Search This Blog

Friday, January 20, 2012

சொஸ்தக் களிம்பு - சிறுகதை

ஜிகு ஜிகுவென்ற வேலைப்பாட்டுப் புடவைகளும் அள்ளிப்போட்டிருந்த நகைகளோடு பேச்சரவமும் போட்டி போட்டுக்கொண்டிருந்த நூர் ராவுத்தர் வீட்டின் பளிச்சென்ற முற்றம் ,ஐசாம்மாவின் மங்கல் துப்பட்டியைப் பார்த்ததும் கொஞ்சமே கொஞ்சம் மங்கத்தான் செய்தது. முதலில் சுதாரித்தவள் ஜாஸ்மின் தான். என்ன பேசுவது ? யார் இவளை அழைத்தது? எப்படி ஓர் உரையாடலைத் துவங்குவது என்றெல்லாம் வயசாளிகள் கூட யோசித்துக்கொண்டிருக்க ,

" அஸ்ஸலாமு அலைக்கும் பெரீம்மா, வாங்க ---மெஹர் எங்க? "

என்று பேசி தேவை வீட்டை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாள்.

" வாலைக்கும் அஸ்ஸலாம் ஜாஸூ..நல்லாருக்கியா? எங்க மருமயன வாசல்ல காணலியே ? புள்ளைக எல்லாம் சொகமா? "

மூச்சிரைத்த படி சோபாவில் அமர்ந்தாள் ஐசா. சோபாவில் நடுநாயகமாக அமர்ந்திருந்த ராபியா , பருத்த சரீரமும் அப்பியிருந்த நகையும் பவுடருமாக முகத்தைக் கோணியவாறே நகர்ந்து அமர்ந்தாள். நூர் ராவுத்தரின் மருமகள் சபியாவுக்கு *மடிநிரப்பு. நூராருக்கு மனைவி இல்லாததால் மடிநிரப்பி விடவென ராபியா அழைக்கப்பட்டிருந்தாள்.

அப்படியெல்லாம் எல்லாரையும் அழைத்து விடுவார்களா? சுமங்கலியாகவும் பிள்ளைகள் பெற்றவளாகவும் மட்டுமல்லாமல் நல்ல பவிசாக வாழ்பவளாகவும் இருக்கும் பெண்கள் தான் மடிநிரப்ப , தாலி கட்ட, சமைந்த பெண்களுக்குக் குளியாட்டவென அழைக்கப்படுவார்கள்.இப்படி செல்வாக்காக வாழும் பெண்மணி வந்து மடி நிரப்பினால் தான் சூல் கொண்டிருக்கும் பெண் நல்லபடியாக, அதுவும் ஆண் பிள்ளையாகப் பெற்று பிழைப்பாள் . அல்லாமல் கணவனை இழந்து , ஆண் பிள்ளைகள் மூன்றும் திசைக்கொன்றாய் பிரிந்து போக , ஒரே பெண் பிள்ளை மெஹருக்கு வயது ஏகமாய் ஏறியும் மணமுடிக்காமல், வீட்டைக் கட்டிக்காத்துக் கொண்டு மகளும் தானுமாய் வாழும் ஐசாவை அழைப்பார்களா என்ன?

மணமாகி சில வருடங்களில் புருஷனுக்கும் தன் அண்ணன்களுக்கும் சொத்துப் பிரச்சினை ஒன்றில் ஏகமாய் முட்டிக்கொண்டு விட உடன் பிறந்தோர் என்று ஒரு கூட்டமே இருந்தாலும் தனிமைப்பட்டுப் போனாள் ஐசா. தாய் வீட்டுப் பங்காய் அவளுக்குத் தரப்பட்ட அந்த பிரம்மாண்டமான பங்களா தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். அவளுடைய தாயும் தந்தையும் கடைசிக் காலத்தில் கேட்க பார்க்க நாதியில்லாமல் படுக்கையோடு கிடந்து ஒருவர் பின் ஒருவராக நாற , அண்ணன்மார் அத்தனை பேரும் சுற்றிலும் வேடிக்கை பார்த்தார்களே ஒழிய உதவ முன் வந்தது ஐசா ஒருத்தி தான் . மாமியார் மாமனாருக்கும் பார்த்து அம்மா வாப்பாவையும் அவளே தான் கவனித்தாள்.

மணமாகிச் சென்றும் மகள் தானே மனைவிக்கும் பார்த்து தனக்கும் செய்தாள் என்ற நினைப்பில் அவளின் அப்பா அந்த வீட்டை அவளுக்கே எழுதி வைக்க வந்தது வினை . நல்லது கெட்டது என்று எதற்கும் அவளை அழையாமல் ஒதுக்கி வைத்தான்கள் அண்ணன்மார்.

பெரிய வசதிக்காரி என்பதால் ஐசாவைத் திருமணம் செய்து கொண்டவன் ரஜாக். நான்கு பிள்ளைகள் ஆன பிறகும் செயல் சரியில்லாமல் நடுவயதிலேயே இறந்தும் போனான். கணவனையும் பறிகொடுத்து விட்டவளுக்கு பிள்ளைகளும் வீடும் தான் உலகம் என்றானது. தினமும் நான்கு பேரையும் சுற்றி அமர வைத்து கதைகளும் ஊர் நடப்பும் பேசிவந்தாள். வெறுமையாகிப் போன வாழ்வில் அவள் கண்ட சுகம் அது ஒன்று தான். மகன்கள் திருமணம் செய்து கொண்ட கையோடு தனியாய்க் கிளம்பி விட மீண்டும் மகளோடு அத்தனை பெரிய வீட்டில் தனித்து விடப்பட்டாள்.

நல்ல நாள் பெரிய நாளில் கூட ஏதோ விதியே என்று வந்து கடனுக்கு சலாம் சொல்லி மகன்கள் கிளம்பிப் போக ஒடிந்து போகத் துவங்கினாள் ஐசா. மனதின் பாரமெல்லாம் வியாதியும் வெக்கையுமாக வேறு பிடுங்கித் தின்னத் துவங்கியது அவளை.

கொழுந்தன் கூட்டாளி வீட்டுப்பெண்கள், மருமகள்கள் என அனைவரிடமும் தானாய் வலியச்சென்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐசா .

"ஏன் ஜாஸூ இந்த காசு மால எத்தினி பவன்? பதினஞ்சு தானா? எங்க மெஹருது இருவத்தியோரு பவன். வளவி தேன் தோதா பண்ணல..ஒன்னூட்டு குடுவேன் மாடலுக்கு . நம்ம சண்முகத்துட்ட காட்டிட்டு தாரேன்."

"அதனால என்னாங்க பெரீம்மா..இந்தா மடி ரொப்பினதும் வீட்டுக்குப் போயி வளவியக் கொண்டாரேன், மெதுவாக் குடுங்க"

ஜாஸ்மீன் ஜாடை காட்டவும் மற்ற சகோதரிகள் வந்து அருகில் அமர்ந்து கொள்ள வீடு சகஜ நிலைக்குத் திரும்பியது.ராபியாவின் கோணிய முகம் மட்டும் ஒரு பக்கம் இழுவலாய் கோணியபடியே தானிருந்தது. ஐசாளின் கொழுந்தன் பெண்டாட்டி பாரிசா வந்து அமரவும் அவளைப் பிடித்துகொண்டாள்.

"இந்தாவுளே பாரிசா ஒன் கொளுந்தன் பொண்டாட்டிக்குத் தான் அல்லா அறிவையே வச்சுப் படைக்கல.வயசுக் *கொமர குதுராட்டம் வீட்டோட வச்சு அளகு பாக்கா..நீங்கள்லாம் என்னன்டு டீ பாத்துக்கிட்டு கெடக்கீக?என்னத்துல இப்ப கொறையா இருக்கு? சனக் கட்டுலையா? பணக்கட்டுலையா? நெட்டையோ குட்டையோ பொட்டப்புள்ளய கட்டிக்குடுக்காம பூதம் காத்துக்கிட்டு இருக்கா வீட்ட..பத்தாம இப்புடி ஏவ தேவ வீட்டுகளுக்கும் வந்துடுறா வெக்கமில்லாம. என்னடி பண்றாய்ங்க உங்க புருசன்மாரெல்லாம்? பொண்டுசெட்டி பயலுக?".

"அல்லாவே ஏன்க்கா நீங்களும் புரியாம பேசுறீங்க? எம்புட்டோ நாமளும் சொல்லிப் பாக்கத்தான செஞ்சோம்? மெஹருக்கும் எத்தினி மாப்புள்ள பேசுனோம் ஒண்ணும் சரியாவே வரல்லியே.ஐசாக்காவும் இப்புடி தேவ வீடுகளுக்கு வந்து போனாலாவது ஒரு நல்ல மாப்புள்ள அமையாதான்னு தான் பாக்குது !எங்க மச்சான் மவுத்தாப்போனதுல இருந்து தான் வீடு வெளங்கலையே"

எழுந்து போனாள் வயிற்றுப்பிள்ளைக்காரி அமரும் நாற்காலியை அலங்கரிக்க.ஒரு சின்னத்தேர் அசைவது மாதிரி மெள்ள வந்து அமர்ந்தாள் சபியா . தங்களுக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தின் மொத்த கவனமும் அவள் புறம் திரும்பியது. ஏழு கட்டுக்கழுத்தியர் சுற்றிலும் நிற்க, மூத்தவள் என்ற ஹோதாவில் ராபியா முதலில் வெற்றிலை, பாக்கு ,மருந்துச்சங்கு, வாழைப்பழம், இனிப்பு, தேங்காய் , பூ என்று அவள் முந்தானாயை நிரப்பினாள்.வரிசையாய் மற்ற ஆறு பேரும் நிரப்ப..முடிந்தது சடங்கு. முண்டியடித்து வளையல் போட வந்த ஐசாவுக்கு வெற்றிலை கொடுக்கக் கூட ஆளைக்காணும்.

பந்தியிலும் ஐசா குடும்பத்துப் புறணி தான்.

"எப்புடித்தேன் அந்த பூத்பங்களாவுல அம்மா மக இருக்குதுக? இந்த மெஹரும் இப்பவெல்லம் வெளியில வாரதே இல்ல என்ன?"

"ஆமாடீ என்னன்டு வருவா? அவ வயசுல நாம கையில இடுப்புல வயித்துலன்னு சொமந்துக்கிட்டு அலையிதோம்.அவளுக்கு வெக்கமா வராதா ?"

"இக்பால் அண்ணன் தேன் இப்புடி வீட்ட விட்டுப் போச்சு, ரபீக்கும் ராஜாவும் கூடவா பெறயே போகுங்க? தங்கச்சிக்காரி இந்த கிறுக்கு அம்மாள்ட்ட மாட்டி தனியா தவிக்கிதா பாவம்..இதுல இந்த பெரியம்மா பாரு கூச்சமில்லாம கல்யாணம், மடிநெரப்புன்னு கெளம்பிக்கிட்டு வந்துடுது. லச்சணத்துல மெஹருக்கு நக பண்ணுதாம்ல நக?"

விருந்து முடிந்ததும் கிளம்பின ஐசாவைத் தேடி வந்தாள் ஜாஸ்மீன்.

"பெரியம்மா..இந்தாங்க என் வளவி..நானே வந்து வாங்கிக்கிடுறேன். ஏங்க பெரியம்மா இந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் என் கொளுந்தன் பொண்டாட்டியவும் அது அம்மாவையும் கூட்டியாறேன் நம்ம வீட்டுக்கு. நம்ம மெஹர அவுக வீட்டு பையனுக்குக் கேக்குறாக"

"மகராசியா கூட்டியா ஜாஸூ..வரேன்..அஸ்ஸலாமலைக்கும்".

விடிந்ததில் இருந்தே வீட்டை ஒதுங்க வைத்துக்கொண்டு பதட்டத்தோடு திரியும் அம்மாவைப் பார்த்துக்கொண்டேயிருந்தாள் மெஹர்.

"இப்ப என்னத்துக்குமா இப்புடி டென்ஷன் பண்ணிக்கிடுறீங்க? ஒங்களுக்கு முடியாம வரதுக்கா ? வீடெல்லாம் நல்லா சுத்தமாத்தானே இருக்கு? இந்தா காலையில தான் நாகு தொடச்சும் விட்டா அப்பறம் ஏன் நீங்க கெடந்து செரமப்படுதீங்க? சும்மா அல்லான்னு இருங்கம்மா..".

பார்த்துபார்த்து பக்குவமாக கடல் பாசி காய்ச்சி, ஃப்ரிஜ்ஜில் உறைய வைத்தாள் ஐசா, வடைக்கு ஊறப்போட்டு விட்டு கொஞ்சம் சாய வந்தாள் அறைக்கு.

நல்ல கருநீல வண்ணத்தில், நட்சத்திரப்பூக்கள் இட்ட ஷிஃபான் புடவைக்கு ஃபால்ஸ் தைத்துக்கொண்டிருந்தாள் மெஹர்.அவள் வாப்பாவைப்போல நல்ல மஞ்சள் நிறம். பெரிய கண்களும், மெல்லிய வாகான உடலும் அழகி தான்.

பள்ளிக்கு புர்காவில் சென்று வந்து கொண்டிருந்த போதே வெறும் உயரத்தையும் கைகளின் அழகையும் நிறத்தையும் பார்த்து விட்டு பெண் கேட்டு வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் தோழியர் திருமணங்களுக்கு செல்வதற்கே மருதாணி இட்டுக்கொண்டு மணிக்கணக்கில் அலங்காரம் செய்தவள் தான். இப்போது அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அவள் லட்சியம் செய்து கொள்வதில்லை. அம்மா வெகுவாக வற்புறுத்துகிறாளே என்று அந்தப் புதுச் சீலையை தயார் செய்து கொண்டிருந்தாள் மாலையில் உடுத்திக்கொள்ள.

"அம்மா தைராய்ட் மாத்திரையும் போடல..டிஜாக்சினும் போட்டுக்காம இருக்கீங்க போல காலைல இருந்தே? அப்புடி என்னம்மா மெய் மறந்துடுறீங்க? "

கண்ணயர்ந்து விட்ட அம்மாவை எழுப்பி மாத்திரையை போட வைத்தாள்.

"நீயும் செத்த தூங்கு மெஹரு..அவங்க மஹரிப்புக்கு பெறகு தான் வருவாங்க. சொன்னதெல்லாம் நெனப்பிருக்கா ?காலைல இருந்தே படிச்சு படிச்சு சொல்றேன்..அம்மா சொன்னாப்பல கேக்கணும்மா..என் சீதேவி "

நான்கு மணியளவிலே தயாராகி விட்டது வீடு. அழகாக உறைந்திருந்த கடல்பாசியை நீள் சதுரத்துண்டங்களாக நேர்த்தியாக வெட்டி அடுக்கினாள் ஐசா, ரோஸ் மில்க் கலந்து தயாராக இருந்தது ..ஒரு வேளை குளிர்பானம் வேண்டாம் என்றால் என்று தேனீருக்கு பால் காய்ச்சி தயார். தேங்காய் சட்னியும், சாம்பாருமாக மணத்தது அடுக்களை. வடை மட்டும் சூடா இருக்கட்டும் என்று அவர்கள் வந்த பிறகு பொரிக்கவென நாகு இருத்தி வைக்கப்பட்டாள்.

முகம் கழுவி தயாராகத் துவங்கினாள் மெஹர். கருநீல ரவிக்கை, சேலை..செட்டாக வெள்ளைக்கல் பதித்த நட்ச்சத்திர வடிவ நகைகள், கூந்தலைத் தளரப்பின்னி நீள நீளக்காம்புகள் தெரியுமாறு தானே தொடுத்த ஜாதிச்சரம் வைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் . மகளையே பார்த்துக்கொண்டிருந்த ஐசா "மாஷா அல்லாஹ்" என்று திருஷ்டிக்கழித்தாள். கண்கள் கனிய அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் மெஹர் .

*மஹரிப்புக்கு பாங்கு சொல்லி சரியாய் அரை மணியில் வந்தனர் ஜாஸூம் மாப்பிள்ளை வீட்டாரும். அறிமுகங்கள் ஆன பிறகு

"மெஹரகூப்டுங்க பெரியம்மா "

என்றாள் ஜாஸ்மீன்.

அல்லாவே என்ன செய்யக் காத்திருக்காளோ -உள்ளூர நடுங்கிய வண்ணம் உள்ளே சென்றாள் ஐசா. ஒரே நிமிடத்தில் மெஹருடன் வந்தாள் திரும்ப.

பளீரென்ற நிறமும் நெடுநெடுவென்ற உடல்வாகும் கண்ணில் பட ஆர்வமானாள் மாப்பிள்ளையின் தாய்.

"எங்கேம்மா ஒரேடியாக் குனியாம செத்த நிமிரு பாப்பம் ஒன் மொகத்த" .

முகம் இறுக இன்னம் குனிந்தாள் மெஹர்.

"என்னாடிம்மா இந்தக் காலத்துல இப்புடி நாணுற? நல்லா மொகத்த நிமுத்தி சலாஜ் சொல்லும்மா"

மறுபடியும் முக்காட்டை விலக்கி அவள் வற்புறுத்த விருட்டென்று எழுந்து அறைக்குள் சென்று மறைந்தாள் மெஹர்.

விதிர்த்துப் போனார்கள் வந்தவர்கள். சட்டென சுதாரித்துக்கொண்டாள் ஜாஸ்மீன்.

"விடுங்க பெரியம்மா மெஹர் வெக்கம் தெரிஞ்சது தானே..பெறயே போகாதீக. கல்யாணம் ஆச்சுன்னா தெளிஞ்சிடுது ..நாகு கொண்டாடி பலகாரமெல்லாம். "

நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள். அரைகுறையாக உண்டு விட்டு கடுப்பேறிய முகத்துடன் கிளம்பியது கூட்டம்.

பிலுபிலுவெனக் கத்திவிட்டுக் கிளம்பினாள் ஜாஸ்மீன் .

"ஆனாலும் இப்புடி ஆகாத்தியம் பண்ணலாமா மெஹரு நீ ..நல்லாத்தேன் வெக்கப்படுற போ. ஒங்க மச்சான் அப்பவும் சொன்னாக நான் தான் கேக்கல..போன வெசயும் இதே மாதிரி தான் உங்க மச்சான் கூட்டாளி ஒருத்தரு வீட்டு ஆட்கள கூட்டியாந்தேன். அந்தம்மா கேக்க கேக்க பேரே சொல்ல மாட்டேன்னுட்ட! சரியான ராங்கி புடிச்ச பொண்ணுன்டு அவங்க வெறுத்துப் போனாக .

அதுக்கு முன்ன சின்னம்மா சொன்ன ஒரு மாப்புள்ள ,கிட்டத்தட்ட பேசி முடிச்சு சக்கர போடுற அளவுல வந்து என்னமோ போன் கால் அப்புடி இப்புடிங்கிறாங்க அல்லா ஒருவன் தான் அறிவான் அதுவும் நின்னு போச்சு .இப்ப இம்புட்டு நாச்செண்டு ,தானா வந்த சம்பந்தத்த ஒதச்சு வெரட்டுறியே மெஹரு ..ஒனக்கே நல்லா இருக்கா? இன்னும் எம்புட்டு காலம் தான் கொமராவே பெரியம்மாவுக்கு பாரமா இருப்ப ?

இப்பமே நம்ம சாதி சனமெல்லாம் என்னமோ பெரியம்மாவுக்கு தான் ஒன்னய கட்டிக்குடுக்கவே இஷ்டம் இல்லங்கிற மாதிரி பேசுறாக...நல்லாத்தான் போ இப்புடி மானத்த வாங்குற . போதும்மா !பெரியத்தா மக, நம்ம தங்கச்சின்னு நான் மல்லுக்கட்டுறதுக்கு நீ குடுத்த மரியாத".

இறுகிப்போய் சலனமற்று டைனிங் டேபிள் அருகில் அமர்ந்திருந்த அம்மாவைக் கட்டாயப்படுத்தி இட்லியைப் பரிமாறி உண்ண வைத்தாள் மெஹர். தானும் உண்டு விட்டு படுக்கச் சென்றாள்.

அம்மா வழக்கமாகப் போடும் தூக்க மாத்திரையை எடுத்துக்கொண்டு போனவள் கண்ணயர்ந்து விட்ட ஐசாவை ஒரு நிமிடம் போல கண்வாங்காமல் பார்த்தாள். நகைகளைக் களைய ட்ரெஸ்ஸிங் டேபிளில் சென்று அமர்ந்தவள்... எழுந்து கொண்டாள். அம்மா உறங்கி விட்டாள் தான் என்று உறுதி செய்துகொண்டு திரும்பியும் நேராகவும் பார்த்துக்கொண்டாள் தன் உருவத்தைக் கண்ணாடியில்.

சிரித்து, சடையை முன்னால் விட்டு என்று புகைப்படக்கோணங்களில் பலவாறு பார்த்தான பின் புடவை நகையைக்களையாமல் அப்படியே உறங்கப்போனாள்.

..ஷஹி..

மடிநிரப்பு - வளைகாப்பு , கொமர் - கன்னிபெண் , மஹரிப் - மாலைத் தொழுகை

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails