Search This Blog

Wednesday, January 5, 2011

மாஸ்கோவின் காவேரி..(சிறுகதை)




ஹஃபீ வந்துருக்கா,என் அழகான டாக்டர் தங்கச்சி ஹஃபீ,ரஷ்யாவில படிச்சவ.சித்தப்பா பொண்ணு தான்னாலும்,அவள என் தங்கச்சின்னு தான் சொல்லிப்பேன்.பின்ன? என்னோட சின்ன வயசுக் கனவுப்பிரதேசமான ரஷ்யாவுல படிச்சவன்னா சும்மாவா?

அப்பாவுக்கு கம்யூனிசத்தின் பேருல அப்போவெல்லாம் ரொம்ப ஈடுபாடு.மாஷா ன்னு ரஷ்ய மாத இதழெல்லாம் வீட்டுக்கு வரும்.அதுவும் இல்லாம ரஷ்ய மொழியாக்க நாவல்களுக்கும் பஞ்சமில்ல வீட்டுல.அதெல்லாம் படிச்சு படிச்சு ரஷ்யாவின் பேருலயும் ரஷ்யர்கள் பேருலயும் என்னமோ ஒரு பிரியம்.

ஆப்பிள் மரங்களும், திராட்ச்சைக் கொடிகளும் அழகுக்காக வளப்பாங்கலாம்!ஸ்ட்ராபெர்ரிப் பழங்களும் சீப்படும்ன்னு எல்லாம் ஹஃபீ சொன்னப்ப நான்' ஆ'ன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன். பக்கத்துல இருக்கிற காரக்குடியில தன்னோட படிச்ச சீனியர் ரஹ்மான் கிறவர் அரசாங்க ஆஸ்பத்திரியில வேல பாக்குரதாகவும், அவரு ஒரு ரஷ்ய பொண்ண கல்யாணம் கட்டி கூட்டி வந்திருக்கிறதாகவும் ஹஃபீ சொன்னா.எனக்கு ஒரே ஆச்சர்யம்!அதெப்புடி ஹஃபீ?இதெல்லாம் ஒத்து வருமான்னு கேட்டேன்.அதுக்கு அவ" இல்லக்கா,ரமீ அக்காவ பத்தி உங்களுக்கு தெரியாது.ரஹ்மான் அண்ணனும் அவங்களும் மேட் ஃபார் ஈச் அதர்,அப்புடி ஒரு லவ் நான் பாத்ததே இல்ல!அண்ணன் மாதிரி ஒருத்தரு கெடக்க அவங்களும், ரமீ கெடக்க அவரும் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்"னா.

ரமீ மாசமா இருக்கிறதாவும், மறுநா அவள பாக்கப் போலாம்னும் ஹஃபீ சொன்னப்ப எனக்கு ஒரே சந்தோஷமாப்போச்சு. காலையிலேயே கெளம்பிட்டோம். இவரும் ஒண்ணும் சொல்லல! அழகான கொளுந்தியா "மச்சான் என் கூட அக்காவ அனுப்புங்கன்னு" சொன்னா யாருக்கு தான் மறுக்க முடியும்?.
மாசமா இருக்கிற பொண்ணாச்சேன்னு "ஏதாவது வாங்கிட்டு போக வேண்டாமா"ன்னு கேட்டேன். அல்வா வாங்குனா ஹஃபீ. கொஞ்சம் பழம் வாங்கிக்கிட்டேன் நான். வழியெல்லாம் ஒரே ரஷ்யா கத தான். எனக்கு கேக்க கேக்க அலுக்கல. டிரைவர் அண்ணனும் கூட கூட சந்தேகம் கேக்க ஹஃபீ பதில் சொல்லிக் கிட்டே வந்தா. ஊரும் வந்துடிச்சி.

ரஹ்மான் வீடு நான் நெனச்ச மாதிரி இல்ல! ரொம்ப பழங்காலத்து செட்டியார் வீடுங்க இருக்குமே அப்பிடி இருந்திச்சு. கார் சத்தம் கேக்கவுமே உள்ளேர்ந்து ஓடி வந்தா ஒரு பொண்ணு! அப்புடியே ஹஃபீய கட்டி புடிச்சுக்கிட்டா. அவளோட தந்த நெறமும் தூக்குன மூக்கையும் தவிர வேற எதுவுமே ஒரு ரஷ்ய பொண்ணா அவள காட்டல! எனக்கு ரொம்ப சப்புனு போச்சு. "இவளா ரமீ"ன்னு நைசா ஹஃபீய கண்ணாலயே நான் கேக்க, ஹஃபீயும் "ஆமாக்கா"ன்னு கண்ணாலேயே பதில சொல்லிட்டா.

ரமீய மறுபடியும் ஹஃபீ அறிமுகம் செஞ்சு வச்சப்பதான் சரியா பாத்தேன். லேசா மேடிட்டிருந்த வயிரும், ஒல்லிபிச்சான் ஒடம்புமா இருந்தா. எனக்கு பாவமா இருந்திச்சு. பின்ன! நானெல்லாம் மாசமா இருந்தப்ப சும்மா குண்டு கணக்காத்தான இருப்பேன்.

உள்ள போனதுமே ரஹ்மானோட அம்மாவும் தங்கச்சியும் வந்தாங்க. ரொம்ப பிரியமா பேசுனாங்க. சாப்பாடு வச்சாங்க. சாப்புட்டு ஆனதும் கூட எங்க கூடவே உக்காந்து இருந்தாங்க. அப்பறம் வேறென்ன பண்ணுவாங்க? அதெல்லாம் எங்கள்ல பழக்கம் தான். புது மருமகள விட்டுட்டு நகந்துட்டா அவளுக்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மனச கலச்சிட மாட்டாங்களா வர்ரவங்க?

ஹஃபீயும் ரமீயும் ரஷ்யன்ல பேசுனத பாக்கணுமே! ஆமா! மருத்துவப் படிப்பு அங்க ஆறு வருசம். மொத வருசம் ரஷ்யன் படிக்கணும். நம்ம ஊருல மாதிரி அங்க எல்லாம் தாய் மொழில ஒழுங்கா ஒரு வாக்கியம் எழுதத் தெரியாமலேயே குப்ப கொட்டிட முடியாது. உத்து உத்து கேட்டாலும் எனக்கு ஒண்ணும் புரியல. ஹஃபீ இங்லீஷ்ல எனக்கு அவங்க பேசுறதயெல்லம் சொன்னா.


ரமீ ஓரளவுக்கு நல்லாவே தமிழ் பேசுனா. "என்ன பண்ணிக்கிட்டு இருந்தே"ன்னு நான் கேட்டதுக்கு "கொல்லையில துணி தோச்சுக்கிட்டு இருந்தேன்னு" சொன்னாளே பாக்கலாம். அசல் பட்டிக்காட்டு துளுக்கச்சி கெட்டா போங்க! கொஞ்ச நேரத்துல வேல முடிஞ்சு ரஹ்மான் வந்தாப்புல. நல்லா ஒயரமான ஓங்கு தாங்கான ஆளு! ரொம்ப பிரியமா, மரியாதையா பேசுனாரு. 'ஹஃபீ சொன்னது சரி தான்'னு நெனச்சுக்கிட்டேன்.உடல் உறுப்பு தானம் பத்தியும்,கூடப் படிச்ச நண்பர்கள் பத்தியெல்லாமும் ஹஃபீ அவரோட பேசிக்கிட்டே இருந்தா. கொஞ்ச நேரத்துல யாரோ அவரோட பெரியாப்பாவாம், ஊசி போடச்சொல்லி கூப்பிட்டு விட்டாங்கன்னு ரஹ்மான் கெளம்புனாரு.

ஒரு வழியா "ஷோ மீ யுவர் மேரேஜ் விடியோ"ன்னு நைசா கேட்டு அவ ரூமுக்கு நானும் ஹஃபீயும் மட்டும் எஸ்கேப் ஆனோம்! ரமீயோட லாப் டாப்புல அவ அம்மா, அக்கா எல்லாரையும் பாத்து அசந்துட்டேன். அப்பாடா! ரொம்ப அழகு! அத விட "கல்யாணத்துக்கு முன் "வால்காவா இருந்த ரமீலா என்கிற ரமீயோட அழகையும், அவளோட தன்னம்பிக்கை மிளிர்ந்த தோற்றத்தையும் பாத்து என்னால நம்பவே முடியல. அவள மதம் மாத்தி நிக்காஹ் பண்ணுரதும், ரொம்ப சந்தோஷமாஅவங்க அம்மாவும் , அக்காவும் விடை குடுத்து அனுப்புறதையும் கூட ஷூட் பண்ணி வச்சிருந்தா.

"எத்தன காதலும், நம்பிக்கையும் இருந்தா, மதம் மாறி, கண்டம் விட்டு கண்டம் வந்து, புரியாத பாஷ பேசுரவங்க மத்தியில இவ வாழ சம்மதிச்சிருப்பா"ன்னு மலச்சுப்போயிட்டேன். இது "நீயா நீயா"ன்னு நான் கேட்டத பாத்து அவ அடையாளம் தெரியாம மாறிட்டத தான் கேக்குறேன்னு அவளும் புரிஞ்சுக்கிட்டா. ஹஃபீ "அக்கா"ன்னு லேசா அதட்ட, நான் அமைதியா ஆகிட்டேன்.

அப்பறம் அவளும் ஹஃபீயும் மாஸ்கோவுல அவங்க ஊர் சுத்துனது, ஹாஸ்டல் ரூம்ல லூட்டி பண்ணினதெல்லாம் பேசி சிரிச்சாங்க. என்னமோ திடீர்னு ஹஃபீ கேட்டா "ஹனிமூன் எங்க போனீங்க அக்கா"ன்னு. அவ்ளோதான்! அதுக்கு மேல ரமீயால மூடி மறைக்க முடியல. கொட்டி தீத்துட்டா." நான் எங்க ஹஃபீ ஹனிமூன் எல்லாம் போறது? இங்கதான் என்ன வெளியிலயே விடாம செற வச்சிருக்காப்பல வச்சிருக்காங்களே! ரஹ்மான் கூட எங்கம்மா பேச்சு கேக்குறதா இருந்தா இரு இல்லைன்னா ஊர் போய் சேருன்னு என்ன ரெண்டு மூணு தடவ அடிச்சிட்டாரு.



இந்த சாப்பாடும் எனக்கு ஒத்துக்கல. எல்லாத்துலயும் தேங்கா போடுறாங்க எனக்கு வாந்தியா வருது"ன்னு மழல கொரல்ல அவ பேசுனப்போ எனக்கு ரொம்ப வேதனையா போச்சு.

'என்னதான் டாக்டருக்கு படிச்சாலும் ஊர் குருவி ஊர்குருவி தான். இந்தப் பயலுக புத்தியெல்லாம் மாஸ்கோ போனாப்புல மாறிடுமா'ன்னு நெனச்சுக்கிட்டேன். அவ அம்மாதான் ரஷ்யாவில இருந்து அவளுக்கு பிடிச்சமான தின் பண்டங்களையெல்லாம் அனுப்பி வக்கிறதாகவும் காப்பி தூள் மொதக்கொண்டு அவங்க அனுப்புறாங்கன்னும் சொன்னா.

ரொம்ப எரிச்சலாகி" கெட் தலாக் ஃப்ரம் திஸ் இடியட் அண்ட் கோ ஹோம்"ன்னுட்டேன். அதுக்கு அவ சொன்னா பாருங்க பதிலு..."அயாம் பிரக்னன்ட் அன்ட் இட் இஸ் எ கேர்ள்"ன்னு. ஒண்ணும் பேச முடியல! சும்மா இருந்திட்டேன்! கொஞ்ச நேரத்துல ரஹ்மான் வந்தான். "அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்னு" எல்லாம் கேட்டுக்கிட்டு ரமீ கிட்டயும் "ஒடம்ப பாத்துக்கம்மா"ன்னு சொல்லிட்டு கெளம்பினோம்.

ரொம்ப நேரம் வரையில யாருமே பேசல. எப்பவும் லொட லொடன்னு பேசுர டிரைவர் அண்ணன் கூட எங்க இறுக்கத்த பாத்துட்டு வாயே தெறக்கல. ஹஃபீ ரொம்ப கேட்டுக்கிட்டாளேன்னு ரமீ மழலக் கொரல்ல பாடுன "கண்ணுக்குள்ளே உன்ன வப்பேன் கண்ணம்மா..நா கண்கள் மூட மாட்டேனடி சின்னம்மா"ங்கிற பாட்டு என் காதுல கேட்டுக்கிட்டே இருந்திச்சு. அது அவங்க லவ் பண்ணினப்ப ரஹ்மான் அவளுக்கு வழக்கமா பாடிக் காட்டுர பாட்டாம்!

"நீ மொகம் கழுவிட்டு வந்தப்பறம் நாம கொண்டு போன பழக் கூடைய பாத்து ஏதோ சொல்லி அழுதாளே? என்ன ஹஃபீ?"ன்னு கேட்டேன். அது என்னமோ " ஆப்பிள் சாப்புட்டு பல மாசம் ஆச்சு"ன்னு சொல்லி அழுதாளாம் அவ!.

..ஷஹி..

1 comment:

Related Posts with Thumbnails