Search This Blog

Tuesday, August 31, 2010

அம்மா நான்..





அதட்டும் தொனியிலான உன் பேச்சு,
திமிரும் உன் தோள்களுணர்த்தும் உன் ஆளுமை,

நண்பனை உயிராகவும்,
சகோதரியை விரோதியாகவும்..
பாவிக்கும் உன் மனோபாவம்,

வேகமாய்க் கறுத்தடரும் மீசையில்
ஒளிந்து கொள்ளும் உன் பிள்ளைமை..

இறுகச்சாத்தப்படும் மன மற்றும் அறைக் கதவுகள்..

உன் கைபேசிக்குள் காணாமல் போகும்
உன்னைப் பற்றிய என் கனவுகள்,

முள் போலவும் ,மீண்டும் அலையாகவும்
மீள மீளத் திருத்தப்படும் உன் சிகை,

குளியலறைக்குக் கிடைக்கப் பெறும்
உன்னுடனான கூடுதல் நிமிடங்கள்,

உன் தந்தை,
திடீரென...
என் கணவனாக மட்டும் பார்க்கப்படும்
அவலம்,

இரு சக்கர வாகனமும்,
பின்னமர்ந்து செல்ல தோழியொருத்தியும்
இல்லாதவனெல்லாம் சபிக்கப்பட்டவன்
என்ற உன் சித்தாந்தமும்,

வளர்கிறாயா ?விலகுகிறாயா?
என்ற தாபத்தில்
தள்ளுதெனை எக்கணமும்!

உறங்கும் போது.....
உனை....
நீ அறியாமல் பார்க்கும்
அந்த சில விநாடிகள்
தவிர்த்து!

புத்தக விமர்சனம்..வாண்டா வாஸிலவ்ஸ்காவின் "வானவில்"..ஸ்டாலின் விருது பெற்ற நாவல்





இலக்கியம்.. மனித சமூகத்தின் அளவுகோல்.சோஷலிஸ்டு நாகரிகத்தின் இலக்கியம், ஜனங்களின் இலக்கியம்.சோஷலிஸ்டு எழுத்தாளர்கள், சமூகத்தில் உள்ளது உள்ள படி சித்தரிக்கின்ற படியால் சோவியத் இலக்கியம் வெற்றியின் சிகரத்தில் வீற்றிருக்கிறது.


வாண்டா வாஸிலெவ்ஸ்கா, சோவியத்தின் தலைசிறந்த பெண் எழுத்தாளர்.அவருடைய, ஸ்டாலின் விருது பெற்ற "வானவில்" என்ற நாவலைப் பற்றின என் கருத்துக்கள் தங்களின் முன்...


கொடுங்கோலன் ஹிட்லரின் பாஸிஸ்டுகள் சோவியத் யூனியனின் மீது பாய்ந்து ,மனித உயிர்களைக் கொன்று குவிக்கிறார்கள்.ஆனால் தாய் நாட்டைக் காக்க, குழந்தைகள் முதல் முதியோர் வரை போராடி வென்றனர்.சோவியத் யூனியன் மகத்தான வெற்றி பெற்றது.ஹிட்லர் ஒழிந்தான்.இதுவே நாவலின் மைய கருத்து.ஆனால்.. உயிரை உறைய வைக்கும் குளிரில் ஒரு சிறிய கிராமத்தை ஜெர்மானியர் முற்றுகையிட்டு,கிராம மக்களைத் துன்புறுத்தும் அவலக் காட்சிகளை, தம் அழகிய எளிய தமிழ் நடையில்,நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள் தமிழாக்க அறிஞர்கள்..ஆர்,ராமனாதன் மற்றும்,ஆர்.ஹெச்.நாதன்.


நாவலின் முக்கிய பாத்திரம் ,போரில் தன் மகனைப் பறிகொடுத்த தாய்,
பெடொஸ்யா கிராவ்சக்.போரில் இறந்த தன் வாலிபப் பருவ மகனின் சடலம் கிடக்கும் பனிக்காட்டுக்குத் தினமும் ஜெர்மானிய வீரர்களின் கண்களுக்கு அஞ்சி அவள் செல்லுவது,நம் உள்ளத்தைப் பதைபதைக்கச் செய்கிறது.தன் ஒரே மகனின் சடலத்தை அடக்கம் செய்யக் கூடவியலாமல் அவள் படும் துயரம் வார்த்தைகளில் வர்ணிக்கவியலாதது.


கொரில்லாப் படையைச் சேர்ந்த ஒலினா என்ற நிறைமாத கர்ப்பிணியை, நிர்வாணமாக்கி, உறைய வைக்கும் பனிப்பொழிவில் சித்திரவதைக்கு ஆளாக்கும் காட்சியும்,பிறந்து விட்ட அவளுடைய சிசு மகனை அவள் கண் முன்னே கொன்று தீர்க்கும் கொடூரமும்,பல வருடங்களுக்கு முன்னே ரஷ்யாவில் நடந்த உண்மைச் சம்பவம் என உணரும் போது நம் ரத்தமும் கொதிக்கிறது.


நாட்டைக் காக்கவென பிஞ்சுகள் முதல் முதியோர் வரை போராடும் போது,ஒரு புட்டி ஒயினுக்காகவும்,ஜோடி பட்டுக் காலுறைகளுக்காகவும் ஜெர்மானியப்படை அதிகாரி ஹாஃப்ட்மான் குர்ட் வெர்னரின், ஆசைகிழத்தியாகச் சம்மதித்த புஸ்ஸி என்ற பாத்திரம் அனைவரின் எரிச்சலுக்கும் ஆளாகும் ஒன்று.


கொரில்லாப் படை வீரர்கள் மிகுந்த காவலுக்கு இடையில் கிராமத்தில் புகுவதும்,தாய் பெடோஸ்யா அவர்களுக்கு உளவு சொல்லி ,ஜெர்மானியர்களை..கொரில்லாக்களும் ,கிராமவாசிகளும் சேர்ந்து அழிப்பதும்..முடிவில் ஜெர்மானியகளால் கொல்லப்பட்டு பனிக்காடுகளில் கிடக்கும் அக்கிராமவாசிகளின் சடலங்களை எல்லாம் சேகரித்து ஒன்றாக ,எஞ்சியிருக்கும் கிராமவாசிகள் செம்படையினரின் உதவியோடு அடக்கம் செய்வதும்.....சரித்திரம்!


முடிவில்.. செம்படை வீரர்கள் கிராமவாசிகளிடம் அவர்கள் பூமியை ஒப்புவித்து விட்டு உக்கிரேன் நோக்கிச் செல்வதை கிராமவாசிகள் கண்ணீரோடு நோக்குவதாய் நிறைகிறது நாவல்.


படிக்கும் வாசகரின் மனங்களில் தாய்நாட்டுப் பற்றையும் ஒற்றுமையின் வலிமையையும் ஆழமாக வேரூன்றச் செய்யும் அற்புதமான நாவல் இது.

...ஷஹி...

Friday, August 27, 2010

உறக்கம் கலைப்பான்..


உறக்கம் தொலைத்திட்ட
ஓரிரவுக்கு மறுநாள்..
உன்னிடம் சொன்னேன்..
நேசத்தை!

விழிகள் பளபளக்க..
ஆமோதித்தாய் நீயும்.
ஆன்றிரவும் ,
தொலைந்தது
தூக்கம்!

ததும்பிக்கொண்டிருந்த
நேசக் கோப்பையைப்
போட்டுடைத்தாய்
நீயே!
நீண்டன இரவு பல..

மீதம் இருந்த
உறக்கம்
கலைக்கவே போல்..
மீண்டும் வந்தாய்!

நீ என்ன..
வெய்யிலா?
வெளிச்சமா?
விடியலா?

Monday, August 23, 2010

துயரம் தவிர்...


புறப்பட்டு விட்டதாலேயே..
போய்ச்சேர வேண்டியதில்லை!
பயணித்த சுகம் போதும் ...
பாதியில் திரும்புகிறேன்!

சக பயணியின் ,
சௌக்கியம் முக்கியம்!
சங்கடங்கள் தவிர்க்க..
சந்தோஷமாய்..
விடை கொடு!

முட் காடு மீதெந்தன் ,
பாதம் பட வேண்டாம்!
பார்வை பட்டாலே,
புண்ணாகும் என் நெஞ்சம்!

சுற்றி நீ காட்டுகையில்..
சுகமாய் சாய்ந்திருந்தேன்..
சொக்கின கண்கள்..
ஆனாலும்
சுயமாய் இருந்தேன் நான்!

என்னை நான் தொலைத்து..
இன்னுயிர் வளர்க்க விருப்பமில்லை!
வாழும் வரையிலாவது,
சாகாமல் இருக்கிறேனே!

கனவு இல்லம்!


வாசலில் வேம்பு..
கொல்லையில் துளசி..
தொட்டிகளில் மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்கள்..
தரையெங்கும் பளிங்கு..
முற்றத்தில் ஊஞ்சள்..
நன்றாய்த்தான் இருக்கிறது வீடு!

ஆனாலும்..

கொசுக்கடியோடும், தண்ணீர்ப் பஞ்சத்தோடும்,
தடுமாறிய பழைய வீடு வருதென் கனவுகளில் அடிக்கடி!

கனவுக் காரணம்...

அப்போது நான் கவலையில்லா பள்ளி மாணவி என்பதா?
இல்லை....

பள்ளியில் இருந்தெனை
உன் மிதிவண்டியில்
கொண்டு விடும் தொலைவில் இருந்த வீடென்பதா?

Friday, August 6, 2010

பெயரிடு..


கலங்கங்களோடும் நிலவு..
வரைமுறைகளோடான விண்வெளி...
எண்ணிக்கையில் அடங்கும் இதயத்துடிப்பு..
நடுக்கங்களோடும் ஸ்வாசம்..
முடிச்சுக்களோடு முழு உண்மை..
திடுக்கங்களோடான பரவசம்..
தயக்கங்களோடான வெடிப்பு..
தடுமாற்றத்தோடான முழு உச்சம்!

Monday, August 2, 2010

தெரிந்தால் சொல்லும்..


இருத்தல்,நடத்தல் _நிகழ்வு,
தோண்டல்,எடுத்தல்_ அகழ்வு,
துய்த்தல்,ரசித்தல்_ மகிழ்வு,
இரத்தல்,பறித்தல் _இகழ்வு,
சுரண்டல்,பதுக்கல் _களவு,
அறிதல்,புரிதல்_தெளிவு,
அன்பு,இரக்கம்_கனிவு,
ஏற்று..அடங்கல்_பணிவு,
சினமும்,குணமும்_உணர்வு,
அஞ்சாதிருத்தல்_துணிவு!
எது...எது..என்னவெல்லாம் பிறழ்வு??

Sunday, August 1, 2010

என் கட்டம் போட்ட தலையணை உறை..


அவனுடைய விளையாட்டு மட்டையை
நான் உடைத்த..மற்றும்...
என்னுடையை மதிப்பெண் சான்றிதழை ,
அம்மாவிடம் நான் அறியாமல் அவன் காட்டி கொடுத்த
போர்க்காலங்களில்...
என்னுடைய தலையணையில்,
அவன் மூச்சும் பட்டுவிடலாகாதென்றும்
அவனுடைய பங்கு தின்பண்டத்தில்,
எனக்கான சலுகைப் பங்கு நிராகரிப்பிலும்
கண்டிப்பாயிருப்போம் தம்பியும் நானும்!
பெற்றோரின் யுத்த காலங்களின் போது...
என்னுடைய கட்டம் போட்ட தலையணை உறை,
கறைபடும் எம்மிருவரின் கண்ணீரால்.
என்னுடைய ஆளுமை குறித்தான
விமர்சனங்களில் அவனும்,
அவன் வாழ்வியல் கொள்கைகள் குறித்த
அதிருப்தியில்நானும்
போருக்கான ஆயத்தங்கள் புரிந்து கொண்டிருக்கும்
தற்பொழுதுகளில்.....
'வெளியில் போ' என்று விட ,
அவனுக்கும்,
முகத்தை முறித்துக் கொள்ள
எனக்கும்..
எளிதாயிருக்கிறது!
அவனுடைய தலையணைஉறை,
பூப்போட்ட ரோஜா வண்ணம்..
என்னுடையதில் காணலாம் ,என் பிள்ளைகளின் எச்சில் தடம்.
Related Posts with Thumbnails