Search This Blog

Showing posts with label இஸ்லாம் கவிதை. Show all posts
Showing posts with label இஸ்லாம் கவிதை. Show all posts

Tuesday, February 28, 2012

அத்தம்மாவின் ஆசையும் நேர் செய்த என் கூந்தலும்

நள்ளிரவிலும் உளூச்செய்து
மிக்க பேணுதலுடன் தொழுது வந்தவள் அத்தம்மா
தன் சிறு கொண்டையையும் அப்படியே பேணினாள்,
வளர்ந்து தன் மய்யத்தின் மானம் மறைக்கும் என.

முட்டி வரை நீண்ட கூந்தலுக்குக் கொடுத்த கவனத்தில்
கொஞ்சம் தன் சுவாசகாசத்துக்கும் கொடுக்காததால்..
தலையணையாய் சுருட்டவும்,
மார்பை மறைக்கவுமாய்,
கூந்தல் மட்டும் வளர்த்துப் போய்ச் சேர்ந்தாள் மாமி ..
"சுவர்க்கவாசி அவள்" என்று சின்னம்மா பேசினாள்.

ஆஃபீசுக்கு அலைந்ததில் கொஞ்சமும்
ஹஜ்ஜுச் செய்ததில் கொஞ்சமுமாய்
இருந்ததும் கொட்டிப் போய் எப்படியோ இருக்கிறாள் அம்மா ..
எதற்கும் இருக்கட்டும் என்று
கஃபன் ஒன்று தயாராக இருக்கும்
அவள் அலமாரி திறந்தால் வரும் வாசம் தான்
சொர்க்கத்திலும் அடிக்குமோ என்று கேட்டபடியிருக்கிறாள் மகள்.

தோள்வரையிலுமாக மட்டும் உள்ள, நேர்செய்த என் கூந்தலைப் பயந்து
எப்போதும் இருந்துவிடத் திட்டம் தீட்டி..
இப்படி இருக்கிறேன் நான் .

..ஷஹி..

(அத்தம்மா - பாட்டி , மையத் - சடலம் , உளூ - அங்க சுத்தி , கஃபன் - சடலத்துக்கு அணிவிக்கப்படும் ஆடை )

Friday, September 23, 2011

இறை(அ)ஞ்சுகிறேன்

(ஆகஸ்ட் 10இல் மூன்றாம்கோணத்தில் பதிந்தது)

தந்தைக்கு அஞ்சி

தாயை நாடும்

பிள்ளையைப் போல்

உலகைப் பயந்து

உன்னிடம் தேடுகிறேன்

புகல்.

உன்

பாதம் பற்றிடத் தாகிக்கும்

என் விரல்களை

மறுதலிப்பெனும்

தீ தீண்டிடும்

முன்

பாதுகாப்பின் தண்ணிழல்

கொடுத்து ஆற்று.

ஆயிரமாயிரம்

திரைகளுக்கு அப்பால்

இருக்கிறேன் என்கிறாய்..

திரை நீக்கும் வெளிச்சம்

எம் இறையச்சம்

அறிவேன்!

அருவமாயிருக்கிறாய்,

ஆறுதலளிக்கிறாய்..

கோடையில் வாடுபவனுக்கு

குளிர் தென்றலாய்.

எப்போதும்

யாசிக்கும் என் கரங்களில்,

இதோ

உனக்கு ஓர் பரிசு

பரிபூரண அர்ப்பணிப்பு...

மண்ணிலும் விண்ணிலும்,

உன்

கிருபை உண்டெனும்;

நற்செய்தி கிடைக்குமா

இந்தஅற்பப் பிறவிக்கு?

..ஷஹி..

Related Posts with Thumbnails