லாம் ,அதே சமூகத்தைச் சார்ந்தவர் என்ற உரிமையில் அக்கக்காக அலசியிருக்கிறார் வைக்கம் முஹம்மது பஷீர். சொல்ல விழைந்தது ஒரு காதல் கதை, அதிலும் தோல்வி அடைந்த ஒரு காதல் கதை என்றாலும் ,நம் உள்ளங்களில் ஆனந்தம், ஆச்சர்யம், வேதனை என்ற பல்வேறு உணர்வுகளைத் தூண்டி தான் எழுதியதன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்.

...ஷஹி...

(நாவலை அறிமுகம் செய்து, புத்தகக் கண்காட்சியில் தேடி வாங்கவென பல நூல்களின் பெயர்களையும் பதிந்து உதவிய " இனியொரு விதி செய்வோம்" நண்பர் முரளிகுமாருக்கு நன்றி)

Related Posts with Thumbnails