(குறிப்புகள் எடுத்துக் கொடுத்து தட்டச்சவும் வாசித்து உதவிய அப்பாவுக்கு நன்றி..)
முன்னுரை;
நாம் வாழும் இவ்வுலகு தோன்றி சுமார் 600 கோடி ஆண்டுகள் .ஆகின்றன.மனித இனம் தோன்றி சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளாகின்றன. மனிதன் ஆரம்பத்தில் மிருகங்களைப் போன்றே இயற்கையில் கிடைத்த உணவை அப்படியே உண்டு வாழ்ந்தான்.பின்னர் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயம், கால்நடைவளர்ப்பு,கைத்தொழில் என்று படிப்படியாக வளர்ந்தான். அவனுடன் சேர்ந்து உற்பத்தி சக்திகளும், உறவுகளும் வளர்ந்தன.
தனிச்சொத்து, குடும்பம், அரசு என்ற அமைப்புகளும் வளர்ந்து மொழி, பண்பாடு கலாச்சாரம் என பெரிய மாற்றங்களும் , சமூக தேசிய உணர்வுகளும் வளர்ந்தன. போக்குவரத்து வசதிகளும் பண்டங்களின் பயன்பாடுகளும் அவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதும் வளர்ந்ததும் ..விற்பனைக்கென்றே பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. தனக்கென உற்பத்தி செய்தவன், இன்னொருவரிடம் வேலைக்குச் சென்றான். இந்தத் தொழிலாளியின் கூலி கொடுபடாத உபரி உழைப்பு முதலாளியின் மூலதனமாகியது. இந்த மூலதனக் குவியல் புது கண்டுபிடிப்புகளுக்கும் புதிய உற்பத்தி கருவிகளுக்கும் தோற்றுவாயாய் அமைந்து, அறிவியல் வளர்ச்சி மனிதனின் அதீத வளர்ச்சியை நோக்கித் தள்ளியது.
இந்திய அரசியல்
நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், மைய அரசு பொதுத் துறையில் தொழிற்சாலைகளைக் கட்டமைத்தது. இறக்குமதிப் பொருட்களுக்கு, மாற்றுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன. இவை அரசியல் சாசனத்தில் மட்டும் இறையாண்மை மிக்க, சமதர்ம, சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசை அமைத்திட இந்தியர்களாகிய நாம் உறுதி பூண்டிருப்பதாக சொல்கிறது.
ஆனால் உண்மையில் நம்நாடு சோஷலிஸத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. இது முழுக்க முழுக்க முதலாளித்துவ நாடகமும் இல்லை. ஏனெனில் இது நிலச் சுவாந்தார்களிடம் சமரசம் செய்து கொண்டு நிலச்சீர் திருத்த நடவடிக்கைகளைக் கூட செய்யவில்லை. ஏன்.... இந்த அரசியல் சாசனமே போலியாகத் தயாரிக்கப்பட்டது. எவ்வாறெனில் அரசியல் நிர்ணய அவையில் இருந்த 385 பேர்களில் 93 சுதேசி சமஸ்தான மன்னர்களின் பிரதிநிதிகள் , மீதமுள்ள நபர்கள் பண்ணையார்கள், சொத்து வைத்திருந்தவர்கள், பட்டம் படித்தவர்கள் ஆகியோரால் (அதாவது மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதம்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் இந்திய அரசு தனியார் வசம் பெரும் தொழில்கள் வளர ஆக்கமும் ஊக்கமும் அளித்தது.
இதன் விளைவாக உற்பத்தி சக்திகள் ஒரு சிலரிடமே குவியவும், ...கிராமப்புரங்களில் வறுமையும் , நிலவியது. அரசு ,தொழிற்சாலை அதிபர்களிடமோ நிலச் சுவாந்தார்களிடமோ பெரும் வரி விதிப்பை மேற்கொள்ளவில்லை அதனால் சாதாரண ஏழை எளியவர்களுக்கு எந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.எனவே, 1950-80 களில் 3.5 ஆக இருந்த வளர்ச்சி ,1980 களிலிருந்து அதிலும் குறிப்பாக 6% முதல் 9% வரை ஆனது. 1991 முதல் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் வந்த பின் நாட்டின் வளர்ச்சி அதிகரிப்பதாக அரசு சொல்லிக் கொண்டாலும் , உண்மையில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு தான் அதிகரித்துள்ளது. இதற்கு முன் மக்களுக்கு வழங்கிய கல்வி, மருத்துவம், சிறுதொழில் வளர்ச்சி, சிறுவிவசாயிகளின் வளர்ச்சிக் கொள்கைகளையெல்லாம் அரசு கைவிட்டுவிட்டது. வெளிநாட்டு மூலதனத்திற்கு கதவை அகலத்திறந்து வைத்துவிட்டு, எண்ணை வளத்திற்குக் கூட தன்னிறைவு அடைய வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் போட பயந்து அமெரிக்காவின் சார்புக் கொள்கையை வெளிநாட்டுக் கொள்கையாக மாற்றிவிட்டது. ஒரு நிலைக் கொள்கையின் நாயகனாக இருந்த இந்தியா, இன்று மேற்கத்திய, வீழ்ந்து கொண்டிருக்கும், அரசுகளுக்குத் துணை போய் கொண்டிருக்கிறது.
சர்வதேச அரசியல்---அமெரிக்கா...
18 வது நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவான ஏகாதிபத்தியமாக உருவெடுத்தது. இவைகள் நடத்திய முதல் உலகப்போர் இவர்களையே பலவீனமாக்கி, பல லட்சம் பேர் மடிந்தனர். 2 ஆம் உலகப் போர் உலகச்சந்தையை மறுபங்கீடு செய்வதற்காக திரும்பவும் நடத்தப்பட்டது. ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் பாட்டாளிவர்க்கம் வெற்றியை நோக்கிச் சென்றது. ஆனால் சில காலம் கழித்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவுடன் சேர்ந்து மூழ்கின. இது ஏகாதிபத்திய சதி. பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவமும் ரஷ்யாவிலும் சீனாவிலும் அதிகார வர்க்க முதலாளித்துவத்தின் மூலம் ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது.
இவ்வாறாக அமெரிக்கா உலகத்தின் தனிப்பெரும் சக்தியாக தன்னை நினைத்து ஆட்டம் போடுகிறது. புதிய சந்தைகளை தனக்குத் தேடி அலைந்த அமெரிக்கா, உலகம் முழுவதும் தன் குடையின் கீழ் கொண்டு வரவும், உள்ள சந்தைகளை காப்பாற்றிக் கொள்ளவும் உலகம் முழுவதும் தன் ராணுவங்களை நிறுத்தி வைத்துள்ளது. இல்லாத பேரழிவு ஆயுதங்களை ஈராக்கில் தேடி ஈராக்கிய மக்கள் 1 லட்சத்தி 17 ஆயிரம் பேரை கொன்றொழித்து, நாகரிகத்தின் தொட்டிலான பாக்தாத் நகரை சுடுகாடாக்கி விட்டது.
பொருளாதார பின்னடைவு காலமான 2009 இல் கூட உலக ஆயுத விற்பனையில் 70% தான் மட்டுமே விற்று 37.8 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக ஆஃப்கன் தீவிரவாதிகளை தானே வளர்த்து விட்டு, கடந்த 11 ஆண்டுகளாக அவர்களை அழிப்பதாக சொல்லிக் கொண்டு ஆஃப்கன் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. ஜப்பானில் உள்ள தனது படை முகாமை இது மாற்றாததன் காரணமாக ஜப்பானிய பிரதமர் தன் பதவியை இழந்தார். தான் மட்டும் 2200 அணுஆயுதங்களை வைத்துக் கொண்டு..... மின்சாரம் தயாரிக்கவும், புற்றுநோய்க்கு ஐசோடோப் தயாரிக்கவும் , அணு ஆற்றலை வளர்த்துக் கொள்ள நினைக்கும் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்து அதனை அச்சுறுத்தி வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக கியூபாவை முடக்கிப் போட்டுள்ளது. அணு ஆயுதம் வைத்திருக்கும் இஸ்ரேலை தன் அடியாளாக அரேபிய தீப கர்ப்பத்தில் வளர்த்துவிட்டு, பாலஸ்தீன, காஃஜா, சிரியா மற்றும் லெபனான் பகுதி மக்களைத் தொடர்ந்து கொன்று குவித்து வருகிறது. வட கொரியா மற்றும் தென்னமெரிக்க நாடான வெனிசுலாவையும் அச்சுறுத்துகிறது. உலக மக்களால் பெரிதும் வெறுக்கப்படும் நாடான அமெரிக்காவின் நண்பர்கள் இஸ்ரேல், தைவான், சவூதி அரேபியா மற்றும் ஐரிஸ் ரிபப்லிக் ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே. இந்த நான்கு நாடுகளும் உலகின் மூன்று மூலைகளில் உள்ளன. இவற்றின் மக்கள் தொகை நம் தமிழ் நாட்டு மக்கள் தொகையை விடக் குறைவு. உலகில் அமெரிக்கா தான் அதிகமாகக் கடன் வைத்துள்ள நாடு. இந்த நாட்டால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது அதிகமாக வரி விதிக்க முடிவதில்லை. ஏனெனில் அவர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு வருகின்றனர். எனவே ஏழைகளுக்கு சமூகப் பாதுகாப்புக்குக் கூட செலவழிக்க கார்ப்பரேட்டுகள் இசைவதில்லை. ஹால் பர்ட்டன் மற்றும் பிளாக் வாட்டர் ஆகிய நிறுவனங்கள் ஈராக்கிலும் ஆஃப்கானிலும் அமெரிக்காவுக்காக சண்டையிடும் அளவுக்கு ஆட்களை வைத்துள்ளனர். இவர்களின் 71 ஆயிரம் பேர் இப்போது ஆஃப்கனில் சண்டையிட்டு வருகின்றனர். இவர்கள் விளையாட்டுக்காகக் கூட மக்களைக் கொல்கின்றனர்.
கார்ப்பரேட்டுகளின் தலைவனான அமெரிக்கா உலக மக்களை தான் கொல்கிறது. தன் மக்களை வாழ வைக்கிறதா? அது தான் இல்லை!!!! 1976 இல் இந்நாட்டின் ஒரு சதவிகித மக்கள் இந்நாட்டின் வருமானத்தில் 8.6% பெற்றனர். 2007 இல் இது 23.5 % ஆக உயர்ந்து விட்டது. 2008 இல் பத்தில் ஏழு அமெரிக்கர்களின் வருமானம் உயராமல் அப்படியே நின்று விட்டது. 1983 இல் இங்கிலாந்துப் பிரதமர் தாட்சர் தன் நாட்டு வங்கிகள் தங்கள் மொத்த மூலதனத்தில் 5 % ஐ பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய அனுமதித்தார். 1996 இல் இது 25% ஆகி பின்னர் 1999 இல் இந்த வரையரையும் கை விடப்பட்டது. இந்த முறையை அப்படியே பின்பற்றிய அமெரிக்க வங்கிகள் ஊக வணிகத்தில் ஈடுபட, அமெரிக்க பொருளாதார பலூன் வெடித்து விட்டது. பேராசை பெரு அழிவை உண்டாக்கி சாதாரண அமெரிக்க மக்களின் சேமிப்பை எல்லாம் அழித்துத் தெருவில் நிறுத்தி விட்டது. இவர்களை மீட்க இவர்களுக்கு அரசு 70 ஆயிரம் கோடி டாலர்களை கடன் அளித்தது. இந்தப் பணக்கார வங்கியாளர்கள் தற்போது சீரழிவிலிருந்து மீண்டு மக்கள் பணத்தின் மூலம் போனசும் பெறுகின்றனர். பெரும்பாலான தொழிற்சாலைகள் பொருளாதார சீரழிவால் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டது. புதிய வேலை வாய்ப்புகளும் இல்லை. வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை இப்போது 10 % ஆகும்.
ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள்...
இவர்கள் ஒன்றும் அமெரிக்காவுக்கு சளைத்தவர்கள் அல்ல..இவர்களும் பேராசையும், சுயநலமும் ,திமிரும் உள்ளவர்களே! தங்கள் நாட்டு மக்களின் செல்வத்தையெல்லாம் ஊக வணிகத்தில் அழித்து விட்ட இவர்கள் அரசை நடத்தக் கூட பணம் இல்லாமல் உலக வங்கியிடம் கடன் வாங்கி ,அது சொல்லும் கட்டுப்பாடுகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து, செலவினத்தைக் குறைக்க மக்களின் சமூக நலத் திட்டங்களில் கை வைத்து விட்டன. இதனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அரசு ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிளாளர்கள் மற்றும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் , முனிசிபல் தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் தங்களை ஆள்பவர்களுக்கு எதிராகக் கலகம் செய்து வருகின்றனர். இங்கிலாந்து நாட்டு போக்குவரத்துத் தொழிலாளர் தலைவர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தித் தான் இந்த அரசைப் பணிய வைக்க முடியும் என்கிறார்.
தற்போது பிரிட்டன் அரசு 1லட்சத்து 50 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியதுடன் 155 பில்லியன் ஸ்டெர்லிங்க் பட்ஜட் குறைவை ஈடுகட்ட ஒவ்வொரு துறையும் 25 % முதல் 40% வரை சிக்கனதைக் கடைபிடிக்க ஆணையிட்டு வருகிறது. ஸ்டூவட் ஃப்ரேஸர் என்ற பங்கு வர்த்தகர் இங்கிலாந்து வங்கி 7 பில்லியன் போனஸ் வழங்கியது சரி தான் என்றும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிலவத்தான் செய்யும் என்றும் ஏனெனில் இறைவன் மனிதர்களுக்கு மூளையை ஒரே அளவாக வைப்பதில்லை என்றும் திமிராகப் பேசியுள்ளார்.
ஃப்ரான்ஸ் நாடு கூட்டாண்மையில் கைப்பாவையாக செயல்பட்டு, தொழிலாளர்களின் ஓய்வு பெரும் வயதை உயர்த்தி, பென்ஷனைக் குறைத்துள்ளது. ஹங்கேரியில் பயங்கரப் பொருளாதார வீழ்ச்சி. ஸ்பெயின் தன் வரலாற்றிலேயே கண்டிராத வேலையின்மையைக் கண்டுள்ளது. ஐஸ்லாந்தில் வலது சாரி அரசாங்கம் மக்களின் எதிர்ப்பில் நொறுங்கிப்போனது. இத்தாலியில் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளகளுக்கு எதிராக உள்ளூர் தொழிலாளர்கள் கிளம்பியுள்ளனர். ரோமில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடக்கின்றன. கிரீஸ் அரசின் நிலையும் இதுவே. சுவிட்ஸர்லாந்தின் யூபிஎஸ் வங்கி 17 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்து, 2000 தொழிலாலர்களை வேலையை விட்டு விலக்கியது. கனடாவில் ஓன்டிரியோ என்ற புகழ் மிக்க தொழில் பகுதி கடும் நெருக்கடியில் தவிக்கிறது. ஜப்பானின் சோனி நிறுவனம் 16 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி, தென்னமெரிக்க நாடுகளில் இருந்து பிழைப்புத்தேடி ஜப்பான் வந்தவர்களுக்கு விமானக் கட்டணம் கொடுத்து அவர்கள் நாட்டுக்கே திருப்பி அனுப்புகிறது. மிஸ்ஸான் 20 அயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பி விட்டது.
இவ்வளவு நடந்தும் அமெரிக்காவோ ஐரோப்பிய யூனியன் நாடுகளோ அல்லது ஜப்பான் போன்ற முதல்லாளித்துவ கார்பரேட்டுகளின் பிடியில் உள்ள அரசுகளுக்கு புத்தியோ வந்ததாகத் தெரியவில்லை. ஏனெனில் இவை அனைத்துமே கூட்டாண்மையால் நிறுவப்பட்ட அரசுகள். இவர்கள் தொடர்ந்து வலது சாரி தத்துவங்களையே கடை பிடிக்கப் போவதாகவும், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் சொன்ன படி மக்கள் நலத்திட்டங்களைக் குறைத்து விடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். பொருளாதார மற்றும் தொழிற்நுட்பத்தில் பின் தங்கியுள்ள ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் தெற்கு நாடுகளில் தங்கள் பொருட்களுக்கு சந்தைகளைப் பிடிக்க இவர்கள் அலைகின்றனர். இந்தியாவும் ஐரோபிய யூனியன் வலையில் சிக்கி பெரும் நெருக்கடியை சந்திக்க உள்ளது.
கூட்டாண்மையின் தோற்றம்...
நிலப்பிரபுத்துவத்தை அழித்து முதலாளித்துவமும் ,முதலாளித்துவம் ஏகாதிபத்தியங்களாகவும்-ஏகாதிபத்
பால் க்ருக்மேன் தனது கட்டுரையில், ரிபப்ளிகன் கட்சியினர் தங்களுக்காக ஃபாக்ஸ் நியூஸ் ஏஜென்ஸியினர் வேலை செய்வதாக எண்ணியிருந்தனர். ஆனால் பின்னர் தான் அவர்களுக்குத் தெரிந்தது தங்கள் கட்சியில் கொள்கைகளை வகுப்பவர்கள் ஃபாக்ஸ் நிறுவனத்தில் சம்பளம் பெற்று வேலை செய்கிறார்கள் என்று. எனவே ரிபப்ளிகன் கட்சியினர் தான் ஃபாக்ஸ் நியூசின் வேலையாட்கள். இதே போல் எல்லா விளம்பர நிறுவனங்களும் கூட்டாண்மைக்கு விலை போகிறவை அல்லது முழுவதும் விலைக்கே வாங்கப்பட்டவை.
ஏன்.... தமிழ் நாட்டில் கூட ஒரு கட்சி தொடங்க முக்கிய நிபந்தனை கொள்கைகள் அல்ல. பணமும் தொலைக்காட்சி உரிமமும், பத்திரிக்கைகளும் தான். ஹிந்து நாளிதழின் நிருபர் திரு. பி. சாய்நாத் 5/8/2010 அன்று வெளியிட்ட செய்தியில் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சாதகமான விஷயங்களை செய்திகளைப் போல் வெளியிடுகின்றன என்கிறார். இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் இது உண்மை தான் என்று ஆதாரங்களுடன் தெரிந்தும் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடுக்காதது மட்டுமன்றி அவர்கள் பெயரைக் கூட வெளியிடவில்லை. இந்தக் கூட்டாண்மை நிறுவன அதிபர்கள் ஒன்று சேர்ந்து உலக சந்தையை பங்கு போட்டுக் கொண்டனர்.
மார்க்ஸ் சொன்னதைப் போல் உலகத் தொழிளாலர்கள் ஒன்று சேரவில்லை. உலக முதலாளிகள் ஒன்று சேர்ந்து கூட்டாண்மை நிறுவனங்களை அமைத்து அந்தந்த நாட்டு அரசுகளை தம் ஆளுகையின் கீழ் வைத்துள்ளனர். உலக வங்கியின் முன்னாள் ஆலோசகரான ஹாஜுங்கேங்க் தனது முதலாளித்துவம் என்ற புத்தகத்தில் நோபல் பரிசு பெற்ற ஹெர்பர்ட் சைமன் என்பவர் தெரிவித்த கருத்து ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அந்தக் கருத்து வேற்று கிரகத்திலிருந்து எந்த மனிதன் இப்பூவுலகிற்கு வந்தாலும் இங்கு சந்தைப் பொருளாதாரம் இல்லை, மாறாக முதலாளிகள் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொண்ட அமைப்புப் பொருளாதாரம் உள்ளது என்பதாகும்.
இவர்களுக்கு வேண்டிய எல்லா நிதி வசதிகளையும் வங்கிகளே அளிக்கின்றன, அரசே இதற்கான நிதி அமைப்புகளையும் தங்கு தடையின்றி மின்சாரத்தையும் தண்ணீரையும் குறைந்த விலைக்கு வழங்குவதுடன் இவர்கள் ஆலைகளுக்கு தொழிலாளர் நல சட்டங்கள் அமல் படுத்துவதில் இருந்து விலக்கும் அளிக்கிறது. இவர்களுக்கு நிலம் கையகம் செய்யும் பணியை அரசே செய்கிறது. இவர்களுக்கு வரி விடுமுறையும் உண்டு. இந்த வரியை 10% லிருந்து 71/2 % ஆகக் குறைத்து நமது அரசு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை இழந்துள்ளது.
ஒரு முறை ஜார்ஜ் புஷ் பேசும் போது நான் கோல்கேட் பேஸ்ட் தான் உபயோகிக்கிறேன் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் இவர்களுக்கு விளம்பரம் செய்கிறார்.ஒரிசாவில் வேதாந்தா நிறுவனம் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அமைச்சரிடம் நமது பிரதமர் சிபாரிசு செய்கிறார். ஏர்டெல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் செயல்பட நமது பிரதமர் தென்னாப்பிரிக்க அரசிடம் சிபாரிசு செய்கிறார். வெளிநாடுகளுக்கு நமது இந்திய நாட்டு வர்த்தக, அயல்உறவு, பிரதமர் போகும் போதெல்லாம் இந்நிறுவனங்களின் பிரதிநிதிகளும் செல்வது வாடிக்கையான ஒன்று. அரசு வரவு செலவுத் திட்டங்கள் தயாரிக்கும் போது இவர்களைக் கலந்து ஆலோசித்தே தயாரிக்கிறது. தேர்தல்கள் வந்து விட்டால் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு அள்ளி அள்ளி கொடுப்பவர்களும் இவர்களே. இவர்களின் செல்வச்செழிப்பும், ஊதாரித்தனங்களும், வாழ்முறைகளும், வருமானங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
உலகிலேயே அதிக செலவில் கட்டப்படும் 27 மாடிகள் கொண்ட குடியிருப்பு அம்பானியுடையது. இதற்கான செலவு 8000 கோடி ரூபாய் ஆகும்.இந்த நிறுவனங்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்ற தத்துவத்தை நன்கு அறிந்தவர்கள். இவ்வுலகில் தான் எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டே! எனவே கர்நாடகாவில் இவர்கள் நினைத்தால் பணத்தைக் கொட்டி ஆட்சி அமைக்க முடியும்! இவர்கள் மறுத்தால் ஆட்சி கவிழும். இவர்கள் வெறும் சுரங்கங்களை மட்டும் அங்கு நடத்தவில்லை. இவர்கள் மதுபான உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், மருத்துவக் கல்வி நிறுவனர்கள் மற்றும் ஒப்பந்தப் பணிபுரிபவர்கள் என்று பல வடிவில் இருப்பார்கள்.
கூட்டாண்மை சுரண்டல்..
இந்தக் கூட்டாண்மை அதிபர்கள் ஆஃபிரிக்க நாடுகளில் 2006 ஆம் ஆண்டிலிருந்து 15.20 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விலைக்கோ அல்லது 99 ஆண்டு குத்தகைக்கோ வாங்கியுள்ளனர். இந்த நிலங்கள் ஆஃபிரிக்க கண்டத்தில் எத்தியோபியா, கானா, மாலி, மடகாஸ்கர், மொசாம்பிக், சூடான், டிஆர் சி காங்கோ மற்றும் தான்சானியா நாடுகளில் இருந்து வாங்கப்பட்டதாகும். வாங்கியவர்கள் வலைகுடா நாடுகளிலும், தென் கொரியாவிலும், சைனாவிலும், இந்தியாவிலும் உள்ளவர்கள் ஆவர். இந்த நிலங்களை வாங்க அரசுகளும் குறைந்த வட்டிக்கு இவர்களுக்கு கடன் தருகிறது. இதில் உணவுப் பயிர்களும், எத்தனால் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
கூட்டாண்மை நிறுவனங்களால் அமைக்கப்பட்ட நம் அரசு மக்கள் நலனையும் கிராமப்புர விவசாய நலனையும் பின்னுக்குத் தள்ளியதால், படு மோசமாக பாதிக்கப்பட்டு சுரண்டலுக்கு ஆட்பட்டு கடனில் தத்தளித்த இந்திய விவசாயிகள் சுமார் 2 லட்சம் பேர், தற்கொலை செய்துள்ளனர் . 2009 இல் விவசாயத்துக்கு செய்த ஒதுக்கீடு 3.34 %. 2010 இல் இது 2.59 ஆகி விட்டது. 11 ஆவது திட்டத்தில் கிராமப்புர கட்டமைப்புக்கு மொத்த நிதியில் 30.5% ஆன வெறும் 14.40 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. 12/8/2010 நாளிட்ட ஹிந்து பத்திரிக்கையின் நிருபர் திரு. சாய்நாத் அவர்கள் தேசீய ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படுகின்றன. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்படும் தகுதியை மக்கள் பெற பல வித வரையறைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் சுரண்டல் மட்டும் தங்கு தடையின்றி உலக மயமாக்கப்படுகின்றது என்று தெரிவிக்கின்றார். ஒட்டு மொத்த இந்திய உற்பத்தி அதிகரிப்பால் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர் என்பதே உண்மை.
ஒட்டு மொத்த உற்பத்தி உயர உயர பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகவும், ஏழைகள் மேலும் பரம ஏழைகள் ஆகவும் இந்த சுரண்டல் போக்கு தான் காரணம். இவ்வாறு முகேஷ் அம்பானியின் சொத்து ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 40 லட்சம் அதிகரிக்கிறது. இந்தியாவில் ரூ.4.60 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் 126700 பேர். இவர்கள் நம் நாட்டு மக்கள் தொகையில் 0.01% இவர்களிடம் உள்ள பணம் ரூ.20 லட்சம் கோடி. இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் ரூபாய். 40,141 . இந்திய மக்களில் 70% மக்கள் பெரும் சராசரி தினசரி ஊதியம் ரூ.20 மட்டுமே என்று செங்குப்தா கமிட்டி கூறுகிறது. 116 கோடி மக்கள் தொகையில் ஆண்டு வருமானம் பெரும் மொத்த மக்களில் 70% மக்கள் 7300 மட்டும் பெறுகின்றனர். மீதமுள்ள 30% மக்களின் ஆண்டு வருமானம் ரூ.1,16,770. 70% சாதாரண மனிதனை விட இந்த 30% அசாதாரண மனிதன் 16 மடங்கு பெறுகிறான்.
இந்த கூட்டாண்மை நிறுவனங்கள் நம் நாட்டு மூலப் பொருட்களையெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நம் நாட்டை காலி செய்து விட்டன. 1990-91 இல் ஈயம் உற்பத்தி செய்ய தேவையான தாதுப் பொருட்கள் ஏற்றுமதி 1,39,419 டன்களில் இருந்து 2006-07 இல் 612641 டன்களாகின. இதே போல் சுண்ணாம்புக்கல் ஏற்றுமதி 1995-96 இல் 2 லட்சம் டன்களில் இருந்து 2007-08 இல் 8,79,000 டன்களாயின. கர்நாடகாவிலிருந்து இரும்புத்தாது சென்னை, க்ரிஷ்னப்பட்டினம், காகிநாடா மற்றும் மர்மகோவா துறைமுகங்கள் மூலம் 2003-2004 இல் 20,49,961 டன்களாக இருந்து 2009-2010 இல் 71,27,937 டன்களாயின. கடல் சார் உயிரின ஏற்றுமதி 1990-1991 இல் 1,39,419 டங்களில் இருந்து 2006-2007 இல் 6,12,641 டன்களாயின. திரு. மதுகோடா 2006 இல் ஜார்கண்டில் முதல்வர் ஆனவுடன் அதுவரை போடப்பட்டிருந்த 44 சுரங்கப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யப் போவதாக மிரட்டினார். ஆனால் இவரே புதிதாக 23 சுரங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டு 100 அனுமதிகளை வழங்கியுள்ளார். இவர் பெற்ற லஞ்சம் மட்டும் ரூ.4300 கோடி என்றால் ......இந்த சுரங்க தாதுப் பொருட்களின் மதிப்பு என்னவென்று நாம் யூகிக்கலாம். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மாப்பிள்ளை அனில் குமாருக்கு 37 லட்சம் ஏக்கர் இரும்புத்தாது சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஆந்திர சட்ட சபையில் எதிர் கட்சிகள் கூச்சல் போட்டனர். இதில் 13 லட்சம் கோடி டன்கள் தாது உள்ளதாகத் தெரிகிறது.
நம் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என். எல் இல் வேலை பார்க்கும் உயர் மட்ட அலுவலர்கள் தனியார் தொலைபேசி சேவை நிலையங்களுக்கு சாதகமாகவே எல்லா வேலைகளையும் செய்து ஓய்வு பெற்ற பின் அவர்களிடம் அதிக சம்பளத்துக்கு வேலைக்கு சென்று கூட்டாண்மைக்கு ஆதரவாகவும் பி.எஸ். என். எல் லுக்கு விரோதமாகவும் செயல் படுகின்றனர். இந்த கூட்டாண்மை நிறுவனங்கள் சென்ற பார்லிமென்ட் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்குக் கொடுத்த தேர்தல் செலவுக்கான பணம் மட்டும் ரூ.80 ஆயிரம் கோடி என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது.
உலக மற்றும் இந்திய நாடுகளில் கூட்டாண்மை ஏற்படுத்திய தாக்கங்கள்....
இந்த கூட்டாண்மை அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு பரவலான உலக அதிகாரங்கள் ஒரு தலைபட்சமாக அதிகம் வழங்கப்படுகின்றன. பிரேஸில்,ரஷ்யா, இந்தியா மற்றும் சைனா சேர்ந்த பிரிக் நாடுகள் உலக ஜனத்தொகையில் 40% கொண்டுள்ளன. இவர்களின் பொதுதொழில் பொருள்வளர்ச்சி உலகில் 20% .ஆனால் இவர்கள் அனைவருக்கும் சேர்த்து சர்வதேச நிதியக் குழுமத்தில் (ஐ.எம்.எஃப்) 10% தான் ஓட்டளிக்கும் அதிகாரம் உள்ளது. இந்த நிதியத்தின் கட்டளைக்கிணங்க எல்லாவற்றையும் தனியார் மயமாக்கியதன் விளைவை அனைத்து நாடுகளும் இன்று தினந்தோறும் சந்தித்து வருகின்றன.
இவைகள் அனைத்தும்...அதாவது ஆளும் வர்க்கங்களும் அரசும் மக்களை விட்டும் தனிமைப்பட்டுள்ளன. இந்த எல்லா அரசுகளையும் அந்தந்த நாட்டு மக்கள் வெறுக்கிறார்கள். நமது நாட்டின் மனித வள மேம்பாட்டு எண் 128. உலகில் உள்ள 177 இல் நம் வரிசை 128!.இந்த உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நிதியம் அனைத்துமே கூட்டாண்மைக்கான அமைப்புகள். இவை அந்தந்த நாட்டு அரசுகள் மக்களுக்கு சேவை செய்வதையோ அல்லது கல்வி, சுகாதாரம்,வீட்டு வசதி ,குறைந்த வட்டியில் அல்லது வட்டியில்லா கடன் வசதி ஆகியவை வழங்குவதையோ எதிர்க்கின்றன. ஏனெறால்...அது கூட்டாண்மைக்கு எதிரானது. இருப்பினும் வளர்ந்த நாடுகள் வளர்ச்சி அடையாத நாடுகளைச் சுரண்டி, தன் நாட்டு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை அளித்து வந்தன. இந்த கூட்டாண்மை நிறுவனங்களின் பேராசையால், வேலை இழந்து, வீடிழந்து பணக்கார நாடுகளின் மக்களே , தற்போது டெண்டுகளில் தங்கும் நிலமைக்கு வந்து விட்டனர். இந்தியா இன்னும் மோசம். நம் நாட்டின் மொத்த வருமானத்தில் சமூகப் பாதுகாப்புக்கு செலவழிப்பது வெறும் 6.7%. ஜெர்மனியில் இது 25% ,ஃபிரான்ஸில் 23%.அமெரிக்காவில் சராசரி வருமானம்( பெர் காபிடா இன்கம்) 47014 டாலர்.
இந்த கூட்டாண்மை நிறுவன கொள்ளையால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு... விவசாயம், கிராமப்புர அடிப்படை கட்டமைப்புகள், சிறு தொழில் கடன் வசதி எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இந்தக் கூட்டாண்மை நிறுவனங்கள் வருவதற்கு முன் இந்திய மக்களுக்கு சராசரியாக 440 கிராம் உணவுப் பொருள் கிடைத்து வந்தது. 2005-2008 இல் இது 436 ஆகக் குறைந்து விட்டது. இதே காலகட்டத்தில் பருப்பு வகைகள் 70 கிராமில் இருந்து 35 கிராமாக குறைந்து விட்டது.
கிராமப்புறங்களுக்கு மஹாராஷ்டிர அரசு வேளாண் பணிகளுக்காக 82.4 % கடன் உதவியை 1990 களில் அளித்து வந்தது. நகர்ப்புறங்களுக்கு 17.4% ஆக இது இருந்தது.இதே அரசு 2008 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களுக்கு வழங்கிய கடன் 42.4 % ஆக குறைந்து நகர்ப்பகுதிகளுக்கு 57.6 % ஆக உயர்ந்து விட்டது. சரியான உணவு, வீடு ,கல்வி மற்றும் சுகாதாரம் இல்லாத ஒரு சமூகம் நோய் பிடித்தவர்களாக எந்த ஒரு கடின வேலையையும் செய்ய இயலாதவர்களாகத்தானே இருப்பார்கள்? அது தான் நடந்தது. 2005-2006 ஆம் ஆண்டுகளில் 3 வயதுக்கு கீழ் உள்ள 46% குழந்தைகள் எடை குறைவாய் உள்ளனர். 33% மகளிர் மற்றும் 28% ஆண்கள் பாடி மாஸ் குறைவாய் உள்ளனர். பிறந்து 36 மாதங்கள் மற்றும் ஆறு வருடங்களுக்குள் இருக்கும் குழந்தைகளில் 79% பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 வயது முதல் 49 வயதுக்குள் உள்ள பெண்களும் ஆண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் 56 ஆகும். கர்ப்பிணிகள் 58% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே தண்டகாரன்யா பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர். இந்த இடங்களில் சுரங்கப்பணிக்கும் தொழிற்சாலை கட்டுவதற்கும் அந்தப் பகுதி மக்களை இடம் பெயரச்சொல்கிறார்கள். ஆனால் அந்த மக்களுக்கு அந்தப் பகுதியில் தான் வாழ்விடமும், உணவும், தண்ணீரும், தேனும், சிறு சிறு வேட்டைப் பிராணிகளும் உள்ளன. கூட்டாண்மை நிறுவனங்களுக்கு உதவி செய்யும் உயர் மட்ட மாநில அரசு தலைமைப் பதவிகளில் உள்ள காவல் மற்றும் அதிகாரிகள் இந்த இடங்களை அவர்களுக்கு ஒதுக்கலாம்... அவர்களும் பெறலாம். ஆனால் அந்த இடங்களுக்குச் சொந்தமான பழங்குடியினர் எங்கு செல்வார்கள்? எனவே தான் அந்தப் பகுதிகளில் இப்போது பெரிய போராட்டம் நடந்து வருகிறது.
அருந்ததி ராய் சொல்வது போல பழங்குடியினர் தங்கள் பூமியைக் காக்கவே ஆயுதம் ஏந்துகிறார்கள்..எல்லா மாவோயிஸ்டுகளும் ஆதிவாசிகள் ஆனால் எல்லா ஆதிவாசிகளும் மாவோயிஸ்டுகள் அல்ல. இந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி ஏந்திய காந்திகள்.
நமது நாட்டிற்கு அத்தியாவசிய தேவையான தாதுப் பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து நமது சுற்றுச்சூழலையும் மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு மாசு படுத்துவதால் நாமும் நமது சந்ததியினரும் பெரும் இன்னலுக்கு ஆளாவோம். லஞ்சத்திலேயே ஊறித்திளைக்கும் அதிகாரி வர்க்கத்தை வளர்த்து எடுத்ததே இந்த முதலாளி வர்க்கம் தான். தற்போது மொத்த சமூகமே லஞ்ச லாவண்யத்தில் திளைக்கிறது.
தற்போது ஐ.டி அமைச்சர் திரு. ஏ. ராஜா 1.40 லட்சம் கோடி ஊழலினால் பதவி விலகியதற்கு இந்த கூட்டாண்மையினரே காரணம். காமன் வெல்த் கேம்ஸ் லஞ்சம், ஐ.பி.எல் கிரிக்கெட் லஞ்சம், மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு லஞ்சம் எல்லாம் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள். முன்னாள் சட்ட அமைச்சர் ஷாந்தி பூஷன் ஓய்வு பெற்ற 16 உச்ச நீதி மன்ற நீதிபதிகளில் 8 பேர் ஊழல்வாதிகள் என்று உச்சநீதி மன்றத்திலேயே தெரிவிக்கின்றார். கர்நாடகாவில் லஞ்சப் புகாரில் அகப்பட்ட அரசு அலுவலர்களில் 10% கூட தண்டனை பெறவில்லை. போபால் விஷ வாயு வழக்கு, பாபர் மஸூதி இடிப்பு வழக்கு, பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு, சத்தியம் கூட்டாண்மை நிறுவன வழக்கு , குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட வழக்கு, சோரப்புதீன் என்கவுன்டர் வழக்கு,கோத்ரா ரயில் வண்டி எரிப்பு வழக்கு, டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கு, ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்கு இவையெல்லாம் எத்தனை ஆண்டு வழக்குகள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதில் , சத்தியம் அதிபர் ஜெயிலிலேயே இல்லை என்பதும் தற்போது தான் உச்ச நீதி மன்றம் தலையிட்டு ஜெயிலில் அடைத்துள்ளது என்பதும் அறிந்ததே.
கிரிகெட் சூதாட்டம், ஐ.பி.எல் சூதாட்டம், வெளிநாடுகளில் கால்பந்தாட்ட வீரர்களை வைத்து நடத்தும் சூதாட்டம் என்று கலை மற்றும் பண்பாட்டுத் தடங்களை இவர்கள் போகும் வீச்சு மிகவும் அதிகமாகும். 150 கோடி ரூபாய் செலவில் எந்திரன் படம் தயாரித்து முதல் ஷோ பார்ப்பவர்களிடம் 5000 ரூபாய் கட்டணம் வாங்கப்பட்டிருக்கிறது. கூட்டாண்மையின் தாக்கத்தால் தமிழ் மொழி அழிந்து வருகிறது என்று கவிஞர் வைரமுத்து வருந்துகிறார். ஜங்க் உணவுகளை உண்டு பாப் கலாச்சாரத்தில் ஊறித்திளைக்கிறது மேல் தட்டு வர்க்கம். அல்லலுறும் கீழ் தட்டு மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்ணக் கூட வழியின்றி வாழ்வாதாரமான உணவு, தண்ணீர், கல்வி சுகாதாரம், வீடு ,வேலைவாய்ப்பு, கழிப்பிட வசதி, விளையாட்டு,கலை மட்டுமல்ல பண்பாட்டு வாசல்களும் மூடப்பட்டு விட்டன.இவர்களை மேலும் ஓட்டாண்டியாக்க தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மதுபானக்கடைகள் திறந்து சென்ற ஆண்டு 12500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. சென்ற தீபாவளியில் மட்டும் இவர்கள் 90 கோடிக்கு மது அருந்தியுள்ளனர். காமன் வெல்த் போட்டிக்காக டெல்லியிலிருந்து 60 ஆயிரம் பிச்சைக்காரர்கள் துரத்தப்பட்டுள்ளனர். .
.சுற்றுச்சூழல் மாசு...
உலகில் எந்தப் பொருளையும் வாங்கிவிடலாம் அல்லது அதிகரித்துக் கொள்ளலாம் நிலத்தைத் தவிர. கூட்டாண்மை வாதிகள் உலகம் முழுவதிலும் உள்ள நிலம், நீர், காற்று ஆகியவைகளை மாசுபடுத்தி தங்கள் லாபவேட்டையை தொடர்கின்றனர். பங்களாதேஷ் ,லட்சத்தீவு மற்றும் கடல் மட்டத்தில் உள்ள அனேக நாடுகள் கடல் நீர் மட்ட உயர்வால் விரைவில் அழியப் போகின்றன. இந்த கூட்டாண்மைவாதிகள் இதைப்பற்றியெல்லாம் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. இவர்களின் தலைவர் திரு. ஒபாமா அவர்கள் கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் தக்க முடிவை எடுக்கத்திணறி , தன் தோல் உரிபட்டு நிற்கிரார். தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்னால் உலகில் இருந்த கரியமில வாயுவின் அளவு ஒரு மில்லியனில் 280 பகுதி. 2 டிகிரி புவியின் வெப்பம் உயர்ந்தால் 50 % கரியமில வாயு உயர்ந்து 450 பகுதியாக மாறும். இது தான் அதிகபட்சமாக இருக்க முடியும். உலக மக்கள் தொகையில் 5% உள்ள அமெரிக்கா, 27% கரியமில வாயுவை வெளியிடுகிறது. 7.5% மகக்ள் தொகை மட்டுமே கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள் 25% கரியமில வாயுக்களை வெளியேற்றுகிறது. அதாவது உலக மக்கள் தொகையில் வெறும் 12.5% அதாவது அரைக்கால் வாசி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் 51% நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. உலக மக்கள் தொகையில் 17.5% உள்ள இந்தியா 3% ம் 20% கொண்ட சீனா 10% ம் ,கரியமில வாயுக்களை வெளியிடுகின்றன. வளர்ந்த நாடுகளில் சராசரியாக ஒரு மனிதன் 5 ஹெக்டேர் நிலங்களை பயன்படுத்துகிறான். ஏழை நாடுகளில் சராசரியாக ஒரு மனிதன் பயன்படுத்தும் நிலத்தின் அளவு 0.20 ஹெக்டேர் இந்த முன்னேறிய நாடுகள் தங்கள் கழிவுப்பொருட்களை ஏழை நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அனுப்பி விடுகின்றன.இந்த பூமியின் ஒரு ஆண்டு இயற்கை வள உபயோகம் மறுசுழற்சியில் நிலை பெற 11/2 ஆண்டுகள் ஆகின்றன.
பிரிட்டிஷ் பெட்ரோலியம் மெக்ஸிகோ வலைகுடாவில் எண்னை எடுத்துக் கொண்டிருந்த போது அந்த இயந்திரம் உடைந்து கச்சா எண்ணை 50 ஆயிரம் பேரல்கள் கடல் நீரில் கலந்து 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூர அளவுக்கு பரவி கடல் வாழ் உயிரினங்களை அழித்துள்ளன. 11 தொழிளாலர்களும் மாண்டுபோயுள்ளனர். அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிட்டிஷ் பெற்றோலியத்தை திட்டித் தீர்க்கிறார். இந்தக் கசிவு நிற்க 5 மாதம் ஆகியுள்ளது.
அமெரிக்க ஆண்டர்சனின் ஆலை போபாலில் விஷவாயுவை கசிய விட்டதால் 20 ஆயிரம் பேர்கள் மடிந்தனர். பல லட்சம் பேர்கள் நிரந்தர ஊனமாயினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த நஷ்ட ஈடு சராசரியாக ரூ.10 ஆயிரம். இக்கொடுமைக்கு நம் நாட்டு அரசு அதிகாரிகள் , நீதிபதிகள் எல்லோரும் உடந்தை. அதனால் தான் அமெரிக்க ஆண்டர்சன் அவர் நாட்டில் பத்திரமாக இருக்கிறார். இதைப் பெரிது படுத்தினால் கூட்டாண்மை நிறுவனங்கள் இந்தியாவில் தமது ஆலைகளை அமைக்க வர மாட்டார்களாம்.
தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை பல்லாயிரம் கோடி வரியேய்ப்பு செய்து, தூத்துக்குடியையே மாசு படுத்தி இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது. எல்லாம் அறிந்த நம் அரசு அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்க அமெரிக்க, ரஷ்ய மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இது பல்லாயிரம் கோடி வருமானத்தை அந்த நாடுகளுக்கு அளிக்கும்.இவற்றில் தயாரிக்கப்படும் மின்சாரம் 2 மடங்கு செலவு பிடிக்கக் கூடியவை. மேலும் இந்த அணு உலை கழிவுகளான யூரேனியம் அழிய 710 மில்லியன் ஆண்டுகளாகும்! புளூடோனியம் அழிய 24400 ஆண்டுகளாகும். இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் குறைந்த அளவு இழப்பீடு வழங்க சட்டம் இப்போதே தயார். இதற்கு பி.ஜே. பி யும் உடந்தை.
அமெரிக்க நாடு ஈராக்கில் பயன்படுத்திய சக்தி வாய்ந்த ஆயுதங்களால் எரிந்து போன எண்ணை வயல்கள் மாபெரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தின. முதல்முதலாக ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகரங்களில் அணுகுண்டு போட்டு புல் பூண்டு முதற்கொண்டு அந்தப் பகுதியையே அழித்தவர்கள் இவர்கள் தான். புவிவெப்பமும் சுற்றுச்சூழலும் இதே போல் சீர்கேடு அடைந்து வருமானால், இன்னும் 150 ஆண்டுகளில் இந்தியாவில் தென்மேற்கு பருவ மழையே இருக்காது. 60 லட்சம் ஹெக்டேர் பயிர் நிலங்கள் கடந்த 20 ஆண்டுகளில் தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இதே போல் கடல்வாழ் உயிரினங்களும் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 69,300 கோடி கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் மிதந்து வந்ததால் கடல் நீர் மாசடைந்து உயிரினங்களை அழித்து விட்டது. நம் தமிழ் நாட்டில் நிலத்தடி நீர் மாசடைந்து 19,000 கிராமங்களில் நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத அளவிற்கு சீர் கெட்டு உள்ளது. கொகோகோலா என்ற கூட்டாண்மை கொள்ளைக் காரன் இந்தியா முழுவதிலும் நல்ல நீர் உள்ள பகுதிகளில் எல்லாம் எல்லா நீரையும் உறிஞ்சி நம்மை வஞ்சிக்கிறான்.
