டாக்டர் . திரு . அருண் சேஷாசலம் திருச்சி , தஞ்சாவூர் சுற்றுவட்டாரத்தில் சிறப்பாகப் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவ நிபுணர் . புகையிலை உபயோக ஒழிப்பில் ஆர்வமும் அதற்கான தீவிர செயல்பாடுகளும் கொண்டவர் . சமூகநல ஆர்வமும், மனித நேயமும் மிக்கவர் .
மேலும் டாக்டர் அருண் அவர்களின் குழு புகையிலை சிஸேஷன் (டொபேக்கோ சிஸேஷன் ) புகையிலை உபயோக ஒழிப்பு மாநாடுகளுக்காகவும் புற்றுநோய் சிகிச்சைக்காகவும் 2011 ஆண்டுக்கான Dr . K.S .சஞ்சீவி பரிசு (அவார்ட் ) வென்றவர்கள்
டாக்டர் டாக்டர் அருண் சேஷாசலம் (MD . DNB . MNAMS . DM
டைரக்டர் , தஞ்சாவூர் கான்சர் சென்டர்,
புற்றுநோய் மருத்துவநிபுணர் , DR GCN புற்றுநோய் சிகிச்சை மையம்,
டீச்சிங் ஃபாகல்ட்டி (Teaching Faculty ) சென்னை புற்றுநோய் சிகிச்சை மையம் ,
சென்னை) 5 வருடங்கள் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்திருக்கிறார் .2010 ஆகஸ்ட்டில் இருந்து திருச்சி GVN புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் உதவியுடன் நான் மேற்கொண்ட சிறிய ஆய்வின அடிப்படையில் எழுதிய புற்றுநோய் அறிகுறி மற்றும் சிகிச்சை குறித்த கட்டுரை :
புற்றுநோய் சிறப்புநிபுணப் படிப்பில் நம் நாடு :
நம் நாட்டில் மிகவும் புறக்கணிக்கப்பட்டு வந்த துறை இது . தேவைக்கு மிகவும் குறைவாகவே புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் இருந்திருக்கிறார்கள் . நாகப்பட்டினம் , திருச்சி , தஞ்சாவூர், புதுக்கோட்டை , பட்டுக்கோட்டை இது போன்ற ஊர்களில் இந்த பத்து வருடங்களாக ஒரு மெடிகல் ஆன்காலஜிஸ்ட் ( புற்றுநோய் மருத்துவ நிபுணர் )இல்லை .
ஒரு சர்ஜிகல் ஆன்காலஜிஸ்ட்டே தான் கீமோதெரபி கொடுப்பதில் இருந்து அறுவை சிகிச்சை செய்வது வரை செய்ய வேண்டி இருந்தது . கதிர்வீச்சு சிகிச்சையும் அவரே தான் செய்து வந்தார் . சிறப்பு சிகிச்சை வேண்டும் என்று நினைப்பவர்கள் சென்னையோ பங்களூரோ செல்ல வேண்டியிருந்தது .ஒரு மெடிகல் ஆன்காலஜிஸ்ட்டுக்கான (கீமோதெரபிஸ்ட் )தேவை மிக அதிகமாக இருக்கிறது நம் நாட்டில் .
வெளிநாடுகளோடு ஒப்பிடும் போது நம் நாட்டில் புற்றுநோய் சிகிச்சையின் தரம் :
திருச்சியிலும் சரி ,சென்னை பெங்களூர் என்று எங்கு போனாலும் சரி அல்லது டெக்ஸாசில் என்றாலும் சரி தான் சிகிச்சை முறை , சிகிச்சை எல்லாமே ஒன்றே தான் .
புற்றுநோய் சிகிச்சை உலகம் முழுவதும் ஒரு ப்ரோடோகாலுக்கு ( ஒழுங்குமுறைக்கு) உட்பட்டது . மருந்துகள் , மருத்துவமுறை எல்லாம் ஒன்றே தான் . உலகநாடுகளில் கிடைக்கும் அதே மருந்துகள் இங்கும் கிடைகின்றன . ஒரு வேளை சூழல் அழகானதாக , மனதுக்கு இசைவானதாக இருக்கலாம் . அதைத்தவிர வேறு ஒரு வித்தியாசமும் கிடையாது .
புற்றுநோய் சிகிச்சையில் ஆகப் புதிய முன்னேற்றம் :
புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகள் மிகவும் வேதனை தரத்தக்கவை . கீமோதெரபி கொடுக்கும் போது வாய்புண் , வயிற்றுப்போக்கு , முடிகொட்டுதல் , வாந்தி மற்றும் வெள்ளை அணுக்கள் குறைந்து போகும் .இவை போன்றவை பொதுவாக காணப்படும் விளைவுகள். புற்றுநோயை அழிக்கக் கொடுக்கப்படும் மருந்துகள் , ஆரோக்கியமான அணுக்களையும் சேர்த்தே அழித்துவிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை .
இப்போது புது வரவாக மாஜிக் புல்லெட்ஸ் எனப்படும் மருந்துகள் கிடைக்கின்றன . இவை புற்றுநோய் அணுக்களை மட்டும் டார்கெட் செய்து ( குறி வைத்து ) அழிப்பதால் மிகக்குறைவான பக்கவிளைவுகளே ஏற்படும் . இது தான் மிகவும் ஆறுதல் அளிக்ககூடிய செய்தி .
புகைப்பழக்கம் தனிநபர் மற்றும் சமூக எதிரி
புகையிலை உபயோக ஒழிப்பில் காட்டப்பட வேண்டிய தீவிர ஆர்வமும் செயல்பாடுகளும் :
புகை மற்றும் மதுவை அறவே உபயோகம் செய்யக்கூடாது .
வருமுன் தடுக்கக் கூடிய புற்றுநோய்கள் பலவும் புகையிலை மற்றும் மதுவால் விளையக்கூடியவை .
உதாரணமாக தொண்டைப் புற்று , நுரையீரல் புற்று மற்றும் வயிறு ,குடலில் மதுவால் ஏற்படக்கூடிய புற்றுநோய் இவையெல்லாம் புகை மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடுவதனாலும் அறவே உபயோகம் செய்யாமல் இருப்பதனாலும் தடுக்கலாம் .
இதற்காகத் தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பலவும் ஏற்பாடு செய்து நடத்தப்படுகின்றன திருச்சி , தஞ்சார் போன்ற இடங்களில் . மதுரையில் கூட இந்த மாதம் 13 ஆம் தேதி விழிப்புணர்வு மாநாடு ஒன்று நடந்தது .
டொபேக்கோ சிசேஷன் ( TOBACCO CECCASION PROGRAMMES ) நிகழ்ச்சிகள் இவை. இப்படியான நிகழ்ச்சிகள் தமிழக அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டு உதவியோடு நடத்தப்படுகின்றன .
இந்த விழிப்புணர்வு மாநாடுகளின் மூலம் நாங்கள் பொதுமக்கள் எப்படி தங்கள் உறவினர்கள் , நண்பர்களின் மது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிடச்செய்ய உதவியாக இருக்க முடியும் என்பதை நிறுவ முயல்கிறார்கள் .
முன்னமே இந்த பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பவர்களுக்கு டீ அடிக்ஷன் சிகிச்சை அளிக்கப் பட வேண்டும் . இந்த வியாதியில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் . அதற்கு இந்தத்துறை வல்லுநர்களின்( proffesssional ) உதவி வேண்டும் . இதற்காக நடத்தப்படும் வர்க்ஷாப்ஸ்களில் சமூக நல ஆர்வலர்கள் சமூக சேவையில் பட்டம் பெற்றவர்கள் உதவியாக செய்கிறார்கள் . இப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு எப்படி அவர்கள் குடும்பத்தினர் உதவி செய்ய வேண்டும் , எப்படி பக்கபலமாக இருந்து அவர்களை இதிலிருந்து மீட்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர்கள் கவுன்சிலிங் செய்வார்கள் .
புகைப்பழக்கம் ஒரு வியாதி :
நிச்சயமாக ! இது வியாதியே தான் . இவர்கள் நம் அன்புக்கும் கவனிப்புக்கும் உரியவர்கள் .இந்த பழக்கங்களுக்கு அடிமையான அநேகம் பேர் இதிலிருந்து மீள வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் . சிறு வயதில் எப்படியோ விளையாட்டாக ஆரம்பித்த இந்த பழக்கம் அவர்களை அறியாமல் அடிமையாக்கி இருக்கும் . பிறகு எத்தனை முயன்றாலும் அவர்களால் அதிலிருந்து வெளியில் வர முடியாது . அவர்கள் ரத்தத்தில் ஊறி விட்ட நிக்கோட்டின் , மது அவர்களை அதிலிருந்து மீள விடாது .அதற்கு குடும்பம் மற்றும் சமூக உதவி மிக இன்றியமையாதது . ஏதோ அவர்கள் வேண்டுமேன்றே செய்வதாக நினைப்பதை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும் . அடிமைப்பட்டு விட்ட பின் உதவியில்லாமல் அவர்களால் மீளவே முடியாது .
புகைப்பழக்கத்திலிருந்து மீட்பு சிகிச்சை முறைப்படுத்தப்படும் விதம் :
1.புகைபழக்கம் உள்ளவர்களில் சிலருக்கு கவுன்சிலிங் மட்டுமே போதுமாக இருக்கலாம்,
2. சிலருக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரலாம்,
3. சிலருக்கு கவுன்சிலிங்க், மருந்துகள் இவற்றோடு ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனையும் தேவைப்படும் .
இதையெல்லாம் ஒருங்கிணைக்க ஒரு சமூக ஆர்வலரின் உதவி தேவை அதாவது கவுன்சிலர் . பலமுறை முயற்சி செய்ய வேண்டிவரலாம் . அந்த சமூகநல ஆர்வலர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துகொள்பவரை கண்காணிப்பார் , தொலைபேசி மூலம் தொடர்பில் இருக்க வேண்டி வரலாம் .
ஒரு முழு வருடம் புகை மற்றும் மதுப்பழக்கத்துக்கு அவர் மீண்டும் சென்று விடவில்லையென்றால் அவர் அதிலிருந்து மீண்டு விட்டார் என்று நினைக்கலாம் .
அடையார் புற்றுநோய் மருத்துவமனை இந்த முயற்சியில் மிகுந்த தீவிரம் காட்டுகிறது. அங்கு பணிபுரியும் டாக்டர் விதுபாலா இந்த குழுவின் மிக முக்கியமான ஒரு நபர் .
பொதுமக்கள் அதாவது சமூகத்தின் பங்கு :
பொது மக்கள் இந்த விஷயத்தில் இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். பல உயிர்களை , மிகுந்த நிதியை பலிவாங்கும் இந்த புற்றும்நோயை வரவழைக்கும் முக்கிய காரணியான புகையிலை பயன்பாட்டை ஒழிப்பதில் அனைவரும் உதவ வேண்டும்.
வருத்தத்துக்கு உரிய விஷயம் என்னவென்றால் இப்படி புகையிலை எதிர்ப்புக்குழுக்கள் பணியாற்றிகொண்டு இருக்கும் சமயம் தீவிரமாக அதற்கு ஆதரவாகவும் சில செயல்பாடுகள் இருக்கின்றன என்பது தான் .
இப்போழுது வந்த ஒரு திரைப்படத்தில் அநியாயத்துக்கு புகைப்பழக்கத்தை தூண்டுவது போல் காட்சிகள் அமைந்துள்ளன . படம் முழுவதிலும் ஹீரோ புகைபிடித்த வண்ணமாய் இருக்கிறார் . கடைசியில் இந்திய புகையிலை கழகம் ஐ.டி.சி (INDIAN TOBACCO CORPORATION ) க்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள் . இது வன்மையாக கண்டிக்கத்தக்கது , வருந்தத்தக்கது .
தீவிர எதிர்ப்புக்குழுக்கள் பணியாற்றிகொண்டிருக்கும் போது , இப்படி மீடியா இவர்களுக்கு எதிராக மக்கள் விரோதமாக நடந்து கொண்டால் புற்றுநோய்க்கு எதிரான இந்தப் போரில் நாம் எப்படி வெல்ல முடியும் ?
பெரிய ரசிகர் கூட்டம் உள்ள கதாநாயகர்கள் இம்மாதிரியான குழுக்களுக்கு ஆதரவாக செயற்பட்டால் மக்கள் எவ்வளவோ நன்மை அடைவர் . மாறாக இந்த மாதிரி தீய வழக்கங்கள் ப்ரொமோட் செய்யப்படும் போது இளம் வாலிபர்கள் அவர்களை அறியாமல் சீரழிகின்றனர் . இவர்கள் பணியில் முக்கியமான ஒரு செயல்பாடாக கல்லூரிகளில் புகைபழக்கத்துக்கு எதிரான காம்ப்கள் நடத்துவதை சொல்லலாம் . இளம் தலைமுறை இப்படி ஒரு கொடூரப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடாமல் இருப்பது நாட்டு நலனுக்கு அத்யாவசியமான ஒன்று.
வலைத்தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் பங்கு :
புற்றுநோய் பற்றின மற்றும் புற்றுநோய் சிகிச்சை பற்றின சரியான தகவல்கள் மக்களுக்கு சென்று சேர இம்மாதிரியான வலைத்தளங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் உதவி அவசியம் . மேலும் புகையிலை பயன்பாட்டு ஒழிப்பு பிரச்சாரத்துக்கும் இவற்றின் உதவி அவசியம் தேவை .
புற்றுநோய்க்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும் . புற்றுநோய் கண்டு விட்டால் ஒன்றுமே செய்ய இயலாது என்ற எண்ணம் மாற்றப்பட வேண்டும் .
சர்க்கரை வியாதி போல் ,உயர் ரத்த அழுத்தம் போன்ற ஒன்று தான் இதுவும் . சிகிச்சையின் மூலம் அதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் .
வியாதியின் ஆரம்பநிலையில் கண்டு பிடித்து விட்டால் முற்றுமாக குணப்படுத்த முடியும் . சில மிக முக்கியமான லைஃப் ஸ்டைல் அதாவது வாழ்க்கைப்பாணி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் .
இந்த மாதிரியான செய்திகளை பத்திரிக்கைகள் , வலைத்தளங்களில் பிரபலப்படுத்தும் போது மக்களுக்கு இலகுவாக செய்தி சென்றடைந்து விடுகிறது .
அறிகுறிகள் மற்றும் வருமுன் காத்தல்
புற்றுநோய் எச்சரிக்கை அல்லது விழிப்புணர்வு :
புற்றுநோயைப் பொறுத்த வரையில் வருமுன் காப்பது , கண்டு கொள்வது தான் சாலச்சிறந்தது . மிக விழிப்பாகவும் சரியான ஸ்க்ரீனிங்கும் ,சரியான காலகட்டங்களில் செய்து கொள்ள வேண்டும் . வருமுன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக சில விதிமுறைகளை அனுசரிக்கலாம் :
1. திருமணம் ஆன அனைத்துப் பெண்களும் வருடா வருடம் அவசியம் பாப் - ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . மிக எளிமையான இந்தப் பரிசோதனையின் மூலம் கர்பப்பைவாய் புற்று நோயை மிக எளிதாக முன் கூட்டியே கண்டு பிடித்து விடலாம் .
2. 40 வயதுக்கு மேலான எல்லாப் பெண்களும் வருடம் ஒரு மாமோகிராம் செய்து கொள்ளவேண்டும் . மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டு கொள்ள .
3. 40 வயதுக்கு மேற்பட்ட அத்தனை ஆண்களும் ப்ராஸ்டரெட் புற்றுநோய்க்கான ஸ்க்ரீனிங் செய்து கொள்வது அவசியம் .
4. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை குடல்புற்றுக்காண பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் . மற்றபடி மார்பு , அக்குள், கழுத்து இது போன்ற இடங்களில் நெறி கட்டுதலோ , வீக்கமோ , கட்டியோ காணப்பட்டால் உடன் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .
5.ஆறாத வாய்ப்புண் , தொடர் இருமல் முக்கியமாக புகைப்பழக்கம் உள்ளவர்களில் 2 வாரங்களுக்கு மேல் இருப்பது , சிறுநீரில் இரத்தம் , மலத்தில் இரத்தம் , மலம் கருப்பு நிறமாக இருப்பது , பெண்களில் நாட்பட்ட வெள்ளைப் படுதல் , மாதவிலக்கு நின்று விட்ட நிலையில் இரத்தப் போக்கு ஏற்படுவது ஆகிய அறிகுறிகள் காணப்பட்டால் மிக விழிப்புடன் பரிசோதனைக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும் .
இறுதிக்கட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் அவர்களுக்காக அரசின் திட்டம் :
மொபைல் ஹாஸ்பைஸ் கேர் என்று தற்பொழுது இறுதி நிலையில் இருக்கும் புற்றுநோயாளிகளுக்காக ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .
எந்த ஒரு பொது மருத்துவமனையிலும் இம்மாதிரியான நோயாளிகளை தொடர்பு கொள்ளும் முகவரியை அல்லது தொலைபேசி எண்ணை அதற்கென்று இருக்கும் பெட்டிகளில் இட்டு விட்டால் போதும் .
ஒரு பயிற்சி பெற்ற செவிலியுடன் கூடிய ஆம்புலன்ஸ் அந்த நோயாளியின் உதவிக்கென அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் . அவருக்கு உணவுக்குழாய் செருகி உட்செலுத்தும் முறை பற்றியும் மற்ற கவனிப்புகள் குறித்தும் குடும்பத்தாருக்கு அந்த செவிலி எடுத்துரைப்பார் .மேலும் வேறு உதவிகள் தேவைப்பட்டால் செய்து தருவார் . பெய்ன் மானேஜ்மெண்ட் அதாவது வலிநீக்குவதிலும் உதவி செய்யப்படும் . உதவி தேவைப்படுபவர்கள் இந்த சேவையை உபயோகித்துக்கொள்ளலாம் . இந்த மாதிரியான செய்திகள் மக்களை சென்று அடைய பத்திரிக்கைகள் பெரிதும் உதவும் .
குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மையம் திருச்சியில் :
புற்றுநோயாளிகளில் 5 விழுக்காடு குழந்தைகள் .
ஆனால் குழந்தைப்பருவ புற்றுநோய் 90 % முழுதுமாக குணமாக்கப்படக்கூடியது .
சிக்கல் என்னவென்றால் சிகிச்சைகான காலம் நீண்டது . 2 1/2 யிலிருந்து 3 வருடம் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் . சிகிச்சைக்கான செலவுகள் என்னவோ மிகக்குறைவு தான். குழந்தைகளின் எடைக்கேற்ப மருந்துகளும் கொஞ்சமாகவே செலுத்தப்படும் அதனால் சிகிச்சை செலவு மிகக்குறைவு தான் . ஆனால் கண்ணுக்குத்தெரியாத செலவுகள் மிகவும் அதிகம் . இவை தான் பிரச்சினையை உண்டாக்குகின்றன .அதாவது சிகிச்சைக்காக தங்கள் ஊரை விட்டு போக வேண்டியிருக்கிறது . அங்கு தங்கவும் , தொழிலை , வேலையை விட்டு செல்ல வேண்டியிருப்பதால் வரும் நஷ்டம் இவை எல்லாம் சேர்ந்து கொள்ளும் . ஒரு சில மாத சிகிச்சைக்குப் பிறகு குழந்தை கொஞ்சம் தேறினதும் ஊருக்கு திரும்ப சென்று விடுவார்கள் .நான் சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையில்ஆறு வருடங்கள் பணி புரிந்த போது கவனித்த விஷயம் இது . அரைகுறை வைத்தியத்தில் போய் விடுவதால் மீண்டும் நோய் திரும்பி விடும் .மறுபடியும் வருவார்கள் . இதில் தான் குழந்தையை இழக்க நேரிடும்.
சிகிச்சை பற்றிய முக்கிய விபரம் :
1.சிகிச்சையை முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும் .
2.முதல் முறையிலேயே முற்றாக குணம் செய்து விடுதல் தான் மிகச்சரியானது .
