Search This Blog

Saturday, March 26, 2011

ஆனந்த விகடன், தாமிராவின் சிறுகதை "மியாவ் மனுஷி"

23/2/11 தேதியிட்ட ஆனந்த விகடனில், நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பில், தாமிரா எழுதியுள்ள மியாவ் மனுஷி இக்காலகட்டத்தின் நடப்பை, மனித மனங்களின் பலவீனத்தை, அப்படியே உள்ளபடி பதிவு செய்துள்ள சிறுகதை.

"என் பலவீனங்களின் காட்டில் சுள்ளி பொறுக்காதே"

என்ற ,கதைக்கு மிகப் பொருத்தமான, அறிவுமதியின் கவிதையோடு துவங்குகிறது மியாவ் மனுஷி.

முக நூலில் ஏற்படும் ஒரு அறிமுகம் எப்படி மதியை மயக்கி , காதலோ இது என்ற எண்ணத்தை, திருமணமான ஒரு ஆண் பெண் இருவருக்குள்ளும் ஏற்படுத்துகிறது என்று விவரிக்கிறது கதை. புகைப்படத்தை மட்டுமே பார்த்து, குறுஞ்செய்திகளில் தெரியும் மொழியறிவிலும் புலமையிலுமே மட்டுமே ஒருவர் மீது மற்றவர் மோகங்கொண்டு விடுகின்றனர் பார்வதியும் கதைசொல்லி ஜேம்ஸும். தினந்தோறும் பறிமாறிக்கொள்ளும் குறுஞ்செய்திகளிலும் பகிர்ந்து கொள்ளும் லைக்குகளிலும் தெரிக்கும் விருப்பத்துளிகளில் அச்சம் நீங்கி " நாம் எங்கு இருக்கிறோம். நட்பின் எல்லையில் மஞ்சள் கோட்டு விளிம்பில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உன் புன்னகை விரல் பிடித்து எனை அழைத்துச் செல்லும் இடத்தில் நட்பு இல்லை." என்பதாக ஜேம்ஸ் இட்டு விடும் வாசகத்தில் கலக்கமுற்று விடுகிறது பார்வதியின் பெண் மனம்.


வழமையே போல் ஆண் பயம் இல்லாமல் மனதில் உள்ளதைப் போட்டு உடைத்து விடுவதும், பெண் அச்சமுறுவதுமாக வரிகள் நகர்கின்றன. சில நாட்களின் வலையமதிக்குப் பிறகு, மீண்டும் குறுஞ்செய்திப் புள்ளிகளிட்டு காதல் கோலம் போட்டாகிறது. "சரி ,இந்தப் பட்டாம்பூச்சிகளை என்ன செய்யலாம். எனக்குள்ளும் பறந்து திரிகின்றன"...இந்த வரிகள் இருவருள்ளும் ஒரு முக்கிய மாற்றம் துவங்கிவிட்டத்தை உணர்த்த, "ஒரு வேளை பட்டாம்பூச்சியற்ற வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ என்னவோ" என்று, ஜேம்ஸ்- யோசிப்பது இக்காலகட்டத்திற்கு மிக முக்கியமான ஒரு சிந்தனை. மிகப் பிரமாதமான, விரசமற்ற , யதார்த்தமான ஒரு சொல்லாடல். ரொமான்ஸ், அதாவது காதலற்ற மணவாழ்வு, எத்துணை துன்பமான ஒன்று, அது எத்தகைய விளைவுகளை ஒரு மணவாழ்வில் ஏற்படுத்தும் என்பதை மிக அழுத்தமாக இந்தச் சிறுகதை பதிவு செய்திருக்கிறது.

"திருமணம் முடிந்ததுமே காதல் ஜன்னல் வழியாகப் பறந்து விடும்" என்கிறது ஒரு ஆங்கிலப் பழமொழி. மணமாகும் வரையில் ஒருவருக்காக மற்றவர் உருகுவதும், காத்திருப்பதும், அடுத்தவரை எப்படியாவது நெகிழச்செய்து விட வேண்டும் என்று தவிப்பதும், தவறுகளை எல்லாம் பொறுத்து மன்னிப்பதும், கவர்வதற்காக ஏகப் பிரயத்தனம் செய்வதும்... மணம் புரிந்து கொண்டவுடனே எப்படியெல்லாம் மாற்றம் கொண்டு விடுகிறது?

நண்பர்களிடமும் தொழிற்ரீதியில் பழக வேண்டியிருக்கும் வாடிக்கையாளர்களிடமும் காட்டும் மரியாதையையும் கண்ணியத்தையும் நம் துணையிடம் ஏன் காட்ட முடிவதில்லை?

என்ன தான் இருவரும் ஒன்று என்றெல்லாம் பேசிகொண்டாலும் புறக்கணிப்பின் வலி மற்றவரை வாதை செய்யத்தானே செய்கிறது, மட்டுமல்லாமல் குடும்ப வாழ்வுக்கே ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலை உண்டு பண்ணி விடுகிறதே?

தன் துணையிடம் இல்லாத, தான் பெரிதும் எதிர்பார்த்து கிடைக்காத ஒன்று இம்மாதிரியான நட்பில் கிடைப்பதாகத் தோன்றும் போது மனித மனம் தடுமாறத்தானே செய்யும்?

உனக்கு என்ன குறை வைத்தேன்? என்று துரோகம் இழைத்துவிட்ட துணையிடம் பாதிக்கப்பட்டவர் முறையிடுவதை அன்றாட வாழ்க்கையில் இப்போதெல்லாம் அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால் இந்தக் கேள்விக்கு அர்த்தமேயில்லை! ஏதோ குறைகிறது என்பது தானே இப்படியான அதி தீவிர மனநிலைக்குக் கொண்டுசென்று விடுகிறது?. எல்லை தாண்டிவிடுவது என்பது நம் சமூகத்தில் மிகக் கேவலமாகப் பார்க்கப் படும் ஒரு செயல் என்பதை எல்லோரும் உணர்ந்து தான் இருக்கின்றனர்..ஆனாலும் துணிவது என்பது, மிகுந்த மன அழுத்தம் மற்றும் தேவைகளின் காரணமாகத்தான் இருக்கவியலும். ஏதோ கலாச்சார சீரழிவுக்கு அடித்தளமிடத் துணியவில்லை நானும்...சீரழிவை ஓரளவுக்காவது சீரமைக்கவியலுமா என்று தான் எண்ணமிடுகிறேன். பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் எப்படி சரி செய்வது?

எல்லா மனித மனங்களும் எதிர்பார்த்து ஏங்கும் அடிப்படைத்தேவைகளை திருமணம் பூர்த்தி செய்ய வேண்டும். தன் துணையின் எல்லாத் தேவைகளையும் திருப்தி செய்கிறோமா என்ற கேள்வியை மணமான அனைவரும் நேர்மையாகத் தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவேண்டிய கால கட்டமும், வாழ்சூழலும் வந்து விட்டது...பதில்" இல்லை "எனும் பட்சத்தில் எப்பாடு பட்டாவது அதை சரி செய்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் ஏற்படப்போவது ஒரு மிகப் பெரிய சீரழிவுதான்.

கதையின் ஊடாக "மியாவ்" என்று ஜேம்ஸும் பார்வதியும் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வதும்," நான் என் லைஃப் டைம்ல இவ்ளோ சிரிச்சது இல்லை "என்பதும் , "நாப்பது வயசுல காதல் வந்தா அது நல்லதா ஜெம்" என்பதாகவும் வசனங்கள் வருகின்றன. உணர்த்துவது எதை என்று யோசிக்கும் போது இவையெல்லாம் இயல்பான மனித எதிர்பார்ப்புகளும் தேவைகளும் தான் என்பது பட்டென்று புலனாகின்றது, கொஞ்சப்படவேண்டும், கவனிக்கப்படவேண்டும், ஆராதிக்கப்படவேண்டும் என்பதெல்லாம் எல்லோருள்ளும் இருக்கும் ஆதங்கங்கள் தானே? பூர்த்தி செய்யப்படாத சித்திரங்கள் தமக்கான ஓவியனைத் தேடிக்கொள்ளும் காலம் இது.

"சமூகம் இதைக் கள்ளக் காதல்னு சொல்லும். என் குழந்தைகளுக்கு நான் ரோல் மாடலா இருக்க விரும்பறேன். தாய்மைக்குள்ள காதல் அசிங்கம் ஜெம்" என்று பார்வதி பேசும் வசனம் மிக அழுத்தமான ஒன்று. இம்மாதிரி, திருமணத்துக்கு அப்பால் ஏற்பட்டு விடும் பல காதல்கள் ,சொல்லப்படாமலும் , கட்டுக்குள் இருப்பதும் குழந்தைகளின் நலன் கருதித்தான். ஏனென்றால் மண வாழ்வு ஆட்டம் கண்டுவிட்டால் அடித்தலமின்றி இடிந்து போவது குழந்தைகளின் வாழ்க்கை தானே? "பலவீனங்களில் சுள்ளி பொறுக்கும் மனநிலை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. பார்வதி சற்று யோசித்துப் பார்த்தாளானால் அவள் கணவனுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது புரிந்திருக்கும்". இவை தான் கதைக்கே முத்தாய்ப்பான வரிகள் முகத்திலறையும் உண்மையும் கூட. ஆனால் மனம் தடுமாறிவிட்ட நிலையில் இப்படியெல்லாம் தர்க்கரீதியில் யோசித்து தீர்வு காணுவது மிகக் கடினம். தடுமாறாமல் தன்னையும் தன் துணையையும் காத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

"நான் உனக்கு அம்மாவா இருக்கலாம்னு நெனைக்கிறேன். காதலோட தாய்மையில் உன்னைக் குழந்தையா ஏத்துக்கலாம்னு பாக்கறேன். காமம் இல்லாத ஒரு காதல் ஓ.கே வா" என்று ஜேம்ஸ் கேட்பதாக கதை முடிந்தாலும் தர்க்கம் முடிவதாக இல்லை. சிறுகதை இது என்பதால் இங்கு முடிக்க வேண்டிய ஓர் கட்டாயம் அவ்வளவே..நாவலாக எழுதப்பட்டிருக்கக் கூடிய கதை தானே இது? காமம் இல்லாத காதல் பேச்சளவில் அல்லாமல் வேறெப்படியாம் சாத்தியம்? தன் மனைவியை ஜேம்ஸும், கணவனைப் பார்வதியும் குழந்தையாக வரித்துக்கொண்டிருந்தால் இப்படியோர் கதையே எழுதப்படிருக்காதே? இணையத்தலங்களிலும், முக நூல் போன்ற ஊடகங்களிலும் இப்படி மனங்கள் தடுமாறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கின்றன. திருமணம் ஆகிவிட்டால் மட்டும் மனம் என்ன தாவும் தன் இயல்பை மறந்து விடுமா? வெறும் புகைபடங்களையும் வார்த்தை ஜாலங்களையும் நம்பி எல்லைக்கோட்டைத் தாண்டி விட்டால் திருமணத்திலும், குழந்தைகளிடத்திலும், சமூகத்திலும் மிகப் பெரிய சீர்கேடு உண்டாகும் என்பது திண்ணம் . காத்துக் கொள்வது அவரவர் கடமை.

..ஷஹி..

Monday, March 21, 2011

முத்தப் பூக்களால் ததும்பும் வனம்..


உன் அண்மையில் சிலிர்த்து வீங்கும்

காற்றின் அணுக்களை எல்லாம்

மூச்சில் கரைத்து

என்

திசுக்களில் சேமிக்கின்றேன்..

தனிமையின் உக்கிரத்தில்

தகிக்கும் பின்னிரவுகளில்,

திசுக்களை வெடிக்கச் செய்து,

பிரசவித்துக் கொள்வேன் உனை..

