Search This Blog

Wednesday, March 16, 2011

பூந்துடைப்பக்குச்சியும் ஒரு சிகப்புக்கல் மூக்குத்தியும்

"ஆ...அம்மா..ஐயோ என்ன விட்டுடுங்க மா..ஆ"ன்னு..அலறித்துடிச்சேன். அப்பா மடியில உக்காந்தபடி. அம்மாவுக்கும் அழுகை தான்..ஆனாலும் கெட்டியா என்னைப் பிடிச்ச பிடியை விடவேயில்லை அவ. "கொஞ்சம் பொறுடி , செத்த நேரம் தான், ம்ம்ம்ம்..இதோ ஆச்சு பார்" ன்ன படியே ஆசாரி என் காதை சரியாத்தான் குத்தியிருக்குறாரான்னு கவனமாப் பாத்துட்டு தான் என் கையவிட்டா.


அழுகையோட ஏகப்பட்ட எரிச்சலும் சேர்ந்துக்கிச்சு எனக்கு. வீட்டுக்குப் போற வழியில நாடார் கடையில் அடம்பிடிக்காமலேயே பன்னீர் சோடா கிடைச்ச திருப்தியில கொஞ்சம் போல அலட்டிக்கிட்டே வந்தேன்.

வீட்டு வாசலில் யாரோ ஒரு ஜோடி. "அடடா..டேய் சதா எப்புடிடா இருக்கே " ன்னு ஏக அமக்களமாய் வரவேற்கிராரு அப்பா. ":ஏய் மாலா ஆருன்னு தெரியலையாடி எங்க ராணி அக்கா மகன் சதா" ன்னதும் சுதாரிச்சிக்கிட்டாஅம்மா. "வாங்க வாங்க" ன்னு ஒரே உபச்சாரம் . எனக்குக் கெடச்சிருந்த திடீர் மரியாத இடம் மாறினதிலும், சதா என்று அழைக்கப்பட்ட அந்த மாமாவின் மனைவி ராஜியின் அழகில் அசந்தும் நின்ன இடத்திலேயே நின்னுட்டிருந்தேன். "உள்ளவாடா" ன்னு அப்பா கூப்பிட்டதில கூடத்தில இருந்து உள்ளறைக்கு இடம் பெயர்ந்தோம் மொத்த பேரும்.

"இப்பதான் டா உன் மொறப்பொண்ணுக்கு காது குத்தினோம். சொல்லாம கொள்ளாம வந்திருக்க...கொஞ்சம் முன்னாடி வந்திருந்தா..ஒன் மடியிலேயே வச்சு காது குத்தியிருக்கலாம்" ன்னு அங்கலாச்சார் அப்பா.

"இல்ல மாமா திடீருன்னு தான் கெளம்பினோம்..இவ அம்மாவுக்கு ஓடம்பு முடியாம இருந்து போன வாரம் தான் தவறிப் போனாங்க, அதுல இருந்து எங்கயாவது போகலாம்ன்னு ஒரே தொணப்பு. எனக்கு உன்ன விட்ட வேற யாரு மாமா இருக்கா? அதான் இங்க கூடிட்டு வந்தேன்" .

பேசுவது புரிந்தும் புரியாமலும் முழிச்சுகிட்டே இருந்தா ராஜி மாமி. சதா மாமா எங்க தாத்தாவோட மூத்த சம்சாரம் ஜானகிப் பாட்டியின் மகள் ராணியின் மகன். பாட்டி இறந்தும் தாத்தா எங்க பாட்டி ஜானகியின் தங்கை சுசீலாவை கட்டியிருக்கிறார். ஆனாலும் மகள் ராணியின் மேல கொள்ள பிரியமாம் எங்க தாத்தாவுக்கு. அக்கா மக, தாயில்லாப் பொண்ணுன்னு எங்க பாட்டியும் ராணி அத்தைய தன் பொண்ணாத்தான் வளத்திருக்காங்க. எங்க அப்பாவையும் ரகு சித்தப்பாவையும் ரொம்ப அன்பா பாத்துப்பாங்களாம் ராணி அத்த.

"எனக்கு மொத மொத முழுக்கால் சட்டையும் ஃபுல் சர்ட்டும் தச்சு போட்டு அழகு பாத்ததே எங்க ராணி அக்கா தான்"னு அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கேன்.

கல்யாணமாகி சில வருஷத்திலேயே ஒரே மகன் சதானந்தன தவிக்க விட்டுட்டு ராணி அத்த இறந்துடாங்களாம். அம்மாவும் இல்லாமப் போகவும் ,சின்ன வயசுலயே வீட்டை விட்டு ஓடிப்போய் மைசூரில் செட்டில் ஆகிட்டாரு சதா மாமா. செட்டில்ன்னா காரும் பங்களாவுமா இல்ல..ஒரு பீடி கம்பெனியில் வேலைக்கு சேந்தவர், அங்க வேலை பாத்து வந்த ராஜி மாமியோட அப்பாவப் பழக்கம் பிடிச்சுக்கிட்டாராம் ..அப்புடியே பெண்ணையும் கட்டிக்கிட்டாரு.


மைசூர் பிராமணக் குடும்பத்துப் பொண்ணு ராஜி..மூக்கும் முழியுமா கிளியாட்டம் பெண்ணும்பாங்களே .. ராஜி மாமியைப் பாத்துத் தான் அப்படி சொல்றதே ஆரம்பிச்சிருக்கணும். அப்படி ஒரு தந்த நிறமும், செப்புச்சிலைமாதிரி உடலமைப்பும், ஒய்யாரமும் என்னாலயே வச்ச கண் வாங்க முடியல.நிகு நிகுன்னு பளபளக்குற அந்த மூக்குல ஒரு செவப்புக்கல்லு மூக்குத்தி தான் என்ன அழகு?

யாரோ சொந்தக்காரங்க வந்திருக்காங்கன்னு தெரிஞ்சு பாக்க வந்த வீட்டுக்காரப் பாட்டி கூட "அட ஈரோ மாதிரி பையன், ஈரோயினி மாதிரி பொண்டாட்டி" ன்னு அம்மாகிட்ட கிசுகிசுத்தா.

மொழி புரியாட்டாலும் ஆதரவாப் பேசுன அம்மா கிட்ட கெட்டியா ஒட்டிக்கிட்டா ராஜி மாமி. தினமும் என் காதுப் புண்ணுக்கு எண்ணை வச்சு , அம்மா அளவா ஒடச்சுக் கொடுக்குற பூந்துடைப்பக் குச்சியை ஏதோ அரைபவுன் தோடு அணிவிக்கும் பாவனையோட பயபக்தியா போட்டுவிடுவா .

தன் அம்மா பேர எனக்கு வச்சிருக்குறதுல சதா மாமாவுக்கு ரொம்ப சந்தோஷம், என் மேல தனி பிரியம்..எனக்கும் தான்."இது என்னக்கா, கொழந்தைக்கு நல்ல பவுன் தோடு போடாம ஏதோ குடியானவங்க வீட்டுப் புள்ள மாதிரி பூந்தொடப்பக் குச்சியப் போட்டா வக்கிறது?" ன்னு சதா மாமா கேட்க,

"இல்ல சதா ஒரே புண்ணா இருக்கு பாரு காது, செத்த ஆறிணதும் தங்கத்தோடு தான் போடணும். எங்க அம்மா வீட்டுல நல்ல பெரிய தோடாத்தான் குடுத்திருக்காங்க".

ஒரே பொண்ணுக்கு காது குத்த தாய் வீட்டுலருந்து யாரையும் அழைக்க அப்பா விடல்லங்கிற ஆத்திரத்துல அம்மா சொன்னா .

காய்கறி நறுக்க, வீட்டை சுத்தம் செய்யன்னு ரொம்ப உதவியாஇருந்தா மாமி அம்மாவுக்கு. மாமாவும் மாமியும் கூடத்தில் படுப்பாங்க, நாங்க உள்ளறையில். ஒரு ராத்திரி மாமாவுக்கும் மாமிக்கும் சரியான சண்ட கன்னடத்துல காச்சு மூச்சுனு. என்னமோ ரொம்ப பெரிய பிரச்சினன்னு மட்டும் தான் புரிஞ்சிது எனக்கு.அம்மாவும் அப்பாவும் போய் என்னான்னு கேக்கவேயில்ல..அடுத்த நாளே ரகு சித்தப்பாவை வரவழச்சு அவரோட செங்கல்பட்டு அனுப்பிட்டார் அப்பா, மாமாவையும் மாமியையும். அவங்க போய் ஒரு வாரம் வரைக்கும் யாரும் யாரோடயும் முகம் கொடுத்துப் பேசிக்கல. அப்பாவும் சரி அம்மாவும் சரி ஏதோ ரொம்ப இறுக்கமா இருந்த மாதிரி தோணுச்சு எனக்கு.

மறுபடியும் மைசூர் போக விருப்பம் இல்லன்னு சதா மாமா சொல்லியிருக்காரு..ரகு சித்தப்பாவும் ஒரு பெட்டிக்கட வச்சுக் குடுத்துட்டாராம் அவருக்கு,

"ஆமா ஆமா ஏன் மாட்டான் உங்க தம்பி? பின்ன கொஞ்சமான அழகா அதுன்னு "ஆத்திரமா அம்மா ஒரு நா அப்பாவோட மல்லுக்கட்டிக்கிட்டு இருந்தா.

"சும்மா வாய்க்கு வந்தபடி பேசாதடி, எங்க அக்கா எங்களுக்கு செஞ்சதுக்கு நாங்க எவ்வளவோ கடன் பட்டிருக்கோம்"ன்னு அப்பாவும் பதில் சொன்னாரு.

ரொம்ப நாள் வரைக்கும் சதா மாமாவப் பத்தி பேசறதேயில்ல யாரும். தீபாவளி, பொங்கல்ன்னு பண்டிகைகளின் போது மட்டும் பாத்துக்கிட்டோம் எல்லாரும்..அம்மாவும் சித்தியும் கண்ணாலயே பேசிக்கிறதும், கடுகடுன்னும் இருப்பாங்க அவங்க வந்தாலே. கட வியாபாரம் நல்லா சூடு பிடிச்சு மாமா குடும்பம் செழிப்பமா வந்துக்கிட்டு இருந்த நேரம்.....அங்கயும் என்னவோ பிரச்சின.

"ஊரோட போறோம் மாமா"ன்னு, கொழந்தைகள கையில பிடிச்சிக்கிட்டே கண்ணீரோட சொல்லிட்டு போனாங்க மாமா, மாமி. அவங்க பின்னாடியே அழுதுக்கிட்டே ஒண்ணும் புரியாம கொஞ்ச தூரம் நானும் போனது மறக்கவே முடியாது.

சதா மாமான்னு ஒருத்தர் இருந்ததே மறந்து போச்சு.

என் சொந்த அத்த, அப்பாவுக்கு நேர் மூத்தவங்க பேபி அத்த, அவங்க புள்ளக்கே என்னையும் கட்டிக் குடுத்துட்டாங்க. திடீர்ன்னு சதா மாமா இறந்துட்டார்ன்னும், நாலஞ்சு கொழந்தைகளோட மாமி ரொம்ப கஷ்டப்படுறதாவும் எல்லாம் கேள்விப்பட்டேன். பீடி சுத்தி பொழக்கிறாங்கன்னு சொன்னாங்க.

ராஜி மாமிய நெனச்சாலே அந்த பளபளங்குற மொகமும், செதுக்கி வச்ச மாதிரியான மூக்குல மின்னுர செவப்புக் கல்லு மூக்குத்தியும் தான் நெனப்பு வரும். மூக்கு நுனி செவக்க மாமி அழுற மாதிரி ஒரு கனவு வந்து வந்து போச்சு பல நா.

"ரொம்ப நாளா ஆசப்பட்டுக்கிட்டே இருக்கியே ராணி. இன்னக்கு கடயில கல்லாவுக்கு ஆள் வச்சிட்டு வரேன். ரெடியா இரு சினிமாவுக்குப் போவோம்" ன்னு அன்னக்கி இவர் சொன்னதும் தல கால் புரியல எனக்கு. ஆச ஆசயா ஆரஞ்சு கலர் மைசூர் சில்க், மாட்ச்சா தலையில கனகாம்பரம், செவப்புக்கல் தோடு, மூக்குத்தின்னு கெளம்பிட்டேன். வண்டியில பாதி தூரம் போயிருப்போம், இவர் ஃப்ரெண்ட் ஒருத்தரு வழிய மறிச்சாரு.

"டேய் யாரோ உங்க சொந்தக்காரங்களாம் வீட்டு அட்ரெஸ் தெரியாம கட வாசல்ல வந்து நிக்கிறாங்க, ஒன் பேரும் ராணி பேரும் சொல்றாங்க , சரியா தமிழ் தெரியல மைசூராம்" ன்னதுமே சட்டுனு நானும் இவரும் புரிஞ்சிக்கிட்டோம்.

"வா, வா சதா அண்ணன் குடும்பம் தான் போல"ன்னு பறக்குறாரு இவரும்..

கட வாசல்ல ரெண்டு மூணு பொம்பளங்க, நாலஞ்சு வயசு பிள்ளங்க. தெரிஞ்ச மொகமாவே யாரும் இல்ல!

வத்த, தொத்தலா பல்லெல்லாம் நீண்டு ,தலையில முக்காடு போட்டிருந்த ஒரு வயசான மனுஷிய கேட்டேன்

" சதா மாமா பொண்டாட்டி வரலீங்களா" ன்னு

கண்ணு ரெண்டும் மின்ன சட்டுன்னு நிமுந்து பாத்தவங்களோட செவந்த மூக்குல ,தேவைக்கு அதிகமாவே நீண்டிருந்துது அந்த பூந்தொடப்பக்குச்சி.

...ஷஹி...

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails