Search This Blog

Wednesday, June 30, 2010

சரி...சரி..


அகழிகள் வெட்டச் சொன்னாய்...
செய்தேன்...
சுற்றிலும் கோட்டைகள் வேண்டுமென்றாய்..
ஆணைப்படியே....
உள்ளிருந்து ஒசியும் புரிதல் புன்னகையை,
எப்படியாம் மறைப்பது?

வேட்டை...


உள்ளார்ந்த உறை பசிக்கு...
உணவான நீயே,
இரையாக எனை அள்ளி உண்ண வருகையில்..
உணர்வுகள் மறத்து..
உயிர் உறைந்து...
என் நினைவுத்திரியும் சேர்ந்தணையும் அவலம்..
பசி தோன்றும் போதெல்லாம்..
நினைவில் தோன்றும்!

தேவை...


மறுதலிப்பின் அச்சுறுத்தலையும்..
தனிமையின் கொடூரத்தையும்..
உதைத்தெறிகிறது..
நேற்று பிறந்த சிசுவின்..
நிஷ்டூர அழுகை.

கணிப்பு..


தினம் வருதொரு பெயரறியாப் பறவை என் தோட்டத்துக்கு..
காத்திருப்பது உண்டு நானும் ..
கைகளில் தானியத்தோடு..
சிலவமயங்களில் உற்சாகமாய்,
சிற்சமயம் சோகமாய்..
பலவமயம் பாவமாய்த் தோன்றுதது எனக்கு!
அதே போல் என் பற்றியும் அது எண்ணியிருக்கலாம்..
சரியாய்!

ஆணைப்படி!!!


கிளியொன்று பாலிக்கின்றாய்...
பழக்கியுள்ளாய் அதனை நீ பேச..
கொஞ்சும் அதன் மொழியால்,
கோபம் மறப்பாய்!
அழகு செய்கின்றது அது, உன்னில்லம்!
பசிக்குமுன் பால்,பழம் தருவாய்,
பார்வையை அது திருப்பினாலும் ...
பொறுக்காதுனக்கு!
பக்குவங்கள் பல செய்வாய்...
பிடிக்குமே அதை!
ஆடுவதற்கோர் ஊஞ்சல்..
ஆசை வார்த்தைகளால் கொஞ்சல்...
சிறப்பானது அது என்பதால்..
சிறகுகள் வெட்டப்படவில்லை!
சுதந்திரமாய்த் திரியலாம் அது...
எத்தனை வேண்டுமானாலும் ...
தன் கூண்டுக்குள்ளேயே!

தொலைந்த பிள்ளைமை...


சின்னவளாயிருந்தேன்....
பின்னலில் கட்டியிருந்த ரிப்பன் ஒன்று தொலைந்தது..
பின்னலே தொலைந்தது போல் பதறினேன்..துடித்தழுதேன்!
வேறு ரிப்பன் வாங்கிய பின் ஆறிவிட்டதென் அழுகை.
கண்ணாடி அணிந்திருந்தேன் பல காலம்!
உறுப்புகளில் ஒன்றாய் இருந்தது அது எனக்கு!
தொலைந்து அது போனால்..
அதனோடே போகும் என்னுயிரின் ஒரு துளியும்!
வழமையே போல் புதியதில் மறப்பேன் பழயதை...
கைப்பை,
கடியாரம்,
குடை..
என்று.....
அந்தப் பட்டியல் நீளும் பலவாறு!
தொலைந்ததை மறக்கச் செய்யும்...
புதிய ஒன்று எப்போதும் கிடைத்தால்...
கவிதைகள் எழுதும் கிறுக்கு...
பிடித்திருக்குமா ...
இன்று..
எனக்கு?

தேடித்...தேடி...

அர்த்தமற்ற தேடல்களிலேயே..
தொலைகின்றதோ....
அதிகம் காணத ...
வாழ்வின் பொருள்?
பொருள் தேடலே..
வாழ்வின் பொருளென்றால்...
வளமான எல்லோரும் ..
வாழ்கின்றார் என்றா பொருள்?
Related Posts with Thumbnails