முத்தப் பூக்களால் நிரம்பித் தளும்பும்

நம் பால் நிலாகாய் வனத்தில்

அலைந்து திரிவோம் நாம்..

வா.,

பூக்களைச் சேகரித்தும்

பூக்களைச்சிதற விட்டும்..

முதல் கிரணத்தின் வெம்மை பட்டு

கோர்த்த கரங்கள் வியர்க்கும் கணத்தில்

என் உயிர் கிழிந்தழ

விட்டெனை விலகாதே நீ..

அரையிருட்டின் குளுமைக்குள்ளேயே

புன்னகைத்து விடை கொடுக்கின்றேன்,

உன்னிதழ்களின் ஈரத்தையும்

மார்பின் கதகதப்பையும்

மீண்டுமோர் நிலா இரவில் திருப்பித்தரும் வாக்குறுதியோடு..

..ஷஹி..

Wednesday, March 16, 2011

பூந்துடைப்பக்குச்சியும் ஒரு சிகப்புக்கல் மூக்குத்தியும்

"ஆ...அம்மா..ஐயோ என்ன விட்டுடுங்க மா..ஆ"ன்னு..அலறித்துடிச்சேன். அப்பா மடியில உக்காந்தபடி. அம்மாவுக்கும் அழுகை தான்..ஆனாலும் கெட்டியா என்னைப் பிடிச்ச பிடியை விடவேயில்லை அவ. "கொஞ்சம் பொறுடி , செத்த நேரம் தான், ம்ம்ம்ம்..இதோ ஆச்சு பார்" ன்ன படியே ஆசாரி என் காதை சரியாத்தான் குத்தியிருக்குறாரான்னு கவனமாப் பாத்துட்டு தான் என் கையவிட்டா.


அழுகையோட ஏகப்பட்ட எரிச்சலும் சேர்ந்துக்கிச்சு எனக்கு. வீட்டுக்குப் போற வழியில நாடார் கடையில் அடம்பிடிக்காமலேயே பன்னீர் சோடா கிடைச்ச திருப்தியில கொஞ்சம் போல அலட்டிக்கிட்டே வந்தேன்.

வீட்டு வாசலில் யாரோ ஒரு ஜோடி. "அடடா..டேய் சதா எப்புடிடா இருக்கே " ன்னு ஏக அமக்களமாய் வரவேற்கிராரு அப்பா. ":ஏய் மாலா ஆருன்னு தெரியலையாடி எங்க ராணி அக்கா மகன் சதா" ன்னதும் சுதாரிச்சிக்கிட்டாஅம்மா. "வாங்க வாங்க" ன்னு ஒரே உபச்சாரம் . எனக்குக் கெடச்சிருந்த திடீர் மரியாத இடம் மாறினதிலும், சதா என்று அழைக்கப்பட்ட அந்த மாமாவின் மனைவி ராஜியின் அழகில் அசந்தும் நின்ன இடத்திலேயே நின்னுட்டிருந்தேன். "உள்ளவாடா" ன்னு அப்பா கூப்பிட்டதில கூடத்தில இருந்து உள்ளறைக்கு இடம் பெயர்ந்தோம் மொத்த பேரும்.

"இப்பதான் டா உன் மொறப்பொண்ணுக்கு காது குத்தினோம். சொல்லாம கொள்ளாம வந்திருக்க...கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா..ஒன் மடியிலேயே வச்சு காது குத்தியிருக்கலாம்" ன்னு அங்கலாச்சார் அப்பா.

"இல்ல மாமா திடீருன்னு தான் கெளம்பினோம்..இவ அம்மாவுக்கு ஓடம்பு முடியாம இருந்து போன வாரம் தான் தவறிப் போனாங்க, அதுல இருந்து எங்கயாவது போகலாம்ன்னு ஒரே தொணப்பு. எனக்கு உன்ன விட்ட வேற யாரு மாமா இருக்கா? அதான் இங்க கூடிட்டு வந்தேன்" .

பேசுவது புரிந்தும் புரியாமலும் முழிச்சுகிட்டே இருந்தா ராஜி மாமி. சதா மாமா எங்க தாத்தாவோட மூத்த சம்சாரம் ஜானகிப் பாட்டியின் மகள் ராணியின் மகன். பாட்டி இறந்தும் தாத்தா எங்க பாட்டி ஜானகியின் தங்கை சுசீலாவை கட்டியிருக்கிறார். ஆனாலும் மகள் ராணியின் மேல கொள்ள பிரியமாம் எங்க தாத்தாவுக்கு. அக்கா மக, தாயில்லாப் பொண்ணுன்னு எங்க பாட்டியும் ராணி அத்தைய தன் பொண்ணாத்தான் வளத்திருக்காங்க. எங்க அப்பாவையும் ரகு சித்தப்பாவையும் ரொம்ப அன்பா பாத்துப்பாங்களாம் ராணி அத்த.

"எனக்கு மொத மொத முழுக்கால் சட்டையும் ஃபுல் சர்ட்டும் தச்சு போட்டு அழகு பாத்ததே எங்க ராணி அக்கா தான்"னு அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கேன்.

கல்யாணமாகி சில வருஷத்திலேயே ஒரே மகன் சதானந்தன தவிக்க விட்டுட்டு ராணி அத்த இறந்துடாங்களாம். அம்மாவும் இல்லாமப் போகவும் ,சின்ன வயசுலயே வீட்டை விட்டு ஓடிப்போய் மைசூரில் செட்டில் ஆகிட்டாரு சதா மாமா. செட்டில்ன்னா காரும் பங்களாவுமா இல்ல..ஒரு பீடி கம்பெனியில் வேலைக்கு சேந்தவர், அங்க வேலை பாத்து வந்த ராஜி மாமியோட அப்பாவப் பழக்கம் பிடிச்சுக்கிட்டாராம் ..அப்புடியே பெண்ணையும் கட்டிக்கிட்டாரு.


மைசூர் பிராமணக் குடும்பத்துப் பொண்ணு ராஜி..மூக்கும் முழியுமா கிளியாட்டம் பெண்ணும்பாங்களே .. ராஜி மாமியைப் பாத்துத் தான் அப்படி சொல்றதே ஆரம்பிச்சிருக்கணும். அப்படி ஒரு தந்த நிறமும், செப்புச்சிலைமாதிரி உடலமைப்பும், ஒய்யாரமும் என்னாலயே வச்ச கண் வாங்க முடியல.நிகு நிகுன்னு பளபளக்குற அந்த மூக்குல ஒரு செவப்புக்கல்லு மூக்குத்தி தான் என்ன அழகு?

யாரோ சொந்தக்காரங்க வந்திருக்காங்கன்னு தெரிஞ்சு பாக்க வந்த வீட்டுக்காரப் பாட்டி கூட "அட ஈரோ மாதிரி பையன், ஈரோயினி மாதிரி பொண்டாட்டி" ன்னு அம்மாகிட்ட கிசுகிசுத்தா.

மொழி புரியாட்டாலும் ஆதரவாப் பேசுன அம்மா கிட்ட கெட்டியா ஒட்டிக்கிட்டா ராஜி மாமி. தினமும் என் காதுப் புண்ணுக்கு எண்ணை வச்சு , அம்மா அளவா ஒடச்சுக் கொடுக்குற பூந்துடைப்பக் குச்சியை ஏதோ அரைபவுன் தோடு அணிவிக்கும் பாவனையோட பயபக்தியா போட்டுவிடுவா .

தன் அம்மா பேர எனக்கு வச்சிருக்குறதுல சதா மாமாவுக்கு ரொம்ப சந்தோஷம், என் மேல தனி பிரியம்..எனக்கும் தான்."இது என்னக்கா, கொழந்தைக்கு நல்ல பவுன் தோடு போடாம ஏதோ குடியானவங்க வீட்டுப் புள்ள மாதிரி பூந்தொடப்பக் குச்சியப் போட்டா வக்கிறது?" ன்னு சதா மாமா கேட்க,

"இல்ல சதா ஒரே புண்ணா இருக்கு பாரு காது, செத்த ஆறிணதும் தங்கத்தோடு தான் போடணும். எங்க அம்மா வீட்டுல நல்ல பெரிய தோடாத்தான் குடுத்திருக்காங்க".

ஒரே பொண்ணுக்கு காது குத்த தாய் வீட்டுலருந்து யாரையும் அழைக்க அப்பா விடல்லங்கிற ஆத்திரத்துல அம்மா சொன்னா .

காய்கறி நறுக்க, வீட்டை சுத்தம் செய்யன்னு ரொம்ப உதவியாஇருந்தா மாமி அம்மாவுக்கு. மாமாவும் மாமியும் கூடத்தில் படுப்பாங்க, நாங்க உள்ளறையில். ஒரு ராத்திரி மாமாவுக்கும் மாமிக்கும் சரியான சண்ட கன்னடத்துல காச்சு மூச்சுனு. என்னமோ ரொம்ப பெரிய பிரச்சினன்னு மட்டும் தான் புரிஞ்சிது எனக்கு.அம்மாவும் அப்பாவும் போய் என்னான்னு கேக்கவேயில்ல..அடுத்த நாளே ரகு சித்தப்பாவை வரவழச்சு அவரோட செங்கல்பட்டு அனுப்பிட்டார் அப்பா, மாமாவையும் மாமியையும். அவங்க போய் ஒரு வாரம் வரைக்கும் யாரும் யாரோடயும் முகம் கொடுத்துப் பேசிக்கல. அப்பாவும் சரி அம்மாவும் சரி ஏதோ ரொம்ப இறுக்கமா இருந்த மாதிரி தோணுச்சு எனக்கு.

மறுபடியும் மைசூர் போக விருப்பம் இல்லன்னு சதா மாமா சொல்லியிருக்காரு..ரகு சித்தப்பாவும் ஒரு பெட்டிக்கட வச்சுக் குடுத்துட்டாராம் அவருக்கு,

"ஆமா ஆமா ஏன் மாட்டான் உங்க தம்பி? பின்ன கொஞ்சமான அழகா அதுன்னு "ஆத்திரமா அம்மா ஒரு நா அப்பாவோட மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தா.

"சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதடி, எங்க அக்கா எங்களுக்கு செஞ்சதுக்கு நாங்க எவ்வளவோ கடன் பட்டிருக்கோம்"ன்னு அப்பாவும் பதில் சொன்னாரு.

ரொம்ப நாள் வரைக்கும் சதா மாமாவப் பத்தி பேசறதேயில்ல யாரும். தீபாவளி, பொங்கல்ன்னு பண்டிகைகளின் போது மட்டும் பாத்துக்கிட்டோம் எல்லாரும்..அம்மாவும் சித்தியும் கண்ணாலயே பேசிக்கிறதும், கடுகடுன்னும் இருப்பாங்க அவங்க வந்தாலே. கட வியாபாரம் நல்லா சூடு பிடிச்சு மாமா குடும்பம் செழிப்பமா வந்துக்கிட்டு இருந்த நேரம்.....அங்கயும் என்னவோ பிரச்சின.

"ஊரோட போறோம் மாமா"ன்னு, கொழந்தைகள கையில பிடிச்சிக்கிட்டே கண்ணீரோட சொல்லிட்டு போனாங்க மாமா, மாமி. அவங்க பின்னாடியே அழுதுக்கிட்டே ஒண்ணும் புரியாம கொஞ்ச தூரம் நானும் போனது மறக்கவே முடியாது.

சதா மாமான்னு ஒருத்தர் இருந்ததே மறந்து போச்சு.

என் சொந்த அத்த, அப்பாவுக்கு நேர் மூத்தவங்க பேபி அத்த, அவங்க புள்ளக்கே என்னையும் கட்டிக் குடுத்துட்டாங்க. திடீர்ன்னு சதா மாமா இறந்துட்டார்ன்னும், நாலஞ்சு கொழந்தைகளோட மாமி ரொம்ப கஷ்டப்படுறதாவும் எல்லாம் கேள்விப்பட்டேன். பீடி சுத்தி பொழக்கிறாங்கன்னு சொன்னாங்க.

ராஜி மாமிய நெனச்சாலே அந்த பளபளங்குற மொகமும், செதுக்கி வச்ச மாதிரியான மூக்குல மின்னுர செவப்புக் கல்லு மூக்குத்தியும் தான் நெனப்பு வரும். மூக்கு நுனி செவக்க மாமி அழுற மாதிரி ஒரு கனவு வந்து வந்து போச்சு பல நா.

"ரொம்ப நாளா ஆசப்பட்டுக்கிட்டே இருக்கியே ராணி. இன்னக்கு கடயில கல்லாவுக்கு ஆள் வச்சிட்டு வரேன். ரெடியா இரு சினிமாவுக்குப் போவோம்" ன்னு அன்னக்கி இவர் சொன்னதும் தல கால் புரியல எனக்கு. ஆச ஆசயா ஆரஞ்சு கலர் மைசூர் சில்க், மாட்ச்சா தலையில கனகாம்பரம், செவப்புக்கல் தோடு, மூக்குத்தின்னு கெளம்பிட்டேன். வண்டியில பாதி தூரம் போயிருப்போம், இவர் ஃப்ரெண்ட் ஒருத்தரு வழிய மறிச்சாரு.

"டேய் யாரோ உங்க சொந்தக்காரங்களாம் வீட்டு அட்ரெஸ் தெரியாம கட வாசல்ல வந்து நிக்கிறாங்க, ஒன் பேரும் ராணி பேரும் சொல்றாங்க , சரியா தமிழ் தெரியல மைசூராம்" ன்னதுமே சட்டுனு நானும் இவரும் புரிஞ்சிக்கிட்டோம்.

"வா, வா சதா அண்ணன் குடும்பம் தான் போல"ன்னு பறக்குறாரு இவரும்..

கட வாசல்ல ரெண்டு மூணு பொம்பளங்க, நாலஞ்சு வயசு பிள்ளங்க. தெரிஞ்ச மொகமாவே யாரும் இல்ல!

வத்த, தொத்தலா பல்லெல்லாம் நீண்டு ,தலையில முக்காடு போட்டிருந்த ஒரு வயசான மனுஷிய கேட்டேன்

" சதா மாமா பொண்டாட்டி வரலீங்களா" ன்னு

கண்ணு ரெண்டும் மின்ன சட்டுன்னு நிமுந்து பாத்தவங்களோட செவந்த மூக்குல ,தேவைக்கு அதிகமாவே நீண்டிருந்துது அந்த பூந்தொடப்பக்குச்சி.

...ஷஹி...

Tuesday, March 8, 2011

ஜெயமோகனின் "காடு"...

ஜெயமோகனின் காடு அவரது ஐந்தாவது நாவல். கனவையும் வாழ்வின் யதார்த்தத்தையும் ஊடும் பாவுமாக நெய்து படைக்கப்பட்ட நாவல் காடு."ஏய் வாசகா உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள்" என்கிறது நகுலனின் கவிதை வரியொன்று. நான் பார்த்த காடு தான் எனது. அதைத்தான் எனது விமர்சனமாகவும், விவாதமாகவும் முன் வைக்கவியலும்..ஆரோக்கியமான விவாதங்கள் இலக்கிய உலகில் வரவேற்கப் படும் என்ற நம்பிக்கையுடன்..

காட்டில் சாலையிடும் கல்வெர்ட் கான்டிராக்ட் எடுத்துள்ள மாமனின் ஆணைக்கு இணங்கி ,தன் தாயின் விருப்பம் என்பதாலும்...கான்டிராக்ட் கணக்கு வழக்கு பார்க்கவென காட்டில் நுழைகிறான் நாயகன் கிரிதரன்.

பணியாள் குட்டப்பன்... கதை நெடுகிலும் நம்மைக் கவரும் பாத்திரம், சமையல் , காடு பற்றின சகல அறிவும், வேலையாட்களிடம் வேலை வாங்கும் திறன், சக மனிதர்களிடத்தான அன்பு, மாறாத மன மற்றும் உடற்திறன் என்று ஒரு ஹீரோவுக்கான அத்துணை அம்சங்களும் பொருந்தின ஒரு கதாபாத்திரம்.

ரெசாலம், குரிசு, சினேகம்மை, ரெஜினாள் ,ராபி ,ஆபேல்-இரட்டையர்கள் என்று வேலையாட்கள்.

காட்டின் மீது அதீதமான ஆர்வம் இழுக்க ,உலவச் சென்ற நேரம், ஒரு மரத்தினடியில் கண்ணயர்ந்து விடும் கிரிதரன், கனவா நினைவா என்றே உணரவியலாத அச்சுறுத்தும் ஒரு மனப் பதட்டத்துக்கு ஆளாகிறான் . காடு பற்றி மட்டுமல்லாமல், தம்புரான் கதைகள் பலவும் அறிந்த குட்டப்பன் அடங்காக் காமப் பசி கொண்டலைந்த வன நீலியொருத்தி காஞ்சிர மரமொன்றில் ஆணி அறையப்பட்டு கட்டுண்டு இருக்கும் கதையைச் சொல்ல, கிரியின் மனதிலும் நீலியை இருத்தி கூர் ஆணி கொண்டு அறையப்படுகிறது. எத்தனை தான் பயமும் பதட்டமும் இருந்தாலும் காட்டின் ஓயாத அழைப்புக்கிணங்கி மீண்டும் மீண்டும் காட்டினுள் புகுகிறான் கிரி.

நீரோடை ஒன்று சிற்றருவியாகவிழும் இடத்தில் ,குளிக்கவென அமர்ந்திருந்த பேரழகு , மலையத்தி ஒருத்தியைப் பார்த்த மாத்திரத்தில் காதலும் கொண்டு விடுகிறான். அவள் யார் என்னவென்ற விபரம் ஏதும் அறியாத போதிலும், மீண்டும் சந்திக்க வாய்ப்பு அமையுமா என்றெல்லாமும் தெரியாத நிலையிலும் கூட ,மனதையும் உடலையும் சேர்த்துப் பிணைத்து ...வேறொன்றையும் பெரிதென நினைக்க இடங்கொடாமல், நினைவில் கனவாகவும்..கனவில் நினைவே போலும் மயக்கும், வாழ்வில் ஒரே முறை வாய்க்கும் முதற் காதலின் உன்மத்தப் பிடியில் சிக்கி விடுகிறான்.

நீலி என்பது தான் கிரிதரன் காதல் கொண்டு விடும் மலை சாதிப் பெண்ணின் பெயர்.குட்டப்பன் கிரிக்குச் சொல்லும் வனநீலிக் கதை, மிகையான சொல்லாடல்களுடனானது என்றாலும், கதையில் அதன் பங்கு பிரதானமானது. ஐய்யர் பாத்திரமும் , குட்டப்பனும் மட்டும் அவளைப் பற்றி பேசும் இடங்கள் இல்லையென்றால்...மனம் பிழன்ற நிலையில் கதாநாயகன் தானாகவே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனைக் காதலி தான் நீலி என்ற அளவிலேயே வாசகனின் புரிதல் இருந்திருக்கும். மட்டுமல்லாமல் அவள் இறந்து பட்டாள் என்ற செய்தியை குட்டப்பன் சொல்லுமிடம் நமக்குப் பெரிதான அதிர்ச்சியொன்றும் ஏற்பட்டு விடாமல் அவளுடைய பாத்திரத்தோடே பிணைந்திருக்கும் ஒரு வன தேவதை தானோ அவள் என்ற மாயத்தோற்றம் காக்கிறது.

சில நாட்கள் மட்டுமே கிரியும் நீலியும் பேசிப் பழக சந்தர்ப்பம் அமைகிறது. கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால்..... பார்த்த மாத்திரத்தில், அவள் மேலாடை ஏதும் அணியாத நிலையில் தான், கிரி அவளிடம் காதல் கொண்டு விடுகிறான் என்ற போதும், பழகும் வாய்ப்பு கிட்டும் எந்த நேரத்திலும் அவர்களுக்கிடையே உடல் ரீதியிலான நெருக்கம் நேரவேயில்லை என்பது தான். உண்மையான காதலுக்கு உடல்களைப் பிணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தானா ஜெயமோகன் சொல்ல விழைவது?

கிரிதரனின் தாய்----தினசரி வாழ்க்கையில் நாம் அனைவரும் எங்கேனும் சந்தித்திருக்கக் கூடிய ஒரு பெண் தான் இவள். தான் எடுத்து விட்ட முடிவில் திடமாய் இருப்பதும், எதற்கும் அஞ்சிவிடாத அவளுடைய துணிவும், கணவனை, மகனை தான் நினைக்கும் விதமாக ஆட்டி வைப்பதிலும் ...யதார்த்தமான ஒரு பாத்திரப் படைப்பு.

ஐய்யர்----பெண்கள் பற்றின இவரது ரசனையும், இலக்கியத்தின் பால் கொண்டிருக்கும் நாட்டமும், கதாநாயகனிடம் இவர் கொண்டு விடும் நட்பும் கதையின் போக்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

"இன்னும் சொல்லப்போனா எல்லா மோகினி, பேய்க் கதையிலயும் உள்ள இருக்கிறது பெண்ணோட காமத்தைப் பயப்படற ஆணோட கோழைத்தனம் தான். எல்லாப் பெண்ணிலயும் யட்சி உண்டு. மந்திரம் தெரிஞ்சவன் பயப்படமாட்டான்." என்று ஐய்யர் கிரிக்கு அறிவுரை கூறுகிறார் ஓரிடத்தில். ஆசிரியர் பேசும் யட்சிப் பெண்கள் வெறும் புனைக்கதைகளில் பாத்திரமாக வரும் கனவா? இல்லை அவர் அறிந்து, பார்த்து, பயந்த நிஜப் பெண்களா? ஆண் , பெண் உறவுச் சிக்கல்களை அலசும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், இப்படிப் பட்ட அழுத்தம் திருத்தமான, எதிர்மறையான நிலைப்பாடுகள் அல்லது கருத்துத் திணிப்புகள் எதற்காக?

பெண்கள் பற்றின அழகு வர்ணனைகளிலும் சரி, அவர்களுடைய மன ஓட்டங்களை விவரிக்கும் இடங்களிலும் சரி , கடுமையான ஆணாதிக்க சிந்தனை விரவிக் கிடப்பதை ஆசிரியர் அறிகிறாரா? நாயகன் காதலியின் அழகை எண்ணி மயங்கும் போதே, நாட்டில் வாழும் மங்கையரின் குறைகளாகக் கருதும் பொன்னிறத்தையும், தளர்ந்த உடற்கட்டையும் விவரித்து ,அவன் மீதே பெரும் எரிச்சலை வாசகனுக்கு உண்டாக்குகிறான். அழகின் மீது இத்தனை காதல் கொள்ளும் கிரியின் மனைவி, அவன் மாமன் மகள் வேணி அவலட்சணத்தின் மொத்த உரு என்பதும் முக்கியமான செய்தி.