3.பாதியில் விட்டு மீண்டும் நோய் திரும்பி விட்டால் குணம் செய்வது ரொம்பவும் சிரமம் . இது குழந்தைகள் புற்று என்று அல்ல எல்லா புற்றுக்கும் பொதுவான விதி . முதல் முறையிலேயே முழு சிகிச்சையை எடுத்துவிட வேண்டும் . அரைகுறை சிகிச்சை ஆபத்து .
4.இரண்டாம் முறை சிகிச்சை எடுப்பது அத்தனை வெற்றிகரமாக இருப்பதில்லை .
இதற்கு அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மையங்களிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது தான் சிறந்த முடிவு .
முறையான சிகிச்சை , முழுகால அவகாசமும் எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகளின் போது மருத்துவர் அதை சரியாக கவனிக்கவும் , தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கவும் , ஊரை விட்டுச்செல்வதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீளவும் அவரவர் ஊரிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது தான் சிறந்தது .
குழந்தைகளில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய் மற்றும் அதன் அறிகுறிகள் :
குழந்தைகளில் பெரும்பான்மையாக இரத்தப்புற்று நோய் தான் வருகிறது .
உடலில் எந்த பகுதியிலும் நெறிகட்டியோ , வீக்கமோ இரண்டு வாரங்களுக்கு மேலான ஜூரமோ இருந்தாலும் விழிப்பாக உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும் .
ஒரு சாதாரண ரத்தப் பரிசோதனையில் கண்டு கொள்ள முடியும் இதை .
புற்றுநோய் சிகிச்சை செலவும் ,நிதிவசதியற்ற குழந்தைகளின் நிலையும் :
சிகிச்சைக்கான செலவை செய்ய முடிந்தவர்கள் அவர்களே செய்து கொள்கிறார்கள் . இயலாதவர்களுக்கு அரசுகாப்பீடு திட்டம் இருக்கிறது . இன்னமும் இயலாதவர்களுக்கு அரசு சாரா இயக்கங்கள் , முதலமைச்சர் நிவாரணநிதி , பிரதமர் நிவாரண நிதி இப்படி ஏற்பாடு செய்யலாம் .
நிதி வசூல் முறைப்படுத்தப்படும் விதம் :
ஒரு எம். பி யின் கடிதத்தோடு மருத்துவரின் கடிதமும் தேவைப்படும் இம்மாதிரியான நிவாரண நிதி ஏற்பாடு செய்ய .உள்ளூரிலும் உதவி செய்பவர்கள் உண்டு .( உதாரணமாக திருச்சியில் கஜானா நகைக்கடை , இன்னம் சில அரசு சாரா நிறுவனங்கள் போன்றவை . )சிகிச்சை முடிந்து செல்லும் நபர்களும் மற்ற நோயாளிகளுக்கு உதவுவது உண்டு . இப்படியான நிதி உதவிகளில் இயன்ற வரை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் போதுமான நிதி இல்லை என்பதே உண்மை .
இப்படியான நிதி உதவிகளை எங்களுக்கு ஏற்பாடு செய்து தரும் நல் உள்ளங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்
டாக்டர் .சாய்லக்ஷ்மி( EKAM FOUNDATION) என்ற குழந்தைகள் நலசிகிச்சை நிபுணர்
மற்றும்
சங்கர்மஹாதேவன் இவர் உதவும் உள்ளங்கள் என்ற ஒரு இயக்கம் நடத்தி வருகிறார் .
நிதியில்லாமல் அவதியுறும் குழந்தைகளுக்காக இவர்கள் நிதி ஏற்பாடு செய்து தருகிறார்கள்.
திருச்சி , தஞ்சாவூர் மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை இன்றைய நிலை :
டாக்டர் அருண் சேஷாசலத்தின் தலைமையிலான ட்யூமர் போர்ட் குழு புகைப்படம்
கீமோதெரபிஸ்ட் டாக்டர் அருணின் குழு அறிமுகம் செய்த மல்ட்டி மோடல் அப்ரோச் ட்யூமர் போர்ட் கான்செப்ட்டை திருப்திகரமான ஒரு விஷயம். அதாவது முன்பு இங்கு இருந்த நிலையில் ஒரு சர்ஜிகல் ஆன்காலஜிஸ்ட் தானே நோயாளிகளைக் கவனித்து , கீமோதெரபி கொடுத்து அறுவையும் செய்து கதிரியக்கமும் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது .
ஆனால் இப்போழுது மல்ட்டிமொடல் அப்ரோச் அறிமுகம் செய்த பிறகு ஒரு நோயாளியை மூன்று மருத்துவர்கள் கவனிக்கிறார்கள் .
ஒரு புற்றுநோய் அறுவை நிபுணர் ,
ஒரு கதிரியக்க சிகிச்சை நிபுணர்
மற்றும்
மெடிகல் ஆன் காலஜிஸ்ட் அதாவது கீமோதெரபி நிபுணர்
மூவரும் சேர்ந்து நோயாளிக்கான சிகிச்சையை முடிவு செய்கிறார்கள் . அவர் புகைப்பழக்கம் உள்ளவராக இருக்கும் பட்சத்தில் ஒரு சமூகசேவகரும் இந்த குழுவில் இருப்பார் . அவர் கவுன்ஸிலிங் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் . இங்கு மெடிகல் ஆன் காலஜிஸ்ட்டின் பொறுப்பு கீமோதெரபி கொடுப்பது .
கீமோதெரபி நிபுணர் டாக்டர் அருண் சேஷாசலம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார்
திரு. செந்தில்குமார் அறுவை சிகிச்சை நிபுணர், கதிரியக்க சிகிச்சை நிபுணர் திரு.சுஜித்.
அதாவது தி ரைட் மேன் ஃபார் தி ரைட் ஜாப் -
ஒரு நோயாளிக்கான சிகிச்சை திட்டமிடலில் இவர்கள் அத்தனை பேரின் உழைப்பும் இருக்கும்.
தஞ்சாவூர் திருச்சி வட்டாரத்தில் புற்றுநோயாளிகளின் தேவை :
தஞ்சாவூரில் ஒரு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி யூனிட் மற்றும் ட்ராஸ்ப்ளாண்ட் யூனிட் ஆரம்பிக்கப்பட வேண்டும் .
டாக்டர் திரு. மருதுதுரை ( பொது அறுவை சிகிச்சை நிபுணர்) மற்றும் டாக்டர். அருண் அவர்களின் குழு தஞ்சாவூர் கான்சர் இன்ஸ்ட்டிடூட் துவங்கினார்கள் .
(இந்த முகவரியில் அந்த மருத்துவமனை பற்றிய தகவல்கள் அறியலாம் . .thanjavurcancercentre.org/)டொனேஷன்களின் உதவியைக்கொண்டே கட்டப்பட்ட அந்த மருத்துவமனை முழுவதும் லாபநோக்கில்லாத ஒன்று .
அங்கு சிகிச்சை பெற்றுச்செல்லும் இரத்தப்புற்று நோயாளிகளில் 50 சதவிகிதத்தினருக்கு மீண்டும் அந்த நோய் திரும்ப வாய்ப்புள்ளது . இரத்தப்புற்றின் இயற்கை அது தான் . அம்மாதிரியானவர்களுக்கு மறு சிகிச்சை ட்ரான்ஸ்ப்ளாண்ட் மட்டும் தான் . அதாவது அவர்கள் உடம்பில் உள்ள இரத்தம் அனைத்தையும் வெளியேற்றி புது இரத்தம் செலுத்துவது . ஆனால் இதை நிறுவுவதற்கான நிதித்தேவை மிக அதிகம் .
மேலும் எந்த ஒரு புற்றுநோயாளியும் பொருளாதார வசதி இன்மை காரணமாக சிகிச்சை அளிக்கப்படாமல் போகக் கூடாது .
எல்லா நோயாளிகளுக்கும் தேவையான முறையான சிகிச்சையும் கவனிப்பும் அளிக்கப்பட வேண்டும் .
அதற்கு ஆவன செய்ய வேண்டும் . இது லேசான விஷயம் அல்ல . இது தனி ஒரு நபரால் இயல்கிற காரியமுமல்ல . தன்னார்வத்தொண்டர்களும் பொதுமக்களும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் ஒன்று சேர்ந்தால் தான் இந்தக் கனவு நனவாகச் செய்ய இயலும் .
திருச்சி ஜீ . வி .என் மருத்துவமனையின் நோயாளிகளுக்கு நிதிஉதவி செய்ய விரும்பும் உள்ளம் படைத்தோர் கீழ்க்காணும் வகைகளில் உதவலாம்:
1. தங்கள் வாழ்வின் விசேஷ தினங்களின் போது திருமண நால் , பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது ஒரு நோயாளியின் மருத்துவத் தேவைக்கான உதவி செய்யலாம்
2. JEEVACETENARY CANCER TRUST என்ற பெயருக்கு காசோலை அல்லது வரையோலை அனுப்பலாம்
3. ஒரு புற்றுநோயாளியை தத்தெடுத்து அவரின் முழு சிகிச்சைக்கான செலவுகளை ( வசதி உள்ளோர் ) ஏற்றுக்கொள்ளலாம் . புகைபழக்கத்துக்கு எதிரான செயல்பாடுகளிலும் நிதித்தேவைகளை நிறைவு செய்ய உதவவும் தன்னார்வத் தொண்டர்களின் சேவை அவசியத் தேவை !
செர்விகல் கான்சர் எனப்படும் வகையான புற்றுநோய் எல்லா வயதிலும் பெண்களைத் தாக்கக்கூடியது ! இந்த வகை புற்றுநோய் பற்றின தகவல் அறிய ஹெல்ப்லைன் எண். 1800- 102- 1002 , குறுஞ்செய்தியில் தகவல் பெற sms " GYC" to 99 800 11111 அல்லது இந்த வலையில் படிக்கலாம் www.guardyourself.co.in
மேலும் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் திருமதி . அகிலாவை நான் மூன்றாம்கோணம் வலைப் பத்திரிக்கைக்காக நேர்கண்டதன் பதிவை இங்கே படிக்கலாம் .
புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்குமான டாக்டர் . அருணின் அறிவுரை படிக்க இங்கேயும் ,இங்கும் சொடுக்கவும் .
..ஷஹி..
கேன்சர் நோயிக்கான. மிக அருமையான விளக்க பதிவுநேரம் கிடைக்கும் போது என் பதிவையும் வந்து பாருஙக்ள்
ReplyDeleteமிக்க நன்றி ஜலீலா ..அவசியம் உங்கள் பதிவை வாசிக்கிறேன்..
ReplyDelete>பெரிய ரசிகர் கூட்டம் உள்ள கதாநாயகர்கள் இம்மாதிரியான குழுக்களுக்கு ஆதரவாக செயற்பட்டால் மக்கள் எவ்வளவோ நன்மை அடைவர்
ReplyDeleteகுட் ஒன்
இவ்வளவு விளக்கமான, தெளீவான கட்டுரையை போட்டிக்கு கலந்த கட்டுரைகளில் நான் படிக்கவில்லை ( ஐ மீன் படிச்ச வரை) எனவே உங்களூக்கு பரிசு உறுதி.. அட்வான்ஸ் வ்வாழ்த்துகள் ( ஒரு அருண் ஐ ஸ்க்ரீம் பார்சல்)
ReplyDeleteநன்றி சி.பி ..
ReplyDeleteThanks for the efforts and time you put in to type for the detailed version of the human hatred cancer. Allah bless you
ReplyDeletethank you ismail bai ..u r very kind ..zazakalaah hair ..
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
சிறப்பான பகிர்வு...
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மதிப்புக்குரியவர்களே எனது பெயர் பார்த்திபன் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது என் உள் மனது அதை விட வேண்டும் என்று முயற்சி செய்தும் என்னால் முடிய வில்லை எனக்கு பல் வலி ஏற்பட்டத்தில் இருந்து மிகவும் பயமாக உள்ளது என்னை எப்படியாவது இந்த பழக்கத்தில் இருந்து காப்பாற்றுங்கள் நன் இப்போது என்ன டெஸ்ட் எடுக்க வேண்டும் கண்ணீருடன் காத்திருக்கிறேன்
ReplyDeleteஎனது தந்தையும் இந்த நோயால் தான் இறந்து போனார்
ReplyDelete