ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்-
ஒரே முறையில் படித்து, ஒரு குறுநாவலுக்கான பக்கங்கள் மட்டுமே கொண்ட இந்தக் கதையை முழுமையாக உள்வாங்கி விட யாராலாவது முடியுமா? என்பது மிகுந்த சந்தேகமே. உளவியல் மேதை தஸ்தயேவ்ஸ்கியின் இந்தக் கதையை அதன் சாரமும், வாசிப்பனுபவமும் சிறிதும் குறைந்து விடாமல் எழுத என் போன்ற ஆரம்ப நிலை வாசகியால் நிச்சயம் முடியாது...முயன்றிருக்கிறேன்..
"நின் காதல் நிழல் தன்னில்
நின்று மகிழ்வோம் ,
மின்னி மறையும்
கண்ணிமைப் பொழுதெனினும்
போதுமது என்றெண்ணிப்
பிறந்தானோ ?"
எனும் இவான் துர்கேனெவின் வரிகளுடன் துவங்குகிறது, வாசகனை தனக்குள் இழுத்து கதாநாயகனின் மனநிலையை தன்னுடையதாக எண்ணி, தவித்து, மகிழ்ந்து, தன்னால் என்றோ ஒரு நாள் அனுபவிக்கப்பட்ட உணர்வுகள் தாம் இவை என்று அடையாளம் கொள்ளச் செய்யும் வாசிபானுபவம். தனிமையால் கிட்டத்தட்ட மனநோயாளியாக மாறவிருந்த கதாநாயகன், கதைசொல்லி. இறுதி வரை பெயர் குறிப்படப்படவில்லை அவனுக்கு...காரணமாக வேறெதைச்சொல்வது? படிக்கும் ஒவ்வொருவரும் அவனே தாம் நாம் என்ற நினைப்புக் கொள்வதற்குத் தான் என்பது அல்லாமல்?
ஒரு பித்தனைப் போல் கனவுகள் கண்டு அவற்றிலேயே வாழ்ந்து, அழுது, மகிழ்ந்து கொண்டிருக்கும் அவனுக்கு கதையின் முதல் நாளிரவில் அழகிய இளம் பெண் நாஸ்தென்காவின் அறிமுகம் கிடைக்கிறது..அதுவும் துயரார்ந்த தன் வாழ்வை எண்ணி அழுது கொண்டிருந்த அவளிடம் ஒரு மனிதர் வம்பு செய்ய முற்படுகிறார், நாயகன் அவளை மீட்கிறான். சிறிதே நேரப்பேச்சுக்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முற்படுகின்றனர். தன்னிடம் அவன் காதல் கொண்டு விட மாட்டான் என்று உறுதி அளித்தால் மட்டுமே அவனிடம் தொடர்ந்து நட்பு கொள்வதாக நிபந்தனை இடுகிறாள் நாஸ்தென்கா..நாயகன்..சம்மதிக்கிறான்.பின்னிரவு வேளையாகிவிட்டதால் நாஸ்தென்கா வீடு திரும்புகிறாள் ....மறு இரவில் சந்திக்கும் வாக்குறுதியோடு.
பேசிப்பழக என்றும் சொந்தமென்றும் கூறிக்கொள்ள எவருமற்ற நாயகனும், சிறுபிராயத்திலேயே தாய் தந்தையை இழந்து , தன்னுடன் சேர்த்து ஊக்கினால் அவளைப் பிணத்தே வளர்க்கும் பாட்டியிடம் வளர்ந்து தனிமையே வாழ்வாகக் கொண்டிருக்கும் நாஸ்தென்காவும் நட்பு கொண்டு விடுகின்றனர்.
இரண்டாவது இரவில் மீண்டும் சந்திக்கும் போது... வேலைகள் முடிந்த பிறகு, தனக்கேயான மாலைபொழுதுகளில், கற்பனாதேவியின் உதவியுடன் ,பெரும் புலவர்களையும் புகழ்பெற்றவர்களையும் தான் சந்தித்து நட்பு கொள்வது போன்றும், தனக்கென்று இருக்கும் ஒரு கோடைக் காலக் குடிலில் தன் காதலியுடன் இன்பமாக இருப்பது போன்றெல்லாமும் தான் வளர்த்து வந்த கற்பனை உலகினைப் பற்றி நாஸ்தென்காவிடம் மனம் திறந்து பேசுகிறான் கதை சொல்லி.
இத்தனை ஏக்கமும், துக்கமும் நாம் வாழும் இந்த உலகில் மனிதர்களை பீடிக்கக் கூடுமா ?என்ற கேள்வி எழும் அதே நேரம் இம்மாதிரியான மனநிலையில் அமிழாத உயிர்களும் உண்டா என்ற பதிலும் நம் உள்ளங்களில் எழவே செய்கிறது. தன்னுடையது போன்றே மனநிலை கொண்டவன் இவன் என்ற நட்புணர்வுடன் அவனைப் புரிந்து கொள்கிறாள் நாஸ்தென்கா. தானும் கனவுகளில் வாழ்பவள் தான் என்று துவங்கி, தன்னைப் பராமரித்து வரும் பாட்டி எங்கும் சென்று விடாத படி ஊக்கினால் பிணைத்து வைக்கும் நிலையையும், சீனத்து இளவரசனை மணந்து கொள்வதாக தான் கண்டு வரும் கனவுகளையும் கூறுகிறாள். வீட்டு மாடியில் குடியிருக்க வரும் இளைஞனிடம் காதல் கொண்டு விடும் நாஸ்தென்கா, தானும் அவனும் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் படி அவன் தன்னை மணந்து அழைத்துச்செல்வதாக வாக்களித்திருந்த சமயம் வந்தும் இன்னமும் அவனிடமிருந்து எந்த செய்தியும் வராத துயரத்தைப் பகிர்கிறாள். அவளுடைய துயர் துடைக்கத் துடிக்கும் நாயகன் கடிதம் ஒன்று எழுதி அவளுடைய காதலனிடம் அதைச்சேர்ப்பித்து அவர்களை இணைத்து வைக்கும் பொறுப்பைத் தனதாக்கிக் கொள்கிறான்.
"என்னென்பது இதை! இன்பமும் மகிழ்ச்சியும் எப்படிப்பட்ட அழகை உண்டாக்கிவிடுகின்றன!" என்னும் ஆனந்தமான வரிகளுடன் துவங்குகிறது அவர்களின் மூன்றாம் இரவின் சந்திப்பு பற்றின விபரம். தன்னையும் அறியாமல் செய்துகொடுத்த சத்தியத்தையும் மீறி அவள் பால் தன் மனம் லயித்து விட்டதை உணருகிறான்..கதாநாயகன். அனுப்பிய கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லாதது கண்டு துடிக்கிறாள் நாயகி..அவளை சமாதானம் செய்து தேற்றுகிறான் கதை சொல்லி. அவளுடைய காதலன் வராமல் போனதற்கு நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும் என்று அவளை நம்பவைப்பதோடு மூன்றாமிரவு முடிகிறது.
நான்காம் இரவில் கதைசொல்லியைக் கண்டவுடன் பரபரக்கிறாள் நாஸ்தென்கா..கடிதம் கொண்டு வந்திருப்பான் தன் காதலனிடம் இருந்து என்று..அவள் உள்ளத்திலிருந்த கடைசி நம்பிக்கையும் இல்லையெனும் அவன் சொல்லில் தகர்ந்து போகிறது. எத்தனையோ பேசியும் அவள் மனம் நம்பிக்கை கொள்ள மறுக்கிறது, மட்டுமல்லாமல், தன்னை நிற்கதியாய் விட்டுவிட்டு ,ஒரு வரி கூட எழுத மனம் இல்லதாவரைப் பற்றி தான் பேசக் கூட விரும்பவில்லை என்று கதறுகிறாள் நாஸ்தென்கா.
மேலும் "நீங்களாக இருந்தால் இப்படிச்செய்திருக்க மாட்டீர்கள் அல்லவா? உங்களை விரும்பியவளை பேணிப் பாதுகாத்திருப்பீர்கள் அல்லவா? "என்று காதலனையும் நண்பனையும் அவள் ஒப்பிட்டுப் பேசப் பேச, தன் நிலை மறந்து ,அவள் பால் தான் கொண்டு விட்ட காதலை ஒப்புக்கொண்டுவிடுகிறான் கதை சொல்லி.
ஆச்சர்யம் ஏதுமில்லாமல் அவள் அதை எதிர்பார்த்தவள் போல அவன் காதலை ஏற்றுகொள்கிறாள் நாஸ்தென்கா..இருவரும் எதிர்காலம் பற்றியெல்லாம் பேசிக்களிக்கிறார்கள்..வீடு திரும்பும் சமயத்தில் நாஸ்தென்காவின் காதலன் வருகை நிகழ்கிறது. கதைசொல்லியின் அணைப்பிலிருந்த நாஸ்தென்கா, தன்னை மறந்து கூவியவாறு காதலனின் அணைப்புக்குள் அடங்குகிறாள் .தன்னை முத்தமிட்டு ,விடைபெற்றுச் செல்லும் அவளின் கடிதம் கண்டு கண்ணீர் விடுகிறான் கதைசொல்லி. தான் ஒரு போதும் அவளை மறப்பதற்கில்லை என்றும் தன்னுடைய துன்பம் அவளை பாதிக்கக் கூடும் என்பதால் துயர் கொள்ளவும் மாட்டேன் என்றும் உறுதி கொள்கிறான் .
"தனிமையான , நன்றி நிறைந்த ஓர் இதயத்துக்குக் கணப்பொழுதுக்கு ஆனந்தமும் இன்பமும் அளித்தாய் அல்லவா, அதற்காக என்றென்றும் இறைவன் உனக்கு அருள் புரிவாராக. என் தெய்வமே ! முழுதாய் ஒரு கணப் பொழுதுக்கல்லவா ஆனந்த இன்பம் கிட்டிற்று! போதாதா அது , ஓர் ஆயுட்காலம் முழுமைக்கும் அது போதாதா? "
என்று மனம் நிறைய ,நாஸ்தென்காவின் நல் வாழ்வுக்காக கதை சொல்லி உருகுவதாக நிறைவுறுகிறது கதை.
தனிமையில் வாடி, கனவுகளில் மட்டுமே இன்பம் கண்டு வந்த ஒருவனுக்கு ஒரு பெண்ணின் நட்பும் காதலும் எத்தகைய ஆறுதலையும் இன்பத்தையும் அளிக்கும், அவளிடம் காதல் கொண்டு விட்ட பிறகு தன்னால் அவளுக்கு ஒரு சிறு துன்பமும் நேரக் கூடாது என்று நினைக்கும் மனோபாவம் ஏற்பட்டு விடும் ஆச்சர்யம் என்று காதல் கொண்டு விடும் ஒரு ஆணின் மிக நுட்பமான எண்ண ஓட்டங்களை அழகாகப் பதிந்திருக்கிறார் தஸ்தாவெஸ்கி. ஒரு மாய உலகில் கண்ட இன்பத்தை உண்மையில் தனக்கு அளித்தாள் , அது ஒரு கணப் பொழுதுக்கே என்றாலும் கூட என்று அக்கணத்தையும் போற்றும் அளவில் இனிமையானதும் , நன்றி மிக்கதும், தூய காதல் கொண்டு விட்டதுமானது ...கதை சொல்லியின் உள்ளம்.
கதையின் துவக்கத்தில் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சுற்றிலும் உள்ள இயற்கையானது அந்நகரை வசந்தத்தில் எழிற்கோலம் பூணச்செய்து விடுவதை கதைசொல்லி காணும் விதத்திலேயே பின்னாள் வரவிருப்பதை சொல்லிவிடுகிறார் தஸ்தவெஸ்க்கி. அழகுக்கோலம் பூணும் நகரை, நாயகன் காசநோயால் பீடிக்கப்பட்டு, திடுமென ஒரு பொழுது அழகு கொண்டு துலங்கும் ஒரு இளநங்கைக்கு ஈடாக நினைக்கிறான். இத்தனை அழகு அவளுக்கு எப்படி திடீரென வந்தது என்று புரிந்து கொள்ளத் துவங்கும் கணத்திலேயே அவள் அழகு மறைந்து, வியாதிக்கோலம் கொண்டு விடுவதைப் போலத் தான் பீட்டர்ஸ்பர்க் நகரம் வசந்த கோலம் கொள்வது என்று பேசுகிறான் . தனிமையால் பீடிக்கப்பட்டு துன்பதில் உழன்று பரிதாபமாக இருக்கும் அவன் நிலையையே வாசகனுக்கு இவ்விதம் சொல்கிறாரோ தஸ்தவெஸ்கி? காதல் கொண்டு, அது ஏற்கப்பட்ட கணம் அவன் அனுபவித்த இன்பம் திடுமென மறையப்போவது தான் என்பதற்கான குறியீடு தானே அது?
இங்கு டால்ஸ்டாயின் அன்னா கரீனா வின் ஒரு காட்சி நினைவில் வருகிறது. நாயகி அன்னாவும் வ்ரான்ஸ்கியும் சந்திக்கும் முதல் காட்சியில் ரயிலில் அடிபட்டு ஒருவன் இறந்து போவதாக ஒரு காட்சி அமைத்து, அது ஒரு துர் சகுனம் என்பதாக எழுதியிருப்பார் டால்ஸ்டாய்..கதையின் முடிவில் அன்னா தற்கொலை செய்துகொள்ள ரயில் முன் பாய்ந்து விடுகிறாள். டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாவெஸ்கியின் சிந்தனையோட்டம் மற்றும் எழுத்து முறை ஏறக்குறைய ஒன்றே போல் உள்ளதைக் காணலாம்.
"தன்னந்தனியனாய் இருப்பது எவ்வளவு சோகம் மிக்கது -நினைத்து வருந்துவதற்குக்கூட ஒன்றும் இருக்காதே, ஒன்றுமே இருக்காதே...ஏனெனில் நான் இழப்பது எதுவாயினும் , அது உண்மையில் ஒன்றுமில்லாததாகத்தானே , வெறும் அசட்டுச் சின்னமாகத்தானே , வெறும் கனாக்களாகத்தானே இருக்கும்." இப்படி புலம்பும் நாயகனுக்கு, காலம் முழுவதும் துணையாய்ச் செல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நினைத்து வருந்துவதற்கும் ,அழவும் ,அசலான துயரம் ஒன்றை அளித்து பேருதவி தான் புரிந்து விட்டாள் நாஸ்தென்கா.
நாயகனின் அணைப்பில் இருக்கும் போதே காதலன் குரல் கேட்டு அவனிடம் ஓடும் அவள் ...மறுநிமிடமே பாய்ந்து வந்து இவனை ஆசையோடு அணைத்து முத்தமிடுகிறாள், உங்கள் இருவரையும் காதலிக்க முடிந்தால் என்று ஏங்குகிறாள், நண்பனை காதலனோடு ஒப்பிடுகிறாள், காலம் முழுக்க தாங்கள் என்னைக் காதலிக்க வேண்டும் என்கிறாள்...மனித மனத்தின் உணர்வுகளையும் அவற்றில் ஏற்படும் சிக்கல்களையும் அப்படியே சித்தரித்துள்ளார் தஸ்தாவெஸ்க்கி. ஒருவனை மட்டுமே நினைக்க முடியும், அவனையே தான் காலம் முழுக்கக் காதலிப்பேன் என்றெல்லாம் கதாநாயகியர் பேசும் வசனங்கள் பெரும்பாலும் செயற்கையாக நம் காதுகளில் ஒலிப்பது ஏன் என்பது வெண்ணிற இரவுகள் படிக்கும் போது விளங்கும். நாயகனுக்கு மாறு செய்து விட்டாள் என்று நம்மாலும் நாஸ்தென்காவை வெறுக்க முடியாத அளவில் அவளுடைய பாத்திரத்தை அன்பும், பேதமையும் , கண்ணியமும் மிக்கதாகப் படைத்திருக்கிறார் தஸ்தாவெஸ்கி.
WHITE NIGHTS- ஃப்ரெஞ்சு,
TWO LOVERS- ஆங்கிலம்,
FOUR NIGHTS OF A DREAMER- ஃப்ரெஞ்சு
என்றெல்லாம் உலக அரங்கிலும்,
இயற்கை என்ற பெயரில் தமிழிலும்
கூட வெண்ணிற இரவுகளைத் தழுவியும், சாராம்சத்தை உள்வாங்கியும் எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து விட்டன. ஆனாலும் பலப்பல படங்களுக்கான, பல முக்கோண காதல் கதைகளுக்கான கதைக்களனை வழங்கிய வண்ணமே இருக்கிறது வெண்ணிற இரவுகள்.
"இப்படிப்பட்ட ஒரு வானத்தின் கீழ் பல வகையான முசுடுகளும் மூர்க்கர்களும் எப்படி வாழ முடியும்" என்ற நாயகனின் கேள்வியோடு துவங்குகிற வெண்ணிற இரவுகள்..இருள்கவிந்து, கருவண்ணமாக எல்லோருக்கும் இருக்கும் இரவு அவனுக்கு மட்டும் வெண்ணிறமாக இருந்தது காதல் எனும் ஒளிக்கிரணம் அந்நான்கு இரவுகளில் மட்டுமே அவன் மீது பாய்ந்ததால் தான் ...என்று.. காதலின் மகோன்னதத்தையும், மனித மனங்களின் ஆழத்தில் புதைந்திருக்கும் அன்புக்கான தேடலையும் ஒரு தீவிரமான காதல் கதையாக அளித்திருக்கிறார் தஸ்தாயேவ்ஸ்கி.
....ஷஹி...
No comments:
Post a Comment