வன நிலங்களின் பரப்பளவு இந்தியாவில் குறைந்து கொண்டே வருகிறது. சுரங்கப்பணிகளுக்கு இவை தாரை வார்க்கப் படுவதால் இந்த நிலை. இது போல் தாரைவார்க்கப்பட்ட நிலங்கள் நிக்கோபாரில் 100%, ஆந்திராவில் 14%, ஒரிசாவில் 16.2%, சதீஸ்கரில் 15.2%, குஜராத்தில் 10.2%, ஜார்க்கண்டில் 9.5% ,மத்தியப்பிரதேசத்தில் 10.6%, கர்நாடகாவில் 8% ஆக இந்த வன நிலங்கள் மொத்தம் 1.64 லட்சம் ஹெக்டேர் வனநிலங்களில் அடங்கும். 2005-2006 இல் 77 மில்லியன் டன் தண்ணீர் இரும்புத்தாது வெட்டியெடுக்க மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது . கூட்டாண்மை நிறுவனங்களின் வருகைகுப்பிறகு தான் வன நிலங்கள் வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டன. அதாவது 2001 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் 600 லட்சம் ஆதிவாசிகள் காட்டை விட்டும் துரத்தப்பட்டனர், 1,30,000 தாவர இனங்களும் அழிந்தன. சுரங்கப்பணிகளால் 90 தேசியப் பூங்காக்களும், வன விலங்குகளின் புகலிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
சிலி நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் வியாபாரம் தங்குதடையின்றி நடைபெறுகிறது. இந்தியாவில் சர்தார் சரோவர் அணைத் திட்டம் சாதாரண மக்களின் குடிநீர் தேவையை விட கூட்டாண்மை நிறுவனங்களின் ஆலைகளின் தேவையையே பெரிதும் நிறைவேற்றுகின்றன. இந்த அணைக்கட்டு திட்டத்தால் பயன்பட உள்ள விளைநிலங்கள் கூட கூட்டாண்மை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன.
கூட்டாண்மையின் தாக்கத்தால் இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள மக்களின் நிலை..
இந்தியாவில் 70 விழுக்காடு மக்களை வறுமை கோட்டிற்குக் கீழ் இந்தக் கூட்டாண்மை நிறுவனங்கள் கொண்டு வந்து விட்டன. மேலும் பழங்குடியினர் மற்றும் ஆதிவாசிகளை அச்சுறுத்தி ஆயுதங்களை ஏந்த வைத்து விட்டது. இதனால் இந்தியாவில் சட்டீஷ்கர், மஹாராஷ்டிரா, ஒரிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் ஆந்திர மாநிலங்களில் 229 மாவட்ட்டங்களில் மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு வளர்ந்து 70 விழுக்காடு பகுதிகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்திய மக்களின் 66 விழுக்காடு விவசாயத்தையே நம்பியுள்ளன. விவசாய உற்பத்தியை நமது அரசு ஊக்கப்படுத்தாமல் கடனுதவி வழங்காமல் நகர்ப்புரங்களுக்கு கிராமப்புர மக்களை துரத்தி விடுகிறது.
நகர்ப்புர மக்கள் தொகை 20..இல் இருந்ததைக் காட்டிலும் 2001..ஆம் ஆண்டுகளில் 11 சதவிகிதம் கூடியுள்ளது. இவர்களில் 20% த்தினருக்கு பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லை. 58% த்தினருக்கு கழிப்பிட வசதி இல்லை. இந்நகர்களில் உருவாகும் குப்பைகளில் 40% அப்புறப்படுத்தப் படுவதேயில்லை. உதாரணத்திற்கு பீகார் மாநிலத்தில் பத்து விழுக்காடு மக்கள் தான் நகர்ப்புரங்களில் வசிக்கின்றனர். பீகாரில் கல்வி அறிவு 47% . பீகாரில் வறுமை கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் 42%. இம்மாநிலத்தில் சுகாதாரப் பணிகளுக்காக செலவிடும் தொகை மொத்த வருமானத்தில் 1 விழுக்காடு தான். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகரில் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, அந்நகர பரப்பளவு 438 சதுர கிலோ மீட்டர். இதில் 375 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் அந்நகரின் 40% மக்கள்.. அதாவது , பெரும் பணக்காரர்கள் நடுத்தர மக்கள் வாழ்கின்றனர். மீதமுள்ள 60% மக்கள் வெறும் 63 சதுர கிலோ மீட்டரில் வசிக்கின்றனர்.
அலகாபாத் மாவட்டத்தில் , "கன்னே" என்ற கிராமத்தில் பசிக்கொடுமை காரணமாக சிறுவர்கள் கற்களையும் மண்ணையும் தின்பதாக 4/4/2010 இல் செய்தி வந்து, உச்ச நீதி மன்றம் ஆய்வு செய்து , இது உண்மை தான் என்று அதன் பிரதிநிதிகள் உறுதி படுத்தியுள்ளனர். இக்கிராமத்தில் 80% மக்களுக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை என்றும் 90% சிறுவர்களுக்கு சத்துக் குறைவு உள்ளதாகவும் இவர்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருவதாகவும் அதிகாரிகளோ அரசியல் தலைவர்களோ இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
மில்லினியம் டெவலப்மெண்ட் பிளாண்ட் என்ற திட்டத்தின் கீழ் ஐ.நா சபை தற்போது 2006ஆம்ஆண்டில் 1.4 பில்லியன் மக்கள் கடும் பட்டினியில் தவிப்பதாகவும் இவர்களுக்கு உதவ பணக்கார நாடுகளிடம் நிதி உதவி கோரியது. தாங்களே கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நாடுகள் இம்மக்களுக்கு நிதி உதவி எதுவும் அளிக்கவில்லை. தென்னாபிரிக்க நாடுகளில் வெனிசுலாவின் அதிபர் சாவேஷ் அமெரிக்கா தன் நாட்டைத் தாக்கினால் ...அமெரிக்காவுக்கு எண்ணை அனுப்ப மாட்டேன் என்றும், தன் நாட்டு மக்கள் இதனால் கற்களை சாப்பிட்டாலும் சரியே என்று சொல்லியுள்ளார். பொலீவியாவின் மொரேல்ஸ் அரசு கூட்டாண்மை அதிபர்களின் பிடியில் இருந்து விடுபட்டதால் 6% அளவிற்கு வறுமையை ஒழித்தும் , 4.4 பில்லியன் டாலர் வெளிநாட்டுக்கடனை 2.4 பில்லியன் டாலராகக் குறைத்தும் உள்ளது. கூட்டாண்மை நிறுவனங்களால் தன் நாட்டு என்ணை அபகரிக்கப் பட்டதை நாட்டுடைமை ஆக்கியதால் தனது ஒரு மில்லியன் தெர்மல் யூனிட்டிற்கு 0.6 டாலர் கிடைத்தது ..தற்போது 5 டாலராக ஆக்கியுள்ளது.
தற்போது 5 கோடி டன் உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளன. ஆனால் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த உணவு தானியங்களை சரியாகப் பாதுகாக்காததால் 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால் உணவு தானியங்கள் வீணாகி விட்டதை கண்டித்த உச்ச நீதி மன்றம்...இவைகளை வறுமையில் வாடும் மக்களுக்கு இலவசமாக வழங்க சொன்னது. ஆனால் நமது நாட்டுப் பிரதமர் உணவு தானியங்களை பட்டினியில் இடப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்க மறுத்ததுடன் அரசின் கொள்கை விஷயங்களில் நீதி மன்றம் தலையிடுவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது உள்ள உலக நிலைமைகளில், வளர்ந்த நாடுகள் இப்போது மாபெரும் பொருளாதார நெருக்கடிகளை கூட்டாண்மை நிருவனங்களுக்கு சேவையாற்றி ஊகவணிகம் உடைந்ததால் பொருளாதார பின்னடைவை சந்தித்து மக்களை ஓட்டாண்டிகளாக ஆக்கி..மக்களுக்கு, உழவர்களுக்கு , உழைப்பாளிகளுக்கு வழங்கி வந்த சமூக பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு உத்திரவாதத்தை கைவிட்டதால் மக்களிடம் இருந்து தனிமைப் பட்டு பதவி இழக்கும் அல்லது புரட்ச்சி வெடிக்கும் நிலையில் உள்ளன. இந்நிலையில் சைனாவும் இந்தியாவும், பிரேசிலும் ,ரஷ்யாவும், ஒரு சில தென் கிழக்கு ஆசிய நாடுகளும், ஆஃப்ரிக்காவில் ஒரு சில நாடுகளும் பொருளாதார சீர் குலைவால் தலை குப்புறக் கவிழாமல்..ஓரளவிற்கு நின்று கொண்டிருக்கின்றன. இதிலும் சைனாவின் 3 டிரில்லியன் டாலர் வெளிநாட்டு செலாவணி கையிருப்பையும் 580 பில்லியன் டாலர் சீன நாட்டின் ஊக்கத்திற்காக செலவிட்டதையும் கண்ட வளர்ந்த நாடுகள் தங்களை சைனாவே மீட்க முடியும் என நம்பி, அதன் செலாவணி நாணயத்தின் மதிப்பைக் கூட்டச்சொல்லி வற்புறுத்துகின்றன.
உலகம் இனிமேலும் அமெரிக்காவின் பிடியின் இல்லை. எல்லா நாடுகளும் கூட்டாண்மை முதலாளித்துவ தத்துவங்களுக்கு சாவுமணி அடித்து , மக்களின் தேவைகளுக்காக உற்பத்தி செய்து, மக்கள் அனைவருக்கும் உணவு, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு ,இருப்பிடம் ஆகிய வாழ்வாதாரங்களை வழங்கும் கொள்கைகளைக் கடைபிடித்தால் தான் உலகம் வருங்காலங்களில் உய்ய முடியும். இல்லையேல் பெரும் பேரழிவையும், சீர்குலைவையும், உள்நாட்டுக் கலவரங்களையும், வெளிநாடுகளுடன் போர் புரிய வேண்டிய ஆபத்திற்கும் தள்ளப்படும்.
முடிவுரை...
உற்பத்தி சக்திகளைப் பெருக்கி ஒரு சிலரிடம் அவை குவிந்தால்...உற்பத்தி உறவுகளில் மட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றால்...உலகச்சக்கரம் முன்னேற்றத்தை நோக்கி எப்படி நகர முடியும்? பிரபுல் பத்வாய் சொல்கிறார் "டெமாஸ்" என்ற வார்த்தைக்கு" மாஸ்" என்று அர்த்தம். அதாவது மக்கள் திரள். அந்த மக்கள் திரள் என்பது சாதாரண மக்கள் என்று பொருள் படும். அந்த சாதாரண மக்களால் நடத்தப்படும் ஆட்சியே டெமாக்ரஸி ஆகும். இந்த கூட்டாண்மை ஆட்சிகள் தங்களை (முதலாளித்துவ) டெமாக்ரடிக் நாடுகள் என்று சொல்லிக் கொள்வது சாத்தான் தன்னைக் கடவுள் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒப்பாகும்.
மைக்கேல்மூர்----நாடக -சினிமா தயாரிப்பாளர், முதலாளித்துவம் ஒரு தீமை( ஈவில்) என்கிறார். இந்தத் தீமையை ஒழுங்குபடுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது என்பதெல்லாம் நடக்காத காரியம். எனவே அதனை ஒழித்தழித்துவிட்டு , சாதாரண ( உழைக்கும்) மக்கள் ஜனநாயகத்தை நிறுவ வேண்டும் என்கிறார்.
மாபெரும் சிந்தனையாளர் சோம்ங்கி அவர்கள் தான் எதற்காகவாவது நினைவுகூறப்பட வேண்டும் என்று நினைப்பீர்களானால், தன்னுள் புதிய சிந்தனையைத் தோற்றுவித்த ஹோவர்ட் ஜின் அவர்கள் எழுதிய (1922---2010) அமெரிக்க (சாதாரண) மக்களின் வரலாறு (1980)" எ பீப்பில்ஸ் ஹிஸ்டரி ஆஃப் யு.எஸ் " என்ற புத்தகத்தை படிக்க தனக்கு சிபாரிசு செய்தவரைத்தான் என்கிறார். அந்தப் புத்தகத்தில் அவர் ஆட்சி அதிகாரம் இதுவரை பணபலமும், துப்பாக்கியின் பலமும் உள்ளவர்களிடம் இருந்து வந்துள்ளது..இது எப்படியும் பொது மக்களிடம் தான் வந்தாக வேண்டும்..ஏனென்றால் அவர்களிடம் இருந்து தான் இவர்கள் அதைப் பெற்றுள்ளனர்.
பொது மக்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்று அதைப் பயன் படுத்த வேண்டும். வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் பொது மக்கள் இந்த ஆட்சி அதிகாரத்தை முற்காலங்களில் சரியாகப் பயன்படுத்தி இருப்பதை அறியலாம் என்று தெரிவித்துள்ளார்.
புஷ்பா எம். பார்கவா என்பவர், தனது 5/6/2010 " தி ஹிந்து" என்ற நாளிதழில் இன்னபிறவற்றுடன் "நமது பிரபஞ்சம் 120 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியது..ஆனால் பெருவெடிப்பிற்குப் பிறகு இயற்பியல் விதிகள் தோற்றத்திற்கு வருவதற்கும் தனிமங்கள் உருவாகவும் சில விநாடிகள் தான் தேவைப்பட்டன. எனவே , ஒடுக்குவோரின் இறுதி அழிவு விதி தோன்றுவதற்கு மிக நீண்டகாலம் பிடித்தது. ஆனால் இன்று கல்வி, தகவல் தொடற்புத்துறை, அறிவியல் வளர்ச்சி ஆகியன மக்களை முன்னேற்றி இருக்கிறது. எனவே 80% மக்களை சுரண்டுபவர்கள், ஒடுக்குபவர்கள் தங்கள் செயலுக்கு இனிமேலும் நியாயங்கள் கற்பித்துக் கொண்டிருக்க முடியாது. உண்மையில் ஒரு புரட்சியில் அதன் லட்சியம் நியாயப் படுத்தப்பட்டாலும் கூட , நடக்கப் போகும் விளைவுகள் எப்போதும் நியாயப் படுத்தக்கூடியதாக இருப்பதில்லை. எனவே நம் நாடு இந்த பேரழிவைத் தடுக்க தக்க ஏற்பாடுகளை இப்பொழுதே எடுக்கத்தவறினால் நம் நாட்டு மக்களான நாம் மற்றும் நம் சந்ததிகள் பெரும் அழிவிற்கு ஆளாக வேண்டியிருக்கும்" என்று எச்சரிக்கிறார்.
இந்த கேடுகெட்ட கூட்டாண்மையின் நலன்களைப் பேணும் அரசியல்அதிகார வர்கத்தின் எல்லாத் துறையினருக்கும், படித்த மேல் தட்டு வர்க்கத்தினருக்கும் இந்த நியாயமற்ற சமூக அமைப்பு, நன்கு தெரியும். ஆனால் இதில் தங்களுக்கு ஆதாயம் உள்ளது என்று நினைக்கும் அவர்கள் தங்களின் பிற்கால சந்ததிகளையும் புவியின் அழிவையும் பார்க்க மறுக்கிறார்கள். சுரண்டப்படுபவர்களும் ஒடுக்கப்படுபவர்களும்... என்றைக்கும் , திரு.எம். பார்கவா கூறியுள்ளதைப் போல் எப்போதும் அடிபணிந்து கொண்டே இருக்க மாட்டார்கள். மத்திய மாநில அரசுகள் எவ்வளவு சீக்கிரம் விழித்துக் கொள்கிறதோ, அவ்வளவிற்கு அவ்வளவு நாம் பேரழிவுகளைத் தடுக்கலாம்.
...ஷஹி...
No comments:
Post a Comment