நாம் அறிந்தேயிராத காட்டை நம் கண்களின் முன் விரியச்செய்வதிலும், ஒரு மிளாவை, யானையை, பலா மரத்தை, ஆற்றை, தேவாங்கை, குரங்கை,கொன்றை மரத்தை, கதாபாத்திரமாக நினைக்க வைப்பதிலும், ரெசாலம் ஒரு தேவாங்கின் மீது கொண்டு விடும் அதீதமான பாசம் ஏன் என்று வாசகனுக்குப் புரிய வைக்கும் இடத்திலும் ஒரு தேர்ந்த கதைசொல்லியாக சரசரவென விஸ்வரூபம் எடுக்கிறார் ஜெயமோகன். கிருத்துவ மதம் பற்றி மிகுந்த கிண்டல் தொனிக்கும் வசனங்கள் பல உள்ளனவே என்று வாசகன் உயர்த்தும் புருவத்தை நீவி விடும் படியாக..அதே கிறித்துவ பாதிரியும், மருத்துவரும், செவிலிமாரும் மலைவாழ் மக்களுக்கு சேவை செய்பவர்களாகக் காட்டியும், அம்மதம் மலைவாழ் மக்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்களையும் ஊடாக எழுதிவிட்டிருக்கிறார்.

கதை நெடுகிலும் குமட்ட வைக்கும் ஏசும் வார்த்தைகள், பாத்திரமாக வரும் முக்கால்வாசிப் பெண்கள் அடங்காக் காமம் கொண்டலைபவர்களாகச் சித்தரிக்கப் பட்டிருப்பதும் என்று முகஞ்சுளிக்க வைக்குமிடங்கள் ஏராளம். ஜெயமோகனின் பல கதைகளிளும் போலவே இதிலும் பெண் என்பவள் ஏதோ மிஸ்டீரியஸான, அச்சம் தருபவளாக, எளிதில் திருப்தி அடைந்து விடாத ஒரு பிறவியாகவே புனையப்பட்டிருகிறாள். கதையின் போக்கெங்குமே கதாநாயகன் பெண்களால் பாலுறவுக்காகக் கட்டாயப்படுத்தப்படுபவனாகவே இருக்கிறான். இதென்ன ஆண் இனத்தின் ஆழ் மன ஆசையின் ஒரு நீட்சியா? இல்லை யதார்த்தம் என்பது தான் ஆசிரியர் சொல்லும் பதிலா? ஒப்புக்கொள்ளவே முடியவில்லையே! ஒரு பெண்ணின் சம்மதமில்லாமல் அவளை வன்புணர்ந்துவிட இயலும்..ஆனால் ஆணுக்குத் தான் இயற்கையே பாரபட்சமான ஒரு வசதி வழங்கியிருக்கிறதே? எந்த ஒரு இடத்திலும் தானாக ஒரு முடிவு எடுக்காதவனாகவும், கோழையாகவுமே தோன்றும் கிரி அப்படியொன்றும் மனதைக் கவரும் விதமானவனாகவும் இல்லை..ஆனாலும் அவன் மாமியிலிருந்து, அடுத்த வீட்டுப் பெண், எஞ்சினீயர் மனைவி என்று அவனைக் காமுறும் பெண்களாகவே காட்டப் படுவதை சகிக்கவே இயலவில்லை.

எந்தப் பெண்ணைப் பற்றின குறிப்பென்றாலுமே நாவல் முழுவதும் அவளுக்கு இன்னாருடன் தொடர்பு என்று சர்வசாதாரணமாக சொல்லப்படுகிறது. ரெஜினாளுக்குப் பதிலாக வேலைக்கு வரும் எடத்துவா மேரி என்னும் பெண்ணைப் பற்றி "அவளுக்கு கற்பும் பணம் போல கண்ணும் கருத்துமாக பாதுகாக்கப்பட வேண்டிய பொருள் தான்" என்னும் வரி கூட பாத்துக்கோ நானொன்னும் எல்லாப் பெண்களையும் பற்றி அப்படிச் சொல்லல என்பது போலத்தான் இருக்கிறது.

ரெசாலத்தின் மனைவிக்கு கிரியின் மாமனோடு தொடர்பு இருப்பதும் பிள்ளை போல் வளர்த்த தேவாங்கை சிறுத்தை கவ்விச் செல்வதில் மனம் தடுமாறி வீட்டில் கொண்டு விடப்படும் ரெசாலம், கிரியின் மாமனைக் கொல்வதுமாக இன்னொரு கள்ளத்தொடர்பும் அதன் விளைவும்.இம்மாதிரியான தொடர்புகளும், காம விகாரங்களும் நம் சமூகத்தில் இல்லை என்று சொல்வதற்கில்லை என்றாலும் இத்தனை அழுத்தமான , விகாரமான, காமம் பற்றின நிலைப்பாடு, யதார்த்தம் என்ற பெயரில் தேவைதானா? காடு என்பதே நம் ஆழ் மனம் பற்றினதான ஒரு குறியீடு தான் என்றும் அதன் நிலைப்பாடுகளில், விகாரங்களில், குரூரங்களில், தன்மைகளில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விவாதிப்பது தான் நாவலின் நோக்கம் என்று விட்டாலும் கூட அதிகமான ,மிகைப்படுத்தல் தெரிகிறது காமம் பற்றின கண்ணோட்டத்தில்.

காடும் ,காட்டில் வாழும் எண்ணற்ற உயிரினங்களும் மனிதனின் பேராசைக்குப் பலியாவதை கதையின் ஓட்டத்தில் சொல்லி சூழலியல் எச்சரிக்கை ஒன்றை அறைகூவுகிறார் ஜெயமோகன்.

நிகழ்காலத்திலும் இறந்தகாலத்திலும் ஏக நேரத்தில் பயணிக்கும் கதையோட்டம், ஒரு தேர்ந்த இயக்குநரின் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் போல வெகு கச்சிதம். கிரியும் நீலியும் குறிஞ்சிப் பூவைப் பார்க்கப் போகும் இடம் கதையின் போக்கில் அடடா என்று வியக்க வைக்கும் இடங்களில் ஒன்று. என்னவோ ஏதோவென்று குறிஞ்சியைப் பற்றி ஏக எதிர்பார்ப்பில் இருக்கும் கிரி இந்த அபத்தமான பூவை ஏன் மலையும் மலை சார்ந்த இடத்திற்கான அடையாளமாகக் கற்பனை செய்தார்கள் என்று ஏங்குவது அற்புதமான ஒரு மனவியல் கூற்றை போகிற போக்கில் சாதாரணமாகச் சொல்லி விடும் ஒரு வரி.எத்தகைய ஓர் அபூர்வ நிகழ்வாக குறிஞ்சி மலர்வதைக் கொண்டாடுகிறான் மனிதன்...ஆனால் அப்படியொன்றும் பூலோகத்தில் இல்லாத ஓர் பொன்மலராக அது இல்லை என்பது ஏமாற்றம் தந்துவிடம் ஒரு விஷயம் தானே..யதார்த்தம் என்பதும் அப்படிப்பட்டது தானே? ஒரு வன தேவதையாக, பெண்ணல்லாத ஏதோ ஒரு மாயப் பொருளாக, காணக் கிடைக்காத ஒருத்தியாகவெல்லாம் நீலியைக் கற்பனை செய்து வந்த கிரி அவளும் சாதாரணப் பெண் தான் என்று உணர்ந்து கொள்ளும் ஒரு கணம் அது. மனதிற்குள் பெருங்கனவாக, உன்மத்தம் கொண்டுவிடச் செய்யும் ஒரு உணர்வு... கனவு நிலையை விட்டு வெளியே வந்து விட்டால்...நீர்த்துப் போய் விடுவதை வாழ்நாளில் ஒரு முறையேனும் அனுபவிக்காதவர்கள் யார்?

கதையின் ஓட்டத்தில் கிரியின் தொழிலில் பெரும் நட்டம் ஏற்படுவதும், மனப்பிழற்வின் விளிம்புக்கு அவன் சென்று மீள்வதுமாகவும், நீலியைப் பற்றின கனவுகள் அவன் வாழ்வு முழுவதும் தொடர்வதுமாக செல்கிறது.

ஜெயமோகன் எழுத்தில் எப்போதும் காணப்படும் குமரி மாவட்டத்து மலையாளம் கலந்த அழகுத் தமிழ் கதையின் மொழியாகி வசீகரிக்கிறது..அதே போல அவரது கதைகளில் எப்போதும் உலவி வரும் யட்சிகளும், நீலியரும் காட்டிலும் நடமாடி ஒரு கனவு நிலைக்கு வாசகனைக் கொண்டு செல்கின்றனர். கம்ப ராமாயணமும், குறுந்தொகையும் அடிக்கடி கையாளப்பட்டு ஆசிரியரின் மொழி அறிவையும், கதை மாந்தரின் இலக்கிய ஆர்வத்தையும் உணர்த்துகின்றன.

ஆசிரியர் ஒரு போத மயக்கத்தில், ஒரு கிளர்ச்சியுற்ற நிலையில் மட்டுமே இந்தக் கதையை,அதுவும் ஒரே மூச்சில் மட்டுமே எழுதியிருக்க முடியும் என்று வாசகனை நம்பவைக்கின்றது , ஒரு காட்டாறுக்கிணையாகப் புரண்டோடும் கதையின் நீட்சி. வாசகனும் அடித்துச்செல்லும் காட்டாற்றுக்கு ஈடு கொடுத்து ஒரு பெரிய மனப்பிழற்வை எதிர்கொள்ளும் விதமாகக் காட்டில் புரண்டு எழுகிறான்.

...ஷஹி...

Monday, March 7, 2011

அம்மா உனக்கு..


ஊரெல்லாம் புகழ்ந்தது ..
தங்க மனசுக்காரியென்று.


உற்றாருக்கு நானென்றால் ..
உறவாட வெகு விருப்பம்.

வாசலில் தேடி வந்து,
உரிமையாய் உணவு கேட்பர்..
வீதியில் சுற்றும், விதியில்லாதவர்.

தோழியருக்கும் நான் தான்
துயரத்தில் உற்ற துணை.

மாமியாரே கூட ..
'மகள் போல 'என்று விட்டார்!

அவருக்கு நான் தான்,
அன்பின் திருவுரு,

"உலகில் சிறந்த அம்மா "
என்பர் என் பிள்ளைகளின் தோழர்களும்!

" நிறைந்தது"..
என்று...
நினைக்க ஆசை தான்...

அவ்வப்போது அவசரத்திலும்,
எப்போதாவது ஆத்திரத்திலும்,
நான் அலட்சியமாய்ப் பேசி அழ வைக்கும்..
அன்னையின்..
கண்ணீர் பட்டு, கறையான என் நெஞ்சை..

...ஷஹி..

Wednesday, March 2, 2011

சொட்டுச் சொட்டாய் வர்ணம்..



ஒன்று,

இரண்டு,

மூன்று...

வண்ணங்கள்

எண்ணிக் கொண்டிருந்தேன்

பச்சை,

மஞ்சள்,

ஊதாவென.

உயர்ந்து படந்திருந்த

மலைக்காட்டின் செம்மலராம்..

மலைத்தென்றலும் கதிரொளியும்

பெருமழையுமாய்க் கனிந்து சிவந்து.

மலைப் பார்க்கவென வந்து,

உன்

நந்தவனத்திலும் உண்டு

வர்ணங்கள்

என்று,

ஒன்றிரண்டு வேர்களை,

விட்டு விட்டும் பிடுங்கி,

நட்டு வைத்துப் பார்த்தாய்

எனை,

உன் குடியிருப்பின் தீர்மானமான

நீள அகலச் சட்டத்துள்.

உன் முகம் பார்த்து,

மலர்ந்து,

கூம்பி,

இந்த இளங்காலையில்

நீ

கருணையுடன் ஊற்றும்

நீர்த் துளிகளை

எண்ணிக் கொண்டிருக்கிறேன்...

ஒன்று ,

இரண்டு....

..ஷஹி..

Related Posts with Thumbnails