Search This Blog

Saturday, September 10, 2011

இடது கை உயர்த்து வரமொன்று வேண்டும்( july 15 -2011)


பற்களிடை வெளிகளின் எண்ணமேதுமற்று

எப்போதும் எப்போதும் மலர்ந்து சிரிக்கவும் ,

அறியாத முகம் என்ற பேதம் புரியாமல்

அழகாய்த் தலையசைத்து கைகள் ஆட்டவும்,

படுக்குமுன் உறங்கவும்,

விழித்த விநாடியே விளையாட்டைத் தொடரவும்,

சற்று முன் நகம் பதியக் கீறியவளுக்கு

அவள் கேட்ட பொம்மையை ஆசையாய்க் கொடுக்கவும்,

முள்ளும் செதிலுமாகச் சிலிர்த்து சண்டையிடும்

அசிங்கக் கரட்டானை

ஆவலாய் ரசிக்கவும் ,

மஞ்சளாய் சிரிக்கும் காந்தியைப் பாராமல்

பட்ட ஓலைகளைத் தேடித் தடவவும்,

ஓடித்திரிந்து பாடாய்ப் பட்டு

பிடித்த வண்ணாத்தியை பறக்க விடவும்,

மின்சாரம் இல்லாத வியர்வைப் பொழுதிலும்

ஒற்றைக் கண் பொம்மைக்கு சோறாக்கி ஊட்டவும் ,

இல்லாத டாக்டரிடம்" இன்றும்காய்ச்சல்"

என்று புகாரிட்டு மருந்து புகட்டவும்

மட்டும் அல்லாமல்....

சமச்சீரும் ,ஸ்பெக்ட்ரமும்

கோவில் புதையலும்

அண்டைச் சகோதரரின் ஆயுள் கண்ணீரும்

பெருமூச்சாகிக்

குறையும் எம் ஆயுளை...

நீண்டிடச் செய்திடும் மாயமும் கூட

எல்லாம் எல்லாம்

உன்னால் முடியும்!!!

..ஷஹி..

4 comments:

  1. சமச்சீரும் ,ஸ்பெக்ட்ரமும் கோவில் புதையலும்
    அண்டைச் சகோதரரின் ஆயுள் கண்ணீரும்
    பெருமூச்சாகிக் குறையும் எம் ஆயுளை...

    நல்ல கவிதை...

    ஏன் அடிக்கடி வெடிக்கும் , குருதியைக் குடிக்கும்
    குண்டு வெடிப்பை விட்டு விட்டீர்கள்...

    ReplyDelete
  2. சிறுகை அளாவிய கூழ்...

    சில அட்ஜெக்டிவ்களை கண்டிப்பாய் உதற வேண்டும் கவிதைகளில்... அழகாய் தலையசைத்தல், அசிங்கக் கரட்டான்... இது போல சில வார்த்தைகளை உதறிவிடுங்கள் அவை தேவையில்லாத அலங்காரங்கள்... அப்புறம் இன்னும் கொஞ்சம் சுருக்கிப் பாருங்க... குறைவான வார்த்தைகளில் கவிதை இன்னும் நிறைவாய் இருக்கும்...

    அழகான கவிதை இது... இந்த குழந்தையை ஒரு பெண் மகவாய்த் தான் யோசிக்கத் தோணுகிறது... படம் ஒரு காரணமில்லை... கவிதையில் பெண் குழந்தையின் சுகந்தமும்... விரல்களால் தொட ஒட்டிக்கொள்ளும் வர்ணங்களும் ஒரு காரணம்

    பெருமூச்சாகி... கூட தேவையில்லை...

    நல்லாயிருக்கு ஷஹி...

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி ராகவன்..இத தான் எதிர்பாத்தேன்...

    ReplyDelete

Related Posts with Thumbnails