Search This Blog

Friday, September 23, 2011

இறை(அ)ஞ்சுகிறேன்

(ஆகஸ்ட் 10இல் மூன்றாம்கோணத்தில் பதிந்தது)

தந்தைக்கு அஞ்சி

தாயை நாடும்

பிள்ளையைப் போல்

உலகைப் பயந்து

உன்னிடம் தேடுகிறேன்

புகல்.

உன்

பாதம் பற்றிடத் தாகிக்கும்

என் விரல்களை

மறுதலிப்பெனும்

தீ தீண்டிடும்

முன்

பாதுகாப்பின் தண்ணிழல்

கொடுத்து ஆற்று.

ஆயிரமாயிரம்

திரைகளுக்கு அப்பால்

இருக்கிறேன் என்கிறாய்..

திரை நீக்கும் வெளிச்சம்

எம் இறையச்சம்

அறிவேன்!

அருவமாயிருக்கிறாய்,

ஆறுதலளிக்கிறாய்..

கோடையில் வாடுபவனுக்கு

குளிர் தென்றலாய்.

எப்போதும்

யாசிக்கும் என் கரங்களில்,

இதோ

உனக்கு ஓர் பரிசு

பரிபூரண அர்ப்பணிப்பு...

மண்ணிலும் விண்ணிலும்,

உன்

கிருபை உண்டெனும்;

நற்செய்தி கிடைக்குமா

இந்தஅற்பப் பிறவிக்கு?

..ஷஹி..

Thursday, September 15, 2011

நோன்பு திறக்க உப்பும், அப்பாக்களின் அன்பும்

(ஆகஸ்ட் 1 இல் மூன்றாம்கோணத்தில் பதிந்தது)

உலக மக்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உரித்தாகட்டும்...உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகிறான்: "விசுவாசங்கொண்டோரே ! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள் உள்ளம் சுத்தி பெற்று பயபக்தியுடையவர்களாகலாம்."

நோன்பானது , செறிமானக்கருவி மற்றும் குடல் அவ்விரண்டின் தொடர் இயக்கத்தின் சிரமத்திலிருந்து ஓய்வை நல்குகிறது , மனதைச் சுத்தப்படுத்தி நன்மை செய்தல், ஒழுங்குற எதையும் செய்தல், கீழ்படிதல், சகித்துக்கொள்ளுதல், தூய எண்ணத்துடன் செயல்படுதல் ஆகியவற்றுக்கு அம்மனதை பழக்கப்படுத்துகிறது.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர் என்பதால் ரமலான் மாதம் துவங்கும் முன்பே ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். வீட்டை சுத்தம் செய்வது, அதிகமதிகமாக வணக்கங்களில் ஈடுபடுவது என்று. நோன்பு துவங்கி விட்டாலோ...பகலெல்லாம் நோன்பாயிருந்து மாலையில் நோன்பு திறக்கும் நேரம் படு பிசியாகி விடுவோம். அதுவரையில் மந்த கதியில் போகும் நாள் மாலை நான்கு மணியில் இருந்து சூடு பிடித்து விடும். வயிற்றுக்குக் கெடுதல் செய்யாத, அதே சமயம் சத்தான உணவுவகைகள் செய்து , அனைவருமாக அமர்ந்து நோன்பு திறக்கும் இன்பம் ..ஆ..அது சொல்லில் அடங்காது. பசியும் தாகமும் அடங்கி மனதுக்கும் வாழ்வுக்கும் வலு சேர்க்கும் இறைதியானத்தில் வீடே திளைத்திருக்கும் .

பொதுவாக நோன்பு நாட்கள் முப்பதையும் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பத்தாகப் பிரித்து , முறையே பேரீட்சை, தண்ணீர், உப்பு என்ற மூன்றையும் கொண்டு நோன்பு திறப்போம்.

பேரீச்சையும் தண்ணீரும் உடலுக்கு தேவையான அதிமுக்கியமான சத்துக்கள். உப்பு? உயிர் காக்கும் பொருளாயிற்றே!

மட்டுமல்லாமல் நோன்பின் இறுதிப் பத்தில் நோன்பு காலம் முடிகிறதே என்ற வருத்ததுடன் உப்பில் நோன்பு திறப்பதாக ஒரு கருத்தும் உண்டு.

உப்பு கொண்டு நோன்பு திறக்கும் நேரம் எல்லாம் என் நினைவில் அப்பா தான். அப்பாவும் அம்மாவும் காதல் ,கலப்பு மணம் புரிந்து கொண்டவர்கள். அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் அம்மா இருக்கும் போது அவருக்கு சரியாக வீட்டின் அத்தனை வேலைகளிலும் அப்பா கைகொடுப்பார். எங்கள் அனைவருக்குமாக டிபன்பாக்ஸ் ரெடி செய்யும் பொறுப்பு அப்பாவினது தான். ஒரு நாள் பகலுணவு நேரம், பசியுடன் டப்பாவைத்திறந்து ஒரு கவளம் உண்கிறேன்.. சுத்தமாக உப்பில்லை உணவில்! பசியும் கோபமுமாக அப்படியே கொட்டிக் கவிழ்த்து விட்டு வகுப்பில் சென்று அமர்ந்து விட்டேன்.

மதியத்தின் முதல் வகுப்பு துவங்கி சிறிதே நேரத்தில் அழைப்பு வந்துவிட்டது. 'ஷஹி, யுவர் டாட் இஸ் வெய்ட்டிங்க் ஃபார் யூ இன் தி ஆஃபிஸ் ரூம்' என்று. என்னவோ என்று ஓடினேன்.' என்னப்பா ?' என்றதற்கு 'ஆஃபிஸில சாப்பிடும் போது தான் சுத்தமா உப்பில்லைன்னு தெரிஞ்சிது நீ சாப்பிட்டிருக்க மாட்டியேன்னு தான் அரை நாள் லீவ் போட்டுட்டு வந்தேன் என்கிறார்!" என்னை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு ஓட்டலில் உணவருந்த வைத்து விட்டு பிறகு பள்ளியில் விட்டுச்சென்றார். என் திருமண வரவேற்பின் போது அப்பாவின் நண்பர் ஒருவர் இந்த சம்பவத்தை என் கணவரிடம் சொல்ல இன்றும் அது என்னவரின் நினைவில் நீங்காமல் இருக்கிறது. வாழ்வில் சுவை கூட்டும், உயிர் காக்கும் ,பெண்களின் மனங்களில் உறைந்திருக்கும் வலு சேர்க்கும் உப்பாகத் தான் அப்பாக்கள் இருக்கின்றனர்.

கவலைகளற்ற பதின் வயதில், அத்தை மகனையே திருமணம் செய்து கொண்டதால் தாய் வீடு நீங்கும் போது அழ வேண்டும் என்றே தெரியவில்லை எனக்கு. அம்மாவும் கண்ணீர் ததும்பிய விழிகளோடு அமைதியாகப் 'போய் வா' என்றார். அப்பாவுக்கு சலாம் சொல்ல திரும்புகிறேன்.. ஓவென்ற அழுகைச்சத்தம் ! ஒரு பெண் பிள்ளை போல் கதறி அழுகிறார் அப்பா! அப்பா அழுகிறாரே என்ற தாபத்தில் துளிர்த்த கண்ணீர்த் துளிகளைத் துடைத்துக் கொண்டு நானே அப்பாவை சமாதானம் செய்ய வேண்டியதாகி விட்டது!

அராபியாவில் பெண்குழந்தைகளை அவமானச் சின்னமாகக் கருதி,அராபியர்கள் உயிரோடு புதைத்துக் கொண்டிருந்த சமயம் ..முகம்மது நபியவர்கள்"இரண்டு பெண் மக்களைப் பெற்று அன்புடன் வளர்த்து, மார்க்கம் பயிற்றுவித்து, கரை சேர்ப்பவர் ,சுவனத்தில் என்னுடன் இருப்பார் "என்று கூறியதாக ஒரு ஹதீத் கேட்டிருக்கிறேன். என் அப்பாவுக்கு நான் ஒரு பெண் தான். நடுத்தர வர்க்கமென்றாலும் ஒரு இளவரசிக்குரிய சகல சந்தோஷங்களுடன் என்னை வளர்த்த என் அப்பாவுக்கும், பெண் மக்களைப்பெற்று அவர்களைப் பேணி வளர்க்கும் உலகின் எல்லா அப்பாக்களுக்கும் இறைவன் இம்மையிலும் மறுமையிலும் நற்கிருபை செய்யட்டும்.

பால்ய வயதிலேயே உலக இலக்கியம், உலக சினிமா, கம்யூனிச சிந்தனை என்று அத்தனையையும் அறிமுகம் செய்து, இன்றும் என்னைப் படிக்கவும் எழுதவும் தூண்டிவரும் என் அப்பாவுக்கே நான் எழுதிய, எழுதவிருக்கும் அத்தனையும் சமர்ப்பணம்.

நோன்பு நாட்களின் நல்வாழ்த்துக்களுடன்

...ஷஹி...

Wednesday, September 14, 2011

உடலுறுப்பு தானமும் அதன் இன்னொரு கோணமும்-MY SISTER'S KEEPER


மை ஸிஸ்டர்'ஸ் கீப்பெர் (MY SISTER'S KEEPER) ,

(ஜூலை-15 இல் மூன்றாம்கோணத்தில் பதிவிட்டது)

நிக் கஸாவெட்ஸ் இயக்கி,

காமெரூன் டயஸ் (ஸாரா ஃபிட்ஸ்கெரால்ட்),தாய்

அபிகைல் ப்ரெஸ்லின் (அன்னா ஃபிட்ஸ்கெரால்ட்), இரண்டாவது மகள்

அலெக் பால்ட்வின் (காம்ப்பெல் அலெக்ஸாண்டெர்),வக்கீல்

ஜேஸன் பேட்ரிக் (பிரையன் ஃபிட்ஸ்கெரால்ட்),கணவன்

சோஃபியா வாசிலியெவா(கேட் ஃபிட்ஸ்கெரால்ட்),முதல் மகள்

ஜோன் குசாக் (ஜட்ஜ் டீ சால்வோ), நீதிபதி

ஈவான் எல்லிங்க்சன் (ஜேசீ)மகன்

ஆகியோர் நடித்த ஹாலிவுட் படம்.

ஸாரா , பிரையன் காதல் மணம் புரிந்து கொண்ட இளம் தம்பதி. முதல் குழந்தை கேட். கேட்டுக்கு இரண்டே வயதான சமயம் தொடர்ந்த உடல் நலக் குறைபாட்டுக்கான காரணம் அறிய முற்படுகையில் அவளுக்கு ரத்தப் புற்று என்பது அறிய வந்து அதிர்ந்து போகிறார்கள் ஸாராவும் பிரையனும். டாக்டரின் ஆலோசனையின் பேரில் கேட்டுக்கு ரத்தம், முதுகுத் தண்டு வடத்திலிருந்து பிரித்து எடுக்கக் கூடிய திரவம் மேலும் தேவையான உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதற்காகவே ஒரு குழந்தையை ஜெனெடிக் எஞ்சினியரிங் என்று கூறப்படும் முறையில் பெற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தையின் பெயர் அன்னா, மிக ஆரோக்கியமான அழகான அன்னா, பிறந்ததில் இருந்ததே தன் சகோதரி கேட்டுக்கு ரத்தம், மஜ்ஜை ஆகிய உயிர் காக்கும் உடல் உறுப்புகளை கொடுத்தவண்ணமே இருக்கிறாள். இதற்காக அவள் பல சிக்கலான, வலி மிகுந்த மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு ஆளாகிறாள். அன்னாவுக்கு பதினோரு வயதான சமயம் தன்னால் இனியும் தன் சகோதரிக்காக எந்த மருத்துவ சிகிச்சைக்கும் ஆளாக முடியாது என முடிவடுத்து மிகப் பிரசித்தி பெற்ற வழக்கறிஞர் காம்ப்பெல் அலெக்ஸாண்டரின் உதவியை நாடுகிறாள்.புற்று நோய் சிகிச்சையால் கேட்டின் சிறுநீரகம் செயல் இழந்துவிட அன்னாவின் சிறுநீரகத்தை கேட்டுக்குப் பொறுத்திவிட ஸாரா முடிவெடுப்பதில் உடன்பாடில்லாமல் ஆரம்பிக்கிறது அன்னாவி்ன் போராட்டம்.



தன் முதல் குழந்தையின் வியாதியோடு போராடவே தன் வக்கீல் தொழிலை விட்டிருக்கும் ஸாரா, வழக்கை தன் கையில் எடுத்து, தன் முதல் மகளுக்காக இன்னொரு மகளிடம் போராடுகிறாள்.

.காம்ப்பெல், எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தன் உடலின் மீது தனக்கே ஆளுமையற்ற துயரம் பற்றி நன்கு அறிந்தவர் என்பதும், நீதிபதி டீ சால்வோ மிகச் சமீபத்தில் தன் மகளைப் பறி கொடுத்த தாய் என்பதும் கதையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

ஃப்ளாஷ் பேக்குகளில், கதாபாத்திரங்களின் மூலம் கேட் தன்னைப் போன்றே புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞனிடம் காதல் கொள்வதும் அவன் நோய் முற்றி இறப்பதும், அச்சமையங்களில் ஸாரா தன் மகளின் துயர் துடைக்கப் போராடுவதுமாக மனதைக் கனம் கொள்ளச் செய்யும் காட்சிகள் பல.

பிறந்ததில் இருந்தே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆளாகினாலும் தன் சகோதரியிடம் மிகுந்த அன்பு கொண்ட சிறுமி அன்னா, ஏன் இம்மாதியான ஓர் அதிர்ச்சியை தன் குடும்பத்தின் மீது சுமத்தினாள்?


தன் வயதுக்கு மீறின ஓர் முடிவை அவள் எடுக்க என்ன காரணம் என்ற கேள்விகளுக்கு விடைகளை, மிக அழகாகவும் நெகிழ்வாகவும் விளக்குகிறது படம்.

எப்படியும் இறந்து விடக்கூடிய தன் காரணமாக தன் மொத்தக் குடும்பமும் அலைகழிவதை விரும்பாத கேட் தான், தன் தங்கையை மெடிகல் எமான்சிபேஷன்(MEDICAL EMANCIPATION) அதாவது தனக்கு தன் அக்காவின் உயிர் காக்கவென செய்யப்பட்டு வந்த சிகிச்சைகளில் இருந்து விடுதலை வேண்டுமென சட்டத்தின் உதவியை நாடச்செய்கிறாள். தன் மகளின் உயிர் காக்கவே வாழ்வை அர்ப்பணித்திருக்கும் ஸாரா தன் இளைய மகளின் செய்கையை குடும்பத்துக்கு எதிரான துரோகச்செயலாகப் பார்க்க, அன்னாவின் கண்ணோட்டத்திலிருந்து அவள் செய்கையின் நியாயம் பற்றி வாதிடுகிறது படம் ,காம்ப்பெலின் மூலம்.கேட் இறந்து கொண்டிருக்கும் பெண் , அவளுக்காக ஸாரா போராடுவதில் அர்த்தம் இல்லை என்று கணவன், மருத்துவர்கள், சகோதரி என்று எல்லோரும் சொல்லியும் விடாமல் போராடும் ஸாராவின் தாய்மை உணர்வு நெகிழ்வூட்டுவது.

தன் உடலின் மீது தனக்கே உரிமை இல்லாத துயர நிலையும், தன் ஒரு சிறுநீரகத்தை தானம் செய்வதால் தனக்கு ஏற்பக்கூடிய பிரச்சினைகள் பற்றியும் அந்தச்சின்னஞ்சிறுமி பேசும் வசனங்கள்மிக யதார்த்தமான, அதே சமயம் மனதில் தைக்கக் கூடியவை.

"என்னோட ஒரு கிட்னிய குடுத்துட்டு நான் வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமா இருப்பேன்னு நிச்சயமில்லையே..என்னால கொழந்த பெத்துக்க முடியாமப் போகலாம்"

...என்றெல்லாம் அச்சிறுமி பேசுவது கொஞ்சமும் மிகையாகத் தோன்றாமல் போவது தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். நோயுற்றிருக்கும் சிறுமியிடம் நமக்குத் தோன்றும் அதே பரிதாப உணர்வை அன்னாவின் பாலும் தோன்றச்செய்து விடுகிறார் இயக்குனர். இருவரின் தாயாக நடித்திருக்கும் காமெரூனின் திறமைக்கு இந்தப் படம் ஓர் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. முடிவில் அன்னாவின் பக்கம் வெல்கிறது.


கேட் தன் முடிவை அமைதியாக ஏற்றுக் கொள்கிறாள்.

கீமோதெரபியின் எதிர்வினையாக கேட்டின் தலைமுடியெல்லாம் கொட்டி அவள் மிகுந்த மனச்சோர்வுக்கு ஆளாகும் போது தன்னுடைய அழகிய தலைமுடியை மழித்து தன் மகளுக்குக் துணையாக காமெரூன் டயஸ் வலம் வரும் காட்சியும் , காதலனுடன் ஒரு நடன நிகழ்சிக்குச் செல்ல கேட் தயாராவதும், தன்னுடைய மரணத்துக்குப் பிறகும் அவர்களுக்கான வாழ்வு உண்டு, அதை அவர்கள் அழகாக வாழ வேண்டுமென்பதே தன் விருப்பம் என்று கேட் தன் தாயை சமாதானம் செய்யும் காட்சியும் மிகுந்த கவித்துவம் மிக்கவை.


மரணம் பற்றியும் அதற்குப் பிறகான வாழ்வு பற்றியும் சகோதரிகள் இருவரும் பேசிக் கொள்வதை ஒரு மெலோடிராமா போலல்லாமல் மிக யதார்த்தமான ஒரு காட்சியாக பதிவிட்டிருக்கிறார்கள். இம்மாதிரியான காட்சிகளின் போது இதுவே ஒரு தமிழ்ப் படமாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

சாவோடு போராடும் ஒரு சிறுமியின் அவலத்தை இப்படி படமாக்கியிருக்கிறார்களே என்று துக்கிக்க வைக்காமல் உறுப்பு தானம், மரணத்தை அழகாக எதிர்கொள்ளும் தைரியம், புற்றுநோயாளிகளின் மனநிலை, அவர் தம் குடும்பத்தாரின் மனநிலை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உறுப்பு தானம் பற்றின சகலமும் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது திரைப்படம். மிகத்திறமையான கலைஞர்களின் நடிப்பால் ஒரு அசாதாரணமான , அருமையான உணர்வை அளிக்கின்றது மை ஸிஸ்டர்ஸ் கீப்பர்.

இந் நிலை பலரின் குடும்பங்களில் ஏற்படக் கூடியது தான். எங்கள் அத்தையின் வீட்டில் நடந்தது. அத்தைக்கு நான்கு மகள்கள், இரண்டு மகன்கள்...மூன்றாவது பெண்ணுக்கு நெஃப்ராடிக் சின்றோம் என்ற சிறுநீரக வியாதி. அழகிய இளம் பெண்ணாக அவள் வளர்ந்து வந்த சமயத்தில் சிறுநீரகங்கள் செயல் இழந்து போயின. பண வசதி உள்ளவர்கள் என்றாலும் சிறுநீரகம் யார் தானம் செய்வது என்ற குழப்பத்தில் குடும்பமே நிலை குலைந்தது. கடைசி மகள் சிறுமி என்பதாலும் இரண்டாம் மகளுக்கு அப்போது வரையிலும் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை என்பதாலும், மகன்கள் இருவரது ரத்தமும் நோயாளிக்கு பொருந்தவில்லையாதாலாலும் முதல் மகள் தான் தானம் செய்தாக வேண்டும் என்ற நிலை. அவளுக்கு மறுக்கவும் முடியாமல் சம்மதிக்கவும் இயலாமல் மிகுந்த இக்கட்டு, தனக்கு ஏதாவது சிக்கலென்றால் தன் கணவன், நான்கு சிறு குழந்தைகள் கதி என்னவென்ற கவலையில் மறுத்தே விட .குடும்பமே அவளோடு கோபம் கொண்டு இன்று வரையில் அதே கசப்புணர்வு தொடர்கிறது. அவளுடைய கோணம் என்றும் ஒன்று இருக்கலாமோ என்று யாருக்குமே தோன்றவில்லை...

எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு அல்ல மூன்றல்ல பல கோணங்கள் உண்டு, சம்பந்தப்பட்டவர்களின் பார்வையில் அணுகினால் மட்டுமே அது புரியும் என்பதை ஆழமாக ஆணித்தரமாகப் பதிந்திருக்கும் படம் தான் மை ஸிஸ்டர்ஸ் கீப்பர்.

....ஷஹி...

Saturday, September 10, 2011

இடது கை உயர்த்து வரமொன்று வேண்டும்( july 15 -2011)


பற்களிடை வெளிகளின் எண்ணமேதுமற்று

எப்போதும் எப்போதும் மலர்ந்து சிரிக்கவும் ,

அறியாத முகம் என்ற பேதம் புரியாமல்

அழகாய்த் தலையசைத்து கைகள் ஆட்டவும்,

படுக்குமுன் உறங்கவும்,

விழித்த விநாடியே விளையாட்டைத் தொடரவும்,

சற்று முன் நகம் பதியக் கீறியவளுக்கு

அவள் கேட்ட பொம்மையை ஆசையாய்க் கொடுக்கவும்,

முள்ளும் செதிலுமாகச் சிலிர்த்து சண்டையிடும்

அசிங்கக் கரட்டானை

ஆவலாய் ரசிக்கவும் ,

மஞ்சளாய் சிரிக்கும் காந்தியைப் பாராமல்

பட்ட ஓலைகளைத் தேடித் தடவவும்,

ஓடித்திரிந்து பாடாய்ப் பட்டு

பிடித்த வண்ணாத்தியை பறக்க விடவும்,

மின்சாரம் இல்லாத வியர்வைப் பொழுதிலும்

ஒற்றைக் கண் பொம்மைக்கு சோறாக்கி ஊட்டவும் ,

இல்லாத டாக்டரிடம்" இன்றும்காய்ச்சல்"

என்று புகாரிட்டு மருந்து புகட்டவும்

மட்டும் அல்லாமல்....

சமச்சீரும் ,ஸ்பெக்ட்ரமும்

கோவில் புதையலும்

அண்டைச் சகோதரரின் ஆயுள் கண்ணீரும்

பெருமூச்சாகிக்

குறையும் எம் ஆயுளை...

நீண்டிடச் செய்திடும் மாயமும் கூட

எல்லாம் எல்லாம்

உன்னால் முடியும்!!!

..ஷஹி..

Friday, September 9, 2011

பசியெனும் முள் -(ரமலானில் எழுதியது)

இப்படியாக: நோன்பு நாட்களில் கடிகார முள்ளும் சரி, மனதின் ஓட்டமும் சரி..நிதானமாகத்தான் இருக்கிறது. ஜெயமோகனின் "பண்படுதல்" இன்று தான் வாசித்து முடித்தேன்.

ஜெயமோகனின் கேள்வி "நாம் ஒருவரையொருவர் பார்த்தால் சாப்பிட்டாச்சா? என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப் பழக்கம் எப்படி நமக்கு வந்தது? சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா? பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தைப் பதற அடித்து பல லட்சம் பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது?"என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெமோ. சாப்பிட்டாச்சா என்ற கேள்வி நம் சமூகத்தில் எத்தனை சகஜமான ஒன்றாக இருந்தால்- இது ஒரு விசித்திரமான கேள்வி என்று ஜெயமோகன் சொல்வது நமக்கு ஏக விசித்திரமாக இருக்கும்? தவிரவும் "இப்படி நாளெல்லாம் நோன்பிருந்து தான் உங்கள் இறைவனுக்கு நீங்கள் வழிப்பட வேண்டுமா? அப்படித் துன்புறுத்துவதில் என்ன இன்பமாம் இறைவனுக்கு" என்று மாற்று மதத்தினர் பலரின் கேள்வியும் ,பசி குறித்த பல்வேறு கோணங்களை யோசிக்க வைக்கிறது.

நோன்பு என்பது

நோன்பைப் பொறுத்த மட்டில் நாம் நோன்பாய் இருந்தாலும், வணங்கினாலும், அவனைத் துதித்தாலும் இவற்றுக்கு மாற்றமாக நடந்து கொண்டாலும் இறைவனுக்கு எந்த உயர்வும் தாழ்வும் இல்லை..புகழ் அனைத்தும் அவனுடையது. "பின்னே ஏன் தான் பசியாக் கெடக்கணும்" என்றால்..ஈமானின் (இறையச்சம்) மிக உயரிய நிலை அது...இறைவனின் பண்புகளில் ஒன்றான உண்ணாமை, பருகாமை, துணை நாட்டம் இல்லாமை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறோம் நோன்பு நேரத்தில். அதற்குரிய பரிசு அவனிடத்தில் உள்ளது.

சகோதரர்களின் கதை

இப்படியாகப் பசியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இளமையில் வறுமை கொண்டு ,தந்தையை இழந்த காரணத்தால்- பசியும், துயரமுமாக வளர்ந்த மூன்று சகோதரர்களின் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மூத்தவர் இலக்கியத்தின் மீதும், ஓவியம் வரைவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்,பசியை அலட்சியம் செய்து மணிக்கணக்கில் இலக்கியம், சமூகம் பற்றிப் பேசக்கூடியவர். தந்தை இறந்த போது பதின் வயதை எட்டியிருந்தவர்...வாழ்வு குறித்த பல வண்ணக் கனவுகளில் மனம் அலையத்துவங்கும் வயது. உணவின் மீதும், அதன் நுட்பமான (nuances) ருசிகளிலும், உடலைப் பண்படுத்துவது உணவுதான் என்று தெரிந்து விடுவதால் அதன் அளவுகளிலும் கூட விருப்பம் ஏற்படும் வயது.

உடன் பிறந்தோரையும் உலகம் அறியாத் தாயையும் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இளம் தோளில் விழுந்து விட, பசி எனும் முள்ளும் ஆழமாகத் தைத்து, அதன் ஒரு பாதியை மட்டும் பிடுங்கி வெளியேற்றி , மறு பாதியோடு வாழ்நாளெல்லாம் போராடியவர். வாழ்வு குறித்த ஆசைகளும் கனவுகளும் ஒரு புறம் இழுக்க, குடும்ப பாரம் மற்றொரு புறம் சாய்க்க, தன் பசியைப் பொறுத்துக் கொண்டு கனவுகளோடே வாழ்ந்து மறைந்தார். வெகு ருசியான உணவு வகைகள் பறிமாறப்படும் சமயங்களில் மட்டும்- நரைத்து விட்ட அவர் கண்ணிமைகளின் படபடப்பினுள் உணவின் மீது வெகு விருப்பம் கொண்டு, அது மறுக்கப்பட்ட ஒரு இளைஞனின் ஆசை ததும்பும் முகம் வெளிப்படும்.

இரண்டாம் சகோதரர் உயர்நிலைப்பள்ளிப் படிப்பிலிருந்தார்...உண்டு வந்த கொஞ்சம் உணவுக்கும் பஞ்சம் என்றானதை ஒரு போராளிக்குரிய அலட்சியத்தோடு கையாண்டார்..கிடைத்தால் சரி கிடைக்காவிட்டால் எப்போது கிடைக்குமோ அப்போது. ஆனால் பசியின் மீது கொண்டு விட்ட வன்மத்தை அவர் படிப்பில் காட்டினார். குடும்பத்தின் முதல் கிராஜுவேட், ஊரிலேயே முதன்முதலில் அரசாங்க வேலை என்ற ,பல எட்ட இயலா லட்சியங்களை அவரை அடைய வைத்தது இளமையில் அவரும், அவர் உடன்பிறந்தோரும் அனுபவித்த பசி தான்.

வாழ்வின் சிறப்பான இளமையில், நல்ல ஓர் நிலைமைக்கு அவர் வந்து விட்ட பிறகும் கூட, மிகப் பிடித்தமான உணவுகளைக் கூட ஒரு சிறுவனின் அளவே தான் உண்ண முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் உடலும் சரி மனமும் சரி வந்து விட்டது. உணவைப் பொறுத்த மட்டில் அதன் அளவு, அவர் மட்டிலும் பசியின் கொடூரத்தை அவர் ருசிக்க நேர்ந்து விட்ட இளம் பிராயத்தோடே நின்று போனது. தான் அனுபவித்த கொடுமையை யாரும் சந்திக்கலாகாது என்ற எண்ணம் வேரூன்றி விட, சோஷலிசத்தின் பால் ஈடுபாடு கொண்டவராகவும், மிகுந்த இரக்க சுபாவியாகவும் ஆனார்.

இளையவர் உணவு தான் வாழ்வின் சுவை என்றெண்ணும்,அது தவிர வேறெந்தச் சுவை பற்றியும் அறியாத வயது. பசிக் கொடுமையைத் தாள இயலாத துயரம் சமூகத்தின் பால் கோபமாக மாற, முன்னேற வேண்டும், உணவுக்கு வழியில்லாமல் கிடந்த நிலையை மறக்க, மறைக்க வேண்டும் என்று வெறி கொண்டு உழைத்தார். தன் பிள்ளைகளின் மீது தன் இளமையின் நிழல் கூடப் பட்டு விடலாகாது என்ற தீவிர எண்ணம் கொண்டார். தினமும் செய்யும் சமையலே விசேஷமானதாகத் தான் இருக்க வேண்டும் அவருக்கு, வருவோர் போவோர் அனைவரையும் உண்ண வைத்தே அனுப்புவார்." சாப்பிடத்தானே இத்தன கஷ்டப்படுறேன்..அதுல என்ன அளவு? என்ன சிக்கனம்?" என்று எப்போதும் பேசி வந்தார். குடும்பத்தில் யார் யாரின் கைப்பக்குவம் எத்தகையது, எங்கு என்ன உணவு சிறப்பானது? என்று எல்லாம் அத்துப்படி. உண்ணும் போது ஒரு பருக்கையை யார் சிந்தி விட்டாலும் துடித்து , அதை எடுத்து தன் தட்டில் இட்டுக்கொள்வார். ஆனால்---வழிவகையிலேயே யாரும் உண்ணாத சிறப்பான உணவு வகைகள், உடுத்தாத உடுப்புகள் என்று பிள்ளைகளைப் பேணினார்.

தன் இலட்சியத்தில் வெற்றி அடையும் சமயம், சிறு வயது முதற் கொண்டு, பசியைத் தணித்துக் கொள்ளவெனப் பழகியிருந்த புகைப்பழக்கத்தினால் புற்றுநோய்க்கு ஆளாகி துடித்து இறந்தார். பிள்ளைகள் இரண்டும் இலட்சக்கணக்கில் ஈட்டி, பல ஆயிரம் பேரின் பசியாற்றும் வல்லமை பெற்று விட்டார்கள்..ஆனால் தொண்டைப் புற்றின் காரணமாக வாய்வழியாக திரவம் கூட உட்கொள்ள இயலாமல் அவர் உயிர் பிரிந்தது.

இப்படியாக ஒரே தாய் வயிற்றில் பிறந்து, வளர்ந்த மூன்று பேரின் வாழ்வில் நுழைந்த பசியெனும் முள் மூத்தவரின் இதயத்தில் வாழ்நாளெல்லாம் தைத்துக் கிடந்தது, இரண்டாமவரைத் தைத்த முள் அவரின் வயிற்றைச் சுருக்கி, வாழ்வை விரித்தது. இளையவரைத் தைத்த புண் புரையோடிப்போனது..

பசியெனும்சக்தி எல்லா தேடல்களுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும், போர்களுக்கும், உலக இயக்கத்துக்கும் ஆதாரமான சக்தி! பசி கொடுக்கும் பாடங்கள் தான் எத்தனை, எத்தனை? அது கொண்டு வரும் நினைவுகள் ஆயிரம்..பசி நேரத்தில் உணவிட்டவரை உள்ளளவும் மறந்து விட இயலுமா? பூமியில் விழுந்த முதல் கணம் தோன்றும் உணர்வு பசி தானே? அதைத் தீர்க்கும் தாயை விடப் பெரும் உறவு எது உலகில்? தன் பசியை உணர்பவன் அன்றோ மற்றையோரின் பசியை உணர்ந்து ஆற்றத்துணிவான்?

இப்படியான பசியின் அருமையை, கொடுமையைப் பேசும் சமயம்--- உணவை வீணாக்காமலும், பசியோடு இருப்பவர்கள் முகம் பார்த்து அதைப் போக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் ,' உலக மாந்தர் யாவருக்கும் பசிபிணியைப் போக்கு' என்று இறைவனை இறைஞ்சுபவர்களாகவும் நாமெல்லாரும் இருப்போம்.

பசியெனும் போதே நம் மனக்கண்களில் எத்தியோப்பியப் குழந்தைகளின் எலும்பும் தோலுமான துயர் தோய்ந்த சித்திரம் முள்ளாய்த்தைக்கிறது அல்லவா? தமிழச்சியின் "கலவி" எனும் தலைப்பிலான நினைவில் நிற்கும் கவிதை ஒன்று------

ஒரு கர்ப்பிணியின் வாந்தியினை

எடுத்து உண்ட எத்தியோப்பியக்

குழந்தைகளின் பட்டினியைத்

தொலைக்காட்ச்சியில் பார்த்த பின்பும்,

கலவி இன்பம் துய்த்த

அந்த இரவிற்குப் பின்தான்

முற்றிலும் கடைந்தெடுத்த

நகரவாசியானேன் நான்.

(தமிழச்சி)

முடிவாக சொல்லி வந்த கதையை நான் முடிக்கவில்லையே? சகோதரர்களில் மூத்தவர் என் பெரியப்பா, இரண்டாமவர் அப்பா...இளையவர் சித்தப்பா.

..ஷஹி..

Tuesday, September 6, 2011

அப்பா அம்மாக்களுக்கான சிறுவர் கதை- ஸெர்யோஷா..

சோவியத் நூலாசிரியை வேரா பானோவா அயல்நாட்டு வாசகர்களிடையே விரிவாகப் புகழ் வாய்ந்தவர். மூன்று முறை அரசாங்கப் பரிசுகள் பெற்றவர். நான்கு பெரிய காதல் நவீனங்கள், மக்களால் பெரிதும் விரும்பப்படும் ஐந்து நாடகங்கள், சுவையுள்ள சிறு கதைகள், குறுநாவல்கள் ஆகியன அவரது படைப்புகள். இவற்றில் பல திரைப்படங்கள் ஆக்கப்பட்டுள்ளன. ஸெர்யோஷா ஆசிரியையின் கவிதை நயம் மிக்க படைப்புகளில் ஒன்று. ஸெர்யோஷா என்ற இந்த நாவலின் படி எடுக்கப்பட்ட திரைப்படம் 1960 ஆம் ஆண்டு சர்வதேசத் திரைப்பட விழாவில் முதல் பரிசு வென்றது.

மொழிபெயர்ப்பாளர்: பூ.சோமசுந்தரம்.

கதைச் சுருக்கம்:

போரில் தந்தையை இழந்த ஸெர்யோஷாவுக்கு மரியாஷா என்னும் தாயும், பாஷா அத்தையும் லுக்யானிச் என்னும் மாமாவும் இருக்கிறார்கள். ஆறே வயதான ஸெர்யோஷாவுக்கு கவலைகள் அவன் வயதளவுக்கு கொஞ்சமல்ல.

பார்க்கவும் அனுபவிக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ள உலகில் அவ்வளவு கவனம் செலுத்தப் போதுமான வலு இருப்பதில்லை அவனிடம்..

மேலும் மனிதர்களும் சரி கதவுகளும் சரி..ரொம்ப உயரம்..அவனால் அப்படி எட்டமுடிவதில்லை அவர்களை..

பிராண்டி ரத்தம் வரவழைக்கக் கூடிய பிராணிகள்,

விழும் போதெல்லாம் ரத்தக் காயம் ஏற்படுத்தும் தரை, ஏற முடியாத சுவர்கள்,

தாங்கள் எதை உடைத்தாலும் பதறாமல், சிறுவர்கள் ஏதும் உடைத்துவிட்டால் மட்டும் மோசம் என்று ஏசும் பெரியவர்கள்

என்று அவன் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சிரமங்கள்.

இப்படியாகப் போகும் ஸெர்யோஷாவின் வாழ்வில் ஒரு மிகப் பெரிய மாற்றம் நிகழ்கிறது. "நம் வீட்டிலும் அப்பா இருக்க வேண்டுமென" ஆசைப்பட்ட அம்மாவுக்காக அவளின் மறுமணத்துக்கு சம்மதிக்கிறான் ஸெர்யோஷா. ஆனால் அவனைப் பொறுத்த வரையில் அப்பா இருந்தாலும் இல்லாவிட்டலும் பெரிய ஒரு வித்தியாசம் இருக்கப்போவதில்லை.."ஆமாம் சில பையன்களுக்கு அப்பா இருக்கிறார், சில பேருக்கு அப்பா இல்லை அவ்வளவுதான்!"

யாஸ்னிய் பேரிக் என்னும் அரசாங்கப் பண்ணையின் நிர்வாகி கொரெஸ்தெல்யோவை மணம் செய்து கொள்கிறாள் ஸெர்யோஷாவின் அன்னை.

தன் நெஞ்சுக்கூட்டுக்குள் இதயம் என்று ஒன்று உண்டு, அது எப்போதும் துடிக்கும், என்பதைக் கூட அன்னை சொல்லித் தான் தெரிந்து கொண்ட அந்தச் சின்னஞ்சிறுவனின் இதயத்துக்குள் ...தன் அன்பாலும், அறிவார்ந்த நடவடிக்கைகளாலும் கொரெஸ்தெல்யோ இடம் பிடித்து விடுவது தான் கதை.

எல்லோரின் பால்யமும் ஒன்று தானோ?:

கதை நெடுகும் ஸெர்யோஷாவின் கண்ணோட்டத்தில் தான் எழுதப்பட்டிருக்கிறது. புது சைக்கிள் ஒன்றை கொரெஸ்தெல்யோவ் அவனுக்கு வாங்கித் தரும் இடம் மிகவும் நயம் மிக்கது. சின்னஞ்சிறுவன் ஒருவனுக்கு சைக்கிள் ஒன்று எத்தனை கிளர்ச்சி தரக்கூடிய பொருள்..அவன் அதை பெருமை பொங்க நண்பர்களிடம் காட்டுகிறான்..ஆளாளுக்கு அதை எடுத்து ஓட்டுவதுமாக உடைத்தே விடுகிறார்கள். கொஞ்சமும் முகம் கோணாமல் கொரெஸ்தெல்யோவ் அதை சீர் செய்து கொடுக்கிறான். தன் மகனின் மனதிலும் நீங்காத இடம் ஒன்றைப் பிடிக்கிறான்.

சிகரெட் பெட்டிகள் சேகரிக்காத பிள்ளைப் பருவமும் ஒரு பிள்ளைப் பருவமா? மினு மினுவென அழகாக இருக்கும் பெட்டிகள் எத்தனையோ வைத்திருந்தேன் நான்..ஸெர்யோஷா மட்டும் என்ன விதிவிலக்கா? அவன் அப்பா கொரெஸ்தெல்யோவ் சேகரித்துக் கொடுக்கிறான் அவனுக்கு..

அசையாமை , சில்லிடுதல் - இதுதான் சாவு எனப்படுகிறது போலும்.

ஒரு குருவியின் சவ அடக்கத்தை ஸெர்யோஷாவும் அவன் தோழியும் "அந்த குருவியே கனவு கூடக் கண்டிருக்காத "முறையில் அருமையாக நிகழ்த்திவிடுகிறார்கள். படித்ததும் எங்கள் வீட்டு மின்விசிறியில் அடிபட்டு இறந்த குருவியும், ஓவென்று பெரிதாய் அலறி, நண்பர்கள் புடை சூழ அதை சகல மரியாதைகளுடன் நான் அடக்கம் செய்ததும், கூடவே ஆசையாய் வளர்த்த லவ் பேர்ட் ஒன்று இறந்து போக , மௌனமாய் கண்ணீர் சிந்தி இரண்டு நாட்கள் உண்ண மறுத்த என் மகளின் நினைவும் எழுந்தது.

அந்த திகிலூட்டும் அனுபவம்--- மரணம்..

கொரெஸ்தெல்யோவின் பாட்டி மரணிக்கிறாள். அதிர்ந்து போகிறான் சிறுவன் ஸெர்யோஷா..அவன் பார்த்த மரணங்கள் எல்லாம் குருவி, பூனை இவற்றினோடது தான்..பாட்டியின் சடலம் பார்த்து அதிர்ச்சியுற்று பீதியில் கலங்கும் ஸெர்யோஷாவுக்கு மீண்டும் அபயம் அளிக்கிறான் தந்தை கொரெஸ்தெல்யோவ்." நானுமா செத்துப் போவேன்? "எனும் மழலையின் கேள்விக்கு அவன் நம்பும் வண்ணம், கம்பீரமாக "மாட்டாய் ஒரு நாளும் நீ மரணிக்க மாட்டாய் "என்று ஆறுதல் அளிக்கிறான்.

கால் வலிக்கும் போதெல்லாம் அவன் அப்பனின் தோல் மீது சவாரி செய்தான்..அதோடு சொந்தக் கால்களால் நடந்து வந்த தன் நண்பர்களை அலட்சியமாகவும் பார்த்தான்..

அவன் அம்மாவும் அப்பாவும் பன்னிப் பன்னி" நான் உன்னைக் காதலிக்கிறேன்" என்று ஒருவரையொருவர் சொல்லிக் கொண்டது அவனுக்கு சகிக்கவேயில்லை.ஆனாலும் பெரியவர்கள் பேசிக் கொள்ளும் போது குறுக்கே பேசலாகாது என்ற அவன் கற்ற பாடத்தினால் பொறுமை காத்து வந்தான்!

ஆனால் அவன் விரும்பாத ஆட்களிடம் அவன் விருப்பமின்மையை வெளிக்காட்டியதை அம்மா வெறுத்தாலும், கொரெஸ்தெல்யோவ் ஆதரித்தான். ஒரு முரட்டு மாமாவை ஸெர்யோஷா "முட்டாள் மாமா" என்று அவரிடமே சொல்ல, அம்மா திட்டினாலும் அப்பா ஏற்றுகொண்டான். "முட்டாளை அப்படிக் கூறாமல் வேறு என்னவென்பதாம்?"

அதோடு ஸெர்யோஷா ஒரு ஆண்பிள்ளை , அதை நிரூபிக்கும் விதமாக அவன் பக்க வாட்டுத் தடுப்புகள் இல்லாத கட்டிலில் படுக்க வேண்டும், அடி பட்டால் அழ வேண்டியதில்லை..மருந்திட்டுக்கொண்டால் போதும் ..போரே வந்தாலும் வீட்டின் ஆண் மக்கள் ஸெர்யோஷாவும் கொரெஸ்தெல்யோவும் தான் போக வேண்டும் என்றெல்லாம் அன்பாகவும் அறிவார்ந்த முறையிலும் ,அதாவது குழந்தைகள் விரும்பும் வண்ணம் பேசி ஒரு அருமையான தகப்பனாக இருக்கிறான் கொரெஸ்தெல்யோவ்.

வந்தது வினை:

பச்சை குத்திக் கொள்ள வேண்டுமென ஆசைவந்து விடுகிறது நண்பர்கள் வட்டத்தில்- பயத்தை வெளிகாட்டிக்கொள்ள துணிவில்லாமல், ஸெர்யோஷாவும் குத்திக் கொள்கிறான்.

சொந்த செலவில் சூனியம் தான் வேறென்ன? கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்படுகிறான். படுக்கையை விட்டே எழ முடியாமல் விளையாடவும் போகாமல் மிகவும் வேதனையுற்று விடுகிறான் ஸெர்யோஷா. பத்தும் பத்தாததற்கு கொரெஸ்தெல்யோவும் அவன் அம்மா வும் ஹோல்மகோரி எனும் மலைப்பிரதேசத்துக்கு ஜாகை மாற்றி விடலாம் எனும் எண்ணம் கொண்டு விடுகின்றனர்...

இதில் ஸெர்யோஷாவுக்கு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் அவனை மட்டும் பாஷா அத்தையிடம் விட்டுச்செல்லலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது. மலைப்பிரதேசத்தின் சீதோஷ்ண நிலையில் அவன் தாக்குப்பிடிப்பது கடினம் என்ற காரணம் கூறப்படுகிறது. ஸெர்யோஷாவின் பிஞ்சு உள்ளம் இந்த முடிவை தாங்கவியலாமல் துடிக்கிறது. தன் தம்பி லியோன்யா பிறந்ததில் இருந்தே தாய்க்கு தன் மீது அத்தனை பிரியம் இல்லாமல் போய்விட்டது என்று துயறுருகிரான்.

தாயும் தந்தையும் கிளம்பும் நேரம் --- கதையின் க்ளைமாக்ஸ்...

ஸெர்யோஷாவின் தாய், தம்பி மற்றும் கொரெஸ்தெல்யோவும் பயணிக்கும் வண்டி கிளம்பி சில அடிகளே சென்று நிற்கிறது, கொரெஸ்தெல்யோவ் ஸெர்யோஷாவை விட்டுச் செல்வது "ஒரு அங்கத்தையே விட்டுச் செல்வது போல் இருக்கிறது" என்று கூவியவாறு அவனை உடன் அழைத்துக் கொள்கிறான். ஸெர்யோஷா தாய் தந்தையுடன் ஹோல்மகோரி செல்கிறான் ஆனந்தமாக.

கதை படித்ததும் நம் மனங்களில் எழும்பும் கேள்விகள்:

எங்கோ தமிழகத்தின் ஓர் மூலையில் உள்ள சிறுவர்களுக்கும் ரஷ்யாவில் வாழும் பிள்ளைகளுக்கும் உணர்வு ரீதியாகவோ, நடத்தையிலோ, மனப் பாங்கிலோ எந்த ஒரு வேறுபாடும் இல்லை எனும் போது மனிதர்கள் அனைவருக்கும் அதேநிலை தானே? அப்படியாகும் போது நாடுகளுக்கிடையிலான போர்கள் மூள்வது ஏன்?

நம் குழந்தைகளின், நம் அருகில் வாழும் குழந்தைகளின் ,நாம் சந்திக்கும் மழலைகளின் மனங்களைப் புரிந்து கொள்ள எப்போதாவது முயல்கிறோமா?

நாம் பெற்ற குழந்தைகளின் அன்றாட நிகழ்வுகளை அமைதியாக அமர்ந்து பகிர்ந்து கொள்ளும் பெற்றோர் நம்மில் எத்தனை?

நம் குழந்தைகளுக்கு, அவர்களின் குழந்தைகளுக்கு நாம் விட்டுச்செல்லக் கூடிய அருமையான பரிசு உலக அமைதியும், மாசற்ற சூழலும் தான் ..இதற்கான எம்மாதிரியான முயற்சியிலாவது நாம் ஈடுபட்டிருகிறோமா?

குளிரும் உள்ளம்:

ஆலங்கட்டி மழையில் திடுமென நனைந்து விட்டார் போன்ற ஒரு சிலிர்ப்பு கதையெங்கும் வாசகனுக்கு ஏற்படுகின்றது..அத்தனை இன்பம், அத்தனை ஆசுவாசம். காதல், மோதல், ஏமாற்று, துயரம் என்று பேசும் கதைகளைப் படித்த நம் கண்களுக்கு குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகம் எவ்வளவோ ஆறுதலை, குளிர்ச்சியை அளிக்கின்றது.

நம் உள்ளத்தின் ஆயிரமாயிரம் அடுக்குகளில் உறைந்து கிடக்கும் நம் பால்ய கால நினைவுகளை உயிர்ப்பித்து, நம் கண்களின் முன்னே உலவ விடுவதில் ஆசிரியர் வெல்கிறார் என்றால்..நான் அனுபவித்த அருமையான இன்பத்தை, ஒரு ஆலங்கட்டியை சேமிக்கும் உணர்வோடு என் கரங்களில் பொத்தி ....இதோ உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்..ஒரு சில துளிகளாவது எஞ்சி, உங்கள் இதயங்களைக் குளிர்வித்தால் அதுவே என் எழுத்தின் வெற்றி.

ஒரு பறவைக்குஞ்சு தன் கூட்டில் இருந்து விழுந்து விடுவதைக் காண நேர்ந்தால் எப்படி நம் இதயங்கள் துடிக்குமோ அப்படித்தான் துடிக்கிறோம் ஸெர்யோஷாவை அவன் தாயும் தந்தையும் நீங்கும் போது..அதே போல அவன் தன் குடும்பத்துடன் சேர்ந்தான் என்ற செய்தியோடு கதை நிறைகையில் அப்பாடா எனும் ஆனந்தம் விழிக்கடையில் துளிர்க்கிறதே..

அப்படிப் பொங்கி எழும் ஒரு உளப்பூர்வமான அன்பின் மிகுதியில் உலக மாந்தர் அனைவரையும் ஒன்றாக அணைத்துக் கொள்ள உள்ளம் ஏங்குகிறதே இதுவல்லவோ இலக்கியத்தின் பலன்? இலக்கியத்தின் பெரு வெற்றி?

..ஷஹி..

Sunday, September 4, 2011

மணல் அரவம்..

தன்னந்தனியளாக இருப்பதொன்றும்

புதிதல்லவே எனக்கு..

அச்சமும் குளிரும்

கவியும் இந்தப் பாலை இருளில்

ஒரு மணல் அரவம் போல்

நீ

என் மீது

வழுக்கிச்சென்ற தடங்களையும்,

தனிமையையும்

இழுத்துப் போர்த்தி

உறங்கவியல்கிறதே எனக்கு...

வெம்பகலையும்

தனிமைக் கூரை வேய்ந்து

கடந்து விடுகின்றேன்..

நழுவி நீ சென்ற இடம்

தணல் தான் என்கிறாய்...

கானலும் அப்படித்தான்..

ஊர்ந்த துன்பம் தீர

புரண்டிருந்து

மீள வருவாய்..

கள்ளியும் முள்ளுமாய்

அடைந்திருக்கும் இங்கு

என்னைத்தவிர

வேறு யார் உளர்?

...ஷஹி..

Related Posts with Thumbnails