Search This Blog

Monday, September 30, 2013

ஒரு புல்வெட்டி வாங்கச்சென்ற போது தெரிந்து கொண்டவை ...


வரம்பின்றி வளர்ந்துவிடும் புல்தரையைச் சமன் செய்ய
வாங்கியே ஆக வேண்டியிருந்தது ஒரு புல் வெட்டும் இயந்திரம்
முகவரி, விலை, துணை ,திரும்பும் காலவரம்பு
குறித்தெல்லாம்
அருளப்பட்டவைகளின் கனத்தோடும்
இலகு சுவாசத்தின் புதுமையோடும்
துவங்கினது அன்றைய பயணம்

புல்வெட்டும் இயந்திரங்களின்
விற்பனைக்கென்றே
தனியான ஒரு தெரு இருப்பது தெரியுமா உங்களுக்கு ?
சரியான கடையில் நுழைந்து
வகை, அளவு, நிறுத்து
தேர்வும் வணிகமும் விரைவாக முடிந்தது..
வெறுமனே ஒரு புல்வெட்டும் இயந்திரம் தானே அது !

எனக்கான மதிய உணவோடு காத்திருந்தது
நகரின் ஏதோ ஒரு விடுதி
என்பதுதான் எத்தனை கிளர்ச்சியூட்டும் செய்தி!
மேசையை மட்டுமல்லாமல் உணவையும் தெரியலாம் என்பதும்
அருளப்பட்டிருந்தவைகளின் பட்டியலில் இருந்தது
நன்றியோடு நினைவுகூறப்பட்டது ..

அன்றைய நிகழ்வுகளில் மிக முக்கியமானது
இறைத்துதியோடு துவங்காமலும்
நன்றிசொல்லி முடிக்காததுமான உணவும்
தொண்டையில் சிக்காமல் இறங்கும் என்பதும்
அஸ்தமனங்களின் போதான காற்று குளிராய் இருக்கிறது
கூடடையும் பறவைகள் V போன்ற வடிவம் கூட்டியும் பறக்கின்றன---
என்பதுமான விபரங்கள் தான் !

திடுமென கனக்கத் துவங்கியிருந்த புல்வெட்டியை மறுகைக்கு மாற்றி
எஞ்சியதால் செய்த பிரிவு முகமனின் சைகையின் போது
லேசாய் இழுவிக்கோணின முகம்
அத்தனை அவலட்சணமாய் இருந்ததை
அடுத்தபகலில் அடங்கினகுரலில் தொலைபேசினபோது
மறுமுனை கூறத்தான் அறிந்தேன் ..


..ஷஹி..

உயிர்மை இதழில் வெளிவந்த கவிதை